​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 30 March 2011

சித்தன் அருள் - 30


ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது.  ஆனால் மன நிம்மதியே இல்லை.  ராத்திரி முழுவதும் தூக்கமே இல்லை.  எதோ ஒன்று என்னை பயமுறுத்துகிறது.  கழுத்தை பிடித்து நெறிக்கிராப் போல் இருக்கிறது.  அகத்தியரிடம் கேட்டுச் சொல்ல முடியுமா? என்று ஒருவர் கேட்டார்.

ஆமாங்க, எனக்கும் அதே மாதிரி தினமும் நடக்குதுங்க என்று கணவரின் சொல்லை ஆமோதித்துப் பேசினார் உடன் வந்த பெண்.

அவர்கள் சொல்வதை எல்லாம் நிதானமாக கேட்டுக் கொண்டேன்.  உடனே நாடி படிக்கவில்லை.

எத்தனை நாளாக இப்படிப்பட்ட கெட்ட சம்பவம் நடக்கிறது?

"எட்டு மாசமா"

வேறு யாரு கிட்டேயாவது பொய் இது பற்றிக் கேட்டீங்களா?  பரிகாரம் ஏதாவது செய்யச் சொன்னாங்களா?

"நிறைய பேர் கிட்டே போய்க் கேட்டேன்.  யாரோ, எதோ உங்களுக்கு பண்ணிட்டாங்க.  அதை எடுக்கணம்: இருபதாயிரம் ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.  அப்படியும் கொடுத்துப் பார்த்துட்டோம்.  ஆனாலும் அந்த கெட்ட சம்பவம் நடந்து கிட்டுத்தான் இருக்கு" என்றனர்.

மவுனமாக எனக்குள்ளே நான் சிரித்துக்கொண்டேன்.  அகத்தியர் நாடியை எடுத்துப் புரட்டினேன்.  சில செய்திகள் வெகு வேகமாக வந்தன.

"அய்யா, அகத்தியருக்கு இப்படிப்பட்ட செய்வினை பேரில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியாதுங்க!"

"எதையும் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகச் சிந்தனை வேண்டும் என்று தான் அகத்தியர் விரும்புகிறார்.  ஆகையினால் நீங்க நினைக்கிறபடி யாரும் உங்களுக்கு செய்வினை எதுவும் செய்யவில்லை" என்று சொல்லி முடித்த்தேன்.

இதை கேட்டதும் அவர்களுக்கு எதோ மாதிரி ஆகிவிட்டது.  சிறிது நேரம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பின்னர், இல்லை அய்யா, அந்த வீட்டுல எதோ ஒன்னு இருக்கு.  நாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கஷ்டப்படுகிறோம்.  என்ன செய்தால் நாங்கள் அந்த வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியும்.  அகத்தியரிடமே இதைக் கேளுங்கள்" என்றார் வந்தவர்.

நாடியை புரட்டாமலே நான் கேட்டேன்.  "கெட்ட ஆவி எதுவும் இருப்பதாக நீங்கள் எண்ணினால் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு போகலாமே".

அப்படியும் நெனச்சோம்.  காலி செய்ய நினைச்ச, அது கூட முடியலீங்க.  அதற்கும் தடங்கல் வந்து கொண்டே இருக்கு" என்றார் அவரது மனைவி.

மீண்டும் நாடியை புரட்டினேன்.

சில செய்திகள் வந்தது.  ஆனால் அதை வெளியே சொல்லவில்லை.

அகத்தியர் என்னங்க சொல்கிறார்? என்று பவ்யமாகக் கேட்டார்.

வீட்டில் எல்லா அறைகளிலும் தினமும் சாம்பிராணி புகையைக் காட்ட வேண்டும்.  குறிப்பாக வெள்ளிக்கிழமை அமாவாசையன்று காலையிலும் மாலையிலும் இரு வேலையும் கண்டிப்பாக புகையை கட்டவேண்டும் என்கிறார்.

அதைத்தான் நான், நாலு மாசமா செய்துட்டு வரேன் சாமி, என்று உடனே பதில் கொடுத்தார்.

இதென்ன புதுக்கதையாக இருக்கிறதே.  அகத்தியர் எதைச் சொன்னாலும் அதைச் செய்து விட்டதாக உடனுக்குடன் பதில் சொல்கிறாரே.  ஒரு வேளை உண்மையில் இவர் அதர்வண வேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிராரோ? அல்லது அகத்தியர் வேறு எதையோ மனதில் வைத்துச் சொல்கிறாரோ? என்று கூட எண்ணத் தோன்றியது.

மறுபடியும் அகத்தியர் ஜீவநாடியைப் புரட்டினேன்.  வேறு சில செய்திகள் வந்தன.  அந்தச் செய்தியை வந்தவரிடம் சொல்லாமல் அவரை ஏற இறங்கப் பார்த்தேன்.  நெற்றியில் விபூதிப் பட்டை, நடுவில் குங்குமம், கைகளில் அங்கங்கே விபூதியை மூன்று வரியாக பட்டத் தீட்டிய நெற்றியுடன் பக்திப் பழமாக காட்சியளித்தார்.

இதற்கு மேல் அவருடைய மனைவி.  நெற்றி வகிடில் குங்குமம், நெற்றியில் சந்தானம், குங்குமம், விபூதி, பட்டுபுடவை, முகத்தில் மஞ்சள் பூசி குளித்ததற்கு அடையாளமாக முகத்தின் ஆங்காங்கே திட்டு திட்டாக மஞ்சள் கறை, கழுத்து நிறைய செயின், காதில் வைரத்தோடு கையில் ஜோடிஜோடியாக ஆறு ஆறு நவரத்தினம் பதித்த கல் வளையல்கள்.

அகத்தியர் என்னிடம் சொன்ன தகவல் வேறு.  வந்திருக்கும் இவர்கள் நிலை வேறு.  இதில் எதை நம்புவது என்று எனக்கே சங்கடமாக போயிற்று.

"என்ன யோசிக்கிறீங்க.  அகத்தியர் அய்யா இப்போதாவது நான் சொல்கிறதை நம்புகிறாரா இல்லையா?" என்று கேட்டார்.

இனியும் அவர்களிடம் மறைப்பதில் பயனில்லை என்று பேசத்தொடங்கினேன்.

"அய்யா, தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.  அகத்தியரை சோதிக்க வந்திருக்கிறீர்கள்.  தாங்கள் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.  அகத்தியர் சொல்வது எல்லாம் உண்மையா, பொய்யா? என்று ஆராய வேஷம் போட்டு வந்திருக்கிறீர்கள்.  உங்களுக்கென்று சொந்த வீடு எதுவும் கிடையாது.  வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்கள்.  இன்னொன்று, நீங்கள் இருவரும் உண்மையில் கணவன், மனைவி அல்ல.  நான் சொல்வது அனைத்தும் உண்மை தானே?" என்று கேட்டேன்.

இதைச் சொன்னதும் வந்தவர் சட்டென்று எழுந்தார்.  அவர் எழுந்ததைக் கண்டு அந்த அம்மாவும் எழுந்தாள்.

எதோ ரகளை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்தேன். நடப்பது நடக்கட்டும் என்று அகத்தியரை நினைத்து மவுனமாக இருந்தேன்.

அடுத்த நிமிடம் --

அவர்கள் இருவரும் என் காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் பேச வார்த்தைகள் வரவில்லை. இரண்டு நிமிடம் மவுனம் எங்களுக்குள் நிலவியது.

"அகத்தியர் சொன்னது உண்மை தான்.  நாங்கள் இருவரும் கணவன் - மனைவி அல்ல.  சிலர், அப்பாவி மக்களிடம் நாடி பார்ப்பதாகச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டோம். இது எப்படி உண்மையா? இல்லையா? என்று கண்டுபிடிக்க கவரிங் நகைகளை அணிந்து பக்திமான்கள் போல் நடித்து உங்களிடம் வந்தோம். எங்களை மன்னித்து விடுங்கள்" என்றனர்.

"இது எனக்கு புதிது அல்ல. இந்த மாதிரி பலர் வந்து கடைசியில் ஏமாந்தும் போயிருக்கிறார்கள்.  உங்களுக்கோ பக்தியும் இல்லை. ஜோதிடம் - நாடிகளில் நம்பிக்கையும் இல்லை. பின் எதற்காக உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணாக்க வேண்டும்.  பணத்தை வாங்கி ஏமாற்றுவது என் தொழில் அல்ல. ஒரு வழிகாட்டியாக நாடியைப் படித்துச் சொல்கிறேன்.  நம்புகிறவர்கள் நம்பட்டும்.  நம்பாதவர்கள் போகட்டும். நான் பகவான் அல்ல, அகத்தியரும் மந்திரவாதி அல்ல.  உடனே விதியை மாற்றுவதற்கு" என்றேன்.

"அய்யா, இதை தாங்கள் பெருங் குற்றமாகவே எண்ண வேண்டாம். இப்போது நான் மனப்பூர்வமாகவே நாடி பார்க்க விரும்புகிறேன். அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றாள் அந்தப் பெண். கணவனாக நடித்த அந்த நபரும் கண்ணீர் மல்க நாடி படிக்க வேண்டினார்.

அகத்தியரை வணக்கி அவர்களுக்கு நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"சேலத்தை சேர்ந்த பெண் நீ.  உன் பெயர் ஸ்வர்ணலட்சுமி. சிறு வயதில் ஒருவனிடம் மனதைப் பறிகொடுத்து கர்பமானாய்.இதனால் குழந்தை பிறந்ததும் ஊருக்கு வெளியே ஓர் மலையடிவாரத்தில் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தாய்.  அழகான அந்த ஆண் குழந்தை மூல நட்சத்திரத்தில் பிறந்தது. அது உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு ஊருக்கே ராஜாவாக இருந்திருப்பான். ஆனால் கள்ளத்தனமாகப் பிறந்த காரணத்தால் கள்ளிப்பால் கொடுத்து அதைக் கொன்று விட்டாய். இதனால் உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பின்னர் என்னதான் முயன்றும் உன்னால் அந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியவில்லை.இன்று வரை மன வாழ்க்கையும் இல்லை. குடும்பத்தாரும் கை விட்டதால் வயிற்று பிழைப்புக்குப் பல வழிகளில் எப்படி எப்படிஎல்லமோ பிழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டிருக்கிறது" என்று அகத்தியர் நாடியில் சொன்னதைக் கேட்டு பொங்கி, பொங்கி அழுதாள் அந்தப் பெண்.

 "என்ன பரிகாரம் செய்தால் இந்த வினை தீரும்?" என்று கேட்டாள் அவள்.

"நர்ப்பத்தைந்து நாட்கள் காலபைரவருக்கு தூங்கா விளக்கு ஏற்றி விட்டு வரட்டும்" என்று அருள் புரிந்தார் அகத்தியர்.

"அய்யா! எனக்கும் அகத்தியர் நாடி படிக்க வேண்டுமே" என்றார் அந்த பகுத்தறிவுவாதி.

"ஆன்மீகத் தன்மையில் புத்தியை செலுத்து. குல தெய்வக் கோவிலுக்கு ஒன்பது மாதம், ஞாயிறு தொடரும் பால் அபிஷேகம் செய்.  பின்னர் உன் வாழ்க்கையே திசை மாறி சிறப்பாக ஒளிர்வாய்" என்று அவருக்கும் அகத்தியர் வழி காட்டினார்.

ஒன்பது மாதம் கழிந்தது.  அந்தப் பகுத்தறிவுவாதி, அகத்தியர் பக்தனாக மாறி விட்டார். சொந்தமாக தறி நெசவு வைத்து உற்சாகமாக பணச் செழிப்போடு உலா வருகிறார்.அன்றைக்கு கணவன்-மனைவியாக நடித்தவர்கள் உண்மையில் தம்பதிகளாக மாறிவிட்டனர் என்பது சிறப்புச் செய்தி.

Friday 25 March 2011

சித்தன் அருள் - 29

ஒரு நண்பகல் பொழுது.  எல்லா பிரார்த்தனைகளையும் முடித்துவிட்டு வெளியே கிளம்பலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அரக்க பரக்க ஓடி வந்தார் ஒருவர்.  அவர் வந்த வேகத்தைப் பார்த்தால் மிகப் பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

நடுத்தர வயது இருக்கும்.  ஆஜானுபாகுவாக இருந்தார்.  முகத்தில் ஆரோக்கியம் இருந்தது.  வசதியுள்ளவர் போல் தோன்றியது.  வந்தவரை உட்காரச் சொன்னேன்.  பிறகு அவரை விசாரித்தேன்.

நன்றாக இருந்த அவரது மனைவிக்கு திடீரென்று மேனிஎல்லாம் வெள்ளை வெள்ளையாகப் புள்ளிகள் தோன்றிற்று. பல்வேறு தோல் நோய் சிறப்பு டாக்டர்களிடம் சிகிச்சை செய்து பார்த்திருக்கிறார்.  தோல் நிறம் மேலும் வெண்புள்ளியாக மாறிக் கொண்டிருந்ததே தவிர சிறிதும் குணமாகவில்லை.

மிகவும் செக்கச் சிவப்பாக இருந்த உடம்பு இப்பொழுது வெண் புள்ளிகளாக மாறியதால் தனக்கு குஷ்டம் வந்து விட்டது என்று எண்ணி, தன்னம்பிக்கை இழந்து இரு முறை தற்கொலைக்கும் முயற்சி செய்து இருக்கிறார் அவரது மனைவி.

இது தொழுநோய் அல்ல.  தோலில் ஏற்பட்ட ஒரு வகையான அலர்ஜி.  மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் படிப்படியாகக் குணமாகிவிடும் என்று தைரியம் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இல்லாமல் யாரோ ஒருவர் அவரது வீட்டில் வாஸ்து சரி இல்லை; அதனால் தான் இத்தனை தொல்லை என்று சொல்லி இருந்ததால் தன் மனைவின் தோல் நோய்க்கும், வாஸ்து பற்றிய சந்தேகத்திற்கும் அகத்தியர் நாடியில் விளக்கம் கேட்க, பதறி அடித்துக் கொண்டு வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.

அகத்தியர் நாடியில் நல்ல பதில் வரவில்லை என்றால் அந்த நபரும், அவரது மனைவும் தற்கொலை செய்து கொள்ள தயாராக இருப்பதாக பின்னர் அவரது பேச்சில் தெரிந்தது.

அவரது உள்ளத்தை நன்றாக அறிந்த நான் முதலில் அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன்.  அய்யா நல் வாக்கு தாருங்கள்.  ஏதேனும் ஒன்றைச் சொல்லி அவர்கள் இருவரது உயிர்களையும் பறித்து விடாதீர்கள் என்ற பிரார்த்தனை செய்தேன்.

எனது மவுனமான பிரார்த்தனையை அறியாத அவர், என்ன சார் எனக்குப் படிக்க மாட்டீங்களா என்று கெஞ்சுவது போல பேசினார்.

கண்டிப்பாக படிக்கிறேன்.  கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி விட்டு, பூசை அறையிலிருந்து அகத்தியர் ஜீவ நாடியை எடுத்து வந்தேன்.

முதலில் தெய்வ ரகசியமாக, வந்தவரைப் பற்றி அப்படியே புட்டு வைத்தார் அகத்தியர்.  அதைப் படித்துவிட்டு அதிர்ந்து போனேன்.  பின்பு அவரைப் பார்த்து உங்களுக்கு நாடியில் நம்பிக்கை இருக்கிறதா என்றேன்.

எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.  ஏனெனில் நிறைய பேரிடம் நாடி பார்த்தேன், கடந்த காலத்தைப் பற்றி நன்றாகச் சொல்கிறார்கள்.  எதிர்காலத்தைப் பற்றிச் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்றார் அவர்.

ஏன்? - நான் கேட்டேன்.

அவர்கள் பரிகார காண்டம், தீட்சை காண்டம், சாந்தி காண்டம் என்று சொல்லி எனக்குள்ள தோஷம் போக ஏராளமான பரிகாரங்கள் சொன்னார்கள்.  இந்த பரிகாரங்களுக்காக நாடி படிப்பவர்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.  இதில் எனக்கு கொஞ்சமும் உண்டன்பாடில்லை.  அதே நேரத்தில் என் மனைவிக்கு நோய் குறையாமல் போய் விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது.  எனவே வேறு வழி இல்லாமல் தலையெழுத்தே என்று கொடுத்தேன்.  அப்படி கொடுத்தான் இன்று வரை என் மனைவிக்கு நோய் குறையவே இல்லை என்றார் வெறுப்புடன்.

ஒருவேளை அகத்தியர் ஜீவநாடியில் சில பிரார்த்தனைகள் வந்தால் அதை முழுமனதோடு செய்ய வேண்டும்.  எந்த பரிகாரம் அல்லது பிரார்த்தனைகள் ஆனாலும் நீங்கள் தான் செய்யவேண்டும்.  செய்யத் தயாரா? என்றேன்.

எது முடியுமோ அதை தான் செய்ய முடியும்.  எல்லாவற்றையும் செய்ய முடியுமா? என்றார்.

உங்கள் மனைவிக்கு நோய் குணமாக வேண்டாமா?  அதற்குத்தானே என்னைத் தேடி இங்கு வந்திருக்கிறீர்கள் - என்றேன்

எல்லாரும் உங்களைப் பற்றிச் சொன்னார்கள்.  கடைசி முயற்சியாக ஒரு தடவை பார்க்கலாமே என்று தான் வந்தேன்.  ஏற்க்கனவே பரிகாரங்களைச் செய்து வெறுத்துப் போனதால் மனது வெம்பிப் போய் விட்டது. இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லுங்கள்.முடிந்தவரை செய்கிறேன் என்று ஒரு வழியாக இயல்பான நிலைக்கு வந்தார்.

அகத்தியர் நாடி மூலம் வாய் திறந்தார்.

தஞ்சாவூரில் ஒரு பெரு நிலகிழாராக வாழ்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் இவன்.  சொத்து அதிகம்.  நன்செய், புன்செய், தோப்பு, துறவு என்று செழிப்பான மண் வளம் மிக்க சொத்துக்களை வைத்து அதிகார போதையில் செல்வாக்கு புகழோடு வாழ்ந்து வந்தான்.

தெய்வ நம்பிக்கை என்பது இவனுக்கு ஒரு போதும் கிடையாது.  பெரியவர்கள், பெற்றோர் சொன்ன அறவழிக்கு எதிராகச் செயல்பட்டவன்.  இறை நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சியில் கொடி கட்டி பறந்தான்.  ரத்தக் கொழுப்பும், பணத்திமிரும் அட்டிப் படித்ததால் தன்னை எதிர்த்துப் பேசிய பலமில்லாத பெண்கள், சிறுவர், சிறுமியரை பலர் மத்தியில் அவமானப்படுத்தினான்.  மொட்டை அடித்து அவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி கிராமத்தை சுற்றி வரச் செய்தான்.  இந்தக் கொடுமையை முன் ஜென்மத்தில் செய்திருந்தாலும், அந்த ஊழ்வினை தான் இந்த ஜென்மத்தில் இவன் மனைவிக்கு தோல் நோயாக மாறி மனதைத் துடிக்க வைத்திருக்கிறது.

எனினும் அகத்தியனை நோக்கி வந்ததாலும், இவனை ஈன்றோர் செய்திட்ட பெறும் புண்ணியம், அன்னதானம் ஆகியவற்றாலும் இவனது மனைவிக்கு வந்த தோல் நோயைக் குணப்படுத்த ஒரு வாய்ப்பு உண்டு.  என்றாலும், விட்ட குறை தொட்ட குறை போல் இவனுக்கு இன்னமும் முழுமையான தெய்வ பற்று இல்லை.  அகத்தியன் சொல்வதை ஒரு போதும் இவன் செய்யமாட்டான்.  இன்னும் சொல்லப்போனால் அகத்தியனை சோதிக்கவே இவன் இங்கு வந்துள்ளான்.  அதுதான் உண்மை என்று சட்டென்று முடித்துகொண்டார்.

கடைசி நான்கு வரியை மாத்திரம் அவரிடம் சொல்லாமல் அகத்தியர் சொன்ன பரிகாரங்களைச் செய்தால் உங்கள் மனைவிக்கு தோல் நோய் குணமாகும் என்றேன்.

அகத்தியர் சொன்னதை தான் செய்வதாகச் சொல்லி தலையை ஆட்டினார்.

சதுரகிரி மலைக்குச் சென்று எட்டு காததூரத்தில் வலப்புறம் திரும்பினால் அங்கு ஒரு சிறுகுகை இருக்கும். அந்த குகைக்கு இடப்புறத்தில் ஒரு வித்யாசமான மரம் இருக்கும். அந்த மரத்தின் பூவை (பதினெட்டு) பறித்து குப்பைமேனி, மிளகு, ஆவாரம்பூ, குமரிப்பூ, மாதுளம் பூ, சரக்கொன்றை பூ, செம்பரத்தம் பூ இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணையோடு கலந்து மேனியில் தடவி வந்தால், வெண்புள்ளி மறையும். தோல் நோய் முற்றி குஷ்ட நிலைக்கு செல்லாமல் தடுக்கும். சுமார் மூன்று மாதங்கள் இந்த மருத்துவச் சிகிச்சை தொடரவேண்டும் என்றார் அகத்தியர்.

இதக் கேட்டதும் வந்தவருக்கு சந்தோசம் வரவில்லை.வெறுப்போடு சதுரகிரிமலைக்கு நான் எங்கே போவது?  எது எது எந்த பூ என்று எனக்கு எப்படித் தெரியும்? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி என்று நேரிடையாகவே பட்டென்று சொல்லி விட்டார்.

மறுபடியும் அகத்தியரிடம் இதை சொல்லி இதை விட எளிய வைத்தியம் சொல்லக்கூடாதா என்று கேட்டேன்.

உண்டு அதையும் உரைத்திருப்பேன். இவனுக்குத்தான் எதிலும் நம்பிக்கை இல்லையே. இவன் அந்த மருந்தைப் பெற வைப்பேன். அகத்தியன் மீது நம்பிக்கை வைத்து முதலில் இவன் சதுரகிரிக்கு போகட்டும் - என்று மறுபடியும் உரைத்தார்.

இதை தவிர வேறு வழியே இல்லையா? என்றார்.

அகத்தியன் சொன்னபடி செய்.இலையெனில் முன் ஜென்ம கர்ம வினையிலிருந்து நீ தப்ப முடியாது. உனக்கும் அந்த மாதிரி நோய் வரும் என்றார்.  அதை கேட்டு அமைதியாக திரும்பினார்.

நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் என் வீட்டு வாசலில் தன் மனைவியோடு வந்து நின்றார் அவர். அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். பின்னர் விசாரித்தேன்.

சதுரகிரி மலைக்குச் சென்று இருக்கிறார். அங்கு யாரோ ஒருவர் அகத்தியர் அனுப்பி வைத்தாரா? என்று கேட்டு தோல் நோய்க்குரிய அகத்தியர் சொன்ன அத்தனைப் பூக்களையும் தன் கைபடவே கொடுத்திருக்கிறார். அந்த பூக்களை கொண்டு தன் மனைவிக்கு மருத்துவச் சிகிச்சை செய்திருக்கிறார். நாற்பத்தைந்து நாளில் தன் மனைவி பூரண குணத்தோடு மாறியதை என்னிடம் காட்ட தன்னோடு அழைத்து வந்திருக்கிறார், சந்தோஷத்தோடு.

அவரது நெற்றியில் திருநீறும், குங்குமப் பொட்டும் பளிச்சென்று தெரிந்தது.

Tuesday 22 March 2011

சித்தன் அருள் - 28

"எத்தனையோ அற்புதங்களை அகத்தியர் ஜீவநாடி மூலம் செய்து காட்டுகிறார் என்று சொல்லுகிறார்கள்.எனெக்கென்னவோ சிறிதும் நம்பிக்கை தோன்றவில்லை.  இருந்தாலும் எதோ ஒரு நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.  எனது சந்தேகத்தை அகத்தியர் போக்குவாரா?" என்ற பீடிகையுடன் ஒருவர் என்  முன்னால் வந்தமர்ந்தார்.

"உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் விட்டு விடுங்கள்.  எதற்காக உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணாக்க வேண்டும்" என்றேன்.

எனக்கு வந்திருக்கும் வியாதி என்ன தெரியுமா? கான்சர்!ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.அதற்குரிய மருத்துவச் சிகிச்சையை செய்து கொண்டு வருகிறேன்.நான் இந்த நோயிலிருந்து குணமாகி விடுவேனா?  இதை அகத்தியரிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?" என்று ஒரு அதிர்ச்சியை தந்தார்.

இதைப்பற்றி அகத்தியர் அருள்வாக்கு தருவார் என்று தான் நம்புகிறேன். ஆனால் உங்களுக்கு அகத்தியர் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டுமே என்றேன்.

"இல்லை என்றால் இவ்வளவு தூரம் அகத்தியரை தேடி வந்திருக்க மாட்டேனே" என்றார் சட்டென்று.

எனக்காக இப்படிச் சொல்ல வேண்டாம்,நான் அவருடைய தூதன். அவ்வளவுதான்.அவர் என்ன சொல்கிறாரோ அதை நான் அப்படியே சொல்கிறேன்.  நம்பிக்கை இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள், என்றேன்.

இன்னொன்று. எனக்குப் பரிகாரம், பிரார்த்தனை என்று எதிலேயும் சிறிதும் நம்பிக்கை இல்லை. அப்படிச் சொன்னால் என்னால் அதைச் செய்ய முடியாது. அதே சமயம் எனக்குள்ள நோய் குணமாக வேண்டும் என்று கட்டளை இட்டார்.

இந்த வார்த்தைகள் தர்ம சங்கடத்துக்குள்ளாக்கியது. ஜீவ நாடியில் என்ன சொல்லப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது.ஏதேனும் பரிகாரம், பிரார்த்தனை என்று வந்துவிட்டால் அதை இந்த நபர் செய்யாமல் போனால், அதன் விளைவு வேறு விதமாக இருக்குமே என்ற கவலையும் ஏற்பட்டது. மருந்தும் சாப்பிடமாட்டேன், வியாதியும் குணமாக வேண்டும். இதற்கு அகத்தியர் தன அபூர்வ சக்தியை பயன்படுத்த வேண்டும், என்று விரும்பினார் அவர்.

"பகவானிடம் உங்கள் கோரிக்கையை வைக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு ஜீவா நாடியைப் புரட்டினேன். அதில் சம்பந்தமில்லாத சில வார்த்தைகள் வந்தது.

"ராமர் வேஷம் போட்டவனெல்லாம் இப்பொழுது ஆட்சியைப் பிடிக்கக் குழுவை கூட்டி பேசுகிறான். இன்னொரு கூட்டமோ, பொதுமக்களின் வரிப்பணத்தை கோடி கொடியைக் கொள்ளை அடிக்க அயோத்தியாபுரியில் சோம பானம், சுரா பானம் உண்டு, கைஎழுத்திடுகிறது. நாட்டில் பொய் தான் ஆட்சி செய்கிறது. ரத்தம் நன்றாக இருக்கிறவன் எல்லாம், இல்லாத வியாதியைச் சொல்லி உடன் பிறந்தவர்களைப் பயமுறுத்தி, சொத்தைப் பிடுங்குகிறான். பணம் என்ன பாடு படுத்துகிறது பார்" என்று சொன்னார்.

ஒரு வார்த்தை கூட என் எதிரில் இருப்பவருக்காக வரவில்லை என்றே எனக்கு தோன்றியது. எத்தனை தடவை கட்டை மூடி பின்பு பிரார்த்தனை செய்து திறந்தாலும் ஜீவ நாடியில் மேற் சொன்ன அதே வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே வரவில்லை. எனக்கும் அந்த வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தம் விளங்கவில்லை.  அப்படியே மூடி வைத்து விட்டேன்.

"சார் உங்களுக்காக கட்டைப் பிரித்துப் படித்தேன்.  எந்த செய்தியும் வரவில்லை.  ஒரு வேலை இன்றைக்கு நாள் சரியாக இல்லை என எண்ணுகிறேன்.  பின்னொரு நாள் வாருங்களேன்" என்று மெதுவாக சொன்னேன்.

"எனக்கு தெரியும் சார். இதெல்லாம் இப்படித்தான் என்று. என்ன, நான்தான் கண்டிஷன் போட்டேனே. பரிகாரம் பண்ண மாட்டேன், பிரார்த்தனை செய்ய மாட்டேன்னு.பின் எப்படி அகத்தியர் பதில் சொல்வார்?நீங்களே ஆளைப் பார்த்து குருட்டாம் போக்குல சொல்ற வார்த்தை சார் என்று வார்த்தைகளை அனலாகக் கக்கிவிட்டு விருட்டென்று எழுந்து போய் விட்டார்.

அந்த நபர் எழுந்து சென்ற பின்னர், எதற்காக சம்பந்தம் இல்லாமல் அகத்தியர் வார்த்தைகளை சொன்னார்? என்று குழம்பிக் கொண்டிருந்தேன். எனது அருகில் இருந்த சில நண்பர்களும் அகத்தியர் வாக்கினை பலவிதத்தில் புரட்டிப் பார்த்தார்கள்.  சரியான விடை கிடைக்கவில்லை.

சில மாதங்கள் கழிந்து.......

மறுபடியும் அந்த நபர் என்னைத்தேடி வந்தார்.  என் மனதில் அவரைப் பற்றி ஒரு தாழ்வான எண்ணம் தான் முதலில் ஏற்ப்பட்டது.எதற்காக நம்பிக்கை இல்லாமல் இப்போதும் அகத்தியரைத் தேடி வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  இருந்தாலும் இன்னொரு தடவை அந்த நபருக்காக ஜீவ நாடி படித்தேன்.

அன்றைய தினம் அகத்தியன் சொன்னது இது தான்.

திரைப்படத்தில் ராமர் வேஷம் போட்ட என்.டி.ராமராவ் தெலுங்குதேசம் என்னும் புதிய கட்சசியை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார். அதைத்தான் நாசூக்காக குறிப்பிட்டுருந்தேன். அகத்தியன் சொன்னது பொய்யா? மெய்யா? என்பதை நாளை காலைச் செய்திதாளில் முதல் பக்கத்திலே வெளிவரும்.

பொதுமக்களின் வரிப்பணத்தை தங்களுக்குப் பங்கு போட்டு பிரித்திட ஆளும் கட்ச்சியும், எதிர் கட்ச்சியும் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டதும் அன்றைக்குத்தான். இல்லாத திட்டத்தை இருப்பது போல் காட்டி, கோடி கோடியாக  பணத்தைச் சுருட்ட மது உண்டு திட்டம் போட்டனர். ஆனால் இது அப்போதே சில நல்லோரால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. அதையும் இப்போது சொல்கிறேன்.

மூன்றாவதாக என் எதிரே அமர்ந்திருக்கும் இந்த நபரை பற்றி நேற்றைக்கே கூறினேன்.  அதை அகத்தியன் மைந்தனான நீ உட்பட யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

சொத்துக்களை பிரித்து தானே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையினால் தனக்கு ரத்தப்புற்று நோய் இருப்பதாகச் சொல்லி, பொய்யால்  உடன் பிறந்தோரை அழ வைத்து, அந்த இறக்கக் குணத்தை வியாபாரமாக்க  திட்டம் போட்டவன் இவன்.

இவன் சொல்வது அத்தனையும் பொய்.  இவனுக்கு கான்சர் நோய் கிடையாது.  இல்லாத வியாதியைச் சொல்லி உடன் பிறந்தோரை ஏமாற்றி சொத்துக்களை குறுக்கு வழியில் பிடுங்கி, தனது காதலியின் பெயருக்கு மாற்றிவிட திட்டம் போடுகிற இவன், அகத்தியனைப் பழிப்பது என்ன நியாயம்?" என்ற ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை. எதையோ சொல்ல வாயெடுத்தார்.  ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

மறுபடியும் ஜீவ நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"இறைவனே இல்லை என்று சொல்லும் இனத்தைச் சேர்ந்தவன் இவன். அகத்தியனை சோதிக்கவே அனுப்பப்பட்ட நபர் இவன்.இல்லையெனில்  கண்டமாலை எனும் கொடிய நோய் இருப்பதாக அகத்தியனிடமே பொய்  சொல்வானா? ஆனால் விதியின் செயல் என்ன தெரியுமா. இன்னும் சில மாதங்களில் அதுபோன்ற உயிர்க் கொல்லி நோயால் இவன் அவஸ்தைப் படப் போகிறான்.  அப்பொழுது இவன் அகத்தியனை நோக்கித்தான் வருவான்" என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார் அகத்தியர்.

அந்த நபர் இந்த வார்த்தைகளைக் கேட்டு பயப்படுவார், அல்லது தவறுக்கு வருந்துவார் அல்லது பதறி மன்னிப்பு கேட்பர் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவரே இந்த அருள் வாக்கைப் பொய்யாக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விடுத்துப் போனார்.

அவருடைய பேச்சு, செயல், நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.  ஒரு வேளை அவர் சொல்வது உண்மை தானா? நாம் தான் தவறாக ஏதேனும் சொல்லி விட்டோமா என்று கூட கதிகலங்கிப் போனேன்.

எது நடந்தாலும் நடக்கட்டும், எல்லாமே அகத்தியருக்கே சமர்ப்பணம் என்று அப்படியே விட்டு விட்டேன்.  பின்னர் அந்த அவரும் என்னைத் தேடி வரவில்லை.  சரியாக மூன்று மாதங்கள் கழிந்தது.

ஒருநாள் காலைப் பொழுதில் திடீரென்று அந்த நபர் வந்தார்.அவரை கைத்தாங்கலாக மூன்று பேர் பிடித்துக் கொண்டு, கஷ்டப்பட்டு என் முன்பு கொண்டு நிறுத்தினர்.

"என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"பக்கவாதம் வந்து கை, ஒரு கால் செயல் படவில்லை.  வாயும் கோணிப் போய் விட்டது.  இவர் உயிர் பிழைத்ததே புண்ணியம்" என்று வந்தவர்களில் ஒருவர் சொன்னார். மேலும் அவர் கூறும் பொது, உங்களிடம் அழைத்துச் செல்லுமாறு இவர் கட்டாயப்படுத்தினார். அதன் பேரில், உங்களிடம் இவரை அழைத்துக் கொண்டு வந்தோம். அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை என்று இவரே தன் இடது கையால் எழுதி இருக்கிறார். பாருங்கள்" என்று நாற்ப்பது பக்க நோட்டைக் காண்பித்தார்.

"நான் என்ன செய்ய வேண்டும்" என்றேன்.

அகத்தியரிடம் இவருக்ககப் பிரார்த்தனை செய்து மன்னிப்பு கேட்டுத் தாருங்கள்.  இவர் எந்த சொத்தை அடைய கான்சர் என்று வேஷம் போட்டாரோ, அந்த கான்சரின் ஆரம்ப கட்டமாக வயிற்றில் கட்டி உருவாகி இருக்கிறது. போதா குறைக்கு திடீர் பக்கவாதமும் வந்து விட்டது. அகத்தியரை முழுமையாக நம்பி வந்திருக்கிறார். அவருக்கு உயிர் பிச்சை கொடுக்க அகத்தியர் முன் வரவேண்டும்" என்று வந்திருந்தோர் சொல்ல......

உடல் நிலை பாதிக்கப்பட்டவர் "ஆமாம்! ஆமாம்!" என்று தலையாட்டியபடி ஒரு கையால் ஜீவ நாடிக்கு நமஸ்காரம் செய்தார்.

மனது கேட்கவில்லை.

அவருக்காக ஜீவ நாடியை படித்தேன்.

"சொத்தைச் சேர்க்க ஆசை படுவதைவிட புண்ணியத்தைச் சேர்க்க ஆசைப் பட்டிருந்தால் இவனுக்கு இந்த தொல்லை வந்திருக்கதே" என்று அருள் வாக்கு சொன்ன அகத்தியர், சதுரகிரி மலையில் உள்ள  ஒரு மூலிகையைக் குறிப்பிட்டு, அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்ற பக்குவத்தையும் சொன்னார்"

அதன் பலனாய்..........

அந்த நபர், கான்சர், பக்கவாதம் இந்த நோயிலிருந்தும் நீங்கி முப்பது ஆண்டுகாலமாக ஆரோக்கியமாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சித்தன் அருள் - 27

"எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா, இல்லையா? என்பதை மட்டும் அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்று முகத்தில் ஏகப்பட்ட வெறுப்புகளைச் சுமந்து கொண்டு நடுத்தர வயது தம்பதிகள் இருவர் என்னிடம் கேட்டனர்.

யார் எதை சொன்னாலும் அதனை முழுமையாக நம்பி, பணத்தை, பணமாக எண்ணாமல் தண்ணீர் போல் செலவழித்து ஏகப்பட்ட பரிகாரங்களைச் செய்திருக்கிறார்கள்.  அப்படி செய்தும் அவர்களுக்கு புத்திரப் பாக்கியம் இதுவரை கிட்டவில்லை என்பது தெரிந்தது.

அந்த தம்பதிகளில் ஆணுக்கு வயது ஐம்பத்திரண்டு.  பெண்ணிற்கு வயது நாற்பத்தி மூன்று.  மருத்துவ இயல்படி அந்தப் பெண்ணிற்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை.  இருப்பினும், தங்களுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற ஏக்கத்தால் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

அகஸ்தியர் காண்ட நாடி பார்த்தேன்.  சில பரிகாரங்களைச் செய்யச் சொன்னார்.  அப்படி செய்தும் எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை என்றும் அந்த நாடியை பற்றிக் குறை கூறினர்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேன்.  அவர்கள் அகத்தியர் நாடியைப் பற்றிக் குறை கூறும்போது எனக்குள் சிறு வருத்தம் ஏற்ப்பட்டது.  அது ஜீவநாடி அல்ல.  காண்ட நாடி என்பதால் சிறிது சமாதானமும் அடைந்தேன்.

பின்னர் அந்த தம்பதிகளுக்காக நாடி பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருவரின் பெற்றோர் முன் ஜென்மத்தில் கருவில் சிசுக்களைக் கொலை செய்ததும், இன்னொருவரின் முன்னோர் தாயையும், சேயையும் பிரித்து வைத்ததும், தம்பதிகளை ஒன்று சேர விடாமல் குறுக்கில் நின்றதும், புற்றுக்களை அழித்து குடில் கட்டினதும் தான் இதற்கு காரணம்.  இதுவே பின்னாளில் பிரம்மஹத்தி தோஷமாக மாறியதால் மூன்றாவது தலைமுறை இதனால் பாதிக்கிறது என்று முடித்தார்.

இதைப்படித்ததும், அந்தத் தம்பதியினர் கேட்ட முதல் கேள்வி இதுதான்.  மூன்றாவது தலைமுறை பாதிக்கிறது என்றால் என் உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் புத்திரப் பாக்கியம் இருக்கிறதே! எப்படி அது எங்களை மட்டும் பாதிக்கும்? எங்களால் இதை நம்பவே முடியவில்லை" என்றார்கள் ஒரே குரலில்.

"நம்பவில்லை எனில் விட்டு விடுங்கள்" என்றேன்.

"சரி! இதற்கு என்னதான் பரிகாரம்" அதையாவது சொல்லுங்களேன்."

ராமேஸ்வரம் சென்று பிரம்மஹத்தி தோஷம் போக்க தில தர்ப்பணம் ஒன்றை முறைப்படி செய்வது என்று சொல்லி முடிக்கும் முன்பே நாங்கள் அதையும் செய்து விட்டோம் என்று சட்டென்று பதில் அளித்தனர்.

"ஆகம விதிப்படி தில தர்ப்பணம் செய்தாலும் அதில் மந்திரங்கள் பல சரியானபடி சொல்லாததினால் விட்டுப் போயிருக்கலாம்.  அதனால் தான் இன்னமும் பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது என்றார் அகத்தியர்.

"அப்படியானால் மறுபடியும் ராமேஸ்வரம் செல்ல வேண்டுமோ?" என்று நம்பிக்கை இழந்து கேட்டனர்.

"இது உங்கள் விருப்பம்.  நாம் இதில் ஒரு போதும் தலையிட மாட்டோம்" என்றார் அகத்தியர்.

"வேறு ஏதேனும் பரிகாரம், பிரார்த்தனைகள் இருக்கிறதா?"

"பின்னால் நாகம் தன்னை நாற்பத்து ஐந்து நாட்கள் பூஜித்து அதை உங்களது குலதெய்வக் கோவிலில் நிறுவலாம்"

"நாங்கள் அதையும் செய்து விட்டோம் காளஹஸ்தியில்"

"எப்போது?"

"அது பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு"

"எப்படி?"

வெள்ளியில் நாகம் செய்து அதை காளத்தி கோவிலில் ஹோமம் வளர்த்து உண்டியலில் போட்டு விட்டோம் - என்று பதில் வந்தது.

இப்படி அகத்தியர் நாடியில் பதில் வரும்முன்னே பொறுமை இல்லாமல் அந்த தம்பதிகள் உடனுக்குடன் பதில் தந்ததால் சில மணி நேரம் நாடியில் எந்த பதிலும் வரவில்லை.

பொதுவாக அகத்தியர் நாடியைப் படிக்கும் பொழுது முன்கூட்டியே சொல்லி விடுவார்.  இது தெய்வ ரகசியம் என்பதால் அதை யாரிடமும் நான் சொல்வது இல்லை.    இது வேண்டுமென்றே மறைக்கப்பட்டது என்று மற்றவர்கள் நினைக்கலாம். அது உண்மை அல்ல.

அவசியமிருந்தால் அதனை அவர்களிடத்தில் முன் கூட்டியே சொல்வதுண்டு.  அவர்கள் அகத்தியனை சோதிக்க வந்திருப்பதாக இருந்தால் அதற்கேற்ற மாதிரி பதில்கள் வரும்.

அத்தனைப் பரிகாரங்களையும் செய்து விட்ட பின்பும் தங்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லை என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக அவர்கள் பேசியதால் - பொறுத்திரு, பின்னர் யாம் விளக்குவோம் என்று முடித்துக் கொண்டார்.

இவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டால் அவர்களுக்குத் திருப்தியாக இருக்குமே என்று எனக்கு ஆதங்கம்.  ஆனால், சில மணிநேரம் பொறுத்திருக்கச் சொன்னது ஏன்? என்று மனதை அலைபாய விட்டேன்.

சில மணி நேரம் கழிந்தது.

இவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு என்று மீண்டும் ஒரே வரியில் சொல்லி முடித்துக்கொண்டார் அகத்தியர்.

எப்போது? என்ற கேள்விக்கு அகத்தியர் நாற்பது நாட்கள் கழித்து அவர்களை வரச் சொன்னார்.  இருந்தாலும் அவர்களுக்கு முழு நம்பிக்கையோடு அகத்தியர் நாடி அமையவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.

நாற்பத்து  ஐந்து  நாட்கள் கழிந்தது.

சொல்லி வைத்தார்ப் போல் அந்த தம்பதிகளில் கணவன் மட்டும் வந்தார்.  அவரது மனைவி வரவில்லை.  ஏன் என்று நானும் கேட்கவில்லை.  அவர்களுக்காக அகத்தியர் நாடியைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

"என்னதான் பிரார்த்தனை செய்தாலும் விதிப்படி உங்களுக்கு புத்திரபாக்கியம் என்பது இல்லை தான்.  ஆனால் மானசீகமாக நீங்கள் செய்த பிரார்த்தனை, பரிகாரங்கள் உங்கள் விதியை மாற்றி இருப்பதால் உடல் இயல்பின்படி ஒரு அற்புதம் நிகழும்.

அந்த அற்புதத்தால் தான் இத்தனை வயதிலும் கருத்தரிக்க வாய்ப்புண்டு.  அதை நாற்பத்து ஐந்து நாட்களுக்கு முன்பே சொல்லி இருப்பேன்.  ஏன் அப்போது சொல்லவில்லை எனக் கேட்கலாம்.

முதலில் மிகவும் நம்பிக்கையோடு எந்த பரிகாரமும் செய்யவில்லை.  இதற்குப் போய் பரிகாரம் செய்யவேண்டுமா என்று அரை குறை நம்பிக்கையோடு செய்தது ஓர் தவறு.  இரண்டாவது அவசப்பட்டு, பணத்தைக் கணக்கிட்டும் பரிகாரங்கள் எதுவும் முழ்மையாகச் செய்யவில்லை.  மூன்றாவதாக உங்களுக்கு பரிகாரம் செய்த நபர் முறையாக மந்திரங்களை ஓதவில்லை.  நான்காவதாக செய்திட்ட பரிகாரங்கள் அனைத்தும் தீட்டு கலந்துவிட்டது என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள்.  இதன் காரணமாகத்தான் எப்பொழுதோ கிடைக்க வேண்டிய புத்திரபாக்கியம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

உங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்ற வருத்தத்தால், உங்களுக்காக எத்தனையோ வருஷங்கள் மானசீகமாக இறைவன் கருணை பெற பட்டினி   கிடந்தது அன்றாடம், ஜெபித்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிர் விட்டாளே உனது தாய் அவள் தான் உன் மனைவியின் வயிற்றில் கருவாக உதிக்கப்போகிறாள்.

ஆனால் உன் பொருட்டு போராடி வணங்கி பட்டினி கிடந்த உன்தாயை என்றைக்காவது நீயோ அல்லது உன் மனைவியோ அன்போடு, பாசத்தோடு, ஆசையோடு பேசியதில்லை.  எரிந்து விழுந்திருக்கிறாய்.  அவள் மனதை மிகவும் புண்படுத்தி இருக்கிறாய்.  அந்த தாய்க்கு நன்றிக்கடனாக, பிறக்கின்ற அந்தப் பெண் குழந்தைக்கு உன் தாயின் பெயரை வை.  அதோடு அந்த தாய்க்கு திதியை விழாவாக எடு.  இதை உள்ளன்போடு செய்வதாக இருந்தால் அந்த பெண் குழந்தை தங்கும்" என்று முடித்தார் அகத்தியர்.

கண்ணீர் மல்க அத்தனையும் கேட்டுக் கொண்டான் அவன்.  பல மாதம் சென்றது.

அகத்தியர் சொன்னபடி அந்த பெண் கருத்தரித்தாள்.  இது மருத்துவருக்கே ஆச்சரியம் ஏற்ப்படுத்தியது.

அகத்தியர் அருள் வாக்குப்படி அவனது தாய் பிறந்த நட்சத்திரத்தில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.இன்றைக்கு சென்னை நகரில் பிரதானமாக ஓர் இடத்தில் அந்தப் பெண் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறாள்!

Friday 18 March 2011

சித்தன் அருள் - 26


பத்ராசலம் சென்று பல வித்யாசமான அனுபவங்களை சந்தித்த பிறகு சென்னை திரும்பினேன்.  அங்கு கிடைத்த பல அனுபவங்களில் ராமரின் தரிசனமே ஆத்மா திருப்தியை தருவதாக அமைந்து இருந்தது.  அந்த அனுபவத்தில் மூழ்கியபடி சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கண் அயர்ந்தேன்.

ஒரு நாள் காலை வாசலில் யாரோ ஒருவர் அழைக்கும் ஓசை கேட்டது.  அங்கு சென்று பார்த்த போது ஒரு வயதான பெரியவரும், நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவரும் கையை கூப்பியபடி நின்றனர்.

உள்ளே அழைத்து என்ன விஷயம் என்று கேட்டேன்.  வெகு நேரமாகியும் அவர்களிடம் இருந்து எந்தவித வார்த்தைகளும் வரவில்லை.  துக்கம் நெஞ்சை அடைத்ததால் வார்த்தைகள் தடுமாறியது.  கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

சற்று நேரம் கழித்து அந்த பெரியவர் வாய் திறந்தார்.

"என்னுடைய பையன் கப்பலில் என்ஜினீயராக பணிபுரிகிறான். ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென்று அவனிடம் இருந்து டெலிபோன் வந்தது. பெரும் சங்கடத்தில் இருப்பதாகவும், அவனுடன் பணி செய்யும் மேல் அதிகாரியால் அவன் உயிருக்கு மிரட்டல் ஏற்பட்டு இருக்கிறது என்றும் சொல்லி முடித்தான். பிறகு இதுவரை அவனிடம் இருந்து எந்த விதமானத் தகவலும் இல்லை. அவன் உயிரை அகத்தியர் தான் காப்பற்றித்தர வேண்டும்" என்று முடித்தார்.

"இப்பொழுது உங்கள் பையன் எங்கு இருக்கிறான்?" என்று கேட்டேன்.

"நெதர்லாந்து.  அங்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு அவன் வந்த கப்பல் இப்போது சிங்கப்பூருக்கு வந்திருக்க வேண்டும்.  ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் அவனோடு தொடர்பு கொள்ளவே முடியவில்லை.  அவன் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு இருக்காதே" என்று அந்த பெரியவருடன் வந்த நடுத்தர வயது இளைஞ்சர் கேட்டார்.

பெரியவரை பார்த்தேன்.  பதட்டத்தோடு காணப்பட்டார்.

"பதற வேண்டாம். அகத்தியரிடமே இந்த பொறுப்பை ஒப்படைத்து விடுவோம்" என்று அகத்தியரை வணங்கி நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"இன்றல்ல.நேற்றல்ல,இரண்டு ஆண்டாக அவன் உயிருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் அவன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றாலும், இனியும் தொடர்ந்து அந்த கப்பலில் பணி புரிய வேண்டாம்". என்று சொன்னார் அகத்தியர்.

"எப்படி சார்! அவன் ஆசைப்பட்டு விரும்பி படித்த படிப்பு. இப்போது கப்பலில் இரண்டாவது என்ஜினீயராக இருக்கிறான். இன்னும் ஆறு மாதத்தில் அந்த கப்பலில் முதன்மை என்ஜினீயராக மாறிவிடுவான்.அதனால், அதை விட்டுவிட்டு அவன் எப்படி வர முடியும்?" என்று கேட்டார் பெரியவர்.

"எது முக்கியம் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டுவிட்டு, பின்பு அகத்தியனை நோக்கி கேட்கட்டுமே" என்று சட்டென்று முடித்துக்கொண்டார் அகத்தியர்.

அகத்தியர் இப்படி சொன்னதும் அவர்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நானும் ஓலைக்கட்டை மூடி வைத்துவிட்டேன். வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டு போன அவர்கள் ஒன்றரை மணி நேரம் கழித்து ஓடி வந்தார்கள்.

"நாங்கள், அவசரப்பட்டு எதோ சொல்லிவிட்டோம். எங்களுக்கு அவனது உயிர் தான் முக்கியம். பணமோ, பதவியோ முக்கியமில்லை. தயவு செய்து எங்களை அகத்தியர் மன்னித்து நல்வாக்கு சொல்லட்டும் என்றார்கள். இதை அகத்தியர் ஏற்று உத்தரவு கொடுத்தால் சொல்கிறேன் என்று விட்டு.

மறுபடியும் ஓலைக்கட்டை எடுத்தேன், படிக்க ஆரம்பித்தேன்.

"எந்த மைந்தனுக்காக இந்த அகத்தியனை நோக்கி ஓடி வந்தார்களோ, அந்த மைந்தனை பற்றி சொல்கிறேன். முதலில் நாணயமாகவும், நேர்மையாகவும் தான் நடந்து கொண்டான்.பின்னர், அவனும், இன்னும் சிலரும் சேர்ந்து கள்ளக்கடத்தலில் ஈடுபட்டனர்.

இது லட்சக்கணக்கான பண ஆதாயத்தைக் கொடுத்ததால் அந்த பணத்தைக் கொண்டு தான் பல இடங்களில் ஏராளமான நிலம், மனை வாங்கி போட்டான். இது சம்பளப் பணம் என்று எல்லோரையும் நம்ப வைத்தான்.  சமீப காலமாக அவன் செய்து வரும் இந்த கள்ளக்கடத்தல், அவனுடன் பணிபுரியும் மேல் அதிகாரிக்கு தெரிய வந்தது.  தனக்கும் இதில் பெருமளவு பங்கு வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டான். அந்த மைந்தனுக்கோ அதில் இஷ்டமில்லை. எனினும், பெயரளவுக்கு பங்கு கொடுத்து வந்தான். இதை அவனது மேல் அதிகாரி ஏற்கவில்லை. காரணம், இன்னும் சில நாட்களில் இவன் முதன்மை எஞ்சினியராக ஆகிவிடுவான். தாம் ஓய்வு பெற்று விடுவோம்.

