​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 8 March 2011

சித்தன் அருள் - 3


அந்த இடம் காடும் மலையும் சேர்ந்த இடம். வெளிப்பார்வைக்கு சற்று செழிப்பாக தெரியும். இதற்கு அருகிலேயே ஒரு சிற்றூர் இருந்தது. ஒரு நூறு அல்லது நூற்றி இருபது வீடுகள் தனித்தனியாக இருக்கும். பெரும்பாலும் விவசாயம் தான். வானம் பார்த்த பூமியாக இல்லை. எப்பொழுதும் சிற்றாறு ஒன்று வற்றாமல் ஓடிகொண்டிருக்கும்.

ஐந்து கிலோ மீட்டர் ஒத்தயடிப் பாதையில், பொடி நடையாக நடந்தால் ஊருக்கு வெளியே உள்ள காட்டுக்குப் போகும் பாதை வந்து விடும். அந்த காடு ஆரம்பம் இங்கே என்றால், அதன் அடுத்த பக்கம் கேரளா மாநிலத்துடன் இணைந்துவிடும். காட்டில் துஷ்ட மிருகங்கள் இருப்பதாக தெரியவில்லை.

ராத்திரி நேரத்தில் நரிகள் சப்தம் எப்போதாவது இந்த கிராமத்து மக்களுக்கு கேட்கும். பகலில் யாரும் அந்தக் காட்டுக்குள் போவது கிடையாது. சுள்ளி பொறுக்குவதற்கும், தங்களிடம் இருக்கும் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கும் பலர் காட்டுக்குள் செல்வதுண்டு. அருகிலே சிற்றாறு, சலசலவென்று களங்கமில்லாமல் ஓடுவதால் கால்நடைகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது.  அந்த காட்டின் தென் மேற்கு திசையில், திடீர், திடீரென்று மூங்கில் மரங்கள் தீப்பற்றிக் கொள்ளும். அதுவும் கோடை காலத்தின் நள்ளிரவு நேரத்தில்தான்.

இது பற்றி முழுமையாக அறியாத அந்த சிற்றூர்வாசிகள் இந்த நள்ளிரவு தீ விபத்தை "கொள்ளிவாய் பிசாசு" என்று நினைத்து வீட்டிற்குள் புகுந்து கொள்வார்கள். அதோடு, தங்கள் வீட்டு வாசல்களில், துடைப்பம் மற்றும் செருப்பையும் தொங்க விடுவார்கள்.  இப்படி செய்தால் கொள்ளி வாய்ப் பிசாசு வீட்டிற்குள் வராது என்ற ஒரு வித நம்பிக்கை.

அந்த மூங்கில் காட்டுக்குள், தீ அணைந்த பின்னர் சில வீரமுள்ள இளைய தலைமுறைகள் துணிந்து சென்று பார்ப்பதுண்டு. அப்படி ஒரு சமயம் பார்த்த பொழுது தான் -

அங்கு பன்னிரண்டு கைகளுடன், கோரை பற்களுடன், ஆக்ரோஷ முகபாவம், தலைவிரி கோலம், சிவந்த பயங்கர விழிகள், கையில் ஈட்டி, சூலாயுதம் கொண்டு, கழுத்தில் மண்டை ஓடு மாலைகளுடன் ரத்த வெறி பிடித்த ஒரு பத்ரகாளியின் உருவம் இருப்பதை கண்டனர். ஆள் அரவம் எதுவும் இல்லாத அந்த இடத்தில் கோவில் இருப்பதால், புதிதாக அங்கு வருபவர்களுக்கு பத்ரகாளியின் கோரமான உருவம் பயத்தையே ஏற்படுத்தும். அதுவும் திடிரென்று பத்ரகாளியை பார்க்கும் பொழுது சூலாயுதம் ஏந்திய ஒரு பெண் தாக்க வருவது போல தோற்றம் தரும்.

இந்த பத்ரகாளியை பற்றி கிராமத்து வாலிபர்கள், ஊருக்குள் சொன்னார்கள். இன்னும் சிலருக்கு, "அங்கிருக்கிற பத்ரகாளிக்கு படையல் கொடுக்காவிட்டால், அவள் ராத்திரி நேரத்தில் தங்களில் சிலரை உயிர் பலி வாங்கவும் கூடும்" என்ற அச்சம் ஏற்பட்டது.

அவர்கள் நினைத்தபடி, சில நாட்களில், அவர்கள் வளர்த்து வந்த ஆடுகள், கொடூரமாக ரத்த வெள்ளத்தில் கடிபட்டு இறந்து கிடந்தன. காட்டில் உள்ள மிருகங்கள் தான் இப்படி செய்திருக்கும் என்று மனதை சமாதானப்படுத்தி பார்த்தார்கள்.  ஆனாலும் அவர்கள் நம்பிக்கை வீணானது.

மறுபடியும் அந்த சிற்றூரின் சில மாடுகள் உடல் எல்லாம் கடித்து குதறப்பட்டு செத்து போனது.  இதற்கு பிறகு ஒட்டு மொத்தமாக அந்த கிராமமே, பத்ரகாளிக்கு கோவில் கட்டி அவளது கோபத்தை சாந்தப்படுத்த வேண்டிய ஏற்பாடுகள் செய்தது.

முதலில் வாரத்திற்கு ஓர் நாள், அன்று காலை அந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேர்களும் அந்த பத்ரகாளி கோவிலுக்கு வருவார்கள். படையல் வைப்பார்கள். மதியத்துக்கு மேல் கிராமத்துக்கு திரும்பி விடுவார்கள்.

இதன் பிறகு அந்த சிற்றூரில் எந்த கால் நடைகளும் கொல்லப்படவில்லை. இதனால் பத்ரகாளி சமாதானமாகிவிட்டாள் என்று ஜனங்கள் நம்பினார்கள். நாளாக, நாளாக, வாரம் தோறும் சென்ற அந்த மக்கள் படிப்படியாக குறைந்து மாதத்திற்கு ஒரு தடவையாகி, இப்போது வருடத்திற்கு ஒரு முறை படையல் போட்டு வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, சமீபத்தில்

பல்வேறு கொலைகள், கொள்ளைகள் செய்து போலிசின் கண்ணில் மண்ணை தூவி கொண்டிருந்த "அச்சுதன்", தகுந்த பாதுகப்பிற்காக காடு மலை எல்லாம் சுற்றிகொண்டிருந்தான். அப்போது அவன் கண்ணில் அந்த பத்திரகாளி கோவில் பட்டது. கோவிலில் இருந்து பார்த்தால், மலைக்கு கீழே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் யார் வருகிறார்கள் என்பது தெரியும். அதோடு கோவில் அருகே கிராம மக்கள் கட்டி வைத்த குடிசை இருந்ததால், அவன் தங்க, நல்ல இடமாக அது இருந்தது. பக்கத்திலேயே நீரோடை, சமைத்து சாப்பிட வேண்டிய சுள்ளிகள், காட்டுக்குள் எளிதாக கிடைத்தது.

உணவு தேடி அந்த கிராமத்துக்கு சென்றால், கிராம மக்கள் பயந்தோ அல்லது தன்னை மந்திரவாதி என்றோ, அல்லது பத்திரகாளியால் அனுப்பப்பட்ட பூசாரி என்றோ சொல்லி கொள்ளலாம். மேலும் காட்டுக்குள் இருக்கும் கோவிலில் தங்குவதால் போலீசிடம் இருந்தும் எளிதில் தப்பி விடலாம் என்பது அவனது எண்ணமாக இருந்தது.

காலம் கலிகாலம் என்பதால் அவனுக்கு அந்த திட்டம் கை கொடுத்தது. இதன்படி தன் திட்டத்தை ஒரு நள்ளிரவில் நிறைவேற்ற முன் வந்தான். "இந்த ஊருக்கு வந்திருக்கும் பத்ரகாளி கோவில் பூசாரி நான்! பத்திரகாளிதான் என் அம்மா", என்று பிரகடனப்படுத்திகொண்டான்! அவன் நாளடைவில் செல்வாக்கு மிகுந்தவன் ஆனான். எல்லோரும் அவனை கண்டு பயந்தனர்.

அதே சமயம், காட்டுக்குள் தனியாக சுள்ளி பொறுக்க வந்த இளம் பெண்களையும், அவன் விடவில்லை. தன் இச்சைக்கு கட்டுபடாத பல இளம் பெண்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்தான். அப்படியே அவர்கள் உடலை மண்ணில் புதைத்து, தான் செய்த கொலையை மறைக்க, அவன் ஊரில் உள்ளவர்களிடம், அந்த பெண்ணை புலி தூக்கி சென்று விட்டதாகவும், அவளை காப்பாற்ற முயன்றும் பயனற்று போய் விட்டதாகவும் கதை விட்டான்.

பாவம், ஜனங்களும் இதை நம்பினார்கள்.

இப்படி இருக்கையில்

ஒரு நாள், ஒரு முப்பத்தைந்து வயது இளைஞன், வறுமையின் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வந்தான். விதிவசத்தால் இவனிடம் சிக்கி கொண்டான்.

அவன், வந்தவனின் நிலையை கேட்டு தன் கைக்குள் சிக்க வைத்தான்.

"இதோ பாரு! ஒரு தலைச்சன் குழந்தையை இந்த பத்ரகாளிக்கு பலி கொடுத்தால் போதும், கோடிகணக்கான தங்க, வைர புதையலை பத்ரகாளி நமக்கு கட்டுவாள். அந்த குழந்தை, இந்த கிராமத்து குழந்தையாக இருக்க கூடாது.  அழகாகவும், அங்கஹீனம் இல்லாததாக இருக்க வேண்டும்" என்றான்.

"அப்படிப்பட்ட குழந்தையை கொண்டுவா. அதனை பலி கொடுத்து விட்டால் நமக்கு பெரும் புதையல் கிடைக்கும். அதனை எடுத்துகொண்டு நாமிருவரும் வேறு எங்கேயாவது சென்று ஆனந்தமாக சுக வாழ்க்கை வாழலாம்" என்று தூண்டிவிட்டான்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் வந்தவனுக்கு புத்தி பேதலித்தது.  தலைச்சன் குழந்தையை கடத்த அவன் ஆசியோடு கிளம்பினான்.

சித்தன் அருள்................. தொடரும்!

3 comments:

  1. i need your phone No. and Address..... please sent my mail id ramesh.chin@gmail.com

    ReplyDelete