​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 17 January 2017

சித்தன் அருள் - 570 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட, அதை ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்பதை பற்றிய எண்ணத்திற்கு; ஒருவனின் மனம், புத்தி, அறிவு, ஞானம் - இவற்றை நல்கக்கூடிய கிரக அமைப்பு - இதை பொறுத்துத்தான், இந்த வாதத்தை எடுத்துக் கொள்ள முடியும். முழுக்க, முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற ஒரு மனிதனிடம் "நீ தர்மம் செய். தர்மம் செய், தர்மம் செய்" என்று நாங்கள் கூறினாலும், அதில் சிறிதளவே அவன் செய்கிறான். ஆனால், பாவங்கள் குறையவில்லை. இவன் எவ்வாறு பாவங்களை குறைப்பது? சரி, இவனுக்கு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால்தான் திருப்தி என்றால், அப்படியே செய்யட்டும். அபிஷேகத்திற்காக பொருள் வாங்குகிறான். அந்த வியாபாரம் செழித்து வளரட்டும். அது அந்தந்த மனிதர்களுக்கு போய் சேருகிறது அல்லவா? அந்த அடிப்படையிலும் இவன் அபிஷேகத்திற்காக முயற்சி செய்கின்ற காலமும், அதனால் பயன் அடையக்கூடிய மனிதர்களையும் பார்க்கவேண்டும். அப்படியாவது சிறிதளவு கர்மா இவனுக்கு குறையட்டும் என்றுதான் கூறுகிறோம். அதே சமயம், ஒரு உயர்ந்த பொருளை ஏன் கல்லின் மீது ஊற்றவேண்டும்? அதை ஏழைகளுக்குத் தந்தால் ஆகாதா? என்று ஒரு வாதத்தை வைக்கும் பொழுது ஒருவனுக்கு பிரியமான தந்தை, தாய், மனைவி, மக்கள் போன்றோர்களின் பிம்பங்களை களங்கப்படுத்தி, அதன் மீது எச்சில் உமிழ் என்றால், உமிழ்வானா? எனவே, அந்த பிம்பங்களை அவன் தன் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற குணம் இன்றளவும் இருக்கிறது.  அப்படியிருக்கும்பொழுது, "சிலை" என்று கருதக்கூடிய மனிதனுக்கு, அது வெறும் சிலை, ஆனால் அது உள்ளே "தெய்வம்தான்" என்று ஆணித்தரமாக நம்புகின்ற மனிதனுக்கு "நாம் தெய்வத்திற்க்கே அபிஷேகம் செய்கிறோம்" என்ற சந்தோஷமும் அதன் மூலம் மன அமைதியும் வரும்.  இப்படியான மனிதனை, சற்றே பக்குவமடைந்த பிறகு, மெல்ல, மெல்ல தர்ம வழியில் திருப்பி விடலாம். எடுத்த எடுப்பிலேயே "நீ அப்படியெல்லாம் அபிஷேகம் செய்து பொருளை வீண் செய்யாதே. உன்னை சுற்றி உள்ள ஏழைகளுக்கு கொடு" என்று சொன்னால், அவன் மனம் ஏற்காது. ஓரளவு நல்ல ஆத்மா, காலப்போக்கில் திருந்துவான் என்றால், அவனை, அவன் போக்கில் சென்றுதான் நாங்கள் திருத்துவோம். எனவே, இதில் யார் செய்வதும் குற்றமல்ல. பாதிப்பும் அல்ல. இரண்டு வழிகளுமே சிறப்புத்தான்.