ஓய்வு பெரும் முன்னரே கணிசமானப் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அந்த மேல் அதிகாரிக்கு ஏற்பட்டது. இதுவே, அந்த மேல் அதிகாரிக்கும், அவனுக்கும் பெரும் பகையாக மாறிவிட்டது. அது இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து, இவர்களின் மைந்தனுக்கு உயிர் பயமாகவும் மாறிவிட்டது.

இவன் நன்னெறியில் சென்று இருந்தால் இன்றைக்கு உயிருக்கு பயந்து துடித்து கொண்டிருக்க வேண்டாம். இவன் சம்பாதித்ததும் குறுக்கு வழி. அந்த மேல் அதிகாரி இவனை மிரட்டி பணம் பறிக்க முயற்ச்சிப்பதும் குறுக்கு வழி. இன்னும் மூன்று நாட்களுக்குள், தான் குறுக்கு வழியில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் அவன், தனது மேல் அதிகாரியிடம் ஒப்படைத்து விடட்டும். மறுத்தால் அவன் உயிரை அந்த முக்கண்ணனாகிய சிவன் தான் காப்பாற்ற முடியும். பின்னர் பதவி உயர்வும் கிட்டும் என்று அகத்தியர், இனியும் அத்தகைய குறுக்கு வழியில் அவன் செல்லாமல் இருப்பது நல்லது என்று முடித்தார்.

அகத்தியர் சொல்ல சொல்ல, அவர்களுக்கு முதலில் கொஞ்சம் நம்பிக்கை இல்லை. அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்று தான் வாதாடினார்கள்.  பின்னர், இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டனர்.

"கருப்பு பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன தான் இறைவனுக்குப் பரிகாரம் செய்தாலும் அது இறைவனுக்கு போய்ச் சேராது.கடினமான உழைப்பைக்கொண்டு கிடைக்கும் பணத்தில் முருகப்பெருமானுக்கு தினமும் ரோஜா மாலையும், குல தெய்வத்திற்கு லட்ச தீபம் ஏற்றவும். திருகடையூர் அபிராமிக்கு சந்தன காப்பும் செய்வதாக வேண்டிக் கொள்ளட்டும். இது தான் பரிகாரம் என்று பதில் உரைத்தார் அகத்தியர்" சிறிது நேர யோசனைக்கு பிறகு.

"இதை எல்லாம் அவனுக்காக நாங்கள் செய்கிறோம். அதுவரை அவனுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படக்கூடாது. நாங்கள் அகத்தியப் பெருமானைத் தான் முழுமையாக நம்புகிறோம்" என்றார்,  பையனுடைய தந்தையான பெரியவர்.

"இந்த பிரார்த்தனைகளை அவன் தான் செய்ய வேண்டும்.  இருந்தாலும் இன்று நடுக்கடலில் உயிருக்கு பயந்து போரடிக்கொண்டிருப்பதால் அவனால் செய்ய முடியாது. அவன் பொருட்டு உடனே முருகப்பெருமானுக்கு சகலவிதமான அபிஷேகத்தையும் செய்யுங்கள். இன்று இரவுக்குள் பய பக்தியோடு இதனைச் செய்யாவிட்டால், அவன் உயிருக்கு இந்த அகத்தியன் பாதுகாப்பு தருவது கஷ்டம்" என்றார் அகத்தியர்.

இதைச் சொன்னதும் தான் தாமதம், அடுத்த நாழிகைக்குள் அவர்கள் என்னிடம் விடைபெற்று கிளம்பி விட்டார்கள். பின்பு அவர்களை பற்றியத் தகவலே இல்லை.

மூன்று மாதம் கழிந்திருக்கும்.

மாலை நேரம், கப்பலில் வேலை செய்து, தவறான முறையில் பணம் சம்பாதித்து, உயிருக்கு போராடிய அந்த பையன், கூடவே அவனது தந்தை, சகோதரன் - மூன்று பேரும் என்னைத் தேடி வந்தனர்.

அகத்தியருக்கு நன்றி கூறவே வந்தோம் என்று அகத்தியர் நாடியை தொழுதனர்.

என்ன நடந்தது என்று நான் கேட்டேன்.

இதற்கு அந்த பையனே பதில் சொன்னான்.

"நான் முதலில் நேர்மையாகத் தான் இருந்தேன். கள்ளக் கடத்தலில் எனக்கு உடன்பாடு இல்லை. முதலில் இதனை மறுத்த போது, கப்பலில் இருந்த சில கள்ளக்கடத்தல்காரர்கள் என்னைக் கொன்று கடலில் வீசி விடுவதாக பயமுறுத்தினார்கள். உயிருக்குப் பயந்து நான் தலையாட்டினேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது."

சமீபத்தில் எனக்கு நிறைய எதிர்ப்பு வந்தது. எதற்காக இந்த தப்பு செய்ய வேண்டும், என்னை விட்டுவிடுங்கள் என்று ஒதுங்கினேன். நான் நிறைய சம்பாதித்து இருப்பதாகவும், அதை கொடுக்க மறுத்தால் அன்று இரவே என்னைக் கொலை செய்து நடுக்கடலில் தூக்கி எறியப்போவதாகவும் எனது மேல் அதிகாரி என்னை பயமுறுத்தினான். இதைத்தான், நான் தொலை பேசியில் வீட்டிற்கு சொன்னேன்.

ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை.என் மேல் அதிகாரி எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.நானோ என்னுடைய அத்தனைப் பணத்தையும் அவனுக்கு கொடுத்தேன். ஏற்க மறுத்துவிட்டான்.  அதை அநாதை இல்லத்திற்கு கொடுத்து விட்டேன். எனக்கு இப்போது முதன்மை என்ஜினீயர் பதவி உயர்வும் கிடைத்து விட்டது" என்று அவன் சொன்னதைக் கேட்டு, அகத்தியருக்கு நான் நன்றி சொன்னேன்.

சித்தன் அருள் - 25

திடீரென்று காரில் இருந்து எழுந்த அலறல், பக்கவாட்டில் வந்து கொண்டு இருந்த எங்கள் போலீஸ் வாகனத்தில் இருந்த அனைவருக்கும் கேட்டதால், வாகனம் நிறுத்தப்பட்டது.

என்ன நடந்தது என்பதை அறிய வண்டியை விட்டு கீழே இறங்கினேன்.  அந்த கார் பக்கம் சென்றேன்.  காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த அந்த கோடீஸ்வரரின் இரண்டு பெண்களில் ஒருவள் வயிற்றுவலி தாங்காமல் துடித்து கொண்டிருந்தாள்.

நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகவே, அவள் தாங்க முடியாமல் வீரிட்டு கொண்டிருக்க, மற்றவர்கள் அவளுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தனர்.  அருகில் ஏதாவது ஆஸ்பத்திரி இருக்கிறதா என்று விசாரித்தபோது, அதற்கு இன்னும் இருபது மைல் தள்ளிப்போக வேண்டும் என்றும், விஷயம் தெரிந்த போலீசார் சொன்னார்.

அதுவரைக்கும் அந்தப் பெண்ணால் வயிற்று வலியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்று எல்லோருக்கும் ஒருவித பயம் ஏற்பட்டது.  இதுவரை மிக நன்றாக இருந்த அந்த பெண்ணுக்கு இப்படியோரு வலி திடீரென்று எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் புரியவில்லை.

நான், அந்த அந்த பெண்ணின் தந்தையை அழைத்து, நாடியில் வந்த விஷயத்தை சொல்லி, முதலில் அந்த பெண் தனது இடுப்பில் மறைத்து வைத்த சில ஓலைச்சுவடிகளை எடுத்து வெளியில் போடும்படி சொன்னேன். 

"அப்படியா செய்தாள் அவள்?" என்று முதலில் கோபப்பட்ட அவர், பின்னர் செய்கையில் இறங்கினார்.

"என்னை மன்னிச்சுடுங்கோ" அகத்தியரின் ஜீவநாடி ஓலைச்சுவடி ஏதாவது ஒன்று என்னோடு இருக்கட்டுமே என்று உங்களுக்குத் தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டேன்.  அதற்குப் பிறகு தான் படிப்படியாக எனக்கு வயிற்றுவலி வந்தது" என்று அழுதுகொண்டே என்னிடம் கொடுத்தாள் அந்த பெண்.

அவள் அந்த ஓலைச்சுவடிகளை கொடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளது வயற்றுவலி குறைந்தது.

அகத்திய பெருமானுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.  இருப்பினும், அந்த ஓலைச்சுவடியால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதால் அதை அப்படியே விட்டு விட்டேன்.

அந்த பெண்ணிற்காக நடு ரோட்டில் போலீஸ் வண்டியும், காரும் நின்றதால் சிறுது நேரம் ஓய்வு கிடைத்தது.

நான் ஏற வேண்டிய ரயில் நிலையம் அங்கிருந்து பார்க்கும்போது லேசாக மின் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தாலும், சுற்றி வளைத்து போகும்போது சுமார் இருபது மைல் இருக்கும் என்று தெரிந்ததால், அங்கிருந்தவாறே அந்த கோடீஸ்வரரை அனுப்பிவிட்டு, நான் மட்டும் அந்த போலீஸ் வண்டியில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த போது இரவு பன்னிரண்டு மணி.

ரயில் நிலையத்தில் ஒன்றிரண்டு பிச்சைகாரர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.  சென்னைக்குச் செல்லும் ரயில் இரவு ஒரு மணிக்கு வரும் என்று தூக்க கலக்கத்தில் டிக்கெட்டை கொடுத்துவிட்டு டிக்கெட் கவுன்டரில் இருந்தவர் சொன்னார்.

முன் ஜென்ம தொடர்போ என்னவோ, என்னிடம் நாடி பார்த்த அந்த தமிழ்நாட்டு போலீஸ்காரரும், அவரது நெருங்கிய நண்பரும் எனக்குத் துணையாக பிளாட்பாரத்தில் அமர்ந்தனர்.

ஆசையோடு ஏதாவது டி வாங்கி குடிக்கலாம் என்றால் அங்கு எந்த டி கடையும் இல்லை.  வெற்றிலை, பாக்கு கடை மட்டும் இருந்தது.

ஏறுவோர் இறங்குவோர் அதிகம் இல்லாத ரயில் நிலையம் அது என்பதால், எந்த ரயிலும் இரண்டு நிமிடத்திற்கு பின்னர் நிற்பதில்லை என்றும், பத்ராசலம் கோயில் திருவிழாவின்போது மாத்திரம், அருகில் உள்ள சிற்றூரில் இருந்து ஒன்றிரண்டு பயணிகள் ரயில் வந்து நிற்கும் என்றும் தெரிந்து கொண்டேன்.

அந்த ரயில் நிலையம் எதற்காகக் கட்டப்பட்டது என்று யோசித்தால், மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தால், அவற்றிற்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ள பயணிகள் ரயில்களுக்காகக் கட்டப்பட்டது என்று தான் தோன்றும். ஒன்றிரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நள்ளிரவில் அங்கு வருவதால், அதில் ஒன்றில் ஏறி சென்னைக்கு வருவதாக எண்ணி இருந்தேன்.

ஏற்கனவே மழையும் பெய்து, வெள்ளமும் கோதாவரியை அணைத்து கொண்டதால், அந்த நள்ளிரவு நேரத்தில் உடம்பு குளிரால் நடுங்க ஆரம்பித்தது.  எனக்காக அந்த போலீஸ் அதிகாரி இருவரும் காத்துக்கொண்டிருந்தது, மனதுக்கு கஷ்டமாகவும் இருந்தது.  அதே நேரத்தில் ஆறுதலாகவும் இருந்தது.

கொஞ்சநேரம் தமிழ்நாட்டு கதைகள், அரசியல், சினிமா மற்றும் நட்டு நடப்புகள் பற்றி பேசி கொண்டிருந்தபோது அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான்கு பேர் கம்பு தடிகளுடன் வெகு வேகமாக திடீரென்று பிளாட்பாரத்தினுள் வந்தனர்.

என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், ரயில்வே டிக்கெட் கவுண்டரின் கதவுகள் இழுத்து சார்த்தப்பட்டன.  எரிந்து கொண்டிருந்த மங்கிய விளக்குகளும் அணைக்கப்பட்டன.  மெல்லிய நிலவு வெளிச்சம் மட்டுமே இருந்தது.

வந்தவர்கள், ஓரிடத்தில் நின்று கொண்டு இப்படியும், அப்படியும் வர ஆரம்பித்தனர்.  எதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது போல் தோன்றியது.  எனினும், அகத்தியர் இருக்க பயம் ஏன் என்று விட்டுவிட்டேன்.

அவர்கள் எங்கள் பக்கம் வந்ததும், என் அருகே இருந்த போலீஸ் அதிகாரிகளை சீருடையில் பார்த்ததும் மிரண்டு ஓட ஆரம்பித்தனர். உஷாரான போலீஸ்காரர்கள் அவர்களை துரத்தினார்கள்.  ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு அங்கு நடந்தது.

கால் மணி நேரம் கழிந்தது.

அந்த தமிழ்நாட்டு போலீஸ்காரரும், அவரது நண்பரும் ஒரே ஒருவனை பின் கை இரண்டும் கட்டிப்போட்டு தர தரவென்று இழுத்து கொண்டு வந்தார்கள்.

அவர்கள் என் அருகே வருவதற்கும், நான் சென்னைக்கு செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கும் சரியாக இருந்தது.

"யார் இவன்?"

"நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன்.  கூட வந்த மூன்று பேரும் தப்பிவிட்டார்கள்.  இவன் கீழே விழுந்து அடிபட்டதால் இவனை மாத்திரம் பிடிக்க முடிந்தது" என்றவர்கள், வாசலில் இருக்கும் போலீஸ் வேனில் அவனை கொண்டு செல்வதாக கூறி என்னிடம் இருந்து விடை பெற்றார்கள்.

ஏறுவதற்கு கூட முடியாமல் படியில் அமர்ந்து இருந்த சிலரை மிதித்து அவர்களது எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாகி, முண்டியடித்து கொண்டு ரயிலில் ஏறினேன்.  எங்கு பார்த்தாலும் மனித தலைகள்.  நிற்க கூட இடம் இல்லை.

நான் "ரிசர்வ்" செய்யவில்லை.  எனவே "அன்ரிசர்வ்" கம்பார்ட்மெண்டில் ஏறினேன்.  எங்கிருந்தோ வந்த ஒரு டிக்கெட் பரிசோதகர், நான் இருந்த கம்பார்ட்மென்ட் அருகே வந்தார். "இங்கே வா" என்று தெலுங்கில் என்னை அழைத்தார்.

ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து, "என்னையா?" அழைக்கிறீர்கள் என்று கேட்டேன், ஒரு சிறு பதைப்போடு.

"அமாம்!  பக்கத்து ரிசர்வ் கம்பார்ட்மெண்டில் ஒரு பெர்த் காலியாக இருக்கிறது.  வருகிறாயா?" என்றார்.

சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன்.  அந்த கம்பார்ட்மெண்டில் ஏறி படுக்கையில் சாய்ந்துகொண்டேன்.  டிக்கெட் பரிசோதகர் வந்தார், பணத்தை நீட்டினேன்.

"ரிசர்வ் கம்பார்ட் மென்டிற்கு உரிய பணத்தை மாத்திரம் கொடுத்தால் போதும்" என்று, சற்று அதிகமாக நான் கொடுத்த பணத்தை மீண்டும் என்னிடமே திருப்பி கொடுத்தார்.

இப்படி கூட நல்லவர்கள் இருக்கிறார்களா இந்த உலகத்தில், என்று எண்ணிக்கொண்டேன். அந்த டிக்கெட் பரிசோதகருக்கும் தூக்கம் வரவில்லை. எனக்கும் நல்ல படுக்கை வசதி கிடைத்தாலும் கூட தூக்கம் வர மறுத்தது. அவரிடம் மெதுவாக ஊர் கதை, உலக கதை பற்றி பேச்சுக் கொடுத்தேன். கடைசியாக ஆந்திர மாநிலத்து நக்சலைட்டுகள் பற்றி பேச்சு வந்தது. டிக்கெட் பரிசோதகர் பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறது. நிறைய விஷயத்தைச் சொன்னார்.  அதில் ஒன்று.

"உங்களுக்கு தெரியாதா? கொஞ்ச நேரத்திற்கு முன்னால கொள்ளையடிக்க வந்த நக்சலைட்டுகளில் ஒருவன் போலீசில் பிடிபட்டுவிட்டான்.  டிக்கெட் கவுண்டரில் கொள்ளையடிக்க வந்திருப்பார்கள் போலிருக்கு.  சரியாக போலீசில் மாட்டிக் கொண்டான்.  அவன் பெயர் நாகி ரெட்டியாம்.  பெரிய ஆளாம்."

"நாகி ரெட்டியா?" என்றேன் ஆச்சரியத்துடன்.

"ஏன்? அவனை பற்றி உங்களுக்கு தெரியுமா?" என்று என்னிடம் கேட்டார்.

"தெரியாது" என்றேன், சட்டென்று.

அவன், காணாமல் போன அந்த போலீஸ்காரரின் தம்பியாக இருக்ககூடும் என்று நான் நினைத்தேன்.  அது உண்மை என்று பின்னர் அகத்தியரே உறுதியாக சொன்னார்.  வியந்து போனேன்.