​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 May 2012

சித்தன் அருள் - 74 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை!


"லக்னம்" வக்கிரமாகும்.  இது சித்தர்களுக்கு மட்டும்தான் தெரியும் - என்று அகத்தியர் சொன்னது, இதுவரையிலும் நான் கேட்டிராத செய்தி.

பொதுவாக ஜாதகம் பார்க்கிறவர்களுக்கு சனி, புதன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வக்கிரமாகும் என்பது தெரிந்த விஷயம்.  ஆனால், பிறந்த நேரமே வக்கிரமாகும் என்பதை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.  காரணம், அது அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.  அந்த அளவுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் எங்கும் குறிப்பிட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

இதுவரையிலும் பலன் சொல்லி வந்தாலும் - அந்தப் பலன் பெருமளவு பலிக்காமல் போவதர்க்குச் சோதிடர்கள் "வாக்கு" சரியில்லை என்று சொல்ல முடியாது.  ஏனெனில் அவர்களால் "லக்னம்" வக்ரமாயிருப்பதக் கண்டு கொள்ள முடியாது என்பது ஒன்று.

இன்னொன்று, பிறந்த எல்லோருக்கும் லக்னம் வக்ரமாயிருக்கும் என்பதும் இல்லை.  எனவே உண்மையான தெய்வ பக்தியோடும், ஒழுக்கத்தோடும் உள்ளவர்கள் வாக்கில்  ஜோதிட பலனை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.  இயற்கையாகவே லக்னம் வக்ரமாகியிருக்கிறதா இல்லையா என்பதைக் கூட நாசூக்காக தெய்வம் எடுத்துக் காட்டும் என்கிறார் அகஸ்தியர்.

இருப்பினும் எனக்கு உள்ளூர ஒரு ஆசை.  லக்னம் வக்ரமானத்தை எப்படியாவது அகஸ்தியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலதடவை முயன்றேன்.

"இதெல்லாம் சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் பெற்ற தெய்வபலத்தால் கிடைக்கக் கூடியது.  சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.

அப்படி தெரிந்து பலன் சொன்னால் அது தெய்வ பலத்திற்கு இணையானது.  விதியின் தன்மையை மாற்றக்கூடிய வலிமை வந்து விடும்.  இது மனிதர்களுடைய பிரார்த்தனைகளையும் தாண்டி நிற்கக்கூடியது.  அந்தப் பக்குவம் பெறப் பல நாட்களாகும்.  அதற்குரிய தகுதி உனக்கு இல்லை என்று சொன்னவர், எதற்கும் ஓரிரு தேவ ரகசியத்தை உனக்குச் சொல்லித் தருகிறேன்.  அதை எப்படிக் காப்பாற்றப் போகிறாய் என்பதைப் பொறுத்துதான் லக்ன வக்கிர விஷயம் சொல்வேன்" என்றார்.

இந்த அளவுக்ககாவது அகஸ்தியர் என்னை மதித்தாரே என்று சந்தோஷம்.  ஆனாலும் முழுமையாக என்னை நம்பவில்லை என்ற ஏமாற்றமும் இருந்தது.  அவர் சொன்ன சில தேவ ரகசியம் எனக்குப் புதுமையாக இருந்தது.  அந்த ரகசியத்தைப் பின்பற்றி நான் சொன்ன சில ஜாதகப் பலன்கள் முதலில் சரிவர பலிக்கவும் இல்லை.

அகஸ்தியருக்கு என்றைக்கு மனது வருகிறதோ அன்றைக்கு எனக்கு லக்ன வக்கிர நிலையைப் பற்றிச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்!

திடீரென்று ஒருநாள், எனக்கு ஒரு உத்திரவு வந்தது.

"சட்டென்று ஏகுக" என்று ஈரோட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு என்னைப் போகச் சொன்னார்.  யாருடைய துணையும் இல்லாமல் நானும் புறப்பட்டேன்!

மறுநாள் காலையில் ஈரோட்டை அடைந்ததும் அங்கிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தக் கிராமத்தை அடைந்த போது மதியம் மூன்று மணியாகிவிட்டது.

ஏனெனில் அந்தக் காலத்தில் இந்த சிறிய கிராமத்திற்கு செல்ல அவ்வளவு வசதியில்லை.  கட்டை வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்.  ஆள் நடமாட்டம் அவ்வளவு இல்லாத கிராமம்.

அந்த கிராமத்தில் தலையாரி, கிராம அதிகாரிகள் கூட இல்லை.  வசதி காரணமாகப் பக்கத்துக் கிராமத்தில் தங்கி இருந்தனர்.  சாப்பிடுவதற்கு மட்டும் ஒரு புளிய மரத்திற்கு அடியில் பெஞ்ச் போட்டு டீக்கடை நடத்திக் கொண்டிருந்தார் ஒருவர்.  பொதுவாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை இயற்கை அற்புதமாக இருந்தது.

டீக்கடைக்காரர் முன்பு கட்டை வண்டியிலிருந்து இறங்கிய என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்.  அந்தக் கிராமத்தில் பேன்ட் ஷர்ட் சகிதம் கட்டை வண்டியிலிருந்து இறங்கிய நபர் நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் என்னை அப்படி வியப்புடன் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

வண்டிக்காரருக்குக் காசு கொடுத்தேன்.  மரியாதை நிமித்தம் வாங்கிக் கொள்ள மறுத்தார்.

டீக்கடைப் பெஞ்சில் அமர்ந்தேன்.  பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.  தயிர் சாதத்தை வாங்கிச் சாப்பிட்டேன்.  அதுவரை நான் யார் எதற்காக அங்கு வந்திருக்கிறேன் என்பதை அவரும் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் அந்தக் கிராமத்து மலைக் கோயிலைப் பற்றி மெதுவாக விசாரித்தேன்.

"இது பழமையான கோயிலுங்க, காலையிலே, மத்தியானம் மட்டும் நைவேத்தியம் செய்துவிட்டு அய்யரு வந்திருவாரு, ராத்திரி யாரும் அங்கே தங்கறதில்லை" என்றார்.

"ஏன் ராத்திரி தங்குவதில்லை?"

"தங்கினா யாரும் உயிரோடு வருவதில்லைங்க.  இதுவரைக்கும் ஏழெட்டு பேர் அங்கு தங்கிப் பார்த்து மறுநாள் பொணம் ஆகத்தான் வந்தாங்க" என்று ஒரு அணு குண்டைத் தூக்கிப் போட்டார்.

"ஏன்? என்ன ஆச்சு அவர்களுக்கு?"

"புலியோ, கரடியோ, காட்டு மிருகங்களோ கிடையாதுங்க.  ஆனால் அந்த தெய்வம் சக்தி படைச்சதுங்க.  யாரும் ராத்திரி அங்கு தங்கக் கூடாதுன்னு கிராமத்துப் பஞ்சாயத்து உத்தரவுங்க.  எதுக்கு அந்தக் கோயிலைப் பத்திக் கேட்கறீங்க?" என்று சந்தேகமாக இப்படியொரு வார்த்தையைக் கேட்டார்.

"இல்லை.  அந்த மலைக் கோயில்ல மூணு நாளைக்கு நான் ராத்திரி தங்கணும்.  அதுக்குத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கேன்" என்று நான் தயங்கித் தயங்கிச் சொன்னதும் தான் தாமதம், இடி விழுந்தார் போல் பதறிப் போனார் அந்த டீக்கடைக்காரர்.

"அய்யா, நீங்க ஊருக்குப் புதுசு.  வேண்டாங்க.  அந்த ஆசையை அடியோடு விட்டுவிடுங்க.  நல்லபடியா ஊர்போய்ச் சேருங்க.  பார்க்க சின்ன வயது, படிச்ச பிள்ளையாட்டம் இருக்கீங்க.  உங்களுக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு.  பேசாம வந்த வழியைப் பார்த்துப் போங்க" என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.

அகஸ்தியர் எனக்கிட்ட உத்திரவே மூன்று நாளைக்கு அந்த மலைக் கோயிலில் இரவில் தங்க வேண்டும் என்பதுதான்.  இதை நேரடியாகச் சொல்லாமல் மறைத்துச் சொன்னேன்.  அதுவே அந்த டீக்கடைக்காரருக்கு தாங்கவில்லை. 

இதற்கிடையில் அங்கு வந்து சேர்ந்த அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம், டீக்கடைக்காரர் என் விருப்பத்தை சொன்னபோது, "பைத்தியக்காரப் பிள்ளையாக இருக்காரே" என்று ஒட்டு மொத்தமாக ஒன்றாகச் சேர்ந்து என்னை அங்கிருந்து விரட்டியடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

நான் தனி ஆளாக நின்று கொண்டிருந்தேன்.  எனக்கு உதவி செய்ய யாரும் அங்கு முன் வரவில்லை.

என்னடா இது தர்ம சங்கடத்தில் அகஸ்தியர் நம்மை மாட்டி வைத்துவிட்டாரே என்று வருத்தமாகவும் இருந்தது.  கடைசியாக் உள்ளூர்ப் பெரிய மனிதர் யாரிடமாவது நேரிடையாகப் பேசிப் பார்த்தால் காரியம் வெற்றியடையுமே என்று முயற்சி செய்தேன்.

அன்றைக்குப் பார்த்து அந்த ஊர் தலையாரி, கிராம முன்சீப் போன்ற ஒருவர் கூட அந்தக் கிராமத்தில் இல்லை.

அகஸ்தியரிடம் இது பற்றிக் கேட்க நாடியை எடுத்துப் பார்த்தேன்.

"அஞ்சற்க.  தடையின்றி மலை மீது ஏறுவாய் -  ஆங்கொரு அதிசயத்தைத் தொடர்ந்து மூன்று நாள், நள்ளிரவில் நீ காணுவாய்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.

நாடியில் உத்திரவு கிடைத்ததும் எனக்கு மனம் மிகவும் தெம்பாக மாறிவிட்டது.  நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்தேன்.  அவர்கள் சொன்னதைக் கேட்க்காமல் அந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையைக் கண்ணால் அளவெடுத்துக் கொண்டேன்.  இரவில் பசி எடுத்தால் என்ன செய்வது என்பதை யோசித்து அந்த டீக்கடையில் இருந்த காய்ந்துபோன பன், கன்னிப் போயிருந்த சில பழங்களையும் வாங்கிக் கொண்டேன்.

பொழுது சாய ஆரம்பித்தது.

சட்டென்று அவர்களிடம் சொல்லாமலேயே, அந்த கிராமத்தின் வட கோடியிலிருந்த மலைக் கோயிலை நோக்கி தைரியமாக நடக்க ஆரம்பித்தேன்.  மனதில் தைரியம் இருந்தாலும், ஊர் பெயர் தெரியாத இந்த கிராமத்து மலைக் கோயிலில் மூன்று இரவு கழிக்க வேண்டுமே என்று நினைக்கும் பொழுது - வயிற்றைக் கலக்கத்தான் செய்தது.  ஒரு வேளை அந்த கிராமத்து மக்கள் பயந்தபடி நான் உயிரோடு திரும்பாவிட்டால்? என்ற நினைப்பும் அடிக்கடி வரத்தான் செய்தது.  அவ்வளவு தூரத்திற்கு அவர்கள் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தனர்.

அந்தக் குன்றை அடைந்து அகஸ்தியரை வணங்கி நான் படி ஏற ஆரம்பித்தேன்.  பெரிய மலை ஒன்றும் இல்லை.  படிக்கற்கள் தாறுமாறாக இருந்தன.  இடையில் நிறையச் செடி, கொடிகள் வழியில் பின்னிக் கிடந்தன.

கண்ணுக்கு தெரிந்த தூரத்தில் பாம்பு சட்டை உரித்துப் போட்டிருப்பதும் தெரிந்தது.  மனிதனுக்குப் பயப்படா விட்டாலும் இந்த விஷ ஜந்துக்களுக்குப் பயந்து பாதி தூரம் ஏறி இருப்பேன்.

"யாரது அப்படியே நில்லுங்கோ, மேலே வராதீங்கோ" என்று சன்னமான குரல் திடீரென்று கேட்டது.

குனிந்து கொண்டே மலை ஏறிக் கொண்டிருந்த நான் சட்டென்று நின்று நிமிர்ந்து பார்த்தேன்.  வயதான ஒருவர் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.  நெருங்கி வந்த பொழுது, அவர் அந்தக் கோயிலின் குருக்கள் என்று தெரிந்தது.

இறைக்க இறைக்க வந்தவர் என்னைப் பற்றி விசாரித்தார்.  நிதானமாக எல்லாவற்றையும் சொன்னேன்.

"அகஸ்தியர் அனுபிச்சாரோ - இல்லை அந்த சர்வேஸ்வரன் தான் அனுப்பிச்சாரோ எனக்குத் தெரியாது.  நீங்க அங்கே சாயரட்ச்சைக்கு மேல் போகக் கூடாது.  தங்கவும் கூடாது" என்றார் பதறியபடி.

நான் சொல்வதை அவர் கேட்பதாகத் தெரியவில்லை.  கொஞ்சம் அசந்தால் என்னைத் தரதரவென்று இழுத்துக் கீழே கொண்டு வந்து நான்கு சாத்துச் சாத்தியிருப்பார் போலிருந்தது.

அவரைச் சமாளிப்பது கஷ்டம் என்பதைப் புரிந்து கொண்டு, சட்டென்று அவரைத் தாண்டி மலைமீது ஏறினேன்.

அவர் என்னை நோக்கி நிறைய சாபம் இட்டது எதிரொலியாக அங்கு கேட்டது.

சில நிமிஷம் என்னையே வெறுத்துப் பார்த்துவிட்டு பின்பு மள மளவென்று கீழே இறங்கிவிட்டார்.

அடுத்த இருபத்தி ரெண்டாவது நிமிடம் நான் அந்த மலைக் கோயிலை அடைந்தேன்.  சின்னப் பிரகாரம், செங்கல், சுண்ணாம்பு, கற் தூண்கள் கொண்டு பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் இது.

உட்கார கல் திண்ணை இருந்தாலும் அவ்வளவு அழுக்கு.  தூசி.  எந்த மனித நடமாட்டமும் இல்லை.  ஒன்றிரண்டு வௌவால்கள் பறந்து பறந்து அமர்ந்தன.  சுற்றிலும் நோக்கினேன்.  இருட்டுகிற நேரம் என்பதால் அந்தக் கிராமப் புறமே அமைதியாகக் கிடந்தது.

மலைக் கோயிலில் எந்தவித வெளிச்சமும் இல்லை.  கர்ப்பக் கிரகத்திற்குள் தூங்க விளக்கு ஒன்று அரைகுறையாக எரிந்து கொண்டிருப்பதைக் கதவின் சாவித் துவாரத்தின் வழியாகப் பார்த்தேன்.

தாகம் எடுத்தால் அங்கு தண்ணீருக்குக் கூட வழியில்லை என்பது அப்புறம் தான் எனக்கே தெரிந்தது.  சரிதான் இதுவும் அடுத்த ரண மண்டல மலை கேஸ்தான் என்று புரிந்தபோது மனம் லேசாய் பதறியது.

கொஞ்ச நேரம் கழிந்தது.  இருட்டு நன்றாகக் கூடியதும் ஏராளமான மின் மினிப் பூச்சிகள் அந்தக் கோயிலின் பக்கவாட்டில் இருந்து வெளிவருவது தெரிந்தது.  அங்கு சென்றுதான் பார்ப்போமேன் என்று தட்டுத் தடுமாறிச் சென்ற பொழுது......

அந்தப் பாறையிலிருந்து மெல்லியதாகத் தண்ணீர் கசிந்து சிறு குட்டை போல் தேங்கிக் கிடந்தது.

இதைக் கண்டதும் எனக்குப் பாதி உயிர் திரும்பி வந்தது.

அப்பாடா, காய்ந்து போன அந்த பன்னை இந்த நீரில் முக்கி உண்டுவிட்டால் இன்றைய இரவு நல்லபடியாக கழியும்.  அந்த தண்ணீர் நல்ல தண்ணீரோ அல்லது கெட்ட தண்ணீரோ.  அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதை உண்டு விட்டால் இன்னும் பன்னிரண்டு மணி நேரத்தை நல்லபடியாகக் கழித்துவிடலாம்.  பொழுது விடிந்த பிறகு, பின்பு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் ஏற்ப்பட்டது.

நேரம் நள்ளிரவு ஆகிக் கொண்டிருக்க அகஸ்தியர் என்ன அதிசயத்தை எனக்கு இங்கு காட்டப் போகிறார்? என்ற ஆவலுடன் காத்திருந்தேன்.

இரவு மண் பன்னிரண்டைத் தாண்டியிருக்கும்.

சட்டென்று அந்தக் கோயிலின் கருவறையிலிருந்து வேதகோஷம் அற்புதமாகக் கேட்டது.

பதினெட்டுப் பேர்கள் ஒன்றாக அமர்ந்து முறையாக சொன்ன அந்த வேத மந்திரங்கள், மனதுக்கு உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் தந்தன.

ஆலயமணி அடிப்பதும், வாசனைத் திரவியங்களால் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடப்பதும், அபிஷேகம் நடக்கும் பொழுது நம் நோயில்களில் என்னென்ன நடக்குமோ அத்தனையும் முறையாக, அழகாக, தீப தூபத்தொடு கருவறையில் நடப்பது போல் தோன்றியது.  மேளம் முழங்கியது.  வாத்திய கோஷம் ஒலித்தது.  புஷ்பங்கள், சந்தானம், பத்தி, அகில் புகை, சாம்பிராணிப் புகை அத்தனையும் அந்தக் கருவறைக் கதவிடுக்கிலிருந்து வெளியே வந்து என் மூக்கைத் துளைத்தன.  ஆனந்தத்தின் உச்சிக்கே நான் போனேன் என்று சொல்வதைவிட ஆண்டவனின் சந்நிதானத்தில் இருந்து இந்த அழகான அபிஷேக ஆராதனைகளை அந்த நள்ளிரவிலும் ரசித்தேன் என்பதே பொருந்தும்.

எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்.  வேதகோஷம் புஷ்பாஞ்சலியோடு ஆனந்தமாக அரை மணி நேரத்தில் முடிந்தது.  பிறகு கருவறையிலிருந்து எந்த சப்தமும் வரவே இல்லை.

இதுவரை என்காதில் விழுந்தது உண்மையான வேத கோஷமா அல்லது கற்பனையா என்று நான் நினைத்துப் பார்த்த பொழுது எனக்கே ஒன்றும் தெரியவில்லை.

மனப் பூர்வமாக அகஸ்தியருக்கு நன்றி சொல்லி - நாடியைப் பிரித்தேன்.

"இந்தக் கோவிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒருமுறை தலையாயச் சித்தர் என் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள், நள்ளிரவு நேரத்தில் இந்த சிவபெருமானுக்கு ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்வது உண்டு.  எனது மைந்தன் என்பதால் உனக்கும் இந்தக் கண் கொள்ளாக் காட்ச்சியைக் காட்ட இக்கோவிலுக்கு வரவழைத்தேன்,  எங்களைக் காண முடியாது என்றாலும் சூட்ச்சுமமாக இந்த உணர்வினைத் தெரிய வைத்தேன்.  இது இன்று மாத்திரமல்ல, இன்னும் இரண்டு நாளைக்குத் தொடரும்.  உனக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும். எனினும் இதை இப்போது யாரிடமும் சொல்வதில் பயனில்லை.  பொறுத்திரு" என்றார் அகஸ்தியர்.

நான் வெலவெலத்து மெய் மறந்து போனேன்.  பகவானே! இதெல்லாம் உண்மை தானா? என்று அடிக்கடி கேட்டேன்,  ஏனெனில் அப்படிப்பட்ட பாக்கியம் அவ்வளவு எளிதாக எனக்குக் கிடைத்திருக்குமா? என்பது எனக்கே சந்தேகமாகப் பட்டது.

அதே சமயம் இதை வேறு யாரிடத்திலேயும் மனப் பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியாதே!

சித்தன் அருள் .................. தொடரும்!

Monday 28 May 2012

சித்தன் அருள்-சிவனருள்!


சித்தன் அருள் தொடரை வாசித்த நிறைய அன்பர்கள் இறை தரிசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டினர்/ கேட்டுக்கொண்டனர்.  எனது நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட ஒரு தொடுப்பை கீழே தருகிறேன்.  சென்று பாருங்கள்.  ஆச்சரியமூட்டும் வீடியோ.  நான்கு நண்பர்கள் ஒரு மஹா சிவராத்திரி அன்று சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு சென்றனர். திடீரென்று மின்னல் அடித்து இடி முழங்க நிமிர்ந்து பார்த்தவர்கள் அசந்து போய் விட்டனர்.  ஆகாயத்தில் இறைவன், ஜடாமுடியை விரித்துபோட்டு மிகவும் கூர்ந்து பூமியில் எங்கேயோ பார்ப்பது போன்ற தோற்றம் மேகத்தில் காணப்பட்டது.  கையில் செல் இருந்ததால் அதனை உடனே படம் பிடித்தனர். பகிர்ந்து கொண்டனர்.  வீடியோவை பார்த்தால் அதில், இரு விழிகள், இமை, புருவம், மூக்கு, உதடுகள், வாய், மூன்றாவது கண் இவைகள் தெளிவாக தெரிகிறது.  வீடியோ க்வாலிட்டி சற்று குறைவானாலும், இதை போன்ற ஒரு ஒளி நாடாவை நான் பார்த்ததில்லை.  கண்டு ஆனந்தப்படுங்கள்.  ஒரு முக்கியமான விஷயம்! இதில் கிராபிக்ஸ் வேலை எதுவும் செய்யப்படவில்லை.  ஒலி மட்டும் சேர்த்திருக்கிறார்கள்.


சித்தன் அருள் .............. தொடரும்!

அகத்தியர் அருள்!


பல அன்பர்களும், பல இடங்களுக்கு சென்ற போது அப்படி நடந்தது, இப்படி ஆசீர்வாதம் கிடைத்தது என்று சொல்லும் போது, பல முறை வியந்திருக்கிறேன்.  ஹோ! அவர்கள் எத்தனை புண்ணியவான்கள் என்று!  ஆனால் நமக்கும் அதே போல கிடைக்காத என்று ஒரு முறை கூட நினைத்தது கிடையாது.  கிடைத்தால் நல்லது.  ஆனால் எது நடக்கவேண்டுமோ அது நடக்கும்.  என்ன! நாம் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவன்.  இறைவனும் என்னை பார்த்து பொறுமை இழந்து விட்டான் போல.  ஒரு திருவிளையாடலை நடத்த தீர்மானித்தான்.

அது நமது பொங்கல் தினம்.  விடுமுறை வேறு.  அதனால் எங்கும் கூட்டம் இல்லாத நிலை.  அன்று காலை முதல் ஏனோ மனம் நிலையில்லாமல் தவித்தது.  உண்ணும் உணவு மன நிலையை ஆட்சி செய்யும் என்று கேள்விபட்டிருக்கிறேன்.  முந்தயநாள் அப்படி என்ன சாப்பிட்டுவிட்டேன் என்று நினைவலைகளை துருவினேன்.  எளிய உணவு உண்டது தான் நினைவுக்கு வந்தது.  உணவு பிரச்சினை இல்லை.  சரி இன்று ஏதேனும் நடக்கலாம்.  எல்லாம் நல்லதற்கு தான் என்று என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டேன்.

மதிய உணவுக்கு அமர்ந்த போது ஒரு எண்ணம்.  சற்று வித்யாசமாக சிந்தனை வந்தது.  முருகர், அகத்தியர் என்கிற இந்த இரண்டு பெயரும் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வட்டமிட்டது.  என்ன? எதற்காக இந்த சிந்தனை வளர்கிறது என்று ஆச்சரியப்பட்டேன்.  சரி என்று ஒரு முடிவுக்கு வந்து, கேட்டு பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமே என்று நினைத்தேன்.

என் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் (சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்கிற தூரம்) ஒரு முருகர் கோயில் உள்ளது.  அங்கிருந்து ஒரு மணி நேரம் பயணித்தால் அகத்தியரின் ஒரு கோயில்.  இரண்டு கோயில்களுக்கும் சென்று வரலாமே என்று தோன்றியது.

மதியம் மணி இரண்டு.  உறவினர் ஒருவரை கேட்க,  அவரும் ஒப்புக்கொண்டார்.  பைக்கில் செல்ல தீர்மானித்தோம்.

இறங்கும் முன் எப்போதும்போல பூஜை அறையின் முன் நின்று "உங்கள் துணை வேண்டும்" என்று வேண்டிக்கொள்ள ஒரு புது வித சிந்தனை வந்தது.  "சரி! கேட்டு விடுவோம்.  என்ன வேண்டுமோ அவர்கள் பார்த்து படி அளக்கட்டும்" என்று நினைத்து,

முருகரை மனதில் த்யானித்து, அவர் முன்னே அமர்ந்திருக்கிறார் என்கிற உணர்வுடன் மனதுக்குள் பேச தொடங்கினேன்.

"முருகா! உன் துணை வேண்டும்! எந்த ஆபத்தும் பயணத்தில் வரக்கூடாது!  ஒரே ஒரு விஷயம்.  கேட்கிறேன்.  எனக்கு அந்த தகுதி இருந்தால், வாய்ப்பை கொடு.  இது தான் அது!

"உன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட ஒரு பூ மாலை எனக்கு வேண்டும்.  அது எனக்கு அல்ல.  உன்னை தரிசித்து ஆசிர்வாதம் பெற்ற பின் அகத்திய மாமுனிவரை தரிசிக்க செல்லலாம் என்று ஆசை படுகிறேன்.  நீ அந்த மாலையை கொடுத்தால், அதை உன் சிஷ்யரின் கழுத்தில் அணிவிக்க விரும்புகிறேன்.  நான் மாலையை கொடு என்று உனக்கு பூசை செய்யும் பூசாரியிடம் கேட்கப்போவதில்லை.  உனக்கு அதை தர விருப்பம் இருந்தால் தரவும். நீ அதை தரவில்லையானால், உன் கோயில் முன்பு இருக்கும் பூக்கடையில் இருந்து ஒரு மாலை வாங்கி அகத்தியருக்கு சார்த்துவேன்.  என்ன நடக்க வேண்டும் என்று நீயே முடிவு செய்துகொள்.  என் குருவுக்கு, உன் சிஷ்யனுக்கு நீ என்ன செய்வதாய் உத்தேசம்."

ஆயிற்று.  மன எண்ணங்களை கொட்டியாகிவிட்டது.  இனி அவன் செயல். 

மாலை நான்கு மணிக்கு புறப்பட்டோம்.  உண்மையிலேயே முருகரிடம் வேண்டிக்கொண்டது, புறப்படும் போது மறந்தே போச்சு.  பத்திரமாக சென்று தரிசனம் செய்து, திரும்பவேண்டும் என்பதே முதல் குறிக்கோளாக இருந்தது.  முருகரின் பூசைக்காக எதுவுமே வாங்கவில்லை.  இரண்டு மணி நேரம் பயணம் செய்து, கோவில் வாசல் படியை மிதிக்கும் போது தான் அதை உணர்ந்தேன்.  என்ன இப்படி பண்ணிவிட்டாய் முருகா! மொத்தமாக புத்தியை மழுங்கடித்துவிட்டாயே!  ச்சே! ஒரு சின்ன விஷயத்தை கூடவா இன்று நினைவில் வைக்க முடியவில்லை? என்று என்னை நானே திட்டிக்கொண்டு முருகர் சன்னதி முன்பு சென்று நின்றேன்!

முருகன்! பெயருக்கு ஏற்றாற்போல் அழகு தான்.  சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்.   வலது கை பக்கம் வேல் சார்த்தி இருக்க, அலங்கார ரூபனாய், மனம் என்னவெல்லாமோ கற்பனை செய்தது.  திடீர் என்று ஒரு சிந்தனை.  இவர் சிரித்தபடி நிற்பது கூட பெருமாளிடமிருந்து கற்றுக்கொண்டதோ.  அப்பன் சிவனோ எப்போதும் த்யானத்தில் இருப்பவர்.  அவரை எங்கேயும் சிரித்தபடி பார்த்ததே இல்லை.  பெருமாளோ எங்கும் அமைதியாக ஆனந்த ஸ்வரூபனாக சயனத்திலோ, இருந்த, நின்ற கோலத்தில் சிரித்தபடி இருப்பார்.  நாம் இறையை கூட நமது ரூபத்தில் தரிசிக்க விரும்புவதால், சிரித்தமுகமே பலருக்கும் பிடிக்கிறது.  இவரும் சிரித்த கோலத்தை பெருமாளிடம் கற்றுக்கொண்டாரோ என்று விநோதமாக சிந்தித்தது மனது.

உள்ளே இருந்து பூசாரி வந்து என்னை பார்த்தார்.  என்ன? என்பது போல ஒரு பார்வை.

"சுவாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ண வேண்டும்" பூசாரியின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு என் பதில்.

அர்ச்சனை தொடங்கியது.  எதையும் கேட்க மனது விரும்பவில்லை.  முருகரின் முகத்தை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தேன். என்னவோ ஒரு வித உணர்வு.  நான் சின்ன குழந்தையாக இருக்கும் போது, தாயின் மடியில் அரவணைப்பை அனுபவித்த அந்த சுகம் உள்ளே பரவியது.

கண்ணை மூடி ஒரு சில நிமிடம் இருக்க,

"அர்ச்சனை பிரசாதம்" என்று சொன்ன பூசாரியின் குரல் என் த்யானத்தை கலைத்தது.

கையில் பிரசாதத்தை வாங்கி கொண்டு, தட்சிணை கொடுத்து, திறந்து பர்ர்க்க, ஒரு சில உதிரி பூக்களும், விபூதி, சந்தனம் மட்டும் தான்.

அமைதியாக கையில் பிரசாதத்துடன் முருகனை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பினேன்.

"நில்லுங்கள்" ஒரு குரல்

அந்த குரலே அதிர்வாகத்தான் இருந்தது.  முருகரே அழைப்பதுபோல் தான் தோன்றியது.  எதிர்பார்ப்பே இல்லாமல், கிடைத்ததை கையில் வைத்துக்கொண்டு மெதுவாக திரும்பினேன்.

அழைத்தது பூசாரி தான்.  மெல்லிய புன்னகையுடன் அவர் முகத்தைப்பார்க்க 

"வண்டீல வந்தீங்களா?" என்றார்.

"ஆமாம்! வண்டீல தான் வந்திருக்கோம்!"

"காரா?"

"இல்லை.  பைக்கில்!"

"நில்லுங்கள்! ஒரு மாலை தருகிறேன்!"

அமைதியாக நடக்கிற நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தேன்.

உள்ளே சென்ற பூசாரி, முருகனுக்கு சார்த்திய ஒரு மாலையை கொண்டு வந்து என் கையில் கொடுத்தார்.  நான் எதுவும் பேசவில்லை.  அமைதியாக அவர் முகத்தையும் பின்னர் அவருக்கு பின்னே நின்றுகொண்டு இருக்கும் முருகரையும் உற்று பார்த்தேன்.  ஒரு நிமிடம் கண்மூடி முருகருக்கு நன்றி சொன்னேன்.

மறுபடியும் உள்ளே சென்ற பூசாரி, அவர் வேலில் இருந்து ஒரு எலுமிச்சை பழத்தை கொண்டு வந்து தந்து,

"இந்தாருங்கள்! இது ஞானப்பழம்!" என்றார்.

சிரித்தேன்.

இதற்குள், முருகன் அருகில் அமர்ந்து மந்திரம் ஜெபித்துக்கொண்டிருந்த பூசாரி ஒருவர், அங்கிருந்தபடியே 

"அதை ஞானப்பழம் என்று சொல்லாதே! ஸ்கந்த பழம்னு சொல்லிக்குடு" என்றார்.

முதல் முறையாக அப்படி ஒரு வார்த்தை என் வாழ்வில் கேட்க்கிறேன்.  மனம் எங்கோ சொருகி அவன் பாதத்தை மட்டும் நினைத்தது.  எத்தனை நன்றி முருகனுக்கு சொல்வது?  எப்படி சொன்னால் இதற்கு ஈடாகும். எங்கேயோ ஒரு சாதாரண மனிதனாக பிறந்து, தெரிந்ததை பிறர் நோகாத படி செய்து வாழ்ந்து, இப்படி எளிய வாழ்க்கை வாழ்பவருக்கு அவன் உடனேயே அருள் புரிவானா? 

"சிந்தனையை அறுக்க வேண்டும்", யாரோ தலைக்குள் இருந்து உரைப்பதுபோல் உணர்ந்தேன்.  ஆம்! அலையும் மனதை அடக்கினால், இறைவன் அங்கே குடி கொள்வான்!  இப்படி என்னனவோ எண்ணங்கள் உபதேசமாக வந்தது.

விடை பெரும் நேரம் வந்தது.

கையில் இருந்த மாலையை, உறவினரிடம் கொடுத்து

"இதை பத்திரமாக வைத்துக்கொள்.  இது எனக்கு அல்ல.  ஒருவருக்கு கொடுக்க வேண்டியது" என்று கூற, அவரும் எதுவும் புரியாமல் கையில் வாங்கிக்கொண்டார்.

சிறிது நேரத்துக்கு பின் எதோ தோன்ற, நானே வாங்கி என் பையில் வைத்துக்கொண்டேன்.

வண்டியை கிளப்பி, அகத்தியர் தரிசனத்துக்காக பயணம் செய்தோம்.  நடந்த விஷயங்களை மனதில் அசை போட்டு வண்டியை ஓட்ட, மனம் உள்ளே ஒன்றுபட்டு எதோ ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தது.  ஒரு வினாடியில் ஒரு விபத்திலிருந்து தப்பித்தோம்.  பார்வை ரோட்டில் இருந்தாலும், நினைவு முருகரின் பாதத்தில் இருந்ததால், கடைசி நொடியில் நினைவுக்கு வந்து, குறுக்கே கடந்து சென்ற ஒரு தாயும், மகளும், அடிபட்டு விடாமல், வெட்டி விலகி சென்றோம்.  சென்ற வேகம் அதிகம்.  அதை சூட்சுமமாக, எந்த சேதமும் இல்லாமல் இறைவன் உணர்த்தினான்.

கூட அமர்ந்த உறவினர், அந்த இரண்டும் பேரையும் திட்ட முயற்ச்சிக்க

"வேண்டாம்! விட்டு விடு! என் மீது தவறு உள்ளது.  என் கவனம் உள்ளே மந்திரத்தில் அடங்கி விட்டது.  அவர்கள் மீது தவறு இல்லை. திட்டாதே!" என்று கூறி கடந்து சென்றோம்.  நான் சொன்னதை அந்த தாயும் கேட்டாள் போல.  அமைதியாக சிரித்தபடி சென்றனர். 

நன்றாக இருட்டிக்கொண்டு வந்தது.  மாலை ஆறு மணிக்கே இப்பொழுதெல்லாம் இருட்டி விடுகிறது.  வழி தெளிவு குறைய தொடங்கியது.  ஒரு வழியாக அகத்தியர் கோயிலை சென்றடைந்தோம்.

கோவில் திறந்திருந்தது.  பூசாரியை காணவில்லை.  என்ன செய்ய என்று நினைத்தபடி உள்ளே சென்றோம்.

அகத்தியர் கோயில் மிக அமைதியாக இருந்தது.   இரு புறமும் விளக்கு ஏற்றி வைத்திருக்க, ஜமந்திப்பூ மாலையுடன், வெள்ளி கவசம் சார்த்தி இருக்க, குரு அகத்தியர், லோபாமுத்திரையுடன் நின்றிருந்தார்.  கண் கொள்ளா காட்சி.  சன்னதியின் மிக அருகில் வலது புறமாக நின்று அந்த அழகை உள் வாங்கி, மௌனமாக குரு வந்தனம் செய்ய தொடங்கினேன்.  ஒரு விதமான உஷ்ணம் எங்களை சூழ்ந்தது.  அது என்ன என்று புரிவதற்குள், என் மனம் கொண்டு சென்ற மாலையை நினைத்தது.  பையிலிருந்து வெளியே எடுத்து, அவர் சன்னதியின் வாசல் படியில் வைத்துவிட்டு, நிமிர்ந்து நின்று, மனத்தால் அவரிடம் பேசினேன்.

"அய்யா! இன்று என்ன நடக்கிறது என்று புரியவில்லை.  ஆசை படுவதே தவறு.  ஏனோ மனம் ஒன்றை விரும்பிட, முருகரிடம் வேண்டினேன்.  அவரும் அணிந்த மாலையை தந்துவிட்டார்.  உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்ற ஆவலில் இத்தனை தூரம் வந்து சேர்த்துவிட்டேன்.  ஆனால், பூசாரியை தான் காணவில்லை.  உங்கள் கழுத்தில் இந்த மாலை சென்று சேர்வதை காணும் பாக்கியத்தை கொடுங்கள்.  இனிமேல் நடக்கவேண்டியது எல்லாம் உங்கள் பொறுப்பு!"

பெரியவரின் பாத்தில் அத்தனை எண்ணங்களையும் கொட்டிய பின் வணக்கம் சொல்லி அவர் சன்னதியை வலம் வர இடது பக்கமாக நடந்தேன்.  அவர் சன்னதிக்கு பின் புறம் ஒரு மரத்தடியில் விநாயகர் சன்னதி.  அவர் முன் சென்று, "அய்யா விநாயகனே! அத்தனை விக்னங்களையும் விலக்கித்தா!" என்று கை கூப்பி வணங்கிட, மனக்கண்ணில் அவரின் வலது கரம் உயர்ந்து அனுக்கிரகம் பண்ணுவது போல் தோன்றியது.  சரி! இனி எல்லாம் நல்ல படியாக நடக்கும்.  அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்கிற எண்ணத்துடன் மறுபடியும் அகத்தியர் சன்னதியின் முன் வந்து த்யானத்தில் அமர்ந்தேன்.  கண் மூடியது.  அகத்தியரின் பாதம் மட்டும் மனக்கண்ணில் நிலைக்க, எத்தனை நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியாது.

யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டு த்யானம் கலைந்து, பார்த்தால் -  பூசாரி.

எங்கோ போய் விட்டு அவசரமாக ஓடி வந்தார்.  என்னை கண்டதும் "வாங்கோ! எப்பொழுது வந்தீர்கள்!" என்கிற விசாரிப்புடன்.

வந்தவர், நேரே சென்று மாலை நேர தீபாராதனைக்கான விஷயங்களை தயார் படுத்தினார்.

"அய்யா! பெரியவருக்கு ஒரு மாலை கொண்டு வந்திருக்கிறேன்! அங்கே அவர் சன்னதி முன் படியில் வைத்திருக்கிறேன்! எடுத்து கொள்ளுங்கள்!" என்றேன்.

"ஆமாம்! பார்த்தேன்! எடுத்துக்கொள்கிறேன்!" என்றார்.

பூசைக்காக உள்ளே போகும்போது அந்த மாலையையும் எடுத்துக்கொண்டு சென்றவர், அகத்தியரின் கழுத்தில் அணிவித்தார்.  சற்று தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்தேன்.  ஒரு வினாடியில், அந்த மாலை காணாமல் போனது.  சற்றே அதிர்ந்து போன நான் அருகில் என்று பார்க்க, முன்னர் இட்டிருந்த ஜமந்திப்பூ மாலையை தான் பார்க்க முடிந்தது.  இந்த மாலை அணிவித்ததர்க்கான அறிகுறியே அகத்தியர் விக்ரஹத்தில் இல்லை.  என்ன நடந்தது என்று புரியவில்லை.  தீபாராதனை முடிந்து, கற்பூர ஆரத்தி ஒற்றிக்கொண்டபின் மேலும் சற்று அருகில் சென்று பார்த்தேன். அந்த மாலையை பார்க்க முடியவில்லை.  சற்று நேரம் அகத்தியர் சிலையையே பார்த்துக்கொண்டு நின்ற எனக்கு அவர் புன்னகையுடன் வலது கரம் உயர்த்தி அருள் பாலிப்பது போல் தோன்றியது.

இனிமேலும் எத்தனை முறை பார்த்து நின்றாலும், காணப்போவதில்லை, என்று தோன்றியது.  சரி! வந்த வேலை முடிந்தது.  புறப்படுவோம் என்று நினைத்தவுடன், பூசாரி பிரசாதம் தந்தார்.  கொஞ்சம் சந்தானம், விபூதி ஒரு சில மலர்கள். பார்த்த போது முருகர் கோயிலில் பூசாரி தந்த அதே பிரசாதம் போல். 

அகத்தியருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.  என்னவோ நினைத்தார்கள்! அதை நடத்தினார்கள்! நான் ஒரு தூதுவனாக மட்டும் தான் செயல் பட்டேன் என்று தோன்றியது.

எதற்காக நடத்தினார்கள்? யாருக்கு தெரியும்?  பதில் கிடைக்காத கேள்விகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

எனக்குள் தோன்றிய எண்ணம் ஒரு எண்ணமாக மட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால், நினைத்தபடி நடந்ததே.  யார் நடத்தினார்கள்.  அவர்கள் தான்.  அப்படினா?  "முருகர் அருள் என்றும் முன் நின்று வழி நடத்துகிறதோ?"  அவனுக்கே வெளிச்சம்!

வணக்கம் முருகர் திருவடிக்கு! குரு அகத்தியர் திருவடிக்கு!

(இந்த பதிவை வாசிக்கும் நீங்களும் இதுபோல் முயற்சி செய்யுங்களேன்.  ஏதேனும் அனுபவம் கிடைத்தால் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.)

Thursday 24 May 2012

சித்தன் அருள் - 73


பொதுவாக சித்தர்களோடு தொடர்பு கொள்வது என்பது மிகவும் பெரிய விஷயம் தான்.  எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு.  அப்படிக் கிடைத்த வாய்ப்பை நிறைய பேர்கள் தவற விட்டிருக்கின்றனர்.  இன்னும் சொல்லப்போனால் இன்றும் கூட நிறைய பேர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தும் அலட்சியம் காரணமாகவோ அல்லது நம்பிக்கை இன்மையினாலோ தவற விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஊழ்வினை காரணமா? என்று கூட நினைப்பதுண்டு.  நிறைய பேர்கள் தங்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஏங்குவதையும் நான் பார்த்திருக்கிறேன்.  சித்தர்கள் தரிசனம் கிடைப்பது என்பது வேறு.  சித்தர்களோடு தினம் நாடி மூலம் பழகுவது என்பது வேறு.

சித்தர்கள் தரிசனம் சிலருக்கு நேரிடையாக கிடைத்துக் கொண்டிருந்தாலும், அவர்களது வழிகாட்டல் பலருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.  நாடி மூலம் சித்தரிடம் தாங்கள் எதிர் காலத்தைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் பெறும் பேறு பெற்றவர்கள் என்பது உண்மை.

சில சமயம் நாடி படிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட பாக்கியம் கிடைப்பதில்லை.  இது பலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும்.  ஏனெனில், அன்றாடம் சித்தரிடம் தொடர்பு கொண்டிருப்பவர்கள் பலதடவை சித்தர்களின் கோபத்துக்கும், மன உளைச்சலுக்கும், அதிருப்திக்கும் ஆளாக வேண்டியது வரும்.

சித்தர்களின் அருள்வாக்கை நாடி மூலம் கேட்பவர்கள் சித்தர்களின் பரிபூரண அனுக்ரகத்தை மிக எளிதாகப் பெற்று விடுகிறார்கள்.  காரணம் அவர்கள் அந்த சித்தரின் மீது கொண்ட அளவற்ற பக்தி, நம்பிக்கை.

அதோடு நாடியில் வருவதை தெய்வ வாக்காக ஏற்று நடக்கிற தன்மை காரணமாக சித்தர்களின் பரிபூரண கடாட்சத்தைப் பெற்று விடுகிறார்கள்.

அதே சமயம்

நாடி படிக்கும் எல்லோருக்கும் இப்படிப்பட்ட பாக்கியம் கிடைத்து விடுகிறதா என்றால், சிலசமயம் உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது.

நம் தமிழ் நாட்டில் சித்தர்கள் எப்படியெல்லாம் நடமாடி மக்களை உய்வித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்க்காகத்தான் மேலும் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்.

ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் தனிப்பட்ட ஆலோசகராக இருந்தார் "பாணி" என்பவர்.

அவர், இப்போது நான் வைத்துக் கொண்டிருக்கும் ஜீவ நாடியை அப்போது வைத்து அகஸ்தியரின் சீடராக நாடி பார்த்துக் கொண்டிருந்தார்.  ஓமந்தூரருக்கு பாணியை மிகவும் பிடித்து விட்டது.  அவ்வப்போது நாடி பார்த்து எதிர்காலத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

சென்னை கடற்கரையில் ஓமந்தூராரும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் உட்கார்ந்து செட்டிநாட்டு முறுக்கு வகைகளை ருசி பார்த்துக் கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தனர்.  அவருக்குப் பக்கத்தில் நம்முடைய நாடி ஜோதிடர் பாணியும் கூட இருந்தார்.

அப்பொழுது இரண்டு இளம் சிறுவர்கள் கடலை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தனர்.  அந்த சிறுவர்களின் நடவடிக்கையைக் கண்டு, ஓமந்தூராரின் பாதுகாவலர்கள் சந்தேகப்பட்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர்.

இரவு ஆரம்பித்த நேரம் என்பது மட்டுமின்றி, அந்த சிறுவர்கள் சென்ற கடற்கரை ஓரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதால், ஓமந்தூராரின் பாதுகாவலர்கள் பயந்து "இந்த இரண்டு சிறுவர்களும் ஏதோ ஒரு தவறுதலான முடிவுக்குத்தான் போகப் போகிறார்கள்" என்று நினைத்து அவர்கள் கடலில் காலை வைத்தவுடன் ஓடிப் போய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

போலீஸ்காரர்கள் தான் மப்டியில் இருக்கிறார்கள் என்பதை அறியாத அந்த சிறுவர்கள் அவர்களிடமிருந்து திமிற முயன்றார்கள்.

"யார் நீங்கள் - எதற்காக இந்த இரவு நேரத்தில் இங்கே தனியாக வந்தீர்கள்?" என்று காவலர்கள் கேட்டனர்.

"எங்களை விட்டு விடுங்கள்.  நாங்கள் சாகப் போகிறோம்" என்று அழுகை கலந்த பிடிவாதத்தோடு அவர்கள் இருவரும் அந்தக் கடற்கரையிலிருந்து வர மறுத்து அடம்பிடித்தனர்.

காவலர்கள் அந்த இரண்டு சிறுவர்களையும் உடனடியாகக் குண்டு கட்டாகத் தூக்கி மணல்பரப்பில் மீது போட்டு விரட்டி அவர்களைப் பற்றி குலம், கோத்திரம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

இந்தக் காட்ச்சியை அருகிலிருந்தவாறே கண்டு கொண்டிருந்த அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார், அந்த சிறுவர்களை தம் பக்கம் அழைத்து வரச் சொன்னார்.

அந்தச் சிறுவர்களுக்கு ஓமந்தூரார் யார் என்பது தெரியாது.  ஏதோ பெரிய மனிதர், பந்தாவோடு கடற்கரையில் முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  இவர் வந்து என்ன உதவி செய்யப் போகிறார்? என்று தான் நினைத்தார்கள்.

அதோடு, தாங்கள் எடுக்கும் அந்த முடியை இவர்கள் கெடுத்து விட்டார்களே என்ற கோபம் கலந்த வருத்தமும் இருந்தது.

"தம்பி உங்க பெயர் என்ன?" ஓமந்தூரார் கேட்டார்.

அவர்கள் இருவரும் தாங்கள் பெயரை சொன்னார்கள்.

"இங்கு எதற்காக வந்தீர்கள்?"

"தற்கொலை செய்து கொள்ள" என்று சொன்னாதும் ஓமந்தூரார் அதிர்ந்து போய் விட்டார்.

"என்னது? தற்கொலையா? இந்த வயசிலேயே?  அப்படி உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தது?" என்று விலாவாரியாக விசாரிக்க ஆரம்பித்தார்.

"நாங்கள் இருவரும் புடவை வியாபாரிகள்.  காஞ்சிபுரத்திலிருந்து புடவையை கடனுக்கு வாங்கி சென்னையில் வீதிகளில் விற்றுக் கொண்டிருந்தோம்.  வாங்கின புடவைக்கு காசு வரவில்லை.  கடன் ஆகிவிட்டது.  புடவையை கொடுத்த கடைக்காரர்களோ தினமும் எங்களை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டர்கள்.  யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன் வரவில்லை.  அதனால் தான் நாங்கள் இப்படியொரு முடிவுக்கு வந்தோம்" என்று தாங்கள் கதையைச் சொன்னார்கள் அந்தச் சிறுவர்கள் இருவரும்.

ஓமந்தூரார் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

"சிறுவர்களாகிய உங்களை நம்பி காஞ்சிபுரத்துக் கடைகாரர்கள் புடவையைக் கடனாகக் கொடுத்ததே ஆச்சரியம் தான்" என்றவர் "ஆமாம்? எவ்வளவு ரூபாய் கடன்?" என்று கேட்டார்.

"ஐம்பது ரூபாய்" என்றனர் அந்தச் சிறுவர்கள்.

"ஐம்பது ரூபாய்க்கா இப்படியோரு தற்கொலை முயற்சி" என்று யோசித்தவர், பக்கத்திலிருந்த நாடி ஜோதிடர் பாணியைப் பார்த்து

"இந்தச் சிறுவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.  கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  எனக்கு இவர்கள் மீது அளவுகடந்த பாசமும், அன்பும் ஏற்பட்டிருக்கிறது.  இவர்கள் சொல்வதில் பொய் எதுவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது" என்று யோசித்து விட்டு

"இவர்கள் பட்ட கடனை இப்பொழுதே அடைத்துவிடலாம்.  அது ஒன்றும் பெரிய காரியமாக இல்லை.  ஆனால் மறுபடியும் இவர்கள் புடவை வியாபாரம் செய்து கடன்பட்டு அதை அடைக்க முடியாமல் இந்தக் கடற்கரைக்கு வந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தால் என்ன செய்வது?  அப்போது நான் வந்து காப்பாற்ற முடியாதே" என்றார் ஓமந்தூரார்.

அப்பொழுது பாணி சொன்னார்

"ஒன்று செய்வோம்.  இவர்கள் எதிர்காலம் பற்றி அகஸ்தியர் நாடி மூலம் பார்ப்போம்.  நல்லபடியாக இவர்கள் வருவார்கள் என்றால் இப்பொழுதே இவர்கள் கஷ்டத்தை போக்கிவிடலாம்.  காஞ்சிபுரத்து கடைக்காரரை இங்கு வரவழைத்து இவர்கள் பட்ட கடனை அடைத்து, மறுபடியும் துணியைக் கொடுக்கச் சொல்லுவோம்.  இல்லை இவர்கள் எதிர்காலம் வேறு விதமாக இருக்குமேயானால் அது அவர்கள் விதி,  விட்டு விடலாம்" என்று யோசனை கூறினார்.

அப்போது கூட அந்தச் சிறுவர்களுக்கு தங்களுடன் பேசியது முதலமைச்சர் ஓமந்தூரார் என்பது துளிகூடத் தெரியாது.

நாடி ஜோதிடர் சொன்னதைக் கேட்ட ஓமந்தூரார் "அப்படியென்றால் அவர்களை நம்மோடு வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் அங்கு போய் நாடி பார்க்கலாமா" என்றார்.

"சரி" என்று நாடி ஜோதிடர் சொல்ல அந்த இரு சிறுவர்களும் ஓமந்தூராரோடு காரில், மிகுந்த மரியாதையோடு முதலமைச்சர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் மட்டுமல்ல, முதல் முறையாக அகஸ்தியரின் ஜீவநாடியை முதலமைச்சர் ஓமந்தூரார் வீட்டில் படிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது என்பது மிகச் சாதாரணமான விஷயம் இல்லை.

அதிர்ஷ்டம், அந்தச் சிறுவர்களுக்கு நல்ல வழியைக் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

இல்லை என்றால், அகஸ்தியர் ஜீவநாடியில் அந்த இளம் சிறுவர்களுக்கு "இவர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். திரைப்பட அரங்கு பல கட்டுவர்.  ஏன் இந்த அகத்தியனுக்கே ஒரு அற்புதமான குடில் ஒன்றையும் வியக்கத்தக்க அளவுக்குக் கட்டப் போகிறார்கள்" என்று அருள் வகைச் சொன்ன அகஸ்தியர், ஓமந்தூராருக்கு அன்புக் கட்டளையையும் சொன்னார்.  அகஸ்தியர் சொன்ன அந்த அன்புக் கட்டளையை ஓமந்தூராரும் ஏற்றார்.

இப்பொழுதுதான் அந்தச் சிறுவர்களுக்குத் தாங்கள் யார் வீட்டில் இருக்கறோம், என்ன நிலைக்கு உயர்வடையப் போகிறோம் என்பது லேசாகத் தெரிந்தது.

அடுத்த நான்கு மணி நேரத்தில்,

காஞ்சிபுரத்துப் புடவைக் கடைகாரர் கைகட்டி வாய் பொத்தி நிற்க ஓமந்தூரார் கொடுத்த பணத்தை பவ்யமாக வாங்கிக் கொண்டதோடு, மேற்கொண்டு அந்தச் சிறுவர்களுக்கு என்ன என்ன வசதிகள் செய்து தரவேண்டுமோ, அவை அத்தனையும் செய்து தந்தார்.

இப்படியாக உயர்வு தாங்கள் வாழ்க்கைக்கு வரும் என்று எதிர்பாராத அந்தச் சிறுவர்களுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை.

அகஸ்தியருக்காக தாங்கள் எதைச் செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறோம் - என்று உறுதி அளித்தனர்.

பின்னால் அதன்படி செய்தும் காட்டினர்.  இன்றைக்கும் சென்னையில் அகஸ்தியர் பெயர் அவர்களால் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இப்படி பற்பல அற்புதமான சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  அப்படிப்பட்ட தலையாய சித்தர் அகஸ்தியர்.  சில சமயம் மௌனமாகவும், பல தடவை கோபமாகவும், நிறைய தடவை ஆன்மீகக் குருவாகவும் இருந்து நிறைய பேர்களுக்கு வழி காட்டியிருக்கிறார்.

ஒரு சமயம்........

கோயம்பத்தூரை சேர்ந்த மிகப் பெரிய செல்வாக்குள்ள தொழிலதிபர் ஒருவர் தம் உறவினர் இருவரோடு அகஸ்தியர் நாடி பார்க்க வந்திருந்தார்.

"வந்திருப்பவர்கள் மூவரும் ஒரே லக்னத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் எதுவும் பதிலுரைக்க இயலாது.  அப்படி எதிர்கால பலன் கேட்க விரும்பின் வந்த மூவரில் ஒருவர் இந்த இடைத்தை விட்டு எட்டடி தள்ளி நிற்கட்டும்" என்று புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

விஷயத்தை அவர்களிடம் சொன்னேன்.  அவர்கள் மூவரும் நெருங்கிய உறவினர் மாத்திரமல்ல, அவர்கள் எதிர்பார்த்து வந்த விஷயம் அந்த மூவருக்கும் உரிய பொதுப் பிரச்சினை.

இதில் ஒருவரைத் தள்ளிவிட்டு இன்னொருவர் அமர முடியாது.  அகஸ்தியர் தான் சொன்ன சொல்லையே, திரும்பத் திரும்பச் சொன்னதால் மறுபடியும் குழம்பிப் போனோம்,  நான் உட்பட.

எங்கள் எல்லோருக்குமே, ஜாதகம் தெரியுமாதலால் ஒவ்வொருடைய ஜாதகத்தையும் மறுபடியும் அங்கேயே புதியதாக குறித்தோம்.  எல்லாமே அந்த மூவருக்கும் சரியாகத்தான் இருந்தது.

வேறு வழி இன்றி மீண்டும் அகஸ்தியரிடம் கேட்டேன்.

இது மூன்று ஜாதகங்களும் சரியாக குறிப்பிட்டு பார்த்த பொழுது வித்யாசம் தெரியவில்லை.  தாங்கள் தான் இதற்கு விடை தரவேண்டும் என்று கேட்ட பொழுது அகஸ்தியர் சொன்னார்.

"பிறந்த நேரம் வைத்து நீங்கள் குறித்தபடி அந்த குறிப்பு சாதகம் சரிதான்.  ஆனால் இந்த மூவரில் திருப்பூரைச் சேர்ந்தவர் பிறந்த நேரம் மட்டும் சரியில்லை.  அவர் பிறந்த போது லக்னம் வக்கிரமாக மாறிவிட்டது.  இப்பொழுது நான் சொல்லும் லக்னப்படி கணக்குப் போடு.  நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சரியாக இருக்கும் என்றவர், இந்த லக்ன வக்கிரம் சாதாரண ஜோதிடர்களுக்குத் தெரியாது.  சித்தர்கள் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

சித்தன் அருள் .................. தொடரும்!

Saturday 19 May 2012

சித்தனருளை பற்றிய ஒரு தகவல்!

சித்தன் அருளை படிக்கிற அடியவர்களுக்கு..........

இந்த தொடரை குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக, வியாழனன்று தொகுத்தளிக்கிறேன்,  ஒரு தொகுப்பு அளிக்கப்பட்டதும் மறு தொகுப்பு எப்பொழுது என்று தேடாமல், வியாழனன்று வந்து பார்த்தால் இருக்கும்.  இந்த தொகுப்பை அளிக்க பெரியவர்கள் நிறையவே ஆசி கூறியுள்ளார்கள்.  அவர்கள் ஆசியுடன் முடிந்தவரையில் பிரம்ம முஹுர்த்தத்தில் அளிக்க விரும்புகிறேன்.  இருப்பினும், சில நாட்களில் எனக்கே தெரியாமல், வியாழனன்று தாமதமாகி விடுகிறது.  அதுவும் அவர்கள் விளையாட்டு என்று எடுத்துக்கொண்டு, படித்து மகிழுங்கள்.  வாழும் முறையில் எப்படி எல்லாம் அறம் வளர்க்கலாம், தர்மம் செய்யலாம், நேர்மையாக இருக்கலாம், ஏன் எப்படி இறை தரிசனமும் அருளும் பெறலாம் என்றெல்லாம் அகத்தியர் பல நேரங்களில் சொல்லியுள்ளதை, தருகிறேன்.  புரிந்து வாழ்க்கையை செம்மையாக்கி கொள்ளுங்கள்.  அனைவரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல், வேறொன்றும் அறியேன் பராபரமே என்று கூறி, நிறைவாக, நலமாக எல்லோரும் வாழவேண்டி...........

நன்றி!

Thursday 17 May 2012

சித்தன் அருள் - 72


கையில் ஒரு மஞ்சள் பை.  சாந்தம் நிரம்பிய கருணை விழிகள்.  மிகவும் ஆஜானபாகு.  பன்னிரண்டு திருமண்.  வெண்மையான பூணூல்.  பஞ்சகச்சம் கட்டி இடுப்பில் மேல்துண்டு கட்டியிருந்தார்.  உடலில் தேகமே தெரியாதவாறு புசு புசுவென்று ஆரோக்யமான ரோமங்கள்.  கன்னத்தில் தாடியும் மீசையும் கரு கருவென்று இருந்தன.


அவரைப் பார்த்தது, ஏதோ ஒரு வைதீக பிராம்மணர் என்று அனைவருக்கும் தெரிந்தது.  யாருக்கும் பரிச்சயம் இல்லாததால் சட்டென்று உள்ளே கூப்பிடவில்லை.  ஆனால் அந்த முன்னிரவு நேரத்திலும் அவரது முகத்தில் விளகொளிபட்ட பொழுது மிகப் பெரிய மகான் என்பதை உணர்த்தும் வகையில் "தேஜஸ்" எங்கள் அனைவரது கண்களிலும் வீசியது.

"உள்ளே வாருங்கள்" என்று ஒட்டு மொத்தமாக நாங்கள் அனைவரும் கூப்பிட்டோம்.  அவர் யார், எங்கிருந்து வருகிறார் என்று ஒருவர் கூட விசாரிக்கவே இல்லை.

கையைக் கூப்பிக்கொண்டு உள்ளே வந்த அவர், கை - காலைத் தண்ணீரால் சுத்தம் செய்து கொண்டு, நேராக பூசையில் இருந்த ஸ்ரீராமர் படத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.

இரண்டு நிமிடம் மானசீக த்யானம்.

பின்னர் தனக்குத் தெரிந்த ராம மந்திரத்தைக் கண்ணை மூடிக் கொண்டு இனிய குரலில் பாட ஆரம்பித்தார்.  ஏற்கனவே பூசை எல்லாம் முடிந்திருந்ததால் கூட நாங்களும் அவர் பின்னால் பாடினோம்.  இந்த நாம சங்கீர்த்தனம் அந்த பூஜை ஹாலிலே இனம்புரியாத ஆனந்தத்தை உண்டாக்கியது என்பது மட்டும் உண்மை.  இந்த பஜனை கீர்த்தனைகள், சற்று முன்னர் பிரத்யட்சமான "நைவேத்ய ஆச்சர்யத்தை" கூட மறக்க வைத்துவிட்டது என்று சொன்னாலும் மிகையில்லை.

சுமார் பதினெட்டு நிமிடங்கள் அமர்க்களமாக பஜனை நடந்து முடிந்தது.  வந்தவர் தன்னை யாரென்று சொல்லவே இல்லை.  பஜனை முடிந்த கையோடு மீண்டும் ராமரை சாஷ்டாங்கமாக வணங்கி விடை பெற்றுக் கொள்ள எத்தனித்தார்.

வால்டேர் சுவாமிக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. சட்டென்று எழுந்து அவர் கழுத்தில் பூசையில் வைத்திருந்த மாலையைப் போட்டார். பழங்கள், வெற்றிலை பாக்கோடு கொடுத்தார்.

பின்னர் "நைவேத்யப் பிரசாதம் சாப்பிட்டு விட்டுப் போகலாமே" என்றார்.  அவர் அதற்கு சிரித்துக் கொண்டு "பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டேன்" என்று சொல்லிவிட்டுச் "சரி சரி இந்த பூசையில் நைவேத்யம் ஆகாதது ஏதாவது இருந்தால் கொடுங்கள்.  கையோடு எடுத்துக் கொண்டு போகிறேன்" என்றார்.  அவரது பேச்சு எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

எனினும் சமையல் அறையிலிருந்து சக்கரை பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், வடை ஆகியவற்றை ஒரு பெரிய பொட்டலமாகக் கட்டி அவரிடம் கொடுத்தார். அதைத் தன் இரு கைகளாலும் வாங்கிக் கொண்டார்.  பையில் கூடப் போடவில்லை.  எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்தவர் நிமிஷப் பொழுதில் விறு விறுவென்று காற்று வேகத்தில் வாசல் வழியே நடந்தார்.  திரும்பிக் கூட பார்க்கவில்லை.

"யார் அவர்?" என்று பின்னர் வால்டேர் சுவாமி எங்களிடம் கேட்டார்.

"எங்களுக்குத் தெரியாது.  ஆனால் ஒரு அதிதியாக வந்தார்.  இது போதுமே" என்றார் அந்த வீடிற்குரியவர்.

அவரைப் பார்த்தால் பிரசாதத்திற்காக வந்தவர் போலில்லை என்று மட்டும் எனக்குத் தெரிந்தது.  ஆனால் ஏதாவது சொல்லிக் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடாது என்று வாயை அடக்கிக் கொண்டேன்.

வந்தவர் யாராக இருக்கும் என்று எல்லோரும் அவரவருக்குள் பேசினார்கள். கையோடு நாடி கொண்டு போகாததினால் என்னாலும் அவரை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் அனுமன் வந்து நைவேத்தியத்தை உண்டதாக சொல்லப்படும் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள பெருங்கூட்டமே அங்கு அலை மோதியது.  அடுக்களையில் நிறையச் சுடச்சுட சமைத்து வைத்திருந்த பிரசாதமோ - ஆறிக் கொண்டிருந்தது.  சில நிமிஷங்களுக்குப் பின் எல்லோரும் நைவேத்தியம் சாப்பிட வரிசையாக உட்கார்ந்த போது கொஞ்ச நேரத்திற்கு முன்பு வந்து விட்டுச் சென்ற பெரிய மனிதர், தன் கையோடு கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை விட்டு விட்டுச் சென்றிப்பதை கண்டோம்.  திரும்பி அவர் வந்தால் அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.  அதற்காக அந்தப் பையை எடுத்துப் பத்திரப்படுத்திய பொழுது அந்தப் பைக்குள் சில நிமிஷங்களுக்கு முன்பு நாங்கள் கட்டிக் கொடுத்து நைவேத்தியப் பொட்டலங்கள் அப்படியே இருந்தது.

ஆனால் எல்லாமே காலியாக இருந்தது.

எந்தப் பேப்பரில் இல்லை வைத்துக் கட்டிக் கொடுத்தோமோ அந்தப் பேப்பர் பிரிக்கப்பட்டு இலையிலிருந்து சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, வடை, சுண்டல் எல்லாம் சாப்பிட்டதற்கு அடையாளமாக அப்படியே காணப் பட்டது.

இன்னொரு பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தால் அதில் அனுமனுக்குச் சாற்றப்படும் "செந்தூரம்" காணப்பட்டது.  ஆச்சரியத்தால் அனைவரது கண்களிலும் வியப்பு கூடியது.  இதை எல்லோரும் அன்றைக்கு கண் கூடாகக் கண்டனர்.  அப்படியென்றால் "அனுமன்" தான் வந்து விட்டுப் போயிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை, அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அன்றைக்கு பரிகாசம் செய்தவர்கள், நான் பொய் சொல்லி கதைவிட்டதாக எண்ணி என் மீது வெறுப்புக் கொண்டவர்கள், பகுத்தறிவு தனக்குத்தான் இருக்கிறது, எனக்கு இல்லை என்று நண்பர்களாகப் பழகிக் கொண்டே மறைமுகமாகக் கிண்டல் செய்தவர்கள், அத்தனை பேர்களும் வாய் மூடி மௌனமாக நின்றார்கள்.

இதை கண்ட பின்புதான் என் மீது என் தாய்க்கே நம்பிக்கை பிறந்தது.  இருப்பினும் என் தந்தை இந்தச் சம்பவத்திற்கு பின்புகூட நம்பவில்லை.

குடும்பப் பொறுப்பை விட்டுவிட்டு இப்படிக் கோமாளியாக நாடி படிக்க ராத்திரியும் பகலும் அலைகிறானே.  எப்படிக் குடும்பம் உருப்படப் போகிறது என்று தவியாய் தவித்தார்.  ராத்திரி நேரமெல்லாம் அப்போது யார் யாரோ வருவார்கள். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நானும் இரவு நேரமானாலும் குளித்துவிட்டு வந்தவர்களுகேல்லாம் நாடி படித்தேன்.  இது என் தந்தைக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.

இனிமேல் இந்த நாடி இந்த வீட்டில் இருக்ககூடாது.  அப்படி இருந்தால் அதை என்ன செய்வேன் என்று தெரியாது என்று கடுமையாக ஒரு நாள் சொல்லவே, நான் வேறு வழி இன்றி என் நண்பர் வீட்டில் அதைக் கொடுத்துப் பாதுகாப்பாக வைத்தேன்.  பின்னர் அங்கு வரச் சொல்லிப் படிக்க ஆரம்பித்தேன்.  "தொந்தரவு விட்டது", என்று எனது தந்தைக்குப் பெரு மகிழ்ச்சி.  ஆனால் சரியானபடி பூசை செய்யாததினால் அகஸ்தியர் கோபம் கொண்டு சில மாதங்கள் நாடியில் தோன்றாமல் போனதும் உண்டு.

அச்சயமத்தில் என்னைத் தேடி நாடி பார்க்க வருகிறவர்களிடம் உண்மையச் சொன்னபோது "அப்படி எனில் அனுமன் தரிசனம் கிடைத்து எல்லாம் பொய் தானா?" என்று முகத்தில் அறையும்படி கேட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்.  அப்படியும் நடந்ததுண்டு.

ஒருநாள்........

அகஸ்தியரிடம் "அன்றைக்கு பூசை நேரத்தில் வந்தது ஆஞ்சநேயர் பிரபு தானே" என்று கேட்டபொழுது "ஆமாம்" என்று மறுமொழி சொன்னார்.  இந்த சந்தோஷத்தை எல்லோரிடமும் சொல்லத் துடித்தேன்.  ஆனால் இதற்குப் பிறகு அகஸ்தியர் போட்ட கட்டளை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"கலியுகத்தில் பிரார்த்தனை மூலம் தெய்வ தரிசனம் கிடைக்கும்.  நிறையப் புனித ஆத்மாக்களுக்கு அங்கங்கே இன்றைக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.  என் மூலம் தான் தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதில்லை.  என்னுடைய மைந்தன் என்பதால் உனக்கு தெய்வ தரிசனத்தைக் கோடிட்டுக் காட்டினேன்.

உனக்கு மனதை அடக்கும் பலம் இருக்கிறதா, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள், எப்படி இரட்டை வேஷம் போடுகிறார்கள் என்பதைச் சோதிக்கவே யாம் விழைந்தோம்.  எத்தனையோ தேவ ரகசியங்கள் உனக்குச் சொல்லி இந்த பூ உலகில் ஆன்மீகக் குருவாக மாற்ற வேண்டும் என்று நினைத்ததுண்டு.

ஆனால் உனக்கு வாயடக்கம் இல்லை.  ரகசியங்களைக் காக்கும் திறமையும் இல்லை.  நடந்ததை அப்படியே சட்டென்று எல்லோரிடமும் சொல்லிவிடுகிறாய்.  இந்த ஜனங்கள் நீ சொல்வதை நம்புகிறார்கள் என்று எண்ணினால் அது மிகப் பெரிய ஏமாற்றம்.

கலியுகத்தில் அவர்களுக்கு ஆன்மீகம் வேப்பங்காய்.  இத்தகைய தரிசனம் கிரேதாயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகத்தில் தான் நடக்கும்.  இப்பொழுது நடக்காது என்று நம்புகிறார்கள் பேதை மனிதர்கள்.  அவர்களுக்கு எப்படித் தெரியும் இந்த ஆன்மீக ஞானம்.  யார் யார் இதனை நம்புகிறார்களோ யாருக்கு பூர்வ ஜென்மவாசனை இருக்கிறதோ அவர்களுக்கு மாத்திரம் தான் இனி என் தரிசனம் கிடைக்கும்.  என்னையும், இந்த நாடியைப் படிக்கும் உன்னையும் நம்பாதவர்கள் நாடி படிக்க வந்தால் அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று உபதேசித்தவர், கடைசியில்

"நீ கேட்டாய் என்பதால் உன்னைச் சேர்ந்தவர்களுக்கு அனுமன் அந்த நைவேத்தியத் திருவிளையாடல் மூலம் தரிசனம் தந்தார்.  இதற்கு நான் என்ன பாடு பட்டிருப்பேன் என்று உனக்குத் தெரியாது.  அதனால் இன்றிலிருந்து இன்னும் பன்னிரண்டு அமாவாசை நான் உனக்குத் தெரியமாட்டேன்.

என்னை மறுபடியும் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் இன்று முதல் தெய்வ ரகசியங்களை உன்னோடு வைத்துக் கொள்.  தப்பித்தவறி வெளியே சொன்னால் இனி நான் உன்னைவிட்டுப் பிரிந்துவிடுவேன்.  இன்னொன்று.  இந்தப் பன்னிரண்டு அமாவாசைக்குள் அறுபடை வீட்டினை மூன்று தடவை தரிசனம் செய்து ஒரு கோடி மூலமந்திரம் ஜெபித்தால் தான் மறுபடியும் நாடி படிக்க முடியும்.  இல்லையெனில் தென் மேற்குத் திசையிலிருந்து முருகன் பெயர் கொண்ட சிம்மராசிக்காரன் மகம் நட்சத்திரத்தை சேர்ந்த ஒருவன் உன்னைத் தேடி ஒரு சனிக்கிழமை மதியம் வருவான்.  அவனிடம் இந்த ஜீவநாடியை ஒப்படைத்துவிடு" என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

அகத்தியரின் கோபத்திற்கு ஆளான இந்தச் செய்தியை எப்படி வெளியே சொல்வது? சொன்னால் கெட்ட பெயர்.  என் மீது இன்னும் அவநம்பிக்கை அதிகமாகும்.  சொல்லாவிட்டால், என்னைத் தேடி வருபவர்களுக்கு எப்படி பதில் கூறுவது?  நாடி படிக்காமல் சொன்னால் உணமையாக இருந்தாலும் கூட நம்பமாட்டார்கள்.  என்னால் நாடி படிக்காமல் இருப்பதில் வருத்தமில்லை.  ஆனால் அகஸ்தியரின் பெரும் கோபத்திற்கு ஆளாகிவிட்டோமே என்று தான் தூக்கமில்லாமல் தவித்தேன்.

அன்றைக்கு வைகாசி விசாகம்.

எதற்கும் நாடியைப் பிரித்துப் பார்ப்போமே என்ற நப்பாசை.  அகஸ்தியர் கோபம் தணிந்து ஏதாவது விட்டுக் கொடுக்க மாட்டாரா என்ற ஆசை.  பயந்து பயந்து பிரித்துப் பார்த்தேன்.

அன்றைக்கு எனக்கு நல்லகாலம் தான், சட்டென்று நாடி தெரிந்தது.

"தொடர்ந்து ஜபத்தைச் செய்க.  ஒரு முறை அறுபடை வீட்டினை ஒரே தடவையில் தரிசனம் செய்து விட்டு வா.  அதோடு இனி வருகிறவர்களுக்கு நாடியை நேரடியாகப் படிப்பதை விட பிரம்ம முகூர்த்தத்தில் பார்த்து பின்பு அவர்களுக்கு பலன் சொல்.  நம்புகிறவர்கள் நம்பட்டும்.  நம்பாதவர்கள் போகட்டும்.  நாடி படிக்க முடியாத காலத்தில் நிந்தன் வாக்கில் அகஸ்தியன் நானிருக்கிறேன்.  அவரவர் தலை விதியை சாதக் குறிப்பேடு மூலம் பலன் சொல்.  அருளாசி" என்று முடித்திருந்தார்.

"அப்பாடா" என்று எனக்கு நிம்மதி ஏற்ப்பட்டது.

 ஆனால் அன்று முதல் இன்று வரை நிறையத் தகவல்களை அகஸ்தியர் எனுக்கு அருளிய மூலமந்திரங்களை மனிதர்களது எதிர்கால முக்கிய நிகழ்வுகளைச் சொல்லக் கூடாத அல்லது அவர்களை கடந்த காலத் தவறுகளை, தவறு செய்து கொண்டு நல்லவர் போல் நடிப்பவர்களை வெளியே சொன்னதில்லை.

இந்த நிகழ்வுக்குப்பின் தான் ஓரளவு என் பேச்சை மற்றவர்கள் நம்பினார்கள்.  யாரேனும் வந்தால் ஜாதகம் பார்ப்பதோடு சரி.  வேறு எதுவும் மூச்சுக் காட்டவில்லை.  இருந்தாலும் ஒரு கோடி ஜபம் முடிக்க நான் கடுமையாகப் ப்ரயத்தனப்பட்டேன்.

"நாடி படிப்பதில்லை" என்பதால் நிறையப் பேர்கள் என்னை விட்டு விலகினார்கள்.  ஜாதகத்தை வைத்துப் பலன் சொன்னதை மட்டும் சிலர் நம்பினார்கள்.  இப்படியே சிலகாலம் ஓடியது.

இந்த நாடி அவ்வளவு உன்னதமானதா? என்று கேட்கத் தோன்றும்.  இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

பழம் பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்,  ஏழிசை பாகவதர் மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவதரும் இந்த நாடியை நம்பினார்கள்.  எனக்கு முன் இந்த நாடியைப் படித்தவரிடமிருந்து கிடைத்த தகவல்.

"நாடியை வைத்து ஏமாற்றுகிறார்கள்.  அப்படி ஒன்றும் இல்லவே இல்லை.  நாடி சொல்படி எதிர்காலத்தில் எதுவும் நடப்பதே இல்லை.  நடந்து முடிந்த சம்பவங்களை மாத்திரம் சரியாகச் சொல்கிறது.  இதை கோர்ட்டில் உறுதி செய்ய வேண்டும்" என்று விளையாட்டாக ஒரு வக்கீல் சொல்ல நீதிபதி இதை ஏற்றுக் கொண்டு பரிசோதிப்பதற்காக ஒரு நாள் அந்த நாடியைப் படித்துக் கொண்டிருப்பவரைக் கோர்ட்டிற்கு வரச் சொன்னார்.

"குற்றம் எதுவும் செய்யவில்லை. பின் ஏன் கோர்ட்டிற்கு வரவேண்டும்?  இரண்டாவது, நாடி படிக்க வேண்டுமென்றால், அவர் யாராக இருந்தாலும், அவர் தான் நேரடியாக வர வேண்டும்.  நான் அங்கு வர இயலாதே!" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார், நாடி ஜோதிடர்.

"அப்படியென்றால் ஒன்று செய்வோம்.  எல்லா வக்கீல்களும் அந்த நாடி ஜோதிடர் வீட்டிற்க்குச் சென்று சோதிக்கலாம்" என்று நீதிபதி சொல்ல, பொதுநல வேட்கை காரணமாகக் கோர்ட்டில் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் ஒரு ஆர்வத்தின் காரணமாக நாடி ஜோதிடரின் வீட்டிற்க்குச் சென்றனர்.  எல்லோரும் அமர்ந்த பின்னர், "நான் அகஸ்தியரைச் சோதிக்க இங்கு வரவில்லை.  ஆனால் நாடி ஜோதிடம் உண்மையாக இருக்குமா? என்பதை அறிய வக்கீல் நண்பர்கள் சகிதம் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.  தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று சொன்னார் நீதிபதி.

"கேளுங்கள்.  அகஸ்தியர் என்ன சொல்கிறாரோ அப்படியே நான் சொல்கிறேன்.  இதில் கற்பனை இல்லை.  பொய் இல்லை" என்றார் நாடி ஜோதிடர்.

"இதோ இதைப் பாருங்கள்" என்று மேசையின் மீது இருக்கும் கண்ணாடி உருண்டையைக் காட்டிவிட்டு "இந்த கண்ணாடி உருண்டையை இப்பொழுது இதே இடத்தில் கீழே ஓங்கி எறியப் போகிறேன்.  அந்த கண்ணாடி எத்தனை சில்லாக, சிதறல்களாக உடையும் என்பதைச் சரியான எண்ணிக்கையில் சொல்லவேண்டும்.  அந்த சிதறல்களின் எண்ணிக்கை ஒன்று கூடினாலும் அல்லது ஒன்று குறைந்தாலும் இந்த நாடி ஜோதிடம் பொய் என்பதை அறிவிக்க வேண்டியிருக்கும்.  சரியா" என்று நிதானமாக கேட்டார்.

அகஸ்தியரின் ஜீவ நாடி படிக்கிற முருகனுக்கும் பயம்தான்.  ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று சொல்லி ஏடாகூடமாக ஆகிவிட்டால், நாடி ஜோதிடமே பொய் என்ற அபவாதத்திற்கு உள்ளாகிவிடுமே என்று பயந்து அகஸ்தியரிடம் வேண்டி

"தாங்கள் கேட்ட கேள்விக்குச் சரியாக பதில் கிடைக்கும்" என்று சொன்னார்.

"அப்படியானால் அதை முன் கூடியே எனக்கு ஒரு பேப்பரில் எழுதி தரவேண்டும், முடியுமா? என்றார் நீதிபதி.

"சரி" என்று சொன்னார், நாடியைப் புரட்டினார், படித்தார்.

தான் படித்ததை அப்படியே ஒரு பேப்பரில் எழுதி நீதிபதியிடம கொடுத்தார்.  அதை வாங்கி வைத்துக் கொண்டிருந்த நீதிபதி பிரித்துப் படிக்கவில்லை.  தன் சட்டை பைக்குள் அப்படியே சொருகிக் கொண்டார்.  சில நிமிடம் கழிந்தது.

தன் கையிலிருந்த அந்த கண்ணாடி உருண்டையை கையில் தூக்கி ஓங்கி விட்டு, அப்படியே கீழே வைத்துவிட்டார்.  கீழே எறியவே இல்லை.  பின்பு அந்த நாடி ஜோதிடர் முன்பாக எழுதிக் கொடுத்த "பலனை" பிரித்து எல்லோர் முன்னிலையில் படித்தார்.

"கன்றுக்கு நீதி வழங்கிய மன்னன் பரம்பரையைச் சேர்ந்தவன் நீ.  இந்தக் கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்து உயர்த்துவாய், ஆனால் ஒரு போதும் மண்ணில் வீசி ஏறிய மாட்டாய்" என்றிருந்தது.  அப்படிப்பட்ட ஜீவ நாடிதான் என்னிடம் வந்தது.

சித்தன் அருள் ................ தொடரும்!