​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 26 April 2012

சித்தன் அருள் - 69

"ரணமண்டலத்தில் மலையொன்று இருக்கிறது.  மேலே ஏறிப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்று சொன்னவர் ராகவேந்திர சுவாமிகள் தான் என்று நண்பர் சொன்னது எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

சாதாரணமாக நண்பர் அப்படிச் சட்டென்று எதுவும் சொல்ல மாட்டார்.  அவரது கண்ணிற்கு ஸ்ரீராகவேந்திரர் - அர்ச்சகர் ரூபத்தில் தரிசனம் கொடுத்திருக்கிறார்.  சில மணி நேரங்களுக்கு முன்பு பாலகனாய்ப் பேசி, ஸ்ரீ ராகவேந்திரறாய் மாறி அனுக்ரகம் தந்து, செடி, கொடிகளுக்கிடையில் மறைந்து கண்ணாம்பூச்சி கட்டியவர் இப்பொழுது அர்ச்சகராய்ப் பக்கத்தில் வந்து அனுமன் பிரசாதம் கொடுத்து, அசரீரியாய் ரண மண்டலத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் என்றால் அந்த மகானை அருகில் நின்று தரிசனம் செய்யும் பாக்கியம் எங்கள் இருவருக்கும் கிடைத்தது,  நாங்கள் முற்பிறவியில் செய்த புண்ணியம் தான்.

அப்படிப்பட்டவரை மறுபடியும் தரிசனம் செய்யத் திரும்பிப் பார்த்தோம்.  தேடி பார்த்தோம்.  அங்கு நின்று கொண்டிருந்த பலரிடம் அவரைப் பற்றி விசாரித்துப் பார்த்தோம்.  ஏன் அங்கு பூசை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்களிடம் கூடக் கேட்டுப் பார்த்தோம்.

அவர்கள் சொன்ன பதில் எங்களைத் திக்குமுக்காட வைத்தது.

"எங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகர்கள் இல்லை.  நீங்கள் கையில் வைத்திருக்கும் பிரசாதம் இங்குள்ளதுதான்.  ஆனால் இனிமேல் தான் நெய்வேத்யம் செய்ய வேண்டும்.  அதற்குள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் எங்களுக்கு ஆச்சரியம்.  நீங்கள் சொல்கின்ற நபர் என்று யாரும் இந்தக் கோவிலில் இல்லை.  எங்கள் கண்களுக்குத் தட்டுப்படவும் இல்லை."

இதைக் கேட்டு அதிர்ந்து போனோம்.

பொதுவாக இப்படிப்பட்ட அற்புதங்களைச் சினிமாவில்தான் பார்க்கலாம்.  கனவில் வரலாம்.  ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்றால், சத்தியமாக ஒருவர் கூட நம்பவே மாட்டார்கள்.  ஸ்ரீ ராகவேந்திரரின் பரிபூரண கடாட்சம் நிறைய மகான்களுக்குக் கிட்டியிருக்கிறது.  அருள் கிட்டியிருக்கிறது.  ஏகப்பட்ட நன்மைகள் கிடைத்திருக்கிறது.  இது அவர் ஜீவனாக இருந்த சமயத்தில்.

ஆனால்,

இப்பொழுது எங்களுக்குக் கிட்டியிருக்கிறது.  இந்த சந்தோஷத்தை எங்களிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது.

அந்த சமயம் எங்கள் கையில் கிடைத்த பிரசாதம், ஸ்ரீ ராகவேந்திரரே கொடுத்த பிரசாதம் என்று தெரிந்ததும் அதை வலுக்கட்டாயமாக ஆவலோடு அங்கிருந்த அத்தனை பேர்களும் உரிமையோடு எடுத்துக் கொண்டார்கள்.  இது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது.

ஆனால், எனக்கோ நண்பருக்கோ மிச்சம் மீதி எதுவும் இல்லை.  ஊருக்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கவே முடியாமல் போயிற்று.

ஸ்ரீ ராகவேந்திரரின் அற்புத தரிசன நினைவைச் சுமந்து கொண்டு துங்கபத்திரா நதியைக் கடந்து இக்கரைக்கு வந்து சேர்ந்தோம்.  சந்தோஷமும், மன நிறைவும் எங்களுக்குப் புத்துணர்வைத் தந்தது.  இருக்காதா பின்னே!

நண்பரிடம், "என்னுடன் ரணமண்டல மலைக்கு வந்துவிட்டுப் போகலாமே" என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன்.  வியாபார நிமித்தம் அவசர நிலை காரணமாக ரண மண்டல மலைக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஸ்ரீ ராகவேந்திரரே நேரில் சொன்னாலும் அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லை என்ற வருத்தம் நண்பருக்கு இருக்கத்தான் செய்தது.  ஆனாலும் பிழைப்பு என்று ஒன்று இருக்கிறதே.

திடீரென்று நான் ரண மண்டலம் செல்ல வேண்டியிருந்ததால் ஏற்கனவே அன்றிரவு சென்னைக்கு திரும்புவதாக இருந்த நண்பர், என் பொருட்டு மறுநாள் விடியற்காலையில் என்னை ரண மண்டலத்தில் காரில் இறக்கி விட்டு சென்னைக்கு பயணத்தைத் தொடர்வதாக முடிவு செய்தார்.

இதற்கும் இன்னொரு காரணம் இருந்தது.

நள்ளிரவில் ரண மண்டலத்திர்க்குச் சென்றால் தங்குவதர்க்குச் சௌகர்யம் இருக்குமோ இருக்காதோ என்ற பயம்.  இரண்டாவதாக மொழி தெரியாது.  எனவேதான் எனக்காக நண்பர் மறுநாள் காலையில் கிளம்ப முன் வந்தார்.

முன்னிரவு நேரம்.

ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு ஒரு தடவை ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று கிளம்பினோம்.  அன்றைக்கு ஏகப்பட்ட கூட்டம்.  தங்கத் தேர் பவனி வேறு.  அதோடு மந்திராலய மடத்துப் பிரதான சுவாமியும் அங்கு வந்திருந்தார்.

கூட்டத்தின் கடைசியில் நாங்கள் நின்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எங்கள் பக்கம் திரும்பிய சுவாமிஜி என்னை அழைத்தார்.

"இன்று இரவு நீங்கள் இருவரும் என்னுடன் சுவாமியின் தீர்த்தப் பிரசாதம் சாப்பிட வேண்டும்.  நேராக வந்து விடுங்கள்" என்று சொல்லி விட்டுச் சிரித்தபடி ஆசிர்வாதம் கொடுத்தவர் நேராக தன் இருப்பிடம் சென்று விட்டார்.

இந்தத் திடீர் அழைப்பைக் கேட்டு, இது கனவா - நனவா? இதுவரை மந்திராலய மடத்து சுவாமியை நான் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.  நமஸ்காரமும் செய்ததில்லை.  இங்கு வந்து மூன்று நாளாகிறது. என்னை யாரென்று அவருக்குத் தெரியாது. அவர் இருப்பிடத்திற்கும் நான் சென்றதும் இல்லை.  இப்படியிருக்க அந்த சுவாமிஜியுடன் சேர்ந்து இரவு போஜனம் அருந்துகின்ற பாக்கியம் எங்கள் இருவருக்கும் எப்படி ஏற்பட்டது?  இது அவ்வளவு எளிதில் கிடைக்கிற பாக்கியமா? என்று ஒரு நிமிடம் திணறிப் போய் விட்டேன்.

என்னைத்தான் கூப்பிட்டாரா இல்லை என் பின்னால் நின்று கொண்டிருந்த வேறு யாரையாவது கூப்பிட்டாரா?  நான் தவறாக எண்ணிக் கொண்டேனா? என்று கூட எண்ணிப் பார்த்தேன்.  அப்படியேதும் இல்லை என்பதைச் சற்று நேரத்தில் மடத்திலிருந்து வந்த ஊழியர்கள் உறுதி செய்தனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் "மூலராமரின்" பூசை முடிந்த பின்னர், எனக்கும் நண்பருக்கும் மந்திராலயா சுவாமிஜியின் பக்கத்தில் அமர்ந்து அவருடன் ஸ்ரீ ராகவேந்திரரின் தீர்த்தப் பிரசாதம் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது.  உண்மையில் இந்தப் பாக்கியம் ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் இல்லாமல் எங்களுக்குக் கிடைத்திருக்காது.

சாப்பிட்டு முடித்த பின்னர், சுவாமியே எங்களை அழைத்து மந்த்ராலயா மடத்துச் சம்பிரதாய சிவப்பு வஸ்திரம் அணிவித்து, அட்சதை தூவி ஆசிர்வதித்துச் சொன்னார்.

"எனகென்னவோ, உங்கள் இருவருக்கும் ராகவேந்திரர் பிரசாதத்தைக் கொடுக்க வேண்டுமென்று ஏதோ ஒரு உத்திரவு வந்தது போல் தோன்றிற்று. அதன்படியே செய்தேன் அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.

அப்போதுகூட சுவாமிஜியிடம் என்னைப் பற்றியோ அகஸ்தியர் ஜீவநாடியைப் பற்றியோ பிற்பகலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றியோ எதுவும் சொல்லவில்லை.  ஸ்வாமிஜியும் எதுவும் கேட்கவில்லை என்பதுதான் விசேஷம்.

மறுநாள் காலையில்,

நண்பர் காரில் நானும் அவரும் ரணமண்டலம் நோக்கிப் புறப்பட்டோம்.

"அகஸ்தியர் அருளால் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் கிடைத்தது.  ரண மண்டலத்தில் வேறு என்ன என்ன தரிசனம் கிடைக்கப் போகிறதோ! எது இருந்தாலும் என்னையும் நினைத்துக் கொள்" என்றார் ஏக்கம் கலந்த உரிமையுடன்.

"ஏன், நீயும் வாயேன் இரண்டும் பேருமே சேர்ந்து அனுபவிப்பது" என்றேன்.  நண்பருக்கு ஆசைதான்.  ஆனாலும் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதால் என்னை மட்டும் ரண மண்டலத்தில் இறக்கிவிட்டு விடை பெற்றுக் கொண்டான்.

ரண மண்டலம் மலை கண்ணுக்கு தெரிந்தது. அந்த மலைக்குச் செல்லும், ஒற்றையடிப் பாதையும் தெரியவே, அகஸ்தியரைத் த்யானித்து அனுமனை வணங்கி நடக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுது காலை மணி ஒன்பது இருக்கும்.

என்னைத்தவிர அந்த மலைமேல் ஏறுபவர்கள் கண்ணுக்குத் தெரிந்து ஒருவர் கூட இல்லை.  எதிரே மலையிலிருந்து இறங்கி வந்த ஒரு சிலர் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டு தங்களுக்குள் மௌன பாஷையால் ஏதோ சிலாகித்துக் கொண்டனர்.

அவர்கள் சாதாரண கிராமவாசிகள் என்பதால் "மலைக்குச் செல்ல இது சரியான வழியா" என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அப்படியே நான் கேட்டாலும் அவர்கள் பதில் சொல்வார்களா? அப்படியே பதில் சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு இருக்குமா? என்பதும் சந்தேகம் தான்.  இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி என்னைக் காப்பாற்றும், வழி காட்டும் என்ற நம்பிக்கை இருந்தது.

எதற்கும் அகஸ்தியரைக் கேட்டுப் பார்க்கலாம் என்று ஓரிடத்தில் என் பெட்டியை வைத்து, ஜோல்னா பையில் வைத்திருந்த ஜீவ நாடியை எடுத்தேன்.

மந்திராலயாவில் இறங்கியதிலிருந்து இப்பொழுதுவரை அகஸ்தியர் ஜீவநாடியை நான் பார்க்காமல் இருந்ததர்க்குக் காரணம் உண்டு.  அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை ஆகிய நாட்களில் அகஸ்தியர் யாருக்கும், எந்தவித அருளையும் ஓலைச்சுவடியின் மூலம் கொடுக்க மாட்டார்.  யார், எப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் மேற்கூறிய நான்கு தினங்களில் அகஸ்தியரிடமிருந்து பதில் கிடைக்கவே கிடைக்காது.

நாடி பார்க்கும் முன்பு எனக்கு அகஸ்தியர் இட்ட கட்டளைகளில் இதுவும் ஒன்று.  இதையும் மீறி அரசாங்கத்தின் மிக முக்கியப் பொறுப்புள்ள ஒருவருக்கு நாடி படிக்கப் போய் அகஸ்தியரின் கோபத்திற்கு ஆளாகி, இதனால் அன்னவர் குடும்ப வாரிசு பித்தனாகி காணாமல் போவார் என்று சொல்லி அதன்படியே விமான நிலையத்தில் மரணம் அடைந்த சம்பவம் பின்னாளில் நடை பெற்றதால் எனக்கு இதில் பயம் உண்டு.

கூடுமானவரை நல்லதையே சொல்வோம் என்பதுதான் என் விருப்பம்.

மலையில் நின்று அகத்தியரை மூல மந்திரத்தால் பிரார்த்தனை செய்து நாடியைப் புரட்டினேன்.

"நவமி திதி" இன்னும் நான்கு நாழிகை பாக்கி இருப்பதால் ஓளி மூலம் மலையின் மேல் உச்சிக்கு வழி காட்டுவதாகக் கூறினார்.

கையில் இருந்த ஓலைச் சுவடியில் புறப்பட்ட ஒரு ஓளி நேராகச் செங்குத்தாகச் சென்றது.  பிறகு இடது பக்கம் திரும்பி ஒரு அரச மரத்தைக் காட்டியது.  பின்னர் அங்கிருந்து வலது பக்கமாகத் திரும்பி தெற்கு நோக்கி லேசாகக் கீழே இறங்கி ஒரு கட்டத்தைச் சுட்டிக் காட்டியது.  சுட்டி காட்டப்பட்ட அந்த இடத்தில் ஒரு சுனை போல் சிறு பள்ளத்தைக் காட்டியது.  பிறகு வலது பக்கம் சாய்ந்து மேலே ஏறியது.

சாய்ந்து சென்ற அந்த ஓளி சட்டென்று ஒரு குறப்பிட்ட இடத்தில் நின்றதும் "ராமர் கோயில்" என்று எழுத்து வந்தது. பின்னர் அந்த கோயிலின் மேல் வேகமாகச் சென்று "மலை உச்சி" என்ற எழுத்தைக் காட்டி மறைந்து விட்டது.

எழுத்தாலே இதுவரை வழி காட்டி வந்த அகஸ்தியர் இப்போதுதான் முதல் முதலாக ஒளிக்கீற்றின் மூலம் எனக்கு வழி காட்டியிருக்கிறார்.  இந்த மாதிரி வழிகாட்டுவது இதுதான் எனக்கு முதல் அனுபவம்.  இதற்கு முன்னால் இப்படி வந்ததே இல்லை.

நல்லவேளை "நவமி" நான்கு நாழிகை இருக்கும் பொழுதே அகஸ்தியரிடமிருந்து நல்ல வழியைப் பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சி எனக்கு.

ஓரளவுக்கு அந்த வழிகாட்டுதலை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு மேலே ஏறினேன்.  அப்படியும் தெரியாமல் போனால் அகஸ்தியர் வழிகாட்டுவார்.  இல்லையென்றால் யாராவது ஒருவர் எதிரில் வராமலா போய் விடுவார் என்ற நம்பிக்கை தான்.

ஆனால்..........

ஒன்றரை மணி நேரம் நடந்த போதும் கூட ஒரு மனிதரும் எதிரே வரவில்லை.  எனக்குப் பின்னால் காட்டுச் சுள்ளி பொறுக்குவதற்காகக் கூட யாராவது வருவார்களா என்று எதிர் பார்த்தும் வீணாகப் போயிற்று.  அந்த மலையில் உயிருள்ள ஒரு நடமாடும் ஜீவன் என்று ஏதாவது இருந்தால் அது நிச்சயம் என்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

ஒரு விதத்தில் இந்தத் தனிமை திடீர்ப் பயத்தைக் கொடுக்கத்தான் செய்தது.  வானத்தில் "மேகம்" என்று இருந்தால் வெயிலிலிருந்து என்னைக் கொஞ்சம் காப்பாற்றி இருக்கும்.  மலையில் மரங்கள் என்று நிறைய இருந்தால், வெயில் கஷ்டம் இல்லாமல் சுகமாக இருந்திருக்கும்.

பாதி மொட்டை மரங்கள், பயங்கர முட்கள் நிறைந்த செடிகள்.  சில சமயம் சின்னச் சின்ன குட்டியான காய்ந்த மரங்கள்.  காற்று கூட ஏனோ நல்லபடியாக வீச இஷ்டப்படாமல் இருந்தது.

இப்போது தான் நான் அவசப்பட்டு செய்த தவறு என் நினைவுக்கு வந்தது.

சித்தன் அருள் ................ தொடரும்!

1 comment: