​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 12 March 2011

சித்தன் அருள் - 8


"நேத்திக்கு ஏதோ ஒரு சாமியார் மாதிரி ஒருத்தர் வந்தாராமே? இப்போ அவர் எங்கே இருக்கார்னு தெரியுமா?" என்று ஆக்ரோஷமாகக் கேள்வி கேட்டவனைப் பார்த்தேன்.

அவன் முகத்தில் முரட்டுத்தனமும், கொலை வெறியும் தெரிந்தது. அவனையும், அவன் கூட வந்திருந்த அடியாட்களையும் நன்றாக உற்று நோக்கினேன். ஏதோ ஒரு முக்கிய காரணமாக அந்த பெரியவரைத் தேடி வந்திருப்பது தெரிந்தது.

பல வருஷங்களுக்கு முன் காணாமல் போன இந்தப் பெரியவரைத் தேடி இப்போது இங்கு வந்திருக்கிறார்கள் என்றால், இதன் பின்னணியில் ஏதோ ஓர் மர்மம் இருப்பது போல தோன்றியது.  அவரைத் தேடி இவ்வளவு தூரம் இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றால், ஒன்று அவரை கடத்திக்கொண்டு போகவேண்டும்.  இல்லையேல், அந்த கோடீஸ்வரப் பெரியவர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் அவரது சொத்தை அடைய முடியாது என்று நினைத்து, அவரை கொன்றுவிடத் தீர்மானித்திருக்க வேண்டும், என்று என் உள்ளுணர்வு உறுத்தியது.

இவர்களை இப்படியே விட்டுவிடக்கூடாது. சமாதானப்படுத்தி மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணினேன்.

அவர்களுக்கு தலைவன் போல இருந்தவனை அழைத்து உட்காரச் சொன்னேன்.  முதலில் மறுத்தான். பின்பு அமைதியாக என் பக்கத்தில் அமர்ந்தான்.

"குடிக்க தண்ணீர் வேண்டுமா?" என்றேன்

"தேவையில்லை" என்று முரட்டுத்தனமாக பதில் வந்தது.

"உங்களுக்கு வேண்டாம். சரி. உங்களுடன் வந்திருப்பவர்களுக்கு வேண்டுமா?" என்றேன்.

"அவர்களும் சாப்பிட மாட்டார்கள்" என்று பதில் வந்தது.

"சரி! எதற்காக அந்த சாமியாரை தேடி வந்திருகிறீர்கள்?"

"அந்த காரணமெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது. அந்த ஆளு இப்போ எங்கே இருக்கான்னு சொல்லு"

மரியாதை இல்லாமல் பேசினான். சிறிது நேர மௌனத்துக்கு பின் நானே தொடர்ந்தேன்.

"அவர் யார்? எங்கிருந்து வந்திருக்கார்னு எனக்கு தெரியாது.  திடீர்னு நேத்து ராத்திரி வந்தாரு. ஏதோ மனவருத்ததிலே விஷ மருந்து குடிச்சிருப்பார் போலிருக்கு.  அப்புறம் அவராகவே போயிட்டாரு.  அவ்வளவு தான்."

"எதுக்காக உங்க கிட்டே வரணம்?"

"நாடி படிக்க"

"நாடின்னா? என்று குறுக்கு கேள்வி கேட்டான்.

நாடி பற்றி எல்ல விவரங்களையும் நிதானமாக சொன்னேன். அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. பொறுமையாக அத்தனையும் கேட்டான்.

"அப்போ அகத்தியர் கிட்ட கேட்டா எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பருன்னு சொல்லறீங்க!"

"ஆமாம்.  ஆனால் இது அவரவர் அதிஷ்டத்தை பொறுத்தது" என்றேன்!

அவனுக்கு ஏதோ ஒன்றை என்கிட்டே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

தன் கூட வந்தவர்களை உட்காரச் சொன்னான்.  தாகத்திற்கு அவனே தண்ணீர் கேட்டான்.  கொடுத்தேன்.

"அந்த ஆள் இப்போ எங்கே இருக்கான். உயிரோடு இருக்கானா அகத்தியர் கிட்டே கேட்டு சொல்லு" என்றான்.

"எதுக்காக அந்த ஆளைப்பதியே கேட்கறீங்க?"

"அவனை கொண்டு போய்  ஒருத்தர்கிட்டே ஒப்படைக்கணம்."

"ஒப்படச்சிட்டா?"

"நிறைய பணம் கிடைக்கும்.  கொஞ்ச நாளைக்கு சந்தோஷமா இருப்போம்"

"அப்புறம்....." என்று கேட்டபோது அவனுக்கு எரிச்சல் தாங்கவில்லை.

"இதையெல்லாம் நான் இப்போ சொல்ல முடியாது.  எனக்கு அந்த ஆள் எங்கே இருக்கான்னு முதல்ல கேட்டுச் சொல்" என்று அதிகாரத்துடன் கேட்டான்.

இவனை எளிதில் சமாதானப்படுத்த முடியாது என்பது தெரிந்து போயிற்று.

"பகவனே, எந்த உயிருக்கும் ஆபத்தில்லாமல் நல்ல வழியைக் காட்டு" என்று அகத்தியரை வேண்டிக்கொண்டேன்.

சுவடியை எடுத்து, பிரார்த்தனை செய்து படிக்க ஆரம்பித்தேன்.  சில நிமிஷங்கள் ஓடின.

"என்னய்யா...ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறே, ஏமாத்தரியா?" என்றான் கிண்டலுடன், அவனுடன் வந்த ஒருத்தன்.

அவனை தலைவன் அடக்கினான்."ஒண்ணுமில்லை, அகத்தியர் கிட்டே கேட்டா, அவரு உன்னை பத்தியும், உன் குடும்பத்தை பத்தியும் சொல்ல ஆரம்பிக்கிறாரு.  அதான் யோசிக்கிறேன்" என்றேன் நிதானமாக.

முதலில் இதை அந்த தலைவன் நம்பவில்லை.

பின்னர் "அடடே! என்னை பத்தி சொல்லறாரா? என்ன சொல்லறாரு.. சொல்லு, சொல்லு " என்றான் சிறிது உற்சாகத்துடன்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஜீவ நாடியில் வந்ததை படிக்க ஆரம்பித்தேன்.  அவனுக்கு இதெல்லாம் புரியுமோ என்று எனக்கு உள்ளுக்குள் பயம் தான். நான் ஏதாவது ஒன்றைச் சொல்லி, அதை இந்த அசுரன் தவறாக எண்ணி ஆத்திரத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்பது தான் அது.

"உன் பேர் ஏழுமலை.  உனக்கு மூணு பொண்டாட்டி. முதல் இரண்டு மனைவிகளுக்கு குழந்தை இல்லை. மூணாவது பொண்டாட்டிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறவியிலேயே நல்லாத்தான் இருந்தது. இப்போ அந்த குழந்தைக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆறு மாதத்தில் அந்த குழந்தைக்கு முற்றிலும் கண் பார்வை தெரியாம போய்விடும். அந்த குழந்தையின் கண் பார்வை சிகிச்சைக்கு லட்ச கணக்கில பணம் வேணும். கொலை செய்யவும் தயாராயிட்டே! " என்று மெதுவாக சொல்லி முடித்ததும், அவன் சட்டென்று எழுந்தான்.

இதை கண்ட எனக்கு லேசாக நடுக்கம் வந்தது.

"ஏதோ தவறாகச் சொல்லி நன்றாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே.  அகத்தியர் இந்த கொலைகாரனிடம் நம்மை சிக்க வைத்து விட்டாரே!" என்று கூட எண்ணினேன்.

கீழே உட்கார்ந்த அந்த தலைவன் எழுந்து, சட்டென்று என் காலிலே விழுந்தான்.  அவனால் பேச முடியவில்லை. கண்ணில் நீர் ததும்பியது. அவனது இந்த செய்கையைக் கண்டு அவனுடன் வந்தவர்களும் திகைத்துப் போனார்கள்.

"ஆமாங்க, அய்யா சொல்வது அனைத்தும் உண்மைதானுங்க.  இந்த கோடீஸ்வர சாமியாரை கொன்னுட்டா மூணு லட்ச ரூபாய் தரேன்னு சொன்னாங்க. அப்படி செய்து அந்த பணத்தை கொண்டு குழந்தைக்கு கண் வைத்தியம் பார்க்கலாம்னு நெனச்சுதான் இப்போ இறங்கி இருக்கேன்" என்று தைரியமாக, அதே நேரத்தில் மனது விட்டு சொன்னான் அவன்.

இதை கேட்டு எனக்கு அடிவயிற்றில் புளியை கரைத்தது. ஆனால் அவனுடன் வந்தவர்களுக்கு அவன் இப்படி உளறிக்கொட்டியது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

"இந்த கொலை பண்ணி, அந்த பணத்தை வச்சுதான் குழந்தையின் கண் பார்வைக்கு வழி தேடணமா?" என்றேன்.

"வேறு வழி?"

"அகத்தியர்கிட்டேயே கேட்போம். அவர் சொல்லறபடி செய்வீங்களா?" என்று கேட்டேன்.

 "கண்டிப்பா செய்யறேன் சாமி" என்றான்.

அவன் முரட்டுத்தனம் மாறி இருப்பது கண்டு சந்தோஷமாக படிக்க ஆரம்பித்தேன்

"ஏற்கனவே நிறைய "பிரம்மஹத்தி தோஷம்" உனக்கு இருக்கிறது. போன ஜென்மத்தில் இளம் வயது பையன் ஒருவனை பூவரசம் கம்பு மூலம் அடித்ததால், படாத இடத்தில் பட்டு அவன் கண்ணை பறிகொடுத்தான். அதன் பலனாகத்தான் இந்த ஜென்மத்தில் உன் குழந்தையின் கண் பார்வையும் பறிபோனது. இப்போது ஒரு உயிரை கொன்று அந்த பணத்தை கொண்டு உன் ஒரே வாரிசுக்கு கண் வைத்தியம் செய்தாலும், பணம் தான் செலவழியுமே தவிர அந்தக் குழந்தைக்கு கண் பார்வை வராது." என்று சொல்லி நிறுத்தினார் அகத்தியர்.

அவன் சோகத்துடன் அடுத்தது என்ன என்பது போல பரிதாபமாக பார்த்தான்.

"என் குழந்தைக்கு பார்வை கிடைக்க வழி இல்லையா?" என்றான்.

அகத்தியர் தொடர்ந்து கூறினார்."உன் குழந்தைக்கு கண் பார்வை வரவேண்டுமானால் மூணு வழி உண்டு"

ஒன்று - இந்த கொலை தொழிலை அடியோடு விட்டு விடவேண்டும். இரண்டு - கொல்லி மலைக்கு சென்று அங்குள்ள சித்த வைத்தியரிடம் மூன்று மாத காலம் குழந்தைக்கு சிகிச்சை பெறவேண்டும், என்று சொல்லிவிட்டு மூன்றாவது கட்டளையை சொன்னேன்.

இதை கேட்டதும் அவன் கோபமாக எழுந்தான்.  "இது என்னால் முடியாது" என்று அடிவயிற்றில் இருந்து ஆக்ரோஷமாக கத்தினான்.

சித்தன் அருள்................... தொடரும்!

2 comments: