​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 13 March 2011

சித்தன் அருள் - 12


நான் ஜீவ நாடியை பிரித்துபார்த்தேன்!

நல்ல எண்ணத்தோடு இவர்கள் சென்றிருந்தால் அந்தப் பெரியவரை இவர்கள் கண்டிருக்க முடியும். இப்பொழுது பழுதில்லை.  அகத்தியன் வாக்கை பலர் இன்னும் நம்பவில்லை. அந்த பெண்ணைக் குணப்படுத்தி, அவளது சொத்தை அடைய முடியவில்லை என்கிற ஏக்கம் அந்த பெண்ணின் மாமா மனதில் இன்னும் இருக்கிறது.

அவன் பெயருக்குத்தான் தலையாட்டினான். இந்த எண்ணம் இருக்கும் வரை அந்தப் பெண் இயல்பான நிலைக்குத் திரும்ப மாட்டாள், என்றார் அகத்தியர்.

இதை அப்படியே அந்த நபரிடம் எடுத்துச் சொன்னேன்.

இப்போ சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம். நாங்க அவரைப் பார்த்து கொள்கிறோம். அந்த பெண் சீக்கிரம் குணமாக வேண்டும். அந்த இஸ்லாம் நபரை விட்டா வேறு யாரும் இல்லையா? என்று உள்ளபடியே பயந்து கேட்டார்.

"பயப்படாதீர்கள்", என்று சொல்லி மறுபடியும் அகத்தியரிடம் வேண்டினேன்.

"இவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தரவே இறைவன் அந்த இஸ்லாம் பெரியவருக்கு ஒரு சோதனையைக் கொடுத்தான்". அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்னும் 18 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வந்து விடுவார். அவரால் மட்டுமே இந்தப் பெண்ணை குணப்படுத்த முடியும்." என்று முடித்தார் அகத்தியர்.

"சரி, இன்றைக்கு அவரை பார்க்க முடியாது என்றால் நாளை இரவு அவரை போய் பார்க்கலாமா?" என்று வந்தவர் கேட்டார்.

"இல்லை.  நாளை மாலை 4  மணிக்கு அவர் வருவார். சாயங்காலமே அந்தப் பெண்ணுடன் சென்று அவரை சந்தியுங்கள். நிச்சயம் ஒரே நாளில் அவரால் குணப்படுத்த முடியும்", என்று மறுபடியும் அகத்தியர் நாடியை பார்த்து சொன்னேன்.

"ஒரே நாளில் அந்தப் பெண் குணம் அடைந்து விடுவாள்" என்று சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. ஒரே நாளில் குணமாகிவிடுமா என்று ஆச்சரியத்துடனும் சந்தேகத்துடனும் கேட்டார்.  பின்னர் என்ன நினைத்தாரோ "அகத்தியார் சொன்னா சரிதான்" என்ற படி நன்றி சொல்லி விட்டு கிளம்பினார்.

தங்க சாலைத் தெருவில் தனக்காக காத்திருந்தவர்களைச் சந்தித்து இந்த விவரங்களை அவர் தெரிவித்தார்.

மறு நாள் மாலை 4 மணி இருக்கும்.

அந்த இஸ்லாமியப் பெரியவர், எதிர்பாராத விதமாக தன்னுடைய அலுவகத்திற்கு வந்தார். அவரது வரவை எதிர் நோக்கி அந்தப் பெண்ணும் மற்றவர்களும் ஏற்கனவே காத்திருந்தனர்.

"யாரு நீங்க?" என்றார் அந்த பெரியவர்.

விஷயத்தை சொன்னார்கள்.  நிதானமாகக் கேட்டுகொண்டவர்,

பின்னர் உள்ளே அழைத்து "இதோ பாருங்கள்" என்று சுவரைக் காட்டினார்.

அங்கே கமண்டலத்தோடு புன்னகை பூத்த வடிவில் கருணையோடு அகத்தியர் படமாகத் தொங்கி கொண்டு இருந்தார்.

அதை கண்டதும் அங்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சி.  அகத்தியர் எப்படி இங்கு வந்தார்? என்று.

அப்போது அந்த இஸ்லாமியப் பெரியவரே சொன்னார்.

மருத்துவத்தில் நான் போகரைக் குருவாகக் கொண்டவன்.அகத்தியரின் தரிசனத்தைக்கூட பார்க்கும் பாக்கியம் எனக்கு உண்டு.நான் திருநெல்வேலியை சேர்ந்தவன் என்றவர், "நேத்திக்கு ஒரு ஆட்டோ என் மேலே மோதிடிச்சு.  நல்லவேளை எந்த காயமும் இல்லை. அந்த ஆடோக்கார தம்பியே என்னை அஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போய் வைத்தியம் பார்த்துச்சு.  டாக்டரும் ஒண்ணுமில்லேன்னு சொல்லி கொஞ்ச நேரத்திலே வீட்டுக்கு அனுபிட்டாறு", என்று முடித்தார்.

வந்தவர்களுக்கு இதைக்கேட்க பொறுமையில்லை.  அந்தப் பெண்ணைப் பற்றி சொல்லி, அகத்தியர் நாடி பற்றியும் சொன்னார்கள்.

பொறுமையாக இதனை கேட்ட அந்த பெரியவர் ராத்திரி பதினோரு மணிக்குத்தான் இப்படிப்பட்ட வியாதியை குணப்படுத்த வழி பிறக்கும், பகல் நேரத்திலே வந்திருகீங்களே" என்று பதில் அளித்தார்.

சில நாழிகை த்யானம் செய்தார்.

பின்பு

நாட்டுச் சர்க்கரையை கொஞ்சம் வாங்கி வரச்சொல்லி தன் மேஜையில் இருந்த டிராயரை திறந்து ஒரு மெல்லிய செப்புத்தகட்டில் ஒரு ஊசியை வைத்து இப்படியும் அப்படியுமாக கோடு போட்டார்.  பின்னர் அந்த நாட்டுச் சர்க்கரையை ஒரு இலை மீது வைத்து ஏதோ சொல்லி மந்திரித்து அதனை அந்த பெண்ணின் வாயில் போட்டு சிறிதளவு சாப்பிட சொன்னார்.

கைப்பட வரைந்த அந்த மெல்லிய செப்புத் தகட்டினை சுருட்டி அவள் கையில் கொடுத்தார்.

இன்னும் 4 மணி நேரத்தில் சித்தப்ரமை போல, அல்லது துஷ்ட தேவதையால் பதிக்கப்பட்ட இந்தப் பெண் இயல்பான நிலைக்கு வந்துவிடுவாள். ஆனால் ஒரு விஷயம் என்று ஒரு கட்டளை இட்டார்.

நான்கு மணி நேரம் கழித்து தண்ணீர்த் தாகம் இவளுக்கு அதிகரிக்கும்.  நிறைய தண்ணீர் கொடுக்க கூடாது.தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றுங்கள். தேவைப்பட்டால் ஒரு பஞ்சில் தண்ணீரை நனைத்து சொட்டு சொட்டாக நாக்கில் விடவும்.

பிறகு மூன்று மணி நேரம் கழித்து அவள் இயல்பான நிலைக்கு வந்துவிடுவாள்.  இனி இவளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்.

"ஒரு வேளை எங்களையும் மீறி தண்ணீர் அதிகமாக குடித்துவிட்டால்" உடன் வந்த ஒரு பெண் கேட்க

"இவள் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.  அதோடு இவளது சித்த பிரம்மைக்கோ, துஷ்ட தேவதையை விரட்டுவதர்க்கோ என்னால் முடியாது" என்றார் அந்த இஸ்லாம் பெரியவர்.

"இந்த பெண்ணை நீங்கள் அழைத்துச் செல்லலாம். ஏதேனும் பிரச்சினை என்றால் மீண்டும் இங்கு அழைத்து வாருங்கள்" என்று அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன அந்த 4 மணி நேரம் கழிந்தது.அதன் பின்னர் தான் அந்தப்பெண்ணின் தண்ணீர் தாகம் உச்சத்தை அடைந்தது. தண்ணீர் கேட்டு கத்தினாள், கதறினாள், உருண்டு புரண்டாள்.தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு செத்துபோய்விடுவேன் என்று கண் சொருக, மயங்கி விழுந்தாள்.

1 comment: