​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 March 2011

சித்தன் அருள் - 21


அகத்தியர் சொன்னது உண்மை என்று அந்த கோவில் அதிகாரிக்கு தெரிந்தது. ஆனால் அதை முழுமையாக வெளியில் காட்டி கொள்ளவில்லை.  எல்லா மனிதர்களும் செய்கின்ற தவறைத் தான் தானும் செய்திருப்பதாகவும், இதற்கு போய் பக்கவாத நோய் வரும் என்பது பொய்யாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.

கோவில் சொத்தை எடுத்தால் பக்கவாத நோய் வரும் என்றால், இது போல் எத்தனையோ பெரிய பெரிய கோவிலில் பலர் புகுந்து நிறைய சொத்துக்களை அபகரித்துச் சென்றிருக்கிறார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பக்கவாதத்தை விட கடுமையான நோய் தாக்கி இருக்க வேண்டும்.  இதுவரை அப்படி எதுவுமே நடக்கவில்லையே.  அதனால் தனக்கு எந்த நோயும் வராது என்று என்னிடம் அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

"தாங்கள் நன்றாக இருந்தால் அதுவே சரி.  அகத்தியர் வாக்கு பொய்யாக போகட்டுமே" என்றேன் சிரித்தபடி.

"இல்லை.  அகத்தியர் வாக்கை நானே பொய்யாக்கி காட்டுகிறேன்" என்றார் விடாப்பிடியாக.

எனக்கு இது சங்கடத்தை தந்தது.  உண்மை என்று தெரிந்தும் அதை ஒப்புக்கொள்ளவில்லை.  கோவில் சொத்துக்களை அபகரித்து வைத்ததை மீண்டும் கோவில் உண்டியலில் போடுங்கள் என்றாலும் அதை ஏற்க மறுக்கிறார்.  கள்ளத்தனமாக இரு தார வாழ்க்கை நடத்தி வருவதை சுட்டி கட்டினாலும் "ஆமாம்" என்று வாய் திறந்து ஒப்புக்கொள்ளவில்லை.  கோவில் அதிகாரி வேலை போய்விடுமே என்று தான் பயப்படுகிறார்.  வேலையும் போககூடாது, எந்த தவறையும் ஒத்துகொள்ள மாட்டேன், அதே சமயம் அகத்தியர் வாக்கையும் பொய்யாக்கி காட்டுவேன்.  இந்த சின்ன ஓலைச்சுவடியை வைத்து என் எதிர்காலத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இவரை நாத்திகவாதி என்று ஏற்று கொள்வதா, இல்லை ஆத்திகவாதியாக எண்ணி கொள்வதா? என்று நானே பித்து பிடித்தவன் போலானேன்.

கொஞ்சம் நேரம் கழிந்தது.

மழை பெருமளவு விட்டுவிட்டது.  மெள்ள எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். கோதாவரி வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவது தெரிந்தது. அகத்தியர் கணக்குப்படி இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெள்ளம் வடிந்து விடும் என்பதால் இரண்டு மணி நேரம் பொறுமையாக இருந்தேன்.

அந்த நிர்வாக அதிகாரிக்கு திடீரென்று என்ன தோன்றியதோ, தெரியவில்லை, என்னை அவர் அறைக்கு அழைத்தார்.

"நான் இங்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அதிகாரி.  நாளையோடு இங்கிருந்து விஜயவாடா கோவிலுக்கு மாற்றலாகிப் போய் விடுவேன். எனெக்கென்னவோ உங்களை விட மனதே இல்லை.  அதே சமயம் நீங்கள் சொன்னதை முழுமையாக நம்பவும் முடியவில்லை.  பக்த ராமதாஸ் இந்த கோவிலின் ராமருக்கு பலவிதமான ஆபரணங்களை செய்து அணிவித்து அழகு பார்த்து இருக்கிறார்.  அந்த நகைகள் அற்புதமானவை.  பாரம்பரியமும் பழமையும் மிக்கவை.  அவற்றை பாதுகாப்பு கருதி பலத்த பாதுகாப்போடு தனி அறையில் வைத்து இருக்கிறோம்.  இதுவரை நான் கூட அந்த நகைகளை முழுமையாக பார்க்கவில்லை.  எப்படியும் மழை இப்போதைக்கு விடப்போவதில்லை.  நீங்களும் வேறெங்கும் தங்க முடியாது.  அந்த நகைகளை பார்க்கலாம் வாருங்கள்", என்றார்.

சந்தோஷமாக "வருகிறேன்" என்றேன்.

அது ஒரு ரகசிய அறை.

அவருடன், ஒவ்வொரு கதவாகத் திறந்து அந்த அறைக்குச் சென்றோம்.  பாதுகாப்பு ஆட்களும் வந்தனர்.

அந்த ராமபிரான் - சீதா பிராட்டிக்கு இப்படி ஒரு பக்தரா?  என்ன அழகு, என்ன அழகு? அவர் செய்த நகைகள் அனைத்தும், தங்கம், வைரம், மரகதம் என அத்தனை நவரத்தினங்களையும் பட்டை தீட்டி ஒளி பொருந்திய நகைகளைக் காண உண்மையில் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

சுமார் இரண்டு மணி நேரம் அந்த பக்த ராமதாசர் ஆசை ஆசையாக ராமபிரானுக்குச் செய்த தங்க வைர நகைகளைக் காணும் பாக்கியம் கிடைத்தது.  பொதுவாக இந்த நகைகளை பொதுமக்கள் பார்க்க முடியாது. ஒன்று சேர்ந்து இத்தனை நகைகளையும் காணும் பாக்கியம் அன்றைக்கு எனக்கு கிடைத்தது.

அகத்தியருக்கு என் நன்றியை தெரிவித்தேன்.

பத்ராசலம் செல் பல அதிசயங்கள் நடக்கும் என்றாரே - அது எத்தனை தூரம் உண்மையாக மாறிற்று என்று எண்ணி ஆனந்தப்பட்டேன்.

எதற்காக அந்த நிர்வாக அதிகாரி என்னை அழைத்து இந்த நகைகளை காட்ட வேண்டும் என்பதர்க்கானக் காரணம் இன்று வரை எனக்கு தெரியவில்லை. எப்படி என்னை நம்பி அழைத்துக்கொண்டு சென்றார் என்பது புதிராகவே இருந்தது.

நகைகளை பத்திரமாக சரிபார்த்து பூட்டி அரக்கு சீல் வைத்து மிக நன்றாக ஒரு முறைக்கு நான்கு முறை அந்த அறைக்கதவை இழுத்துபார்த்து வெளியே வந்ததும் -

சட்டென்று அந்த நிர்வாக அதிகாரிக்கு திடீரென்று மயக்கம் வருவது போல் இருந்தது.  தன் அறைக்கு வந்தவர் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சாய்ந்தார்.

நான் பதறிப்போனேன்.  ஆஜானுபாகுவானாக, திடகாத்திரமாக, ஒரே சமயத்தில் ஆறு பேர்களை அடித்து நொறுக்கும் வல்லமையும், ஆறு அடிக்குமேல் உயரமும், செழுமையான சதைப்பற்றும் கொண்டு கணீர் கணீர் என்று தெலுங்கிலும் அறை குறை தமிழ், ஆங்க்ளிலத்திலும் பேசிய அவர் சட்டென்று மயக்கம் போட்டது என் வயிற்றை கலக்கியது.

சற்று வெளிச்சம் இல்லாத அந்த அறைக்குள் சென்று வந்ததில் அவருக்கு மயக்கம் வந்திருக்கலாம் என்று மற்றவர்கள் சொன்னது எனக்கு நியாயமாக பட்டது.  முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.  சிலர் சூடாக காப்பி கொண்டு வந்து கொடுத்து குடிக்கச் செய்தனர்.  சிறிது நேரத்தில் தெளிவடைந்தார்.  மயக்கம் தெளிந்ததே தவிர அவரால் பேச முடியவில்லை.  மிரள மிரள விழித்தார்.

"இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்.  சிறிது நேரம் ஓய்வு எடுங்கள், மழை இப்போது தான் குறைந்துள்ளது.  வெள்ளம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது.  இன்னும் சிறிது நேரத்தில் புறப்படுவோம். மலையில் இருந்து கீழே இறங்கி சென்று டக்க்டரிடம் காண்பிக்கலாம்.  அது வரை தைரியமாக இருங்கள்" என்றனர் வேலை ஆட்கள்.

இத்தனைக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.  எதோ பேச நினைத்தார்.  ஆனால் முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து அவரை கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல முயன்ற பொது தான் அவரது கால் செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது.  அவரது முகத்தில் வலியின் வேதனை தெரிந்தது.  அதை வெளியே சொல்ல வார்த்தை வராததால் முனங்கலாக வெளிப்படுத்தினார்.  அவரால் நடக்க முடியாமல் இருப்பதை அறிந்த கோவில் சிப்பந்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே டாக்டரை அழைத்துவர விரைந்தார்.

இதே எல்லாம் பார்த்து கொண்டிருந்த எனக்கு ஒரு வருடத்திற்குப் பின் வரும் சம்பவம் இப்போதே பலித்து விட்டதே என்று வேதனை அடைந்தேன்.  நான் கோவிலின் கர்ப்ப கிரகம் அருகே சென்று ராமரையும் அகத்தியரையும் மனதார பிரார்த்தனை செய்து அவருக்கு ஏற்ப்பட்ட இந்த திடீர் சுகவீனத்தை மாற்றவும், நல்ல ஆரோக்யதொடு அவர் நாளை விஜயவாட செல்லவும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.தொடர்ந்து அகத்தியரையும் பிரார்த்தனை செய்து ஜீவ நாடியைப் பிரித்து படித்தேன்.

"உயர் குளத்தில் பிறந்து உன்னதமான ஆன்மீகப் பணியச் செய்யவே இவனுக்கு இந்த ஜென்மம் தரப்பட்டது. செய்கின்றத் தவறைச் சுட்டிக்காட்டி, இவனது எதிர்காலம் நல்லபடியாக மாற வழியும் வாய்ப்பையும் காட்டினோம். ஆனால், எதையும் அலட்சியம் செய்யும் நோக்கிலேயே இவன் செயல்படுகிறான்.  ரத்தம் நன்றாக இருக்கும் வரையில் தான் எல்லாம் பேசலாம், நடக்கலாம். அது சுண்டிவிட்டால் அடுத்த வினாடி அவன் கதி என்ன? என்பதை இவனுக்கு உணர்த்த இப்படி நடந்துள்ளது. இந்த படிப்பினையை தந்தவர் இப்போது இங்கு வந்து சென்ற ராமர் தான். இன்னும் நாற்பது நிமிட நேரத்துக்குள் இவன் மறுபடியும் இயல்பான நிலைக்கு வந்துவிடுவான்.

அதற்குள், இவன் ஒரு காரியம் செய்ய வேண்டும். அதாவது, ஒரு பக்தர், ராமருக்கு சில நகைகளைக் கொடுத்துள்ளார். அதை இவன் கோவிலில் சேர்க்காமல் தனது அறையில் உள்ள பீரோவில் வைத்துள்ளான். அதை எடுத்து உடனே கோவில் உண்டியலில் போட வேண்டும். அப்படி செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று முடித்தார் அகத்தியர்.

இதை நான் அவரிடம் சொன்னால் பெரிய வம்பாகிவிடுமே என்றெண்ணி வாய் திறக்கவே இல்லை. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

இதற்குள் கீழிருந்து வேகமாக ஒரு டாக்டர் அவரை நோக்கி வந்தார்.

2 comments: