​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 10 November 2011

சித்தன் அருள் - 57

என்னிடம் நாடி பார்க்க வருகிறவர்களில் கடன் தொல்லைக்கு ஆளானவர்களும் உண்டு. அதுவும் ஆயிரம், லட்ச ரூபாய் கடன் அல்ல. கோடிக்கணக்கில் கடனுக்கு ஆளானவர்களும் வருவது உண்டு.

பெரிய வட்டிக்கு கடன் வாங்கி அந்த வட்டியைக் கூட கொடுக்க முடியாமல் திண்டாடுபவர்கள், இருக்கிற சொத்துக்களை விற்று நொந்து போய்க் கொண்டிருப்பவர்கள் என்று பலதரப்பட்ட கடனாளிகள் வருவதுண்டு.

யாரும் கடன் வாங்குவதற்கு முன்போ அல்லது தொழில் ஆரம்பிப்பதற்கு முன்போ அகத்தியரிடம் நாடி படித்து உத்தரவு கேட்பதில்லை. கடன் உச்ச அளவுக்குப் போன பின்பு நேரிடையாக, அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அலறிப் புடைத்துக் கொண்டு வருவது போல் கடன் கழுத்தை நெறிக்கும் போது அவசர அவசரமாக வருவார்கள்.

அதோடு –

தாங்கள் ஆண்டாண்டு காலமாகப்பட்ட கடனை அரை நொடியில், தீர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது எப்படி சாத்தியம் ஆகும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது இல்லை. ஏதாவது அதிசயம் நடந்து கடன்கள் தீர்ந்து விட வேண்டும் என்றே பலரும் வருகிறார்கள். அகத்தியர் குபேரன் அல்ல, பணம் அள்ளிக் கொடுக்க. தெய்வமும் அல்ல. கர்மவினை போவதற்கும் கடவுளை அடைவதற்கும், சோர்ந்து போன இதயங்களுக்கு உற்சாகத்தையும், வழிகளையும் காட்டுவது மட்டுமே அகத்தியரது வேலை. அதுவும் அகத்தியர் சொன்ன பிரார்த்தனைகளை முறையாக நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே. இதுதான் நடைமுறை உண்மை.

அன்றைக்கும் அப்படித்தான்….

சேலம் பக்கத்திலிருந்து மிகப்பெரிய கோடீஸ்வரியாக இருந்த ஒரு பெண்மணி அகத்தியர் அருள்வாக்கு வேண்டி என்னிடம் வந்தார். அவரது முகத்திலே பணக்கார ‘களை’ இருந்தது சற்று அளவுக்கு மீறி பெருத்த கனமான சரீரம்.

கழுத்தில், காதில், கைகளில் தங்கமும் வைரமுமாய் ஜொலித்தது. அனைத்திலும் நல்ல உயர் ரக வைரக்கற்களை காண முடிந்தது. முகத்தில் ‘காலணா’ அளவுக்கு குங்குமப் பொட்டு. சிறிது நரைத்த முடிகள் இங்கும் அங்குமாகத் தென்பட்டது. நடந்து வந்ததில் மூச்சு இரைத்ததால் ஆரோக்கியமான உடம்பு இல்லை என்று தெரிந்தது. இதையும் தாண்டி அந்தப் பெண்மணியின் கண்களில் ஒரு கவலை ரேகை படர்ந்திருந்தது.

சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்தப் பெண்மணி ‘எங்களுக்கு நிறைய கடன் இருக்கு. வாழ்ந்த குடும்பம். சொந்தக்காரங்க ஏதாவது ‘செய்வினை’ செய்திருப்பாங்களோ? என்ற பயம் உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு ‘கடன்’ இருக்கு. இதற்கு வட்டி கட்டவே முடியலீங்க. அகத்தியரைக் கேட்டு கடன் தீர வழி சொல்லுங்க’ என்றார் அந்தப் பெண்மணி.

’நீங்க மட்டும் தனியாக வெளியூரிலிருந்து வந்திருக்கீங்களா?’

‘இல்லை. எங்க வீட்டுக்காரரும் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ‘நாடி’ மீது நம்பிக்கை இல்லை. வெளியிலே கார்ல உட்கார்ந்திருக்கிறார் என்றார் சற்று பயந்தபடி.

‘அதனாலென்ன, இது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. பயப்படாதீங்க. நான் அகத்தியருக்கு ஏஜெண்டு அல்ல. உங்கள் நிலைமை உணர்நது பணம் பறிக்கும் பாவத்தையும் செய்ய மாட்டேன். அகத்தியரும் நல்ல வழியைத்தான் உங்களுக்குக் காட்டுவார். தைரியமாக அவரையும் இங்கு வரச் சொல்லுங்க’ என்றேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் வேண்டா வெறுப்பாக அந்த அம்மாளின் கணவர் என் அறைக்குள் நுழைந்தார்.

வந்தவர் நேராக என்னிடம் கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. அந்த அம்மாவைச் சாடினார். மிகவும் கடுமையான வார்த்தைகளைச் சொன்னவர், ‘எதற்காக என்னை இங்கு வரச் சொன்னாய். உனக்கு வேண்டியிருந்தால் நீயே நாடியைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே’, என எரிந்தும் விழுந்தார்.

பாவம் அந்த அம்மாள் நொந்து போனார். என்னைப் பார்த்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பரிதாபமாக பார்த்தார். அந்த பெண்மணியின் தர்ம சங்கடமான சூழ்நிலையைப்புரிந்து கொண்டேன். ஏண்டா அவசரப்பட்டு நாம் அவர் கணவரை வரவழைத்தோம் என்று கூடத் தோன்றிற்று.

வேறு எதுவும் பேசாமல் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘உடன்பிறந்த சகோதரனை ஏமாற்றி அவனிடம் கட்டாயப்படுத்தி கைப்பற்றிய சொத்துக்களால் சகோதரனது குடும்பத்தினர் அத்தனை பேர்களும், ஆண்டு ரெண்டுக்கு முன்பு இதே நாளில் தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்கள் இட்ட சாபம் தான் இத்தனை கடனாளியாக மாற்றியது. எப்படி வந்ததோ அப்படியே போயிற்று. இதுதான் உண்மை’ என்று அகத்தியர் சொன்ன அடுத்த விநாடி –

‘சட்டென்று இருப்பிடம் நோக்கிச் செல்க. விடிவதற்குள் செல்வது நல்லது. மற்றவற்றை பின்பு யாம் உரைப்போம்’ என்று மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அவர்கள் இருவருக்கும் அதிர்ச்சி. நிறைய விஷயங்களைச் சொல்லி, கோடிக்கணக்கான ரூபாய் கடனை அடைக்க உடனடியாக வழி காட்டுவார் என்று அகத்தியர் நாடியை நம்பி வந்திருக்கிறார்கள்.

ஆனால்….

உடனே வீட்டுக்குக் கிளம்புங்க. விடியற்காலைக்குள் குறிப்பாக 4.55 மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்று அகத்தியர் ஆணையிட்டது மிகப் பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்திருக்க வேண்டும்.

‘வேறு எதுவும் சொல்லலீங்களா?’ மிகவும் பரிதாபமாக அந்த அம்மாள் என்னைப் பார்த்துக் கேட்டார்.

‘இல்லையம்மா. தாமதிக்காமல் போங்கள். நாளைக் காலையில் வீட்டில் இருக்க வேண்டும். அவ்வளவுதான். வேறொன்றும் சொல்லவில்லை’ என்றேன்.

மிகுந்த வருத்தத்தோடு அந்த அம்மாள் எழுந்து சென்றாள். கூடவே புறப்பட்ட அவர் கணவன், ‘பார்த்தீயா, நான் தான் அப்பவே சொன்னேனே இதையெல்லாம் நம்பாதே என்று. இப்பவாவது தெரிஞ்சுக்கோ, இதெல்லாம் சுத்த ஏமாற்றுப் பிழைப்பு’ என்று சொல்லிக் கொண்டு போனதும் என் காதில் விழுந்தது.

ஒரு விதத்தில் இந்த வார்த்தைகள் என் மனதை பாதிக்கத் தான் செய்தது. நாடி படித்து அவர்களிடம் பணம் வாங்கித்தான் பிழைக்க வேண்டும் என்ற நிலை இறைவன் புண்ணியத்தால் எனக்கு இல்லை என்றாலும் எதற்காக இந்த கேவலமான பேச்சுக்களைக் கேட்க வேண்டும்? ஒருவேளை இது என் கர்மவினைப் பயனோ?’ என்று நொந்துதான் போனேன்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கு வந்த முதல் தொலைபேசி இந்த அம்மாளுடையதுதான்.’

‘என்னம்மா’

‘ஐயா, என் யைபன் தூக்கு போட்டு விட்டான் ஐயா’ என்று கதறினாள்.

அந்த அம்மாள் அழுது ஓய்ந்ததும் நான் நிதானமாகக் கேட்டேன். ‘எப்போ தூக்கு போட்டு கிட்டார்.’

‘இன்னிக்கு காலையிலே.’

‘எத்தனை மணிக்கு’

‘நாங்க வீட்டுக்குள்ளே நுழைந்த போது, காலையிலே நாலு அம்பத்தைந்து மணிக்கு’

‘இப்போ எப்படி இருக்கார்?’

‘ஆம்புலன்ஸ்லே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க. ஏங்க. என் பையன் பிழைச்சுடுவான் இல்லையா?’ என்று கெஞ்சிக் கேட்டார் அந்த தாயார்.

‘கவலைப்படாதீங்க. உங்க பையன் நிச்சயம் பிழைச்சுடுவான்’ என்று தைரியம் ஊட்டினேன்.

‘நீங்க சொன்னா அகத்தியர் சொன்ன மாதிரி’ என்றார் அந்தப் பெண்மணி.

எனக்கு இந்த வார்த்தை மிகவும் அதிகமாகவே தென்பட்டது. அகத்தியர் எங்கே நான் எங்கே. ஏதோ ஒரு தைரியத்திற்கு சொல்லப் போய் இப்படி பெரிய வார்த்தைகளைச் சொல்வது நல்லதல்ல என்று தோன்றிற்று.

உண்மையிலே என் மனதில் ஒரு பயம் ஏற்பட்டது.

தூக்குப் போட்டுக் கொண்ட அந்த பெண்மணியின் மகனை இப்போது ஆ1பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். அவன் உயிர் தப்ப வேண்டுமே என்ற கவலை தான் எனக்கு! இதில் ஏதாவது ஒன்று மாறிவிட்டால் யாருக்கும் அகத்தியர் மீதும் நம்பிக்கை இருக்காது.

இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் அந்த அம்மாளிடமிருந்து டெலிபோன் வந்தது.

‘என் மகன் பிழைச்சுட்டான்’ என்று சந்தோஷமாக பேசினாள். இதைக் கேட்ட பிறகு தான் எனக்கே நிம்மதி வந்தது. அகத்தியருக்கு என் நன்றியை சொல்லிக் கொண்டேன்.

No comments:

Post a Comment