​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 29 March 2012

சித்தன் அருள் - 65

அந்த உருவம் என்னெதிரே நின்றது.  அசையவும் இல்லை, மறையவும் இல்லை.  சாதாரணமாகக் கதைகளில் வருகிறது போல், அது வெண்மை உடை அணிந்திருக்கவில்லை.  சலங்கை ஒலி சப்தமும் கேட்கவில்லை.  குளிர்ந்த காற்றும் அடிக்கவில்லை.  அதோடு எந்தவிதமான நறுமண வாசனையும் வரவில்லை.

இரண்டு நிமிடம் பார்த்த பிறகு,

என் கையிலிருந்த ஓலைச்சுவடியைப் பிரித்து - அகஸ்தியரைப் பிரார்த்தனையில் அழைத்தேன். 

ஓளி ரூபமாக அகத்தியர் - அந்த ஆவியைப் பற்றிச் சொன்னார்.  அதை அப்படியே வார்த்தைகளில் தருகிறேன்.

"இவள் பெயர் அமுதா.  சென்னைக்குத் தென்கிழக்கே உள்ள நூற்றைம்பது மைல் கல் தொலைவில் உள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள்.  வறுமையான குடும்பம். பெற்றோர் பெயர் கன்னியப்பன் - கலா ராணி.  ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்தாள்.  பருவ வயது வந்ததும் - இவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதால் பணத்திற்காக இவளது பெற்றோர் அமுதாவோடு இந்த இடத்தில் வீடு கட்ட உதவும் சிற்றாளாக வந்து சேர்ந்தனர்.

இந்தக் கட்டிடத்தை காண்டிராக்ட் எடுத்தவன் பெயர் ராஜகுரு.  இளம் வயது தாண்டினாலும் அவன் ஒரு பெண்லோபி.  அமுதாவைத் தன் மோகவலையில் சிக்க வைத்தான்.  அமுதா கர்ப்பம் அடைந்தாள்.  இதைக் கண்டு பயந்த ராஜகுரு, அமுதாவை ஒருநாள் நள்ளிரவு இந்த வீட்டுக்கு என்று தோண்டப்பட்ட கழிவு நீர் தேங்கும் தொட்டியில் கொன்று புதைத்துவிட்டு - அதன் மீது வலுவான கல்லை வைத்து மூடி - சிமெண்ட் வைத்துப் பூசிவிட்டான்.  யாரும் கண்டு பிடிக்கவில்லை.

அமுதாவைக் காணாமல் அவளது பெற்றோர் தவித்து அதே ஏக்கத்தில் இறந்தனர்.  அமுதாவைக் கொன்றதோடு இல்லாமல் - அவளது பெற்றோரையும் கொன்ற பாவம் ராஜகுருவை விரட்டியது.  இதற்கு பிரம்மஹத்தி தோஷம் என்று பெயர்.

அதற்குரிய பரிகாரங்களயாவது  ராஜகுரு செய்திருக்க வேண்டும்.  அதனால் ஓரளவு பாவம் குறைந்திருக்கும்.  ஆனால் அவன் செய்யவில்லை.  இதன் காரணமாக அவன் கடும் தோஷத்திற்கு உள்ளாகி, வெளியூர் சென்று கொண்டிருக்கும் பொழுது அரசுப் பேருந்து மோதி, அவனும் அவனது பதினெட்டு வயது மகளும் அழகான மனைவியும் பரிதாபமாக இறக்க நேரிட்டது.

அமுதாவுக்கு பிரம்மன் போட்ட வயது நாற்பத்திநாலு.  ஆனால் அவள் பத்தொன்பதாவது வயதிலேயே துர்மரணம் அடைந்தாள்.  இதற்கு அவள் பூர்வஜென்ம புண்ணிய பாவத்தில் தன் கணவனை வெட்டிக் கொன்றாள்.  அவனே இந்த ஜென்மத்தில் ராஜகுருவாக மாறிப் பழி தீர்த்துக்கொண்டான்.

ராஜகுரு தெய்வத்தை நம்பி மனசாட்சியோடு அமுதாவை மனைவியாக ஏற்று இருந்தால், அவனுக்கு துர் மரணம் ஏற்பட்டிருக்காது.  அமுதா போன ஜென்மத்தில் செய்த தவறுக்கு கொலைபட்டிருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.  ஆனால், ஒழுக்கத்தை மீறினாள்.  தன்னை நம்பியிருந்த பெற்றோரை ஏமாற்றினாள்.  அதன் பலனாகவே அவளுக்கு இக்கதி ஏற்பட்டது, என்று விறுவிறுவென்று விளக்கத்தைக் கூறினார் அகஸ்தியர்.

இந்த விளக்கம் சொல்லும்வரை ஆவி ரூபமாக அமுதாவும் அங்கிருந்தாள்.  பிறகு மறைந்து போனாள். என் கண்ணுக்கு தெரியவில்லை.

இப்பொழுது "செய்வினை" என்றால் என்ன என்பதற்கு அகஸ்தியர் மேலும் விளக்கம் தந்தார்.

"மனிதப் பிறவி - கிடைத்தர்க்கரிய பிறவி.  எல்லோருமே என்றாவது ஒருநாள் மறையக் கூடியவர்களே பகவான் நமக்கு அறிவு - ஆற்றலை மட்டும் தரவில்லை.  மன்னிக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறான்.  யார் தவறு செய்தாலும் பெரும் தன்மையோடு மன்னிக்கும் தன்மை இருந்தால் அவர்களுக்குப் போன ஜென்மத்தில் செய்த பாவம், தோஷம் விலகும்.  கூடுமானவரை எந்தத் தவறும் செய்யாமல், எல்லாம் இறைவன் செயல், போன ஜென்மத்தில் செய்த கர்மாவை அனுபவிக்கிறோம் என்று பொறுமையோடு இளவயது முதல் பிரர்ர்த்தனை செய்து வந்தால், புண்ணியம் சேரும்.  கெடுதலான எண்ணங்கள், கோபங்கள், எரிச்சல்கள், ஆத்திரங்கள், பொறாமைக் குணங்கள் ஏற்படாது.  எனவே மற்றவர்கள் தவறு செய்தாலும் கூட தண்டிக்கும் மனப்பான்மையும் ஏற்படாது.

இங்கே ராஜகுரு - மனத்தைக் கட்டுப் படுத்தியிருந்தால் அமுதாவால் பாவம் ஏற்பட்டிருக்காது.  தவறு செய்யும் எண்ணம் ஏற்பட்டிருக்கது,  பிரார்த்தனை, இப்பொழுது செய்கின்ற நல்வினைகள் அவனை காப்பாற்றியிருக்கும்.  ஆனால் ராஜகுரு, தெய்வ நீதியை மறந்தான். இன்றைக்கு நடு ரோட்டில் கெட்ட ஆவியாக அலைகிறான்.

அதேபோல் அமுதாவும் - பெற்றோருக்கு தெரியாமல் ஒழுக்கத்தை விற்றாள்.  மனத்தைக் கட்டுப்படுத்தவில்லை.  அதோடு அவளுக்கும் ஆரம்ப காலத்திலேயே தெய்வப் பற்றும் ஏற்படவில்லை.  நன்னடத்தையுள்ள பெற்றோருக்குக் கெடுதல் தரும் மகளாகவே வாழ்ந்தாள்.  இவள் கொஞ்சம் யோசித்திருந்தால் தெய்வப் பிரார்த்தனையை செய்திருக்கலாம்.  துர்மரணம் ஏற்பட்டிருக்காது.

இப்பொழுது புரிகிறதா "செய்வினை" என்பது போன ஜென்மத் தொடர்ச்சிதான். திடீரென்று யாரும், எதுவும் செய்வதில்லை.  ஒரு வேளை போன ஜென்மத்தில் நல்லது செய்து கொண்டே தெய்வ நம்பிக்கையோடு செயல் பட்டால் யார் எதைச் செய்தாலும் அதனால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படாது.

நீ கூட கேட்கலாம். நல்லது செய்து வந்த நிறையப் பேர்களுக்கு இன்னமும் செய்வினை (அதர்வண வேதப் பிரயோகம்) வைக்கிறார்களே என்று.  இப்பொழுது சொல்கிறேன்.  அப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வரட்டும்.  அவர்களது தலைவிதியை எம்பெருமான் அருளால் மாற்றிக் காட்டுகிறேன்" என்று அகஸ்தியர் உறுதிமொழியும் தந்தார்.

இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி.  ஆனால், அவர்கள் அத்தனை பேர்க்கும் அகஸ்தியரின் கருணை கிடைக்க வேண்டுமே என்ற கவலைதான் ஏற்பட்டது.

"யார் என்னை நாடி வருகிறார்களோ, அவர்களுக்கு நான் உதவுவேன்.  ஆனால், நானாகச் சென்று அவர்களின் விதியை மாற்றும் சக்தி எனக்கில்லை, ஏனெனில் என்னையும் நம்பவேண்டும். என் மைந்தனான ஜீவ நாடி படிக்கும் நபர்களையும் அவர்கள் நம்ப வேண்டும்.  அதோடு என் நாடி படிக்கிறவர்களும் "வாய்மை" தவறாமல் நான் ஒளிமூலமாக சொல்வதை அப்படியே வார்த்தை மாறாமல் அவர்களிடம் கூறவேண்டும்.  இதற்கான பொருளை அவர்கள் பெறக் கூடாது.  அதே சமயம் நாடி கேட்கும் பாக்கியம் உள்ளவர்கள் ஆசைப்பட்டுக் கொடுப்பதை ஏற்கலாம்.  இருப்பினும் எதுவும் வரம்பு மீறிப் போகக் கூடாது.  அதே சமயம் அகஸ்தியன் என் பெயரைச் சொல்லிப் பயமுறுத்தவும் கூடாது.

என்னுடைய ஓலைச்சுவடியை வைத்துப் பெரும் பணம் சம்பாதிக்கிறவர்களிடம் ஜீவ ஒளியாக நான் தோன்ற மாட்டேன்" என்றும் அற்புதமாக விளக்கினார் அகத்தியமாமுனி.

"எனக்கொரு சந்தேகம்.  கேட்கலாமா?"

"கேள்!'

"ஆவிகள் எப்பொழுதும் பெண்களாகவே இருக்கிறதே.  ஆண் ஆவி என்று எதுவும் இல்லையா?"

"அப்புறம்?"

"மனித கண்களுக்கு ஆவி தெரியாது என்கிறார்கள்!.  எனக்கோ ஆவியைக் காட்டி விட்டீர்! அதே போல் எனக்கு அனுமானையும் நேரிடையாக காட்ட முடியுமா?"

காட்டுகிறேன்.  அப்புறம்"

"செய்வினை பற்றி அதர்வண வேடத்தில் நிறையப் பிரயோகங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.  தாங்கள் சொல்வதற்கும் அதர்வண வேதத்தில் சொல்லப் பட்டு இருப்பதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறதே.  எதை நாங்கள் ஏற்றுக்கொள்வது?"

"இவ்வளவு தானா இன்னும் ஏதாவது உண்டா?"

"இருக்கிறது சுவாமி, இந்த அமுதாவுக்கு சாப விமோசனத்தை தாங்கள் தர முடியாதா? அதே போல் விபத்தில் காலமான ராஜகுருவின் மனைவி மகளுக்கும் புத்துயிர் கொடுக்கத் தாங்களால் முடியாதா?  ராஜகுவாவது பாவம் செய்தார் சரி.  அவரது மனைவியையும் குழந்தையையும் பழி வாங்குவது என்ன நியாயம்?  இதை அமுதாவின் ஆவி செய்ததா? இல்லை தெய்வம் தந்த தீர்ப்பா?  இதையும் தெரிந்து கொள்ள வேண்டும்"

"நீ தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது?  ஒவ்வொருவரும் அவரவர் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப இந்த ஜென்மத்தை எடுக்கிறார்கள்.  இளமை முதலே தெய்வபக்தியும் மனச்சாட்ச்சியும் கொண்டு, யாருடைய மனமும் புண்படாமல் செயல் பட்டால் அத்தனை பாவங்களும் தொலைந்து புனிதனாக மாறலாம்.  ஆனால் யாரும் இதைச் செய்வதில்லை.  கஷ்டம் வரும் போது தானே கடவுளிடம் வேண்டுகிறார்கள்."

"மாமுனிவரே! உடல் நலம் குன்றிய போது தானே மருத்துவரிடம் வருவார்கள்.  கஷ்டம் வந்தால் தானே கடவுளை நினைப்பார்கள்.  இதில் தப்பேதும் இல்லையே."

"ஒத்துக்கொள்கிறேன்.  முதலிலேயே இறைவனைப் பிரார்த்தனை செய்தால் கஷ்டமே வராதே" என்று கிண்டலாகப் பேசி, "என்னையே மடக்கப் பார்க்கிறாயா பேதை ஜோதிடா" என்று ஒரு குட்டும் என் தலையில் வைத்த அகஸ்தியர்.

"நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறேன்.  நீ முதலில்.... போலீஸ் ஸ்டேஷன் சென்று அமுதா என்ற பெண் காணாமல் போனாள் என்று பதிவாகியிருக்கிறதா என்று பார்.  பிறகு அப்படியே இன்றைக்கு நான்காம் நாள் காலையில் ஜீவ சமாதியான "ராகவேந்திரரின்" சமாதிக்கு புறப்பட்டு வா, அந்த மந்திரத்தின் ஆலயத்தில் மூன்று நாள் தங்கு.  ராகவேந்திரர் உனக்கு நேரிடையாக தரிசனம் தருவார்.  பின்னர் அங்கிருந்து அருகேயுள்ள ரணமண்டல மலை மீது ஏறு.  அங்கு உன் வேண்டுகோளை நாம் ஏற்று அனுமனின் திரு உருவத்தை அப்படியே காண வைப்போம்.  அதுவரை எவரிடமும் இதைப் பற்றி மூச்சு விடாதே.  இது தேவரகசியம்" என்று ஒரு போடு போட்டு என்னைத் திக்கு முக்காட வைத்தார் அந்தக் குறுமுனி.

சித்தனருள்................... தொடரும்!

Sunday 25 March 2012

அகத்தியர் ஜீவநாடி!

அகத்தியர் ஜீவநாடி வாசிக்கிற ஒருவரின் சில தகவல் கிடைத்தது. எனக்கு நேரடி அறிமுகம் இல்லை.  சித்தன் அருள் தொடரை வாசித்த பலர் விவரம் கேட்டிருந்தார்கள்.   இங்கு தரப்பட்ட தகவல் என் பார்வைக்கு வந்தவரை தான்.  சென்று விசாரித்துக்கொள்ளுங்கள்.

தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார்.  இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.



Mr. J.Ganesan,
Siddhar Arut Kudil
No. 33/56,2nd street
co-operative colony
opp. co-operative bus stop
Thanjavur-7
செல் எண்: 9443421627

பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவருக்கு உங்கள் பெயர் விவரங்களை அளித்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பின்னர் அவரே உங்களைத் தொடர்பு கொள்வார். 

Thursday 22 March 2012

சித்தன் அருள் - 64

செய்வினை என்பது இருக்கிறதா இல்லையா என்பதை கேட்கப்போய் அது எங்களை ஆவியைப் பார்க்கும் அளவுக்கு மாற்றிவிட்டதே! இது மேலும் எங்கெங்கு கொண்டு போய் விடுமோ? என்ற பயம் அடிமனதில் கவ்வியிருந்தது.

நண்பர் பொதுவாக தைரியசாலிதான். ஆனால் அமாவாசையன்று பேயைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தவுடன் அவரது கையும் காலும் லேசாகப் பதறத்தான் செய்தது.
அகத்தியர் மூலம் கிடைக்கும் இந்த அமாவசைப் பேய் தரிசனம் நிச்சயம் எந்தவிதக் கெடுதலையும் செய்யாது என்று நம்பியிருந்தாலும், செய்வினைக்கும் இப்படி ஆவியாகத் திரிவதர்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். இல்லையெனில் அகஸ்தியர் இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு நல்க முன் வரமாட்டார் என்று எனது உள்மனம் சொல்லியது.

மூதாதையர்களே ஆவியாகத்தான் திகழ்கிறார்கள். அவர்களை அமாவாசை அல்லது அவர்கள் இந்த பூவுலகில் மறைந்த திதியன்று தெவசம் மூலம் ப்ர்ரர்த்தனை செய்யும் போது அவர்கள் அக்னி ரூபமாக வந்து ஆசிர்வதித்து விட்டுச் செல்கிறார்கள் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை.

இங்கிலாந்து நாட்டில் வாழும் கிறிஸ்துவப் பெருமக்கள் சிலர் கூட பேய் அல்லது ஆவி நடமாடும் வீட்டில் சென்று ஆவியைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அதனை படமெடுக்க முயன்று தோற்றிருக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையில் ஒரு அற்புதமான செய்தி வந்தது. இஸ்லாம் சமூகத்தினர்கள் பெரும்பாலும் இந்த "ஆவி" விஷயத்தில் பயங்கர நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களில் பலர் இன்றைக்கும் தங்களுடைய சக்தியால் நல்ல ஆவியைக் கொண்டு நிறைய நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்கள். கெட்ட ஆவியை விரட்டவும் செய்கிறார்கள்.

எனவே "ஆவி" என்பது இன்றைக்கு எல்லாச் சமூகத்தினராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப் படாவிட்டாலும் நிழல் ரூபமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்பதால் அகஸ்தியர் சொற்படி கேட்கத் தயார் ஆனேன்.

அன்றைக்கு அமாவாசை!

சிலர் ஆவலோடு நேரில் வந்துவிட்டு 'என்ன ஆவியைப் பார்க்கப் போகிறீர்களாமே எதற்கும் இரும்புத் துண்டு அல்லது கத்தியை எடுத்துக் கொண்டு போங்கள். பிறகு என்ன நடந்தது என்பதை நாளைக்குப் பகலில் சொல்லுங்கள்" என்றனர்.

இன்னும் சிலரோ "சார்! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீர்கள். அகஸ்தியரை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அவரே இப்படி ஆவி, ஏவல் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. அவர் சித்தர் தான். ஆனால், ஜீவநாடியில் வந்து எங்களைப் பித்தராக்கிப் பயமுறுத்துவது கூடாது" என்று அரை குறை பகுத்தறிவு வாதியாகப் பேசிவிட்டுப் போனார்கள்.

வழக்கத்தை விட அன்றைக்கு என்னைத் தேடி வந்தவர்கள் கூட்டம் மிக அதிகம்தான். அன்றைக்கு வேறு யாருக்கும் நாடி பார்க்கவில்லை என்றாலும் எல்லோரும் என்னை "பலிகடா" மாதிரி பரிதாபமாகப் பார்ப்பதாகவே எனக்குத் தென்பட்டது. "கண்டிப்பாக வருகிறேன்" என்று சொன்ன நண்பர் அன்று இரவு ஏழு மணி ஆகியும் வரவில்லை. அதோடு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவருடைய ஓலைச்சுவடியப் பார்த்தால் தான் தெரியும் என்பதால், அகத்தியப் பெருமானை பிரார்த்தனை செய்து கொண்டு ஓலைச்சுவடியைப் பிரித்தேன்.

"வேங்கடவன் பெயர் கொண்டிட்டோன் இனி இங்கு வரமாட்டான். மனதளவில் பயந்திட்டான். மங்கை நல்லாள் போட்ட தூபத்தால் இந்நேரம் அவன் திருவள்ளூர் திருமாலின் சன்னதியில் தரிசனம் செய்கிறான். நாற்பது கல் தொலைவில் நடுவீதியில் அய்யனார் சிலை நிற்கும். அங்கு நின்று ஐயனை வேண்டினால் நாயொன்று அங்கு வரும். அந்த நாயின் பின்னே சில தூரம் செல்க. ஆங்கோர் அரைகுறைப் புதிய கட்டிடம் தெரியும். அதன் தெற்குப்புறம் உள்ள மரத்தடியில் நில். பின் மேற்கொண்டு யாம் அங்கு வந்து உரைப்போம். சட்டெனப் புறப்படு. நடு சாம நேரத்தில் கட்டாயம் நீ அங்கு நிற்க வேண்டுமென அருளாசி" என்று வழி காட்டினார் அகஸ்தியர்.

நண்பர் சமீபத்தில் தான் திருமணமானவர். அமாவாசையன்று ஆவி பார்க்கப் போவதாகப் பெருமையுடன் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார். தன் கணவருக்கு எதாவது ஆகிவிடக் கூடாதே என்று பயந்த அவரது மனைவி, குய்யோ முறையோ என்று வீட்டில் உள்ள பெரியவர்களை எல்லாம் கூட்டி, அவரை மிரட்டி திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சன்னதிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

ஆவியைப் பார்ப்பதைவிட ஆண்டவனைத் தரிசனம் செய்வதுதான் சிறந்தது. அதிலும் திருவள்ளூரில் அமாவாசை தரிசனம் விசேஷம் ஆயிற்றே என்று கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றதை அகஸ்தியர் அப்படியே எனக்கு ஜீவநாடியில் புட்டுப் புட்டு வைத்துவிட்டார்.

இதை பின்னர் நண்பரும் ஒப்புக் கொண்டார் என்றாலும் என் கூட வராதது அவருக்கு வருத்தம்தான்.

இனியும் தாமதிப்பதில்லை என்று உடனடியாக ஜீவ நாடியை மாத்திரம் தூக்கிக் கொண்டு அகஸ்தியர் சொன்ன வழியில் நான் மட்டும் தனியாகப் பயணம் செய்தேன்.

என்னை காரிலோ அல்லது இரு சக்கர வண்டியிலோ கூட அங்கு வந்து விடுவதற்கு யாரும் முன் வரவில்லை என்பது ஆச்சரியம்தான்.

அகஸ்தியர் சொன்ன ஊர் வந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கினேன். அந்த நடு ரோட்டில் மூச்சுவிடும் நபராக நான் ஒருவன். மூச்சுவிடாத ஆனால் கம்பீரமாக மீசையும், அரிவாள், கத்தி, கதை சகிதம் மிக உயரமான இடத்தில் அசையாமல் அய்யனார் சிலையும்தான் இருந்தது.

சுற்று முற்றும் பார்வையைச் செலுத்தினேன்.

அது ஒரு சாதாரண கிராமம். தனித்தனியாக தள்ளித் தள்ளி குடிசைகள் இருந்தன. வயலை பிளாட்டிர்க்காக கூறுபோட்டு வைத்திருந்ததற்கு அடையாளமாகச் சதுர மூலைகளில் வெண்கற்கள் ஒன்றிரண்டு அந்த அமாவாசை இருட்டிலும் கண்ணில் தெரிந்தது.

மின்மினிப் பூச்சிகள் வட்டவட்டமாக சுற்றிப் பறந்தது மனதிற்கு லேசான உற்சாகத்தை வரவழைத்தது. நான் இறங்கிய "பஸ்" கண்ணுக்கெட்டிய தூரம் சென்று மறைந்தது. அதுதான் அந்த கிராமத்திற்குச் செல்லும் கடைசி பஸ் என்பதால் வேறு யாரும் என் கண்ணில் தென்படவில்லை.

கையோடு கொண்டு சென்ற டார்ச்சை அடித்து என் கடிகாரத்தில் மணி என்ன என்று பார்த்தபொழுது அது இரவு மணி பதினொன்று நாற்பது என்பதை காட்டியது. இன்னும் அரைமணி நேரத்தில் நாம் ஆவியைப் பார்க்கப் போகிறோம். இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று படபடப்புடன் நின்ற பொழுது என் முன்னால் வெகு நேரமாக படுத்துக் கொண்டிருந்த ஒரு கருப்பு நாய் சட்டென்று எழுந்தது. காதுகளைக் கூராக்கி நிமர்த்திக் கொண்டு செல்ல நானும் அந்த நாயைப் பின் தொடர்ந்து சென்றேன்.

வழியில் நத்தை ஓடுகள், சிறு சிறு சரளைக் கற்கள், உடைந்த மண்பானைச் சட்டிகள், முள் செடிகள், மேடு பள்ளங்கள், சீரான ரோடு இல்லாததால் சில சமயம் சின்னச் சின்னக் கற்களும் கடுமையாகப் பாதத்தைப் பதம் பார்த்தது.

திடீரென்று.............

பத்து ஆந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து அலறியதுபோல் சப்தம். என் திடமான மனதையும் உறைய வைத்தது. ஒரு சமயம் "இப்படியே திரும்பிவிடலாமா" என்று கூட மனம் பயத்தால் சஞ்சலப்பட்டது.

சற்று பிரார்த்தனை செய்ய ஓலைச் சுவடியை அங்கேயே திருப்பிப் பார்த்தேன்.

"அஞ்சற்க, அடியேன் துணையிருக்க பயமேன்? தடங்கலின்றி நடக்கும் உன் பயணம்" என்று ஓளி ரூபமாக அருளினார் அகஸ்தியர்.

தாகம் நாக்கை வாட்டியது.

பக்கத்தில் வயலுக்கு நீர் இறைக்கும் ஒரு கிணறும், அருகிலே தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டிருந்தது. தப்பித் தவறிக் கிணற்றில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மார்பு படபடக்க மெதுவாக அந்தத் தண்ணீர்த் தொட்டி அருகே நின்றேன்.

இருட்டாக இருப்பதால் அதில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. மெதுவாக அதன் நடுவே கையால் துழாவினேன்.

தண்ணீர் இருந்தது!

தண்ணீரை இரு கைகளாலும் எடுத்து நன்றாகக் குடித்தேன். முகத்தையும் அலம்பிக் கொண்டேன்.

மீண்டும் டார்ச் ஒளியில் நடைபாதைக்கு வந்தபோது அந்தக் கருப்பு நாய் எனக்காகவே காத்திருப்பது போல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. நான் அதனருகே வந்ததும் வழி காட்டுவதைப் போல் எனக்கு முன்பு வேகமாகச் சென்றது.

ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப் பட்டு இழுத்துச் செல்வது போல் நான் போனேனே தவிர என் சுய சிந்தனையோடு செல்வதாக அப்போது எனக்குத் தோன்றவில்லை. "நான் யார்? எதற்காக அந்த நாயின் பின் சென்று கொண்டிருக்கிறேன்? இப்படி ஒரு சூழ்நிலை அவசியமா?" என்று நினைக்கத் தோன்றாதது இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

அந்த கருப்பு நாய் அறையும் குறையுமாகக் கட்டப்பட்டு அப்படியே போடப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றது தான் தாமதம்,

எங்கிருந்து தான் அந்த நாய்க்கூட்டம் வந்ததோ தெரியவில்லை. எல்லாமே ஒன்று சேர்த்து ஒரே குரலில் அந்த கட்டிடத்தை சுற்றி பெருமளவில் ஊளையிடத் தொடங்கின. ஆனால், அந்த கருப்பு நாய் மட்டும் குறைக்கவில்லை. அப்படியே நின்றது. இதுவரைக்கும் என்னை அந்தக் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றதாக எண்ணிக் கொண்டிருந்த அந்தக் கருப்பு நாய் இதற்குப் பிறகு என் கண்ணில் தட்டுப்படவில்லை. இது எனக்குப் பெருத்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. ஆனால், அந்த ஊரே நடுங்கும் படி இருபது அல்லது இருபத்தைந்து தெரு நாய்களின் கூட்டம் ஊளையிட்டுக் கொண்டே எதையோ ஒன்றைத் துரத்துவது என் கண்ணில் பட்டது.

"அந்த ஏதோ ஒன்று" எந்த எந்த திசையை நோக்கிச் செல்கிறதோ அந்த திசையை நோக்கி அந்தத் தெரு நாய்கள் துரத்தும், ஊளையிடும். சட்டென்று அந்த உருவம் நின்றால் அந்த நாய்களும் நிற்கும். ஊளைச் சத்தம் மட்டும் அந்த இருட்டையே கிழித்துக் கொண்டு அலறும்! பயந்து கொண்டே பின் வாங்கும். சுமார் ஏழு நிமிடம் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு, அந்த கட்டிடத்தின் தெற்கேயும், வடக்கேயும் நடந்தது.

"இது தான் ஆவியா? இதைப் பார்க்கத்தான் நான் இங்கு வந்தேனா?" என்று நினைத்து அங்கேயே அகத்தியரின் ஓலைச் சுவடியைப் புரட்டினேன்.

"பொறுத்திருந்து பார். அருகிலுள்ள மாடிப்படிகளில் ஏறும் வரை பைரவர்களின் ஊளைக் குரல் தொடரும். பின் அந்த மாடிப்படியில் நீயும் ஏறுக" என்று சொல்லி மறைந்துவிட்டார் அகஸ்தியர்.

நாய்களின் இத்தனை ஊளைகள், அங்கு குடிசை போட்டு இருப்பவர்களை எழுந்திருக்கச் செய்யவில்லை. எனவே ஒருவர் கூட கையில் டார்ச், கம்போடு அந்தக் கட்டிடம் பக்கம் வரவே இல்லை.

கட்டிடத்திற்கு காவல்காரர் என்று யாரும் இல்லை. இருந்திருந்தால் என்னைக் கண்டதும் "யாரது" என்று கையில் டார்ச்சோடு அல்லது லைடோடு வந்திருப்பார்.

அனால் யாரும் எட்டிக் கூடப் பார்க்கவே இல்லை.

அல்லது இந்த ஊளையிடும் நாய்களை விரட்டவாவது குரல் கொடுத்திருப்பார். ஆனால் குரலே கேட்கவில்லை.

அச்சமயம் பார்த்து என்னருகே, ஒரு உருவம் மெதுவாக நடந்து வெளிப்புறமாக இருந்த மாடிப்பக்கம் செல்வது போன்று உணர்வு. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக என் சட்டைப் பையிலிருந்த டார்ச்சை எடுத்து அந்த உருவ நிழல் மீது அடித்தேன்.

ஆனால்,

என்னதான் அமுக்கி பார்த்தும் "டார்ச்சிலிருந்து" வெளிச்சம் வரவே இல்லை. எவ்வளவோ தட்டிப் பார்த்தேன். "பாட்டரி" புதியதாக வாங்கிப் போட்டது.

இன்னும் சொல்லப் போனால் "டார்ச்சும்" புதுசுதான். ஆனால் என்னதான் முயற்சி செய்தும் "டார்ச்" வேலை செய்யவில்லை.

ஒரு நிமிடம் திக்கு முக்காடிப் போனேன். திரும்பி செல்ல வழியை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற பயமும் இப்பொழுது ஒட்டிக் கொண்டது.

"சரி" அகஸ்தியர் பார்த்துக் கொள்வார். எது நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று என் மனச் சஞ்சலத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட, அந்த உருவம் நின்ற மாடிப் படியைப் பார்த்தேன்.

"அது" மாடிப்படியில் ஏறுவதும் பின்னர் இறங்குவதுமாகத் தோன்றிற்று. மாடிப்படி ஏறினால் நாய்கள் ஊளையிடுவதை நிறுத்திவிடும். திரும்பவும் மாடிப்படியிலிருந்து இறங்கினால் வெளியே சுற்றி இருக்கும் நாய்கள் அதனை துரத்தும். இது ஒரு சமயம் வேடிக்கையாகவும் இருந்தது. அதே நேரத்தில் வயற்றில் புளியையும் கரைத்துக் கொண்டு இருந்தது.

சுமார் பத்து நிமிடங்கள் இந்த அபூர்வமான காட்ச்சியைக் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.
பிறகு நாய்கள் மெல்ல விலகத் தொடங்கின. ஊளைச் சத்தம் குறைந்ததும் நான் மெள்ள மாடிப்படியில் கால் வைத்தேன்.

அடுத்த நிமிடம்.

யாரோ அசுர வேகத்தில் என்னைத் தூக்கி மொட்டை மாடி கொண்டுவிட்டது போல் உணர்ந்தேன்.

ஏதோ, அகஸ்தியர் ஜீவநாடியை வைத்து நிறையப் பேர்களுக்கு நல் வழியைக் காட்டிக் கொண்டிருந்த எனக்கு, "இப்படிப்பட்ட விவகாரத்தில் மாட்டிக் கொண்டது எந்த விதத்தில் லாபம்?" என்று அப்போது எண்ணத் தோன்றியது.

ஆனால்.....

இந்த "ஆவி" விவகாரம் காணாமல் போன ஒரு இளம் பெண்ணைப் பற்றியது. செய்வினை என்றால் என்ன? என்பதற்கு அடையாளமாக அவள் இருக்கிறாள் என்பதும், அகஸ்தியர் எனக்கு எடுத்துக் காட்டவே இங்கு வரவழைத்தார் என்பதும் புரிந்தது.

மொட்டை மாடியில் என்னை அசுர வேகத்தில் தூக்கிவிட்ட சக்தியை நான் நினைத்துப் பார்க்கும்முன் என் கண்ணிற்கு நேர் எதிரில் மங்கலான பாவாடை சட்டை தாவணியோடு ஒரு பெண் உருவம் மிக நன்றாக, அந்த அமாவாசை நள்ளிரவு ஒரு மணியில் தெரிந்தது.

இப்போது நானும் அதுவும் - நேருக்கு நேர் மிக அருகில் நின்று கொண்டிருந்தோம்.

சித்தனருள் ........... தொடரும்!

Thursday 15 March 2012

சித்தன் அருள் - 63

வெளிச்சம் என்பது நல்லதிற்கு மட்டும் பயன்பட வேண்டும்.  இருட்டு என்பது கெடுதல் செய்வதற்காக உண்டாக்கப்பட்டது என்பது மாமுனி அகத்தியரின் விளக்கம்.  எனவே நல்லது சொல்லும்போதும், நல்லது செய்யும் பொழுதும் வெளிச்சத்தில் செய்ய வேண்டும்.  கெடுதல் நினைப்பவர்கள், கெடுதல் செய்பவர்கள் இருட்டை தான் நம்புவார்கள் - என்பது பொது விதி.

செய்வினை என்பது கெடுதல் சொல்.  இதை வெளிச்சத்தில் படிக்க அன்றைக்கு அகஸ்தியர் விரும்பவில்லை.  எனவே தான் எல்லா விளக்கையும் அணைக்கச் சொன்னார்.

விளக்கும் அணைக்கப்பட்டது.

இருட்டாக இருந்தாலும் - அந்த ஓலைச்சுவடியில் அகஸ்தியர் ஒளி வடிவாக எதிர்கால அல்லது நிகழ்கால விளக்கங்களை எடுத்துக் கூறுவார்.  இது ஜீவா நாடி படிக்கிற சிலருக்கு மட்டும் கிடைக்கிற ஒரு புண்ணியம்.

எனவே, அந்த இருட்டில் படிப்பது ஒன்றும் கஷ்டமாக இல்லை.  இதோடு இம்மாதிரி இருட்டில் படிப்பது என்பதில் முன் அனுபவமும் உண்டு.

ஒரு நாள் இரவு ஒன்பது மணி இருக்கும்.

நானும் என் நண்பரும் வெளிநாட்டிலிருந்த ஒரு நண்பருக்காக ஓலைச்சுவடி படித்துக் கொண்டிருந்தோம்.  அப்போது மிக வேகமாக வந்த என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர், ஓலைச்சுவடி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அவசர வேண்டுகோள் விடுத்தார்.

"என்ன?" என்று கேட்டேன்.

இன்றைக்கு ஒரு பரபரப்பான சம்பவம், சென்னையில் நடந்திருக்கிறது.  ஒரு பத்திரிக்கை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.  இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.  உங்களுக்குத் தெரியும்.  நான் வெகுநாள் வாசகன்.  எனக்கு அந்தப் பத்திரிக்கை எங்கு கிடைக்கும் என்பதை அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார் பதைபதைத்த குரலில்.

"இன்னொருவருக்கு நாடி படிக்கும் பொழுது இப்படிக் குறுக்கிடலாமா?" என்று அவரை கடிந்து கொண்டு, கொஞ்ச நேரம் அமைதியாக உட்காரச்சொன்னேன்.  இருந்தாலும் அவரது கையும், காலும், கண்களும் ஓரிடத்தில் நிலையாக இல்லை.  பரபரத்துக் கொண்டுதான் இருந்தன.

அந்த வெளி நட்டுக்காரருக்குத் தமிழ் மொழி தெரிந்திருந்தாலும் அகஸ்தியர் என்ன நினைத்தாரோ, தெரியாது.  வந்தவரிடமே ஓலைச் சுவடியைக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

முதலில் அவருக்காக நான் படித்தது அவருக்குச் சரியாக விளங்கவில்லை என்பதால், அவரிடமே கொடுக்கச் சொல்லி விட்டார் என்பது எனக்குப் பின்னால் தான் தெரிந்தது.

அந்த ஓலைச்சுவடியை பயபக்தியுடன் வாங்கி, கண்களில் ஒற்றி, அதைப் படித்தார்.  அவரது கண்களில் வியப்புக்குறி தோன்றியது.  சில நிமிடங்களில் அதை ஆனந்தமாகப் படித்துவிட்டு அதை மேஜை மீது வைத்து சாஷ்டாங்கமாக வணங்கினார்.

பின்பு அதை முத்தமிட்டு என் கையில் திருப்பிக் கொடுத்தார்.

"என்ன சொன்னார் அகஸ்தியர்?" என்று கேட்டேன்.

அவர் மலாய் நாட்டச் சேர்ந்தவர்.  அரை குரைத் தமிழில் நடந்ததைச் சொல்வார் என்று நினைத்திருந்த போது "நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.  எனக்கு முதலில் நீங்கள் சொன்ன செய்யுள் விளக்கம் சரிவரத் தெரியவில்லை.  ஆனால் அந்த ஓலைச் சுவடியைத் தங்கள் என்னிடம் கொடுத்த போது, எனக்கு மலாய் மொழியிலேயே அகஸ்தியர் மிக அற்புதமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்" என்று சந்தோஷப்பட்டுச் சொன்ன போது எனக்கே இது புது அனுபவமாக இருந்தது.

இப்படி பல தடவை தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் அகஸ்தியர் அருளியிருக்கிறார்.  எல்லாமே இந்த மலாய் மொழிக்குப் பின்பு நடந்த சம்பவங்கள்.

வந்தவரை அனுப்பிவிட்டு என் நண்பரை அழைத்தேன்.

"என்ன செய்வியோ! எது செய்வியோ! தெரியாது.  நான் எல்லா இடங்களிலும் அலைந்து பார்த்து விட்டேன் எனக்கு எப்படியாவது அந்த பத்திரிக்கை வேண்டும்.  எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை" என்றார்.

"அதற்கும் இந்த ஓலைச்சுவடிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

"எனக்கு அந்த பத்திரிக்கை எங்கு கிடைக்கும் என்று அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.

"என்ன விளையாடுகிறாய்?" என்னால் படிக்க முடியாது.  நீ இப்படிக் கேட்பது சரியில்லை" என்று கோபித்துச் சொன்னேன்.

அவர் மன்றாடினார்.  லேசில் அங்கிருந்து போவதாகத் தெரியவில்லை.  மணியோ இரவு ஒன்பதரையத் தாண்டிக் கொண்டிருந்தது.

"இதெல்லாமா அகஸ்தியரிடம் கேட்பது" என்று அங்கிருந்த பலர் முணுமுணுத்தனர்.

"ஒரே ஒரு தடவை கேட்டுப் பார்.  அப்படி அகஸ்தியர் நல்ல பதில் தரவில்லை என்றால் போய் விடுகிறேன்" என்றார்.

யார் கேட்டாலும் ஓலைச் சுவடிவைப் படிக்க வேண்டியவன் என்றாலும் என் நண்பன் இப்படியொரு கடுமையான சோதனைக்கு என்னை ஆளாக்குவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவனுக்காக நான் படிக்கப் போய், அகஸ்தியரின் கோபத்திற்கு ஆளாகக் கூடுமே என்ற பயம் வேறு எனக்கிருந்தது.  எனவே வேண்டா வெறுப்பாக ஓலைச் சுவடியை தூக்கினேன்.

"இருக்கின்ற விளக்கெல்லாம் முதற்கண் அணைத்துவிடு.  என்ன விஷயம் இஸ்லாம் பெயர் கொண்ட ஏட்டுப் பிரதியில் இருக்கிறது என்பதைச் சொல்கிறேன்" என்றாரே பார்க்கலாம்.''

நானே அசந்து போனேன்.  நண்பன் அதிஷ்டசாலிதான் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அறை விளக்கெல்லாம் அணைக்கப்பட்டன.

"என்னப்பன் ராமனின் சிலைக்கு செருப்பு மாலை போட்டு வீதியில் வலம் வந்ததை அப்படியே படம் பிடித்துப் போட்டதடா அந்தப் பத்திரிக்கை.  அதனாலே இந்த அரசு தடை போட்டுப் பறிமுதல் செய்தது.  இருப்பினும் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை அப்படியே யான் உரைப்பேன்"  என்று அகஸ்தியர் மள மளவென்று ஒளி ரூபமாகச் சொல்ல ஆரம்பித்தார்.  சுமார் ஒன்றரை மணி நேரம் தலையங்கத்திலிருந்து சேலம் மாவட்ட நிகழ்ச்சியின் இந்துக் கடவுள்கள் மீது சொல்லால், செருப்பால் மாலையணிந்த நிகழ்வுகள் வீடியோ படம் போல் படம் பிடித்துக் காட்டினார்.

எல்லாம் முடிந்த பின்பு விளக்கு ஏற்ற சொன்னார் அகஸ்தியர்.  வெளிச்சம் வந்தது.

பத்திரிக்கை வாங்காமல், அதன் அன்றையச் செய்திகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய அகஸ்தியருக்கு ஆயிரம் நன்றியைச் சொன்ன அந்த நண்பர் "இதை எப்படிச் சரிபார்ப்பது?" என்று அடுத்த கேள்வியை எழுப்பினார்.

அகஸ்தியரிடம் இது பற்றி மறுபடியும் கேட்ட பொழுது "சென்னை தி நகரில் உள்ள ஒரு கடையைச் சொல்லி, அந்த கடையின் இரும்புப் பெட்டகத்தின் உள்ளே ஒரு பிரதி உண்டு.  அங்கு சென்று சரி பார்த்துக் கொள்க" என்று வழியும் காட்டினார்.

உடனே நாங்கள் அனைவரும் அந்தக் கடைக்குச் சென்ற பொழுது மணி இரவு பதினொன்றரை.

எங்களை கண்டதும் "காவலர்" என்று பயந்து என்னிடம் எந்தப் பத்திரிகையும் இல்லை என்று விரட்டி அனுப்புவதிலேயே விடாப்பிடியாக இருந்தார் அந்தக் கடை காரர்.

பிறகு நடந்தவற்றைச் சொல்லி, அவரை நம்பவைத்துக் கடைசியில் கடையைச் சாத்திவிட்டு அவரிடம் எப்படியோ வந்து சேர்ந்த அந்த பத்திரிகையைப் புரட்டினோம்.  நாடியில் சொன்ன அத்தனையும் அப்படியே இருந்தது.

இதை கண்டு அங்கு வந்திருந்த அத்தனை பேறும் வியந்து போனோம்.  "இனிமேல் இம்மாதிரி வேண்டுகோள்களை விடுக்கக் கூடாது" என்று அகஸ்தியர் மிகக் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

என்னை பொறுத்தவரையில் இப்படியெல்லாம் ஓலைச் சுவடியைப் பயன்படுத்துவதை விட, அவரவர்கள் தாங்கள் செய்த கர்ம வினைகளைக் கண்டு பிடித்து, அதை அகற்றினால் நன்றாக இருக்கும் என்பது தான்.

இதற்கு பிறகு எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட, பிரயோஜனம் இல்லாத கேள்விகள் கேட்க அனுமதிப்பதில்லை.  குறுமுனி அகஸ்தியரும் இதற்குப் பதில் சொல்வது இல்லை.

இதில் என்ன விசேஷம் என்றால், இருட்டில் பத்திரிகையின் பக்கங்களை தொடர்ந்து படித்தது, புது அனுபவம்.  இதுவரை அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதில்லை.

அந்த சம்பவத்திற்குப் பிறகு இப்பொழுதான் "செய்வினை" என்பது என்ன? அது உண்மை தானா?" என்பதை அறிய அகஸ்தியரிடம் நான் கேட்டேன்.

சாதாரணமாக நான்கு வரிகளில் அகஸ்தியரிடமிருந்து பதில் வந்து விடும் என்று தான் எண்ணினேன்.  ஆனால் அவரோ "வெளிச்சத்தை போக்கு, விளம்புகிறேன் நான்" என்று சொன்னபோது சரிதான் அன்றைக்கு தந்த பத்திரிகையின் கதிதான் என்று எண்ணிக்கொண்டேன்.

அகஸ்தியர் விளக்க ஆரம்பித்தார்.

"செய்வினைப் பற்றிய உண்மைகளை நான் சொல்லும் முன்பு உங்களில் மனோதிடம் மிக்கவர் எதிர் வரும் அமாவாசைத் தினத்தன்று ஏகுக இங்கு" என்றார்.

பிறகு எதுவும் செய்தி வரவில்லை.  "யார் இங்கு வரப்போறீங்க?" என்று கேட்ட பொழுது செய்வினை பற்றிக் கேட்டவரும் பயந்து "நீங்களே கேட்டுச் சொன்னால் போதும்.  நான் எதுக்குங்க?" என்று நழுவினார்.

அங்கிருந்த ஒரு சிலரும் "எதுக்கு செய்வினை - மண்ணாங்கட்டியும் வேண்டாங்க.  நாம் நல்லதையே நினைப்போம்.  இதைப்போய் அகஸ்தியரிடம் கேட்டுட்டு" என்றனர்.  இதற்குள் நண்பர் "அகஸ்தியர் என்ன பேய் பிசாசையா? எதுக்காக அகஸ்தியர் இங்கு வரச் சொல்கிறார்னு அவர்கிட்டே கேட்டுவிடுவோமே" என்றார் தைரியமாக.

ஓலைச் சுவடியை எடுத்து இது பற்றி கேட்டதற்கு "செய்வினை பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு நண்பர் சொன்னது போல் உங்களுக்கு ஆவியைக் காட்டவே யாம் அழைத்தோம்" என்றார்.  அவ்வளவுதான்! இதைக் கேட்டதும் பலருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.