​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 July 2011

சித்தன் அருள் - 47

கிராமத்திலிருந்து வந்திருந்த அந்த நபரைப் பார்த்ததும் எனக்கு பகீர் என்று இருந்தது.  காரணம், முரட்டு மீசை, வாட்ட சாட்டமான உடம்பு, இடுப்பிலே சாண் அளவுக்கு தோலால் செய்யப்பட பெல்ட்.  மேலுடம்பில் எதுவும் இல்லை.  லுங்கி கட்டியிருந்தார்.

"என்ன வேண்டும்" என்று கேட்டேன்.

என் மனைவிக்கு உடம்பு சுகமில்லைங்க.  கிராமத்திலே இருக்கா.  உடல் நிலை சரி இல்லைங்க.  அவங்களுக்கு சுவடி பார்க்கணம். என்றார் அந்த நபர்.

டாக்டரிடம் காட்ட வேண்டியது தானே.  இங்கே நாடியைப் படிச்சு என்ன செய்யப் போறீங்க? என்று கேட்டேன்.

அகத்தியர் அய்யா, என் மனைவியைக் காப்பாத்தணும்! அதற்காகத்தான் இங்கு வந்தேன் - என்றார்

இனிமே உங்க மனைவி குழந்தை பெத்துக்க கூடாது, இதன் மீறினா அவங்க உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் அய்யா சொன்னாரு! ஆனா இப்போ என் பெண்டாட்டிக்கு நிறை மாசங்க............. என்றார்

ஏம்ப்ப!, டாக்டர் அப்படிச் சொல்லிட்டார்னா நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?  சரி உனக்கு எத்தனை குழந்தைகள்? என்றேன்.

ஏழு குழந்தைங்க.  இப்ப மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகி அவளும் தலை பிரசவத்திற்கு வீட்டிக்கு வந்திருக்கா - லேசாக வெட்கப்பட்டு சொன்னார்.

சரிதான் போ! உம பொண்ணுக்கு பிரசவம் பார்ப்பியா இல்லை, உன் சம்சாரத்திற்கு பிரசவம் பார்ப்பியா?  போதாகுறைக்கு அவங்களுக்கு உடம்பு வேற சரி இல்லைன்னு சொல்றே! என்னப்பா இது! ரொம்ப தப்பு பண்ணிட்டியே - என்றேன் ஆதங்கத்துடன்.

சிறிது நேரம் மௌனமாக கழிந்தது.

"சரி.  உன் கிராமம் எங்கே இருக்கு?"

மலைக்குப் பக்கத்திலே, போக வர சரியான பாதை கிடையாது.  ஆறு தாண்டி அக்கரைக்கு வரணும்.  அப்புறம் இரட்டை மட்டு வண்டியில் ஒரு மணி நேரம் போனா தான் ஊரு வரும்.  அந்த ஊர்ல தான் பிரசவ ஆஸ்பத்திரி இருக்கு........ - ரொம்ப நிதானமாக சொன்னார் அவர்.

"சரி இவ்வளவு கஷ்டப்பட்டு போறதுக்குள்ளே வீட்டிலே பிரசவமே நடந்துடுமே! வேறு டாக்டர், ஆயா, மருத்துவச்சி உங்க ஊர்ல கிடையாதா?

இருக்காங்க! ஆனா அவங்க எங்க ஊர் பக்கமே வரமாட்டாங்க.  ஒரு நாள் காத்து கிடந்தது தான் கூட்டி வாரணம்.

உங்க கிராமத்திலே இவ்வளவு அசவுகரியம் இருக்கே.  அந்த கிராமத்தை விட்டு வெளியே வரக்கூடாதா?

முடியாதுங்க.  நாங்க கிராமக் கட்டுப்பாட்டிற்கு உள்ளவங்க.

அது சரி.  இப்போ யார் சொல்லி என்னைத்தேடி வந்தே.

ஊர்ல சொன்னங்க.  என் மனைவி உயிருக்கு ஆபத்தா, இல்லையான்னு கேட்டுப் போகலாம்னு வந்தேனுங்க - என்றார் அந்த நபர்.

எனக்கு அந்த கிராமத்து நபர் சற்று வித்தியாசமாகவே தென்பட்டார்.  எந்த நம்பிக்கையில் இவர் என்னைத்தேடி நாடி பார்க்க அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்க வேண்டும்?  எதைப் பற்றியும் அதிகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  பண வசதியும் இல்லை.

முரட்டுத்தனம் தோற்றத்தில் தெரிகிறது.  உள்ளத்தில் தெய்வ நம்பிக்கை இருக்கிறது.  நிறைமாத கர்பிணியை கிராமத்தில் விட்டு விட்டு இங்கு வந்து நாடி பார்க்க வந்திருக்கிறானே இவனை என்னவென்று சொல்வது? என்று நினைக்கும் பொழுது சிறிது வருத்தம் கலந்த கோபம் ஏற்பட்டது.

மனதை தேற்றிக் கொண்டு அகத்தியரிடம் வேண்டி படிக்க ஆரம்பித்தேன்.

உடல் பலவீனம் உள்ள மனைவி அவள்.  மருத்துவர் சொன்னதும் உண்மை.  இனியொரு முறை கர்ப்பம் தரித்தால் இரத்தச்சோகை.  இனிப்பு நோய் எதிராக காரணமாக அவளுக்கு ஆயுட் பலம் இல்லை தான்.  எனினும் அகத்தியனை தேடி வந்தவன் பார்க்க முரடனாக இருந்தாலும் மனதளவில் ஏதுமறியா குழந்தை.  படிப்பறிவு இல்லை.  ஆனால் தெய்வ நம்பிக்கை அதிகம்.

இவனுக்கு அகத்தியன் உதவிடத்தான் வேண்டும்.  ஏனெனில் சென்ற ஜென்மத்தில் இவன் எத்தனையோ உயிர்களைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றி இருக்கிறான். அது மட்டுமல்ல, அகத்தியன் மீது அளவற்ற பக்தி கொண்டு பொதிகை மலையில் கஷ்டப்பட்டு நடந்து, பட்டினி கிடந்தது அகத்தியனுக்காக பால் அபிஷேகம் செய்து ஆனந்தப்பட்டவன்.  அந்த பொதிகை மலை அருவியில் வீழ்ந்திட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற இவன் அந்த அருவிக்குள் குதித்து அந்தப் பெண்ணை காப்பாற்றினான்.  அதன் சமயம் தான் அவளுக்காக அருவியிலே உயிரும் துறந்தான்.  இதை எண்ணிப் பார்த்தோம்.

முன் ஜென்மத்தில் இன்னவன் செய்திட்ட அரும்பணிக்காக யாமும், எம் துணைவி லோபமுத்திரையும் இன்னவன் மனைவிக்கு பிரசவ சமயத்தில் உறுதுணையாக இருப்போம் - என்று சொன்னார் அகத்தியர்.

பின்பு என்னிடம் "அகத்தியன் மைந்தா, இன்னவனை உடனடியாக கிராமத்தை நோக்கிப் போகச் சொல்.  அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது.  துடிக்கிறாள் அவள்" என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

இதை கேட்டதும் எனக்கு உள்ளூர உதறல் ஏற்பட்டுவிட்டது.  இருந்தாலும் அந்தக் கிராமத்து நபரிடம் பிரச்சினை எதுவும் இல்லை "உடனே ஊருக்கு செல்" என்று சொன்னேன்.

பிரசவம் நல்ல படியாக நடக்க வேண்டும்.  அந்த இரு உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லா வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு நானும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, புறப்பட்டுச் சென்றவன் மீண்டும் திரும்பி வந்தான்.

எல்லா வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு, நாடி பார்க்க வந்த பலரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, த்யானத்தில் நான் உட்கார்ந்ததைக் கண்டு அந்த கிராமத்தானுக்கு எதோ சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

நன்றாகப் பேசிக் கொண்டிருந்த நான் சட்டென்று த்யானத்தில் ஆழ்நததால், தன மனைவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.  இனி அவள் உயிர் பிழைக்க மாட்டாள் என்று கருதி விட்டான்.  தான் நினைத்தது சரிதானா என்றறிய உடனடியாகக் கிராமத்திற்குச் செல்வதைவிட இங்கேயே இருந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டான். 

கிராமத்திருக்கு செல்லாமல் அவனும் எனக்குச் சற்று தள்ளி ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டான்.  ஆனால் அவனால் எந்த விதப் பிரார்த்தனையும் செய்ய முடியவில்லை.  கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.  நடக்கக் கூடாத எதோ ஒரு துக்கம் நடந்து விட்டது போல கற்பனை செய்து கொண்டு அமர்ந்து விட்டான்.  இதை நானும் கவனிக்கவில்லை.

பிரார்த்தனையை செய்து முடித்து கண் திறந்து பார்த்த போது, இவன் தலை குனிந்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

எனக்கு இப்போது தான் உண்மையிலேயே பதற்றம் ஏற்பட்டது.

"இன்னும் போகவில்லையா, உடனே போ" என்று பல்வேறு வகையில் சமாதானம் சொல்லி அவனை வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்த பிறகு தான் எனக்கே நிம்மதி வந்தது.

அகத்தியர் சொன்னபடி நடக்கும் என்றாலும் ஒருவேளை தப்பித்தவறி ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால் இப்படிப்பட்ட கிராமத்து மக்கள் கலாட்ட செய்து விடுவார்கள்.  இதில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற பயத்தோடு மூன்று நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன்.

நான்காம் நாள் காலை.

அந்தக் கிராமத்தான் மகிழ்ச்சியோடு என்னை நோக்கி வந்தான்.  அவன் கையில் கிராமத்தில் சுட்ட தயாரிக்கப்பட்ட ஜிலேபி, வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்கு இருந்தது.

"என்ன ....... நல்ல படியாக மனைவிக்கு பிரசவம் ஆயிடுத்து போலிருக்கு.  தாயும், குழந்தையும் சவுகரியம் தானே என்றேன் - தெம்போடு.

அவன் இதெயெல்லாம் விட்டு விட்டு ஒன்றை மட்டும் கேட்டான்.

"சாமி அகத்தியரைப் பற்றி என்ன நினைக்கறீங்க?"

"ஏன் இந்த சந்தேகம் திடீரென்று வந்தது.  அவர் சிவ மைந்தன் சித்தர், தலையாயச் சித்தர்" என்றேன் நான்.

"இல்லைங்க.  இவரையும் விட தெய்வம் தான் ஒசந்தது என்று எண்ணினேன்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருதாங்க தெய்வம்" என்று தொடர்ந்து பேசினான்.

"அன்னிக்கு நான் உங்க கிட்ட வந்த போது என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு துடிச்சு போயிருக்க.  அப்போ யாரோ ஒரு சன்யாசியும், அவரது மனைவிய்ம் வீட்டுப் பக்கம் வந்திருக்காங்க.  என் குழந்தைகளை தள்ளி போகச் சொல்லி, அந்த சந்நியாசி மனைவி என் பெண்டாட்டிக்கு பிரசவம் பார்த்திருக்காக.  அந்த அம்மா கையைக் தொட்டதும் என் மனைவிக்கு பிரசவ வலி தெரியவில்லை.  எந்த விதமானக் குறையும் இல்லாம ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்திடிச்சு.  என் மனைவி உயிருக்கும் ஆபத்தில்லை.

இன்னொரு அதிசயத்தை கேளுங்க.

வாசலில் உட்கார்ந்து ஜெபம் பண்ணின அந்த சந்நியாசி சில பிரசவ மருந்துகளைப் பொட்டலம் பொட்டலமாகக் கட்டி கொடுத்திருக்காரு.  பிரசவம் முடிஞ்சதும் அந்த அம்மாவும், சந்நியாசியும் எந்த வித பிரதி உபகாரமும் வாங்காம போயிட்டாங்களாம்.  இப்போ சொல்லுங்க வந்தவங்க அகத்தியரும், லோப முத்திரையும் தானுங்களே" என்றான் மிக்க சந்தோஷத்துடன்.

முதலில் இதை என்னால் அவ்வளவு சீக்கிரமாக நம்ப முடியவில்லை.  எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ஒரு வித வசதியும் இல்லாத அந்தக் கிராமத்திருக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு சன்யாசித் தம்பதிகள் வருவானேன்? பிறகு எதையும் எதிர்பார்க்காமல் செல்வானேன்?

 யோசித்து பார்த்த பொழுது அகத்தியர் தான் என்ற எண்ணம் ஆணித்தரமாகத் தோன்றியது.  மானசீகமாக அந்த அகத்தியத் தம்பதிகளுக்கு நன்றி சொன்னேன்.

என்னைத் தேடி வந்து அகத்தியர் நாடி பார்க்கின்ற அத்தனை பேர்களுக்கும் இப்படியொரு அதிசயத்தை அகத்தியர் தம்பதிகள் செய்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?  செய்யக்கூடாதா? என்று என் உள்  மனம் வேண்டியது.

2 comments:

  1. Dear sir:
    I was reading this continuously . Really got tears by reading this and the grace of our Aagsthiyar . Om Namashivaya

    ReplyDelete