​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 January 2013

சித்தன் அருள் - 109


அகோபிலம் சென்று நரசிம்ம சுவாமியைத் தரிசனம் செய்தவர்களுக்கு அங்குள்ள பதிமூன்று சன்னதிகளைப் பற்றித் தெரிந்திருக்கும்.  கீழ் அகோபிலத்தில் ஐந்து நரசிம்மர் சன்னதிகளும், மேல் அகோபிலத்தில் எட்டு நரசிம்மர் சன்னதிகளும் உண்டு.

இதில் பன்னிரண்டு சன்னதிகள் நரசிம்மருக்கு உரியது.  கடைசியில் உள்ள சன்னதி ஸ்ரீ பிரகலாதர் குகை சன்னதி.  இந்தப் பதிமூன்று சந்நதிகளையும் முழுமையாகத் தரிசனம் செய்பவர்கள் குறைவாகத் தான் இருப்பார்கள்.  இந்த அருமையான மலைக் கோயில்களில் தரிசனம் செய்ய விரும்புபவர்கள் தனியாகச் செல்வதைக் கூடுமானவரை தவிர்ப்பது நன்று.  தகுந்த வழிகாட்டியோடுதான் செல்ல வேண்டும்.  இல்லையெனில் நான் மாட்டிக் கொண்டு தவித்தது போல் தான் தவித்து அவதிப்பட வேண்டியிருக்கும்.

அகஸ்தியர் துணையிருக்கிறார் என்ற நம்பிக்கையில் அசட்டுத்தனமாக நான் தனியாக சென்றது மிகப் பெரிய தவறு.  நீரிலும் நெருப்பிலும் விளையாடக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு.  இதை மறந்து நான் தனியாக என் இஷ்டப்படி, நடந்து சென்று பயந்து நடுங்கிப் போனதற்கு என் தலையிலே பலமுறை நானே குட்டிக் கொண்டேன்.  இது உண்மை!  ஏனெனில் அகோபிலத்தில் எல்லா சந்நதிகளையும் கூட தனியாக பகல் பொழுதில் தரிசனம் செய்து கொள்ளலாம்.  ஆனால் ஜ்வால நரசிம்ம சன்னதிக்கும், ஸ்ரீ பாவன நரசிம்மர் சன்னதிக்கும் உகிர ஸ்தம்பம் செல்வதற்கு மட்டும் நிச்சயம் வழிகாட்டவேண்டும்.

"நரசிம்ம நரசிம்ம" என்ற சப்தம் வந்ததைக் கண்டு எங்கிருந்து வருகிறது, யார் அங்கே இருந்து இப்படி ஜெபிப்பது என்ற பயம், அதிர்ச்சி என் மனதில் ஏற்பட்டதால் அந்தச் சப்தம் வந்த பாறையை நோக்கித் தனியாக நடந்தேன்.  என்னைத் தவிர வேறு நடமாட்டம் எதுவும் இல்லை.

என்னதான் நடக்கிறது, அதையும் பார்த்து விடுவோமே என்ற தைரியம் என்னைப் பிடித்து இழுத்துச் செல்ல மெதுவாக அதை நோக்கி நடந்தால், அந்தச் சப்தம் என்னை விட்டுத் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  முதலில் அருகில் இருந்து வந்த சப்தம் நான் ஒவ்வொரு அடியாக வைக்க வைக்க அந்த "நரசிம்ம நரசிம்ம" என்ற சப்தம் அதுவும் ஒவ்வொரு அடியாகப் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்ததது.

நானும் நூற்றைம்பது அடியைத் தாண்டி அதன் பின்னே சென்றேன்.  திடீரென்று ஒரு பயம்.  தொடர்ந்து செல்வதை அப்படியே விட்டு விட்டுத் திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தேன்.  ஏனெனில் என் ஒருவனைத் தவிர வேறு யாரும் அந்த மலைப் பகுதியில் இல்லை.

கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே மலைப்பாறைகள். சப்தம் போட்டு அழைத்தால் சத்தியமாக ஒரு "ஈ காக்காய்" கூட உதவிக்கு ஓடிவராது என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.

மனித நடமாட்டம் இருந்த அந்தப் பாதையை நோக்கிக் கண் பார்வையைச் செலுத்தினேன்.  பாதையே என் கண்ணுக்குத் தென்படவே இல்லை.  இதெல்லாம் எண்ணும் பொழுது "அவசரப்பட்டு விட்டேனோ என்றும் திக்குத் தெரியாத காட்டில் நடுவில் மாட்டிக் கொண்டு விட்டேன் போலும்" என்றும் மனம் பதை பதைத்தது.

அப்போதுள்ள சூழ்நிலையில் கையிலிருந்த அகஸ்தியர் நாடியைப் படிக்கத் தோன்றவில்லை.  "தப்பித்தோம் பிழைத்தோம்" என்று ஓடத்தான் தோன்றியது.  எதற்கெடுத்தாலும் நாடியைப் பார்ப்பது நல்லதல்ல என எண்ணினேன்.

வந்த பாதையை நோக்கி, பயந்து மூச்சிரைக்க வியர்த்துக் கொட்ட, வேகமாக வரும்பொழுது அந்த "நரசிம்ம" சப்தமும் என் பின்னால் தொடர்ந்து காதில் கேட்டுக் கொண்டிருந்தது.  "இதென்ன வம்பாகப் போயிற்று" என்று கலக்கத்தோடு மூச்சிரைக்க ஓடி வந்த நான், என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு நிமிஷம் நின்ற பொது அந்த "நரசிம்ம நரசிம்ம" சப்தமும் ஓரிடத்தில் அப்படியே நின்று சொல்லிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று என் உள்மனம் சொன்னாலும், "இதெல்லாம் நமக்கு தேவையா? எத்தனை தடவை அடி பட்டாலும் இன்னமும் புத்தி நமக்கு வரவில்லையே" என்று  நொந்து போனேன்.  துணைக்கென்று யாராவது ஒருவர் வந்திருந்தால் இப்படிப்பட்டத் தொல்லை வந்திருக்காதே என என்னவெல்லாமோ, தோன்றியது.

"பிரசவ வைராக்கியமும், ஆலய தரிசனமும் அப்போதைக்கப்போது என்பது போல நமக்கும் இந்த விஷயத்தில் இப்படித்தான் போலிருக்கு" என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு மிக வேகமாக "தம்" பிடித்துக் கொண்டு வந்த வழியை நோக்கி ஓட ஆரம்பித்த பொழுது சட்டென்று ஓர் ஆட்டிடையர் போல் ஒருவன், அருகிலிருந்த சிறு மலைக் குன்றிலிருந்து வெளிப்பட்டான்.

திடீரென்று ஒரு ஆட்டிடையன் சட்டென்று என் முன் வந்து நின்றபோது, அவன் யார் எதற்காக என் முன் வந்து நிற்கிறான் என்ற ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது.  அவன் தெலுங்கில் கேட்டான்.  "ஏன் இங்கு வந்தாய்.  இந்த இடத்திற்குத் தனிமையில் வரக்கூடாது என்று தெரியுமா?  நீ வந்த இடம் ஏறத்தாழ ஐந்து மைல் தள்ளி வந்திருக்கிறாய்"

"ஐந்து மைல் தள்ளியா வந்திருக்கிறேன்?  இருக்காதே" என்று தமிழில் சொன்னேன்.

"இல்லை மேல் நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து இந்த இடம் ஐந்து மைல் இருக்கிறது.  வழி தவறி வந்துவிட்டாய்.  இந்த இடம் பாவனா நரசிம்மர் சன்னதிக்குப் போகிற வழி.  மோசமான மலைப்பாதை.  செந்நாய்கள் ஜாஸ்தி, அதோடு கரடி கூட்டமும் உண்டு.  நேத்திக்குக் கூட இரண்டு கரடிக் குட்டிகளைப் பார்த்தேன்.  குட்டிகள் இருந்தால் தாய் கரடியும் அந்தக் கூட்டமும் இங்குதான் இருக்கும் என்றவன், கையில் எந்தவித ஆயுதமும் எடுத்துக் கொள்ளாமல் எப்படித்தான் இங்கு வந்தாயோ" என்று அவன் தன் தலையில் அடித்துக் கொண்டதோடு என்னையும் பரிதாபமாகப் பார்த்தான்.

அவன் பேசிய பேச்சு தெலுங்காக இருந்தாலும் ஓரளவு அரைகுறையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பார்ப்பதற்கு நல்லவன் போல் தோன்றியதால் இவனிடம் நரசிம்மர் சப்தத்தைப் பற்றி விளக்கம் கேட்கலாம் என்று ஆசைப்பட்டு அரைகுறையாக அது பற்றிய விளக்கம் கேட்டேன்.

தமிழில் நான் சொன்னதை எப்படியோ அவன் புரிந்து கொண்டான் போலும்.  "நல்லவேளை நீ தப்பித்தாய்.  அப்படிப்பட்ட சப்தம் இங்கு தினமும் அடிக்கடி கேட்கும்.  அதுவும் அமாவாசை பௌர்ணமியிலும் சில திதிகளிலும் சர்வ சாதாரணமாகக் கேட்கும்.  அதை நம்பியா இங்கு வந்தாய்?  யார் செய்த புண்ணியமோ தப்பித்தாய்.  வா, உன்னை வேறு வழியில் கொண்டு போய் சரியான பாதையில் சேர்க்கிறேன்" என்று சொன்னதை, மிகவும் கஷ்டப்பட்டு புரிந்து கொண்டேன்.

"எல்லாம் சரி! இவன் ஏன் என்னை இப்படி பயமுறுத்துகிறான்.  உண்மையில் இவன் ஆட்டிடையன் தானா?  அல்லது வேறு யாரோவா?  ஆட்டிடையன் என்றால் ஆடுகள் இங்குமங்கும் மேய்ந்திருக்க வேண்டும்! அல்லது குறைந்த பட்சம் மாடுகள் ஒன்று இரண்டாவது அங்கு காணப் படவேண்டும்.  ஆனால் எதுவும் என் கண்ணில் தட்டுப்படவில்லை.  ஆனால் பார்ப்பதர்க்குக் கையில் கம்புடன், இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு மேல் சட்டை எதுவும் இல்லாமல், குளித்து மூன்று நாள்களாக இருப்பது போன்ற தோற்றம் கொண்டிருந்தான்.

தமிழ் அவனுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.  ஆனால் ஓரளவு எல்லோருக்கும் புரியும் வண்ணம் சாதாரண தெலுங்கில் பேசினான்.  இப்படி அவனை நான் எடை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அந்த நரசிம்ம நரசிம்ம சப்தத்திற்கு மட்டும் என்ன காரணம் என்று அவனால் சொல்ல முடியவில்லை, அல்லது அவன் சொல்லி இருப்பான், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையோ என்னவோ?

"இவனை நம்பி கூடவே செல்லலாமா? கூடாதா என்று அடுத்த நிமிஷம் புத்தி தடுமாறியது.  சரி! போய்த்தான் பார்ப்போமே என்று அகஸ்தியர் ஜீவநாடி தூண்டியது.  இருப்பது ஓர் உயிர்.  அது போகப் போவதும் ஒரு தடவை, போனால் போகட்டுமே.  அப்படி இங்குதான் என் முடிவு இருக்குமென்றால் அதைத் தடுக்க யாரால் முடியும்? லக்ஷ்மி நரசிம்மர்க்கே அர்ப்பணம்" என்று முடிவெடுத்தேன்.

"சரி! வா. போகலாம்!" என்று அவனை அழைத்ததேன்.  என் சைகையைப் புரிந்து கொண்ட அவன் பின்னால் நடந்தேன்.  இடையில் என் மனதில் ஒரு கேவிக்குறி.  சரியான பாதையை விட்டு ஐந்து மைல் தூரமா நாம் திசை மாறி வந்திருப்போம்.  இருக்காது.  இவன் படிப்பறிவு இல்லாதவன்.  வாய்க்கு வந்தபடி உளறியிருக்கிறான் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சின்னஞ்சிறு ஆறுகள், அங்கும் இங்குமாகச் சிறு சிறு நீர்வீழ்ச்சிகள்.  சுகமான சுத்தமான காற்று, திடீர் திடீரென்று காற்றோடு கலந்த நறுமணப் பூக்களின் நறுமணம்.

இவற்றை எல்லாம் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே அந்த ஆட்டிடயனுடன் மௌனமாக நடந்து சென்றேன். கொஞ்ச தூரம் சென்றபின் சிறு பெரும் பாறைகளை தாண்டியதும் அவன் சட்டென்று என் கையைப் பிடித்து உதட்டில் விரல் வைத்து "உஷ்" என்று ஜாடை காட்டினான்.

பேசாமலே வந்து கொண்டிருந்த நான் அவன் செய்கைகளைக் கண்டு திகைத்தாலும் அவன் அடையாளம் காட்டிய திசையை நோக்கிப் பார்த்தேன்.  நல்ல உயரமான ஏழெட்டு செந்நாய்கள் அங்கு இருந்தன.

செந்நாய்கள் மிக ஆக்ரோஷம் கொண்டவை.  புலியை கூட விரட்டி விடும் ஆற்றல் கொண்டவை.  ஒரு காட்டு மரத்தின் நிழலில் சில படுத்துக் கொண்டிருந்தன.  சில இங்குமங்கும் மோப்பம் பிடித்து ஓடிக் கொண்டிருந்தன.  எனக்கு அடி வயிற்றில் பயம் பற்றிக் கொண்டது.  இந்த நாய்களில் ஏதாவது ஒன்று வந்து எங்களைக் கௌவிக் கொண்டால் என்று கற்பனையாக நினைக்கும் பொழுதே சப்தநாடியும் ஒடுங்கின.

எதற்காக இவனை நம்பி இவன் கூட வந்தோம்.  அப்போதே வந்த வழியைப் பார்த்துத் திரும்பியிருக்கலாமே.  எதற்காகவோ இவன் என்னை இழுத்துக் கொண்டு போகிறான்.  அவ்வளவுதான் நம்ம கதி என்று கதிகலங்கி எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன்.

"கொஞ்சம் பொறு அந்தச் சென்நாய்க் கூட்டம் போனதும் பத்தே நிமிஷத்தில் மெயின் பாதையை அடைந்து விடுவோம்.  அங்கிருந்து கொஞ்ச தூரம் பொடி நடையாக நடந்தால், ஸ்ரீ வராஹா நரசிம்மர் சன்னதியை அடைந்துவிடலாம்.  பிறகு பயமே இல்லை" என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு, ஒரு பாறையின் இடுக்கில் என்னை உட்கார வைத்தான்.

அந்தச் செந்நாய்கள் எப்போது அங்கிருந்து போகும்?  நாம் எப்போது மெயின் ரோட்டிற்குப் போய்ச் சேர்வது? ஏதோ சந்தனக் காட்டில் முன்பு மாட்டிக் கொண்டு விட்டது போல் ஓர் அளப்பரிய கற்பனையில் தேவயில்லாமல் நொந்து போய்க் கொண்டிருந்தேன்.
 
அந்தச் சமயத்தில் கூட என் கையிலிருந்த அகஸ்தியர் ஜீவ நாடியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.  இன்னும் உண்மையைச் சொல்லப் போனால் அகத்தியரால் தானே எனக்கு இவ்வளவு தர்மசங்கடங்களும் ஏற்பட்டது என்று அவர் மீது தீராத கோபம் கலந்த வருத்தம் இருந்ததால் மனது, நாடியைப் படிக்க லயிக்கவில்லை.

என்னைப் பாறையிடுக்கில் உட்கார வைத்துவிட்டு, அவன் மட்டும் அருகிலிருந்த சிறு மரத்தின் மீது விறு விறு என்று ஏறினான்.  சுற்றும் முற்றும் பார்த்தான்.  அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  திடீரென்று நாய் ஊளை இடுவதுபோல் கத்தினான்.   இந்த "கத்தல்" இனிமையாக எனக்கு தென்படவில்லை.  ஏதோ ஒரு அபாயத்தைக் கைதட்டிப் பக்கத்தில் கூப்பிடுவது போல் இருந்தது.  சரியான காட்டுவாசியிடம் மாட்டிக்கொண்ட நாகரீகமான மனிதன் போல் சினிமாவில் காட்டுவார்களே அந்த நிலையில் அப்போது நானிருந்தேன் என்பது தான் உண்மை.

திரும்ப திரும்ப அதே ஊளைக் குரலை விட்டு விட்டுக் கத்திக் கொண்டிருந்தான் அவன்.  இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை.  அவன் சென்நாயைத் தன் பக்கம் கூப்பிட்டு வசியபபடுத்துகிறானா? இல்லை விரட்டுகிறானா, இல்லை அந்த நாய்களின் பரிபாஷயோடு போகிறானா என்று சுத்தமாகத் தெரியவில்லை.

இவன் ஆட்டிடயனா? இல்லை செந்நாய் இடையனா? என்று பயம் வந்துவிட்டது.

இதெல்லாம் அகத்தியரிடம் கேட்டுவிடுவதுதான் உத்தமம் என்றெண்ணி கைப் பையிலுள்ள "ஜிப்பை" த் திறந்து அகஸ்தியர் ஜீவ நாடியைப் பிரிக்க முயன்றேன்.

சட்டென்று என் முன், அந்தச் சிறு மரத்திலிருந்து குதித்த அந்த ஆட்டிடையன் என் கையைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துக் கொண்டு ஓடினான்.  என்ன நடந்தது என்பதை நான் புரிந்து கொள்ளும் முன்பே, அந்தச் செந்நாய் இருந்த இடத்தைத் தாண்டிவிட்டோம்.  ஒரு குறிப்பிட்ட தூரம் வந்த பின்னர் "நீ இப்படிப் போ.  ஐம்பது அடி தூரத்தில் பாதை வரும்.  அந்தப் பாதை வழியே நேராக மலை மேல் ஏறினால் ஸ்ரீ ஜ்வால நரசிம்ம கோயில் வரும்" என்று தெலுங்கில் சொன்னவன், பின்பு வேகமாக எங்கோ ஓடினான்! அதன் பின்னர் அவனைக் காணவில்லை.

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday 24 January 2013

சித்தன் அருள் - 108


எனது தாய் கோடிக்கணக்கில் ஸ்ரீராமஜயம் தினம் தினம் எழுதியதும், தினமும் தாமிரபரணி நதிக்கு விடியற்காலையில் குடத்தைத் தூக்கி பல மைல்கள் நடந்து அந்த ஜலத்தைக் கொண்டு பெருமாளுக்கு அபிஷேகத்திர்க்குக் கொடுத்த புண்ணியமும் தான் என் வாழ்க்கைக்குள் அகஸ்தியர் வந்திருக்கிறார் என எண்ணிக் கொள்வேன்.

முரட்டுத் தனமாகவும், தெய்வ நம்பிக்கை அற்றும், விதண்டா வாதங்களைப் பேசியும், எதெல்லாம் படிக்கக் கூடாதோ அதெல்லாம் படித்துப் பக்தி என்பதை அடியோடு தொலைத்து வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அகஸ்தியர் நாடி கிடைத்த பிறகுதான் வாழ்க்கையின் திசை மாறியது.

இத்தனை நாட்களையும் அநியாயமாகப் பாழாக்கி விட்டோமோ என்று பதறிப் பதறித் துடித்தேன் என்பதெல்லாம் பழங்கதை.  ஆனால் அனுமனைத் தரிசனம் செய்தது, ராகவேந்திரரைத் தரிசனம் செய்தது, மலைக் கோயிலில் சிவபெருமானுக்கு அபிஷேகத்தை மறைமுகமாக காதில் கேட்டுச் சந்தோஷப்பட்டது, இன்னும் இது போல பல்வேறு, வெளியில் சொல்ல முடியாத சம்பவங்களைக் கண்டது, அனுபவித்தது எல்லாமே இதனைப் படித்து வருகின்ற ஒருவர் கூட முழுமையாக நம்ப மாட்டார்கள்.  அவ்வளவும் பொய் என்று எரிச்சல் படுவார்கள்.  பலருக்கு இதனைப் படிக்கவே பிடித்தமிருக்கது.  கலி காலத்தில் இதெல்லாம் நடக்குமா? இதென்ன "த்ரேதாயுகமா" என்று வெறுப்போடு கேள்வியும் கேட்பார்கள்.

இப்படியெல்லாம் நினைக்கிறவர்கள், பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஆச்சரியமில்லை.  ஆனால் ஆன்மீகவாதிகள் தெய்வத்தையும் தானியங்களையும் அன்றாடம் வணங்குகிறவர்கள் தான் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார்கள் அல்லது கேட்ப்பார்கள்.

பகுத்தறிவுவாதிகளை "சட்டென்று" நம்பிவிடலாம்.  ஆனால் ஆன்மீகத்தில் பற்று கொண்டிருப்பவர்களை மட்டும் நம்புவது கடினம்.  அவர்களைச் சமாதானப்படுத்தி என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வது மிக மிகக் கஷ்டம்.

அன்றைக்கு அஹோபில மலையில் சென்ற பொது எனக்கு கிடைத்த அனுபவத்தை அப்படியே எல்லோர்கிட்டேயும் சொல்லவேண்டும் என்ற ஆசைதான்.  ஆனால் அகஸ்தியர் இதற்கு இடம் கொடுக்காமல் என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.  இதனால் நான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவித்ததும் உண்மை.  இல்லையெனில் என் பெற்றோரே என் வார்த்தையை நம்பாமல் இருந்திருப்பார்களா?

லக்ஷ்மி நரசிம்மரின் தரிசனம் கோயிலில் கிடைக்கலாம்.  ஆனால் நேரிடையாகக் கிடைத்தால் நாம் ஓடிப் போய் விடுவோம்.  சிம்மத்தைச் ஸ்வப்னமாகக் கண்டாலே கெடுதல் என்று பயப்படுகின்ற நமக்கு உயிருள்ள சிங்கமாக எதிரில் வந்தால் அது லக்ஷ்மி நரசிம்மர் என்று எண்ணி, காலில் விழுந்து வணங்கவா தைரியம் வரும்?  இல்லை, நமக்கு என்ன ஞானக்கண்ணா? இவர் லக்ஷ்மி நரசிம்மர், நமக்கு அருள்பாலிக்க வந்திருக்கிறார் என்று கைக்கூப்பிட...

என்றெல்லாம் மலைக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உட்கார்ந்து யோசித்தேன்.  ஒரு வேளை சதா சர்வ காலமும் அஹோபிலத்தையே நினைத்துக் கொண்டிருந்ததால் வருவோர், போவோர் எல்லோரும் என் கண்ணுக்கு லக்ஷ்மி நரசிம்மரே நேரடியாக மற்றவர் வடிவில் வந்திருக்கலாம்.  யாரோ, மனிதாபிமான உள்ளத்தோடு கொடுத்த பிரசாதம் பெருமாளே எனக்குக் கொடுத்தனுப்பிய பிரசாதமாகத் தோன்றி இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றியது.

அகஸ்தியர் ஜீவநாடி மூலம் சின்னச் சின்ன விஷயம் கூட எனக்குப் பெரிதாகப்பட்டது.  அதே சமயம் நாடி படித்த பலருக்கு நிறைய அதிசயங்களும் நடந்ததாக அவர்கள் சொல்லும் போது சந்தோஷமும் ஏற்பட்டது.  சிலருக்கு நாடி படித்தும் அதன் நற்பலன் சொல்லப்பட்ட காலத்தில் நடக்காமல் போனது கண்டு வருத்தப்பட்டதும் உண்டு.  எதற்காக "அகஸ்தியர்" என்னிடம் வந்தார்? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் சரியாகக் கிடைக்கவில்லை.  சரி நல்லதோ கெட்டதோ, இதுவரை நாடி படித்ததும், மற்றவர்களுக்குச் சொன்னதும் போதும், இனிமேல் யாருக்கும் படிக்க வேண்டாம்.  பார்க்கவும் வேண்டாம்.  இதனால் கெட்ட பெயர் தான் அதிகமாகிறது.  எனக்கும் இதுதான் பிழைப்பு என்றில்லை.  ஆண்டவன் புண்ணியத்தில் வேறு வேலை இருக்கிறது.  இந்த அஹோபில யாத்திரையோடு தரிசனத்தை முடித்துக் கொள்வோம்.  அதோடு நாடியை அஹோபில மலையில் நரசிம்ம சுவாமியின் சன்னதியில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வந்து விடுவோம் என்று உறுதியாக முடிவெடுத்தேன்.

சுமார் ஒன்றரை மணி நேரம் திரும்பத் திரும்ப யோசித்து கடைசியாக "நாடியை" உக்கிர நரசிம்மர் சன்னதியில் வைத்துவிட்டு ஓடி வந்து விடுவது என்று முடிவெடுத்த போது...

மலை மேல் ஏறிக் கொண்டிருந்த இரு வைஷ்ணவப் பெரியவர்கள் என்னைக் கடந்து செல்லும் போது "இந்த மாதிரி முடிவெடுப்பதே தப்பு.  எல்லாம் நரசிம்மர் பார்த்துக் கொள்வார்" என்று தங்களுக்குள் உரத்த குரலில் பேசிக் கொண்டு சென்றார்கள்.  இது எனக்கு "சுளீர்" என்று சாட்டை அடி விழுந்தது போல் இருந்தது.  இதை ஓர் அசரீரி வாக்கு போல் எடுத்துக் கொள்ளலாமா என்று சபலம் வந்தது.  இருந்தாலும் எடுத்த முடிவை மாற்றக் கூடாது என்று உறுதியாக இருந்தேன்.

கையிலிருந்த ஜீவநாடியை ஒருமுறை நன்றாக ஆசையோடும் பாசத்தோடும் பக்தியோடும் பார்த்து கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.

எப்படி அகஸ்தியர் எனக்கு வந்தாரோ அப்படியே அகஸ்தியரை லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் வைத்து விடுவோம் என்ற எண்ணத்தோடு ஒரு முக்கியமான காரியத்தைச் சாதிக்கப் போகிறோம் என்ற தைரியத்தில் மலை மீது ஏறினேன்.

மலை மீது நரசிம்மர் சன்னதியை அடைந்ததும் அர்ச்சகர் வெளியே வந்தார்.

அர்ச்சனை செய்யணும்.

"செஞ்சுட்டாப் போச்சு" என்றவர் "கையிலே என்ன வச்சுண்டிருக்கேள்"

"நாடியைப்" பற்றிச் சொன்னேன்.

"அப்படியா இதுபற்றி கேள்விப்பட்டிருக்கேன்.  எனக்கும் தமிழ்நாடுதான்.  ஜீவநாடி கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சே" என்றவர் "அதை கொடுங்கோ பெருமாள் பாதத்திலே வச்சு அர்ச்சனை பண்ணித் தரேன்" என்றார் தாமாக.

"உங்களுக்கு ஆட்ச்சேபனை இல்லையே!"

"நன்னாச் சொன்னேள் போங்கோ, இன்னிக்கு கூட்டமில்லை, எனகென்னவோ உள் மனசிலே தோணிடுத்து.  அதனால் கேட்டேன்" என்றவர் மிகுந்த சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.

என் மனதில் புத்திசாலித்தனமான ஒரு கெட்ட எண்ணம்.

"பேசாம அஞ்சோ பத்தோ அர்ச்சகரிடம் கொடுத்து இந்த நாடியை அங்கே வைத்து விடுங்கள்.  நாளைக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று நைசாகப் பேசி, தப்பித்தேன், பிழைத்தேன் என்று ஓடிப் போய் விடலாம் என்று எண்ணினேன்.  "இது தப்புத்தான், அப்படி செய்யக் கூடாது" என்று என் உள்மனம் எச்சரிக்கை விடுத்தது.  இதற்கெல்லாம் மதிப்பு கொடுத்தால் நம்மால் எந்த காரியமும் எதிர்காலத்தில் செய்ய முடியாது என்று மனத்தைக் கடுமையாக்கிக் கொண்டேன்.

அர்ச்சனையில் என் மனம் நாடவில்லை.

நாடியை அங்கே வைத்து விட்டுச் சென்னைக்குத் திரும்பிட வேண்டும்.  முதலில் அர்ச்சகர் இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

அர்ச்சனையை முடித்துக் கொண்டு பிரசாதத்தோடு வெளியே வந்தார்.  இருபது ரூபாயைத் தட்டில் போட்டு விட்டு நான் வாய் திறக்கும் முன்பு அவரே வாய் திறந்தார்.

"இன்னும் எத்தனை நாளைக்கு இங்கிருப்பீர்"

"நாளைக்கு கிளம்பலாம்னு நெனைக்கிறேன் (ஏனெனில் இரண்டு நாளைக்கு அஹோபிலத்தில் தங்கியிரு என்று ஏற்கனவே அகஸ்தியர் சொல்லியிருந்ததால் அதை மறைக்க முடியவில்லை.  உண்மை வெளி வந்துவிட்டது).

"சென்னையிலே எங்கு தங்கியிருக்கேள்?

உண்மையான விலாசத்தை சொன்னேன்.  பொய் சொல்ல முடியவில்லை.

"அப்படியா சந்தோஷம்" என்றவர் நரசிம்மரின் பாதத்தில் வைத்திருந்த "நாடி" யை எடுக்கப் போனார்.

அர்ச்சகரை அழைத்து, "இந்த நாடியை இரண்டு நாளைக்குப் பெருமாள் பாதத்தில் வைக்க முடியுமா?  நாளைக்கு மதியம் வந்து வாங்கிக்கிறேனே" என்றேன்.

"தப்ப நெனச்சுக்காதீங்கோ.  இங்கெல்லாம் பெருமாள் பதத்தில் வைக்கவே மாட்டா.  அப்படியே வைச்சாலும் உடனே எடுத்துக் கொடுத்துடுவா.  நான் வைச்சுக்க முடியாது.  அப்படியே வைச்சுட்டாலும், பின்னால் வர்ற அர்ச்சகர் அதைத் தூக்கிப் போட்டுடுவா" என்றார் பவ்யமாக.

இது எனக்குத் திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி இருந்தது.  அசட்டுச் சிரிப்போடு அர்ச்சகரிடமிருந்து நாடியை வாங்கிக் கொண்டேன்.  முதல் காரியமே தோல்வியாகிவிட்டது என்றாலும் யாருக்கும் தெரியாமல் எங்கேயாவது நாடியை வைத்து விடலாம்.  அல்லது கோயில் உண்டியலில் போட்டு விடலாம் என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

சன்னதியை விட்டு வெளியே வந்தேன்.

மலை மீது கண்ணைச் சுழலவிட்டேன்.  அந்த மலைக்கு மேலே தானே நேற்று மாலை சில அபூர்வ தரிசனம் கிடைத்தது என்று நினைத்து அந்தத் திசைக்கு ஒரு நமஸ்காரம் செய்தேன்.

இன்னிக்கும் ஏதோ அதிசயம் நடக்கும் என்றாரே.  ஒன்றுமே நடக்கவில்லையே என்று என் மனம் அசை போட்டது.  இப்போது தானே காலை விடிந்திருக்கிறது.  இன்னும் பன்னிரெண்டு மணி நேரம் இருக்கிறதே.  பார்த்துக் கொள்ளலாம் என்று தேற்றிக் கொண்டேன்.

கோயில் பிரசாதத்தை வாங்கிக் காலைப் பசியைத் தீர்த்துக் கொண்டு இப்படியே மலையைச் சுற்றி வரலாமே என்று ஏதேதோ சிந்தனையோடு கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன்.  இயற்கை செழிப்பான அந்த அஹோபில மலையில் பெரும் பாறைகள் குவிந்து கிடந்தன.  செடி கொடிகள் சுதந்திரமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்ததால் மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் அவை தலையாட்டிக் கொண்டிருந்தன.

கல்லும் முள்ளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.  ஜாக்கிரதையாகக் கால் வைத்து நடக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல, கூடுமானவரை தனியாகச் செல்வதை விட கூட்டத்தோடு செல்வதுதான் உத்தமம்.

நான் மெதுவாக நிதானமாக அக்கம் பக்கத்தில் ஏதாவது கண்ணுக்குத் தென்படுகிறதா அல்லது காதில் விழுகிறதா என்று கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சென்றதால் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர்.

வேக வேகமாகவும் பயந்தும் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டும் அவர்கள் சென்றது, ஆச்சர்யமாக இருந்தது.  எங்கு போகிறார்கள் எந்தத் தரிசனம் காணப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.  அவர்களை அழைத்துக் கேட்கவும் துணிவில்லை.  அவர்கள் பின்னால் நாமும் போவோமே என்று சென்று கொண்டிருந்த போது சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தேன்.  எனக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எந்த மனித நடமாட்டமும் இல்லை.  எனக்கு பின்னால் யாரும் வருகிற மாதிரியும் தெரியவில்லை.

சட்டென்று ஒரு பயம் திடீரென்று ஜுரம் வந்து குளிர்ந்து உடல் நடுங்கியது போல் வந்தது.

திரும்பி வேகமாகப் போய் விடலாமா என்று கூட எண்ணினேன்.

அப்போது

பக்கத்துப் பாறைக்குப் பின்னாலிருந்து "நரசிம்ம நரசிம்ம" என்ற குரல்மட்டும் என் காதில் கேட்டது.

சித்தன் அருள் .......... தொடரும்! 

Thursday 17 January 2013

சித்தன் அருள் - 107



எத்தனை முறைகள் பிரார்த்தனை செய்தும் அகஸ்தியரிடமிருந்து எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.  அகஸ்தியர் கோபமாக இருக்கிறார்.  அவரது கோபம் தணியட்டும் என்று நானும் அதோடு விட்டுவிட்டேன்.

சீக்கிரம் எழுந்துவிட்டதால் மலை மீதேறி நடந்தேன்.  போகும் பொழுதே லக்ஷ்மி நரசிம்மரைப் பற்றி எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போனேன்.  பயத்தில் என்ன ஸ்லோகம் சொன்னேன்.  அதில் எத்தனை தப்பிதம் இருந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

மூலவர் சன்னதியை அடைந்தேன்.

திருப்பதியில் என் தங்கைகளுக்குத் திருமணம் நடத்தி வைப்பதாக பகவான் முன்பு வேண்டிக்கொண்டேன்.  வெள்ளிக்கிழமை அன்றும் அல்லது சுவாதி நட்சத்திரம் அன்றும் லக்ஷ்மி நரசிம்ஹர் சன்னதியில் பானகம் நைவேத்யம் செய்வதாக வேண்டிக் கொண்டேன்.  இனிமேல் ஆன்மீக விஷயத்தில் அகஸ்தியர் ஜீவநாடியில் என்ன சொன்னாலும் அதைக் கூடுமானவரை யாரிடமும் வெளியே சொல்லமாட்டேன் என்றும் சன்னதியின் முன்பு உறுதியெடுத்துக் கொண்டேன்.

இவையெல்லாம் என்னையும் அறியாமல் வெளியே வந்தன.  அத்தனையும் சொல்லி ஆனந்தமாகப் பிரார்த்தனையைச் செய்து முடித்து சாஷ்டாங்கமாகச் சேவித்து விட்டுச் சன்னதியை விட்டு வெளியே வந்த போது நேற்று எனக்குத் துணையாக வந்தவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது.

அங்குள்ள அர்ச்சகரிடம் மாலோல நரசிம்மாச்சாரியைப் பற்றி அடையாளம் சொல்லி "அவர் மடப்பள்ளியில் இருக்கிறாரா?" என்று கேட்டேன்.

"அந்த மாதிரி யாரும் இங்கு இல்லை.  மடப்பள்ளியிலும் வேலைப் பார்க்கவில்லை" என்று பதில் கிடைத்தது.  அங்கிருந்த பலரும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.

"யார் அவர் எனக்காக ஏன் உதவி செய்யணும்?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.  ஒரு வேளை பெருமானே மனித வடிவில் வந்து உதவி செய்தாரா?

சரி! அதுதான் போகட்டும்.  வானத்தில் தூம கேது தோன்றியதே.  அதை பற்றியாவது அகஸ்தியரிடம் அருள் வாக்கு கேட்க வேண்டும் என்றெண்ணி தீர்க்கமாகப் பிரார்த்தனை செய்து கையோடு கொண்டு வந்திருந்த ஜீவ நாடியைப் புரட்டினேன்.

"ஒளிமறை விண்மீன் சுவாதி உதித்திட்ட வேளையிதில் விலையில்லா வேதத்தின் பெருமைதனைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிங்கமுகன் குடிலின் கருவறை முன்பு நாட்டின் எதிர்கால நிகழ்வுகளை யாம் விளக்குவோம்.  முடியுடைய விதவைப் பெண்ணவள் முடியிழந்து மூலையில் அமருங்காலம், நெருங்கியதே.  தலை பல உருளும்.  தலைமை மாறும்.  பேதமில்லாத கூட்டணியே பின்னர் நாட்டை ஆளும்.  பின் அங்கொரு பிளவு வரும்  பேதை மைந்தனால். இன்னவளே இந்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்பாள்" என்று அகஸ்தியர் "விண்ணிலே தோன்றிய அந்த தூம கேதுவுக்கும் ஓர் காரணமுண்டு பொறுத்திரு.  அகஸ்தியன் யாம் விளக்கும்வரை ஜெபித்திரு எண்ணி முடிப்பார் கரும் புள்ளியோடு " என்று அரையும் குறையுமாகச் சொல்லி முடித்தார் அகஸ்தியர்.

ஏதோ இந்த மட்டிலுமாவது அகஸ்தியர் வாய் திறந்து சொன்னாரே என்று நான் சந்தோஷப்பட்டேன்.  காலையில் வாய் திறக்காத அகஸ்தியரின் கோபம் தணிந்து விட்டதாக எண்ணிக் கொண்டேன்.

அகஸ்தியர் சொன்ன விஷயத்தை என்னால் கொஞ்சம் கிரகிக்க முடிந்தது.  ஆனால் முழுமையாக எதையும் தெரிந்துகொள்ள இயலவில்லை.  மேலும் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அதோடு விட்டுவிட்டேன்.

எல்லா நரசிம்ம மூர்த்திகளையும் நிதானமாகத் தரிசனம் செய்து விட்டு மெதுவாக மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது என் உள் மனதில் ஏதோ ஒரு சிறு குறை இருப்பது போல் தென்பட்டது.

ஹிரண்ய கசிபுவைக் கொல்லக் கல் தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம சுவாமியின் இடத்தில் வைக்கப்பட்ட அந்த ஸ்தம்பத்திற்கு சென்றேன்.  அகஸ்தியர் நாடியை அந்த இடத்தில் வைத்துப் பிரார்த்தனை செய்து எதேச்சையாக நாடியைப் புரட்டிய பொழுது,

"இரு நாள்கள் இங்கிருந்து சிங்கமுகத்தோனை தரிசனம் செய்.  சில வியத்தகு சம்பவங்கள் நடக்கும்.  கண்டு பின் ஏகு இருப்பிடம் நோக்கி" என்று எனக்குக் கட்டளையிட்டார்.

அன்றிரவே சென்னைக்குத் திரும்பவேண்டும் என்று திட்டமிட்டிருந்த நான் அங்கேயே மேலும் இரண்டு நாள்களுக்குத் தங்கிவிட்டேன்.  கீழே இறங்காமல் அன்று சாயங்காலம் வரை மலையைச் சுற்றி வந்தேன்.

மலைக்கு மேல் பிரம்மாண்டமாய் ஒரு மரம்.  கிளைகள் நெருக்கமாகவும் இலைகள் மிக அதிகமாக நெருக்கமாகவும் இருந்தது. மரத்தின் அடியில் வெயிலே தெரியவில்லை.  போதாகுறைக்கு ஜிலு ஜிலுவென்று காற்று அவ்வப்போது வீசியதால் மனதிற்கு மிகவும் தெம்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

ஒரு துண்டை விரித்து மரத்திற்கடியில் போட்டுக் கொஞ்சநேரம் கண் அயரலாம் என்று படுத்துவிட்டேன்.  அதிகமாக எதுவும் சாப்பிடாததினாலும், உடல் அசதி காரணமாகவும் நன்றாகத் தூங்கிவிட்டேன் போலும்.

கண் விழித்துப் பார்க்கும் பொழுது வானத்தில் சந்திரன் மெல்ல எழும்பிக் கொண்டிருந்தான்.  கையில் கட்டிய வாட்சில் மணி ஏழு என்று காட்டியது.  சுற்றும் முற்றும் பார்த்தேன்.  மனித நடமாட்டமே தென்படவில்லை.  மூலவர் சன்னதியைத் தாண்டி தனியாக நான் மட்டும் மேலும் சென்றதினால் யாரும் என்னைக் கண்டு கொள்ளவும் இல்லை, தட்டி எழுப்பவும் இல்லை.

அந்த அமைதியான சூழ்நிலை மனதிற்குப் பிடித்திருந்ததாலும் பக்கத்து மலையில் எங்கோ மிருகங்களின் சப்தம் அப்போது காதில் விழுந்ததினால் சட்டென்று அடிவயிற்றில் கிலி பிடித்தது.  நேற்றாவது யாரோ ஒரு புண்ணியவான் கொடிய விலங்கின் பிடியிலிருந்து காப்பாற்றினான்.  அது தெய்வச் செயல் தான், இல்லையெனில் என் பெற்றோர் செய்த புண்ணியம் தான்.

ஆனால்,

இன்றைக்கு யார் எனக்குத் துணை வருவார்?  அகால நேரத்தில் தன்னந்தனியாக எப்படி மலையிலிருந்து கீழே இறங்குவது என்ற பயம், நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது.  வேறு வழியில்லை.  இறங்கித்தான் ஆகவேண்டும் என்று எண்ணிச் சுதாரித்தபோது.

என் கண்ணெதிரில் சுமார் இருநூறு அடி தூரத்தில் ஒரு சிங்கம் தன் நாலைந்து குட்டிகளோடு விளையாடிக் கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம்.  அது உண்மையில் சிங்கம் தானா? இல்லை என்னுடைய மனப் பிரம்மையா அல்லது எதையோ ஒன்றை நினைத்து நானே செய்து கொண்டிருக்கும் கற்பனையா? என்று எனக்கே தெரியவில்லை.

அது என்னை நோக்கி வந்தால் அதனிடமிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது என்றும் அவசர அவசரமாக யோசித்தேன்.  விறு விறுவென்று என்னால் மரத்தின் மீதேரவும் முடியாது.  அப்படி ஏறுகின்றபடி மரத்தில் எந்தவித முண்டோ அல்லது கிளைகளோ கிடையாது.

பத்து நிமிஷம் ஜீவமரணப் போராட்டம் நிகழ்ந்தது.  என்ன நடக்கும் என்று தெரிய அகஸ்தியர் நாடி பார்க்கவும் மனம் விரும்பவில்லை.  அதன் கண்ணுக்குத் தெரியாமல் வேகமாகப் படி இறங்கிட வேண்டியதுதான் என்று அதற்காக நான் தயாராக இருக்கும் பொழுது இன்னொரு அதிசய நிகழ்ச்சி நடந்தது.

ஒரு எட்டு வயது பாலகன் தைரியமாக அந்தச் சிங்கத்தை நோக்கிச் செல்கிறான்.  எந்தவித ஆயுதமும் இன்றி.  அவனை கண்டதும் பாய்ந்து வர வேண்டிய அந்தச் சிங்கம் எந்தவித சப்தமும் இல்லாமல் அமைதியாகக் காலை நீட்டிப் படுத்து விடுகிறது.  அதன் சிங்கக் குட்டிகளைத் தடவிக் கொடுக்கிறான்.  நாய் குட்டி போல் அவனிடம் விளையாடுகிறது.

சிறிது நாழிகைக்குப் பின் அந்தச் சிங்கத்தின் நெற்றியில் கழுத்தில் முதுகில் அந்தச் சிறுவன் தடவிக் கொடுக்கிறான்.  அது பேசாமல் இருக்கிறது.  இரண்டு நிமிடம் இந்தக் காட்சி.

பின்பு அந்தச் சிங்கத்தையும் காணோம்.  குட்டிகளையும் காணோம்.  அதனைத் தடவிக் கொடுத்த அந்தப் பாலகனையும் காணோம்.  ஒரு மௌன நாடகம் நடந்தது போல் இந்தக் காட்சி வெகுநேரம் மனதில் நின்றது.  கண்ணை மிக நன்றாகக் கசக்கிக் கொண்டு அந்த இடத்தை மீண்டும் பார்த்தேன்.

பௌர்ணமி நிலவின் அந்த வெளிச்சத்தில் வெறும் மரங்களும் அதன் நிழல்களும் தான் மீதமிருந்தது.  அப்படியானால் நான் இதுவரை கண்டது எல்லாம் வெறும் சாயங்கால பீதியினால் ஏற்பட்ட கனவு என்று தெரிந்தது.  நேற்றைக்கு "ஓநாய்" இன்றைக்கு சிங்கம்.  நாளைக்கு என்ன? என்று யோசித்துப் பார்த்தேன்.  என் கண்ணிற்கு ஒன்றும் தெரியவில்லை.

இது உண்மையா அல்லது பயத்தினால் நான் கண்ட கனவா? என்பதைப் பின்னர் அகஸ்தியரிடம் கேட்டுக் கொள்ளலாம் என மலையிலிருந்து மனதை திடப்படுத்திக் கொண்டு இறங்க ஆரம்பித்தேன்.  இன்றைக்குக் கூட்டம் அதிகமாக இருந்தது.  எல்லோருமே பெருமாளைச் சேவித்து விட்டுக் கூட்டம் கூட்டமாக கீழே இறங்கிக் கொண்டிருந்ததால் நேற்றைக்கு மாதிரி பயம் இல்லை.  ஒன்றுமே சாப்பிடாமல், காலையில் இரண்டு பழத்தை மாத்திரம் சாப்பிட்டிருந்ததால் பசி மட்டும் வயிற்றைக் கிள்ளியது.

நேற்றிரவு கிடைத்த பிரசாதம் இன்றைக்கும் கிடைத்தால் ஒரு வெட்டு வெட்டலாம் என்று நினைத்தேன்.  ஆனால் பிரசாதம் கிடைக்கவில்லை.  கீழ் அஹோபிலத்தில் உள்ள ஒரு அய்யங்கார் ஓட்டலில் கிடைத்ததை உண்டுவிட்டு அறைக்கு சென்றேன்.

மறுநாள் விடியற்காலையில் வழக்கம் போல் எழுந்து சுத்தம் செய்து கொண்டு அகஸ்தியர் ஜீவ நாடியைப் பிரித்து நேற்று கண்ட சிங்கக் காட்சியைப் பற்றிக் கேட்டேன்.  இதற்கு அகஸ்தியர் ஒரு நீண்ட வரலாற்றையே சொன்னார்.

"நேற்று நாள் மிகவும் முக்கிய நாள்.  நட்சத்திரம் விண்மீன் சுவாதி.  பௌர்ணமி நேரம்.  இதே நட்சத்திரம் பௌர்ணமியன்று மாலை நேரத்தில் தான் நரசிங்கப் பெருமாள் அவதாரம் எடுத்து ஹிரண்ய கசிபுவை முக்தி அடையச் செய்த நாள்.

எனது மைந்தனாக நீ இருப்பதால் அத்தகைய அரிய  காட்சியைத் தூரத்தில் இருந்து பார்க்க வைத்தோம்.  நேற்று உன் கண்ணில் கண்ட சிங்கத்திலே பெருமாள் திருநாராயணன் உறைந்திருக்கிறார்.

அவரோடு விளையாடிய சிங்கக் குட்டிகள் எல்லாம் நான்கு வேதங்கள்.  அந்தச் சிங்கத்தை நோக்கி சென்ற பாலகன் வேறு யாருமில்லை.  ஹிரண்ய கசிபுவின் குமாரனான அந்தப் பிரஹலாதன் தான்; முகத்தை நீ பார்க்க முடியாது.  காரணம் இறைவனை நேரிடையாகக் கண்ணில் காணுகின்ற பாக்கியம் மனிதர்கள் எல்லோருக்கும் கிடைக்காது.  அப்படிப்பட்ட காட்ச்சியைப் பெற்ற மனிதர்கள், மறுவினாடி பூஉலகில் உயிரோடு இருக்கமாட்டார்கள்.  ஒன்று மோட்சத்திற்கு சென்று இருக்க வேண்டும்.  இல்லையெனில் கண் பார்வையை இழந்து தன வாழ்நாட்கள் முடியும் வரை கண்ணிழந்து கபோதியாகத்தான் வாழவேண்டி இருக்கும்.

என் மைந்தன் என்பதால் யாம் பெற்ற பேற்றினை நீயும் பெறுக என்று உன்னைச் சுற்றி அரண்போல் "காப்பு" வைத்து திருமாலிடம் வேண்டி இத்தகைய தரிசனத்தை கனவில் நடப்பது போல் காட்டச் சொன்னோம்.  திருமாலும் என் வேண்டுகோளுக்கு மனம் இறங்கினார்.  அதனால் தான் அத்தகையதொரு தரிசனம் உனக்கு மறை முகமாகக் கிடைத்தது.

எல்லாத் தேவர்களும் லக்ஷ்மி நரசிம்மரிடம் "ஹிரண்ய வதம்" எப்படி நடந்தது என்று அடிக்கடி கேட்பதும், லக்ஷ்மி நரசிம்மரும் அதைப் பின்னர் தேவர்களுக்கு நடித்துக் காட்டுவதும் வழக்கம்.  ஆனால் அகத்தியன் அத்தகைய காட்சியைக் காண விரும்பவில்லை.  அதனால் கண்ணாடி வழியாகக் காட்ச்சிப் பொருளைக் காட்டுவது போல் லக்ஷ்மி நரசிம்மர் அருள் பாலித்தார்.  இந்தக் காட்ச்சியை நீ யாரிடம் சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்.  உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக முத்திரைக் குத்தலாம்.  அல்லது அளவுக்கு மீறி கற்பனையைக் கதையாகத் திரிக்கிறான் என்று உன்னைக் கேலி செய்வார்கள்.  எனவே இதைப் பற்றி யாரிடமும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம்.  சமயம் வரும் பொழுது இதை யாமே அறிவிக்க வைப்போம்" என்ற நீண்ட கதையைச் சொல்லி "இன்னும் இரண்டு நாட்களும் இரண்டு விதமான அதிசயங்கள் இந்த மலையில் நிகழும்.  அதையும் கண்டுவிட்ட பின் ஏகுக தாய்க்குடில் நோக்கி" என்றார். நான் அகத்தியரைக் கைகூப்பித் தொழுதேன்.

அடுத்த சில மணி நேரத்தில் மேல் அஹோபிலம் மலையில் ஏறிக் கொண்டிருந்தேன்.  என்ன அதிசயம் இன்றைக்கு, நடக்கப் போகிறதோ என்ற ஆசையில்.

சித்தன் அருள் ............. தொடரும்!

Thursday 10 January 2013

சித்தன் அருள் - 106


அஹோபில மலைக்கு சென்றவர்களுக்குத் தெரியும், அந்த அற்புதமான மலையும் இயற்கைச் செழிப்பும் ஒருவிதமான பயம் கலந்த பகுதியும் மனதை ஈர்க்க வைக்கும்.  இன்னும் சொல்லப் போனால் வாழ்நாள் முழுவதும் அந்த அஹோபிலத்திலேயே தங்கி பெருமாளையே தினம் நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றும்.

அப்படிப்பட்ட அந்தப் புனிதமான நரசிம்மர் கம்பத்தில் தன்னையும் அறியாமல் பயத்தால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததால் அந்த ஓநாயிடமிருந்து நரசிம்மர் என்னைக் காப்பாற்றி இருக்கிறார் என்று தான் எனக்கு தோன்றிற்று.

முன்பெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு தைரியத்தோடு பலவிடங்களில் தன்னந்தனியே அகஸ்தியரின் ஜீவநாடி துணை கொண்டு நடமாடிய நான், ஒரு சாதாரண "ஓநாய்" சப்தத்திற்காக ஏன் இப்படி நடுங்கிப்போனேன் என்பதை நினைக்கும் பொழுது எனக்கே வெட்கமாக இருந்தது.

அந்தப் பயத்தால் கீழே கிடந்த அகஸ்தியர் ஜீவ நாடியைக் கூட கவனிக்காமல் விட்டு விட்டு எழுந்ததும், அதை அங்கு வந்த ஒரு வயோதிகர் சுட்டிக் காட்டியதும் ஏதோ ஒன்று விசித்திரமாக நடப்பது போல் தோன்றியது.

"நாடியைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் பரவாயில்லை.  "அந்த நாடியை இங்கு படித்துவிட்டுதானே செல்ல வேண்டும்" என்று சொன்னதுதான் என்னை யோசிக்க வைத்தது.

வானத்தில் தோன்றிய அந்தத் தூம கேதுவைப் பற்றிச் சொல்கிறேன் நரசிம்மர் சன்னதியில் என்று அகத்தியர் எனக்குமட்டும் சொன்ன அந்தச் செய்தியை இவர் எப்படித் தெரிந்து கொண்டார்.  நான் பயத்தில் மறந்து போனபோது எப்படி எனக்கு எடுத்துக்காட்டினார்? என்ற வியப்பு என்னை வேறு எதுவும் நினைக்கவிடாமல் தடுத்தது.

"அசரிரீ வாக்கு" போல் சொன்ன இவர், நிச்சயம் ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியாது.  முனிவர்கள் சித்தர்களுக்கு ஒப்பானவர் என்று தான் தோன்றியது.  மனதால் அவருக்கு நமஸ்காரம் செய்தேன்.

இருட்டி விட்டதாலும் ஆட்கள் நடமாட்டம் சற்றுக் குறைந்து விட்டதாலும் கீழ் அஹோபிலம் வரை செல்ல எனக்கு அந்தச் சமயத்தில் ஒரு ஆளாவது துணை தேவைப்பட்டது.  என்னதான் அகத்தியர் ஜீவநாடி என் கையில் இருந்தாலும் நானும் ஓர் சராசரி மனிதன் என்பதால் பயம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை.

துணைக்கு நானும் வருகிறேன்.  இடையில் கூட்டம் வந்துவிட்டால் அவர்களோடு சேர்ந்து கொள் எனக்கு மலையில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று விடாமல் சொல்லிக் கொண்டே என்னுடன் வந்த அந்த  ஆஜானுபாகு ஆன அவரை மேலும் கீழும் கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டே வந்தேன்.

தோளைத் தொடும் நீண்ட வலுவான சிகைகள்.  ஜிம்கானா க்ளப்பில் நன்றாக உடற்பயிற்சி செய்தது போல் உடலை இறுக வைத்திருக்கும் சுருக்கமில்லாத வளவளப்பான உடல் அமைப்பு.  முகத்தில் வெண்மையும் கருமையும் கலந்த மீசை தாடி, கண்ணில் அற்புதமான தீர்க்கம், நன்றாக அதே சமயம் பஞ்சக் கச்சம் கட்டிய தும்பைப்பூ போல் வெள்ளை வேஷ்டி.

குடுமியாக இருந்து தலைமுடியை காற்று படட்டும் என்று அவிழ்த்து விடப்பட்டது போல் முதுகின் பின் புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த தலை முடி, மார்பில் பூணூல், கையில் நகத்தை சுமார் மூன்று அங்குல நீளத்திற்கு வளர்த்துக் கொண்டிருந்தார்.

பேச்சில் ஆண்மை மிடுக்கும் அசாத்திய தைரியமும் கம்பீரமும் கலந்து காணப்பட்டது.  ஆனால் அளவுக்கு மீறி வளவளவென்று பேசவில்லை.  சுமார் ஐம்பது வயதிருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்.

கொஞ்ச தூரம் என்னிடம் எதுவும் பேசவில்லை.  அப்புறம் மெதுவாக பேசினார்!

"அது ஜீவ நாடிக் கட்டா?"

"ஆமாம்"

"அந்தக் கம்பத்தின் கீழ அமர்ந்து படித்தாயே அதில் என்ன வந்தது?"

எல்லாம் தெரிந்தவர் போல் கேட்டார்.

"நிறைய விஷயம் வந்தது"

"எதைப்பற்றி?"

"வானத்தில் நேற்று இரவு தோன்றிய தூம கேது பற்றி"

"என்னது தூம கேதுவா? நேற்றிக்கு தோன்றியது?"

"ஆமாம்! இன்றைக்கு எல்லா பேப்பரிலும் வந்திருக்கிறது."

"அப்படியா! அகஸ்தியர் என்ன சொன்னார்?"

நான் ஒரு நிமிஷம் அப்படியே நின்றேன்.  வேகமாகச் சென்று கொண்டிருந்த அவரும் சட்டென்று நின்றார்.

"நீங்கள் யார்? எனக்குச் சொல்லுங்கள், முதலில்" என்றேன்.

"கோயில் அர்ச்சகருக்குச் சொந்தக்காரன்,  மடப்பள்ளியில் சமையல் வேலை.  பெயர் மாலோல நரசிம்மாச்சாரி" என்றார்.

"இல்லை.  எதையோ மறைக்கிறீர்கள்.  உண்மையில் நீங்கள் மாலோல நரசிம்மாச்சாரி இல்லை." என்றேன்.

"பின் யாராம்?"

"அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" கெஞ்சினேன், ஒருவித பயம் கலந்த எதிர்பார்ப்போடு.

"இந்த இடத்துக்கு நீ புதுசு. என்னைப்பற்றி யாரிடம் வேண்டுமானாலும் போய் கேள்.  மாலோல நரசிம்மன் என்றதும் மடப்பள்ளி அய்யங்கார் என்று தான் கூறுவார்கள்" என்றார் அவர்.

"மடப்பள்ளி சமையற்கார அய்யங்காருக்கு என் கையில் இருப்பது அகஸ்தியர் நாடி என்று எப்படித் தெரிந்தது என்பது ஒன்று, இன்னொன்று அந்த உக்கிர ஸ்தம்பத்தின் அடியிலுள்ள நரசிம்மனின் இரண்டு பாதத்திற்கு அடியில் இந்த நாடியைப் படித்துவிட்டு வா என்று சொன்னீர்களே, இது எப்படி?  எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.  இது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது" என்று கிடுக்கு பிடி போட்டேன்.

இதை சொன்னதும் கலகலவென்று சிரித்தார்.

"நான் ஒன்றும் பெரிய ஆளிலையப்பா! பயத்தால் கீழே கிடந்த இந்த ஓலையைப் பிரித்துக் கட்டி எடுத்துக் கொள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  வேறு ஏதோ சொல்லிவிட்டேன் போலும்" என்று நிறுத்தினார்.  

"சரி! இந்த ஓலைச்சுவடி அகஸ்தியருக்குத் தான் சொந்தம் என்று எதை வைத்துச் சொன்னீர்கள்" என நான் அவரை மடக்கினேன்.

"அட! நீ ஒண்ணு.  சில மாதத்திற்கு முன்பு நான் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தேன்.  வைதீஸ்வரன் கோயிலுக்கும் போயிருந்தேன்.  அங்கே எங்கு திரும்பினாலும் அகஸ்தியர் ஓலைச் சுவடி என்று போர்டு போட்டிருந்தது.  இதுவும் அந்த ஓலைச் சுவடியில் ஒண்ணுதான்னு நெனச்சு சொன்னேன்" என்று சொன்னவர் "அதோ ஆட்கள் எல்லாம் கீழே போறாங்க.  அவங்க கூட நீயும் சேர்ந்து போயிடு" என்று சொல்லிச் சட்டென்று திரும்பி மலைமீது ஏறினார்.  பின்னர் அவரைக் காணவே இல்லை.

எத்தனையோ சிந்தனைகளோடு கீழ் அஹோபிலம் வந்து சேர்ந்தேன்.  நல்ல பசி தாகமும் நாக்கை வாட்டியது.  ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

பிரஹலாத வரத லக்ஷ்மி நரசிம்மர் சன்னதிக்கு வந்த போது ஒரு தட்டில் எதையோ எடுத்துக் கொண்டு மேலே வாழை இலையால் மூடி அது காற்றில் பறக்காவண்ணம் வலது கையால் அமுக்கிப் பிடித்த படி கோயிலில் பணிபுரியும் ஒரு சிப்பந்தி போல் ஒருவர் என்னருகே வந்தார்.

"நீங்கள்" என்று முதலில் தெலுங்கில் கேட்டவர் "தமிழ்காரர்தானே" என்று பின்னர் தமிழில் கேட்டார்

"மெட்ராசிலிருந்து வருகிறீர்களா?"

"ஆமாம்"

"உங்கள் பெயர்"

சொன்னேன்.

அடுத்த நிமிஷம் "உங்களுக்குத் தான் கொடுக்கச் சொல்லி உத்திரவு' என்று மகிழ்ச்சியோடு சொல்லி தன் கையோடு கொண்டுவந்த தட்டை என்னிடம் கொடுத்தார்.

இலையைத் திறந்து பார்த்தேன்.  நிறைய வறுத்த முந்திரி பருப்புகளைப் போட்டு நெய்யோடு சுடச் சுடச் சர்கரைப் பொங்கலும் இன்னொரு பக்கத்தில் கமகமவென்று ஆந்திராவுக்கே உரித்தான காரசாரமாய் புளியோதரையும்.  கிஸ்மிஸ் பழம், திராட்சைப்பழம் சகிதம் கலந்த தயிர் சாதமும் இருந்தது.

கும்பிடப் போன சாமி குறுக்கே வந்தது போல மலையிலிருந்து கீழே இறங்கிய எனக்கு ஏற்பட்ட பசிக்கு இப்படிப் பகவானே கொடுத்தனுப்பிய பிரசாதம் போல் இருந்தது.

"யார் கொடுக்கச் சொன்னார்" என்று கூட அப்போது இருந்த நிலையில் எனக்குக் கேட்கத் தெரியவில்லை.  மனதிற்குள் ஆயிரமாயிரம் நன்றியைச் சொல்லிவிட்டு அவசர அவசரமாக முழுங்கினேன்.  அந்த நேரத்தில் அந்தப் பிரசாதம் தேவாமிர்தமாக இருந்தது என்பதுதான் உண்மை.

அருகிலுள்ள குழாயில் கையை அலம்பி தட்டையும் அலம்பிவிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

இதுவரையிலும் அந்த இடத்தில் நின்று இருந்த அந்த நபரைக் காணவில்லை.  அவர் யார் எதற்காக என்னைத் தேடி வந்து சிற்றுண்டியைக் கொடுத்தார்.  யார் சொல்லி இந்தப் பிரசாதம் வந்தது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை யாருக்கோ கொடுக்க வேண்டிய பிரசாதத்தை இடம் மாறி எனக்குக் கொடுத்து விட்டாரா? அப்படிக் கொடுத்திருந்தால் எதற்காக என் பெயரைக் கேட்பானேன் என்று இப்போதுதான் என் சிற்றறிவு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.

எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.  வந்தாச்சு.  ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தாகிவிட்டது.  இன்னும் ஒரு நாள் இருந்தது.  மறுபடியும் அஹோபிலம் மேல் மலையேறி நன்றாகத் தரிசனம் செய்துவிட்டு மத்யானத்திர்க்குள் கண்டிப்பாகக் கீழே இறங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சாப்பிட்ட அசதியும் மலையிலிருந்து இறங்கி வந்த அசதியும் ஒன்றாகச் சேர அருகிலுள்ள கோயிலுக்குரிய ஒரு அறையில் கண்ணயர்ந்து விட்டேன்.

விடியற்காலை நான்கு மணிகெல்லாம் விழிப்பு ஏற்படவே, சட்டென்று எழுந்தேன்.  வழக்கம் போல மனம் உடல் இதனைச் சுத்தம் செய்து கொண்டு பிரம்ம முகூர்த்தத்தில் அகஸ்தியரின் நாடியைப் புரட்டினேன்.

அப்போது என் மனதில் தூம கேது பற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணம் தோன்றவில்லை.  என்னை பயமுறுத்திய அந்த ஓநாய் ஏன் அங்கு வந்தது?  அப்போது எனக்குத் தைரியம் தந்த பெரியவர் யார்?  அது மட்டுமின்றி கீழ அஹோபிலத்தில் என் பசியைத் தீர்த்து வைத்தது எப்படி?  யாரால் கோயில் பிரசாதம் கொண்டு கொடுக்கப் பட்டது என்பதைத் தான் அகஸ்தியரிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

கேட்டேன்.

"அஹோபில மடத்திற்கு முழுமையான பக்தியோடு வந்திருக்க வேண்டும்.  அப்படி நீ வரவில்லை.  திருப்பதியிலே நடந்ததையும் அங்கு அப்போது இருந்த அஹோபில மேலாளரிடம் சொன்ன வாக்குறுதியை அலட்சியம் செய்தாய்.  உனது தங்கைகளின் திருமணத்தை திருப்பதி அஹோபில மடத்தில் நடத்த ஒப்புவித்துக் கொண்ட நீ,  பின்னர் சூழ்நிலையால் முற்றிலும் மறந்து விட்டாய்.

அன்றைக்கு அவருக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே அந்த மலையில் துஷ்ட மிருகக் குரலால் பயமுறுத்தினார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.  முழுமையான பக்தியைத் தொலைத்து விட்டு மனசுத்தம் இல்லாமல் இந்த அஹோபிலத்திர்க்கு வந்தால் உனக்கு நினைத்த காரியம் நடக்காது.  தெய்வ தரிசனமோ அல்லது அகஸ்திரோட அருளும் கிடைக்காது.  இது உனக்கு மட்டும் அல்ல.  இந்தப் புனிதமான இடத்திற்கு வரக்கூடிய அத்தனை பேர்களுக்கும் கொடுக்கின்ற எச்சரிக்கை தான்.

இரண்டாவது அந்த ஸ்தம்பத்தை பிடித்துக் கொண்டு "லக்ஷ்மி நரசிம்மா என்னை காப்பாற்று என்று உயிருக்குப் பயந்து அகத்திய ஜீவ நாடியையும் தூக்கிப் போட்டு முழுமையாகச் சரண் அடைந்து வேண்டினாய்.  இது தான் சரணாகதித் தத்துவம்.  அது உனக்கு இதுவரையில் முழுமையாக ஏற்ப்படவில்லை. நேற்று தான் ஏற்பட்டது.  இதற்கும் அந்த லக்ஷ்மி நரசிம்மரின் லீலைதான் காரணம்.  இதை எல்லாம் புரியாமல் உயிருக்குப் பயந்து துணைக்கு வர அந்த நபரை அழைத்தாயே அந்த உருவத்தை லக்ஷ்மி நரசிம்மரின் அமர்ந்த நிலையில் ஒப்பிட்டுப் பார்.  அது யாருடைய லீலை என்பது தெரியும்" என்று ஒரு நாழிகை நிறுத்தினார்.  என்னை ஆயிரம் சவுக்கடி கொண்டு 'பளார் பளார்" அடிப்பது போல் தோன்றியது.

உண்மையில் நான் அஹோபிலத்திர்க்குப் புறப்படும் பொழுது வீட்டில் பொய் சொல்லி விட்டுக் கிளம்பியது, ரயிலில் உள்ள பயணிகளிடம் என்னை "மேதாவி" என்றெண்ணி மகான்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லி எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

உளமார நான் அஹோபில லக்ஷ்மி நரசிம்மரைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்துப் பிரார்த்தனை செய்யவே இல்லை.  அந்தத் தவறுக்கு லக்ஷ்மி நரசிம்மரோடு அகஸ்தியரும் கொடுத்த தண்டனை இதுதானோ என்று எண்ணினேன்.

மறுபடியும் ஏட்டைத் திருப்பினேன்.  ஏனோ அகஸ்தியர் அதில் வரவே இல்லை.

சித்தன் அருள் ................. தொடரும்!  

Thursday 3 January 2013

சித்தன் அருள் - 105

வணக்கம்!  சித்தன் அருளை மறுபடியும் தொடருவோம்!

கேது என்றால் கெடுதல் செய்து கொண்டு ஞானத்தை ஓட்டுபவன் என்பது பொருள்.  தூம கேது என்றால் தேசத்திற்கு ஒரு கஷ்டத்தைக் கொடுத்துப் பின்னர் சந்தோஷமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பது பொருள்.

பழங்கால ஓலைச் சுவடிகளில் வான சாஸ்திரத்தைப் பற்றி முனிபுங்கவர்கள் சொன்ன இந்த அமுதமான வாக்கியம் இன்றளவும் நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது.  நம்பாதவர்களைக் கூட நம்ப வைக்கும் இந்த இயற்கையின் முன் அறிவிப்பை நமது பண்டைய புராணங்களிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் தேசத்திற்கு ஆபத்து வந்துவிடப் போகிறது என்று யோசித்தேன்.  பாகிஸ்த்தான் நம் மீது படை எடுக்கும் அல்லது சைனா வாலை ஆட்டி ஏதேனும் உபத்திரவத்தைத் தரும் அல்லது இயற்க்கை சீற்றம் பொங்கி மக்களை வறுமையால் வாட்டி எடுக்கும்.  பூகம்பம் தோன்றலாம்.  பயிர்கள் மழையால் நாசமடயலாம்.  ஆன்மீகப் பக்தி குறையும்.  நாட்டில் ஒழுக்கமின்மை கொடி கட்டிப் பறக்கும்.  கற்பழிப்பு, கொலை, கொள்ளை அடிக்கடி நடக்கும்.  இதைத்தவிர வேறு என்ன நடந்துவிடப் போகிறது என்று என் சிந்தையில் தோன்றியது.

ஆனால் ...........

அகஸ்தியரோ வானத்தில் வடகிழக்குத் திசையை அசையாது பார் தூம கேது பளிச்சென்று தெரியும் என்று சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார்.  நானும் வானத்தின் வடகிழக்குத் திசையைப் பார்த்தேன்.

சற்று முன்பு தோன்றியது போல் அதே வால் நட்சத்திரம் மறுபடியும் தோன்றியது.  இது முன்பு தெரிந்ததை விட சற்றுப் பெரியதாகவும் ஆனால் வெகு சீக்கிரத்தில் கண்ணில் தென்பட்டு மறைந்து விட்டது.

பிறகு பலமுறை முயற்சி செய்து பார்த்தும் கண்ணில் தென்படவே இல்லை.  அப்படியே விட்டுவிட்டேன்.

காலைப் பொழுதில் ரம்மியமானக் காட்ச்சிகள் பல தெரிந்தாலும் என் மனதில் அந்த வால் நட்சத்திரம் பற்றியச் சிந்தனைகள் அரித்துக் கொண்டிருந்தது.  ரயில் அடுத்த பிளாட்பாரத்தில் நின்றதும் ஆங்கில பத்திரிகை ஒன்றை வாங்கிப் பார்த்தேன்.  அதில் வால் நட்சத்திரத்தைப் பற்றி வானிலைச் செய்தியாக சிறு குறிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.  மாலை செய்தித் தாளில் விளக்கமாகவும் வந்திருந்தது.

இதில் ஒரு திருப்தி.

நேற்றிரவு நான் கண்டது கனவல்ல.  அது உண்மைதான் என்பதால் இனிமேல் தைரியமாய் இதை வெளியில் சொல்லலாம் என்பதில் ஒரு சந்தோஷம்.  அகஸ்தியர் ஜீவநாடியில் இதுப்பற்றிக் கேட்டபொழுது "சிங்கமாய் குடிலில் யாம் விளக்குவோம்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.  அதாவது நரசிம்மப் பெருமாளான அஹோபிலக் கோயில் சன்னதியில் விளக்கமாகச் சொல்கிறேன் என்பது அர்த்தம்.

ஒரு வழியாக அஹோபில மடம் போய்ச் சேர்ந்தேன்.

அஹோபிலம்.

இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் அஹோபிலம்.   ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தன்னுள் அடக்கி இன்றைக்கும் லக்ஷ்மி நரசிம்மர் இரவு நேரத்தில் மட்டுமல்ல பலசமயம் பகலில் கூட நடமாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான தலம்.

பரந்து விரிந்த பசுமையான மலைகள், வானத்தை முட்டும் அந்த மலையின் மீது கண்ணிற்கு எட்டியதூரம் செடி கொடிகளால் போர்த்தப் பட்டு இயற்கையின் செழிப்பு இதுதான் என்று அனைவருக்கும் எடுத்துக் காட்டும் விதத்தில் அஹோபிலம் விளங்குகிறது.

இந்த அஹோபிலத்தில் நவ நரசிம்மர் தரிசனம் காணலாம்.  கீழ் அஹோபிலம் ஐந்து வகை நரசிம்மர்ரைக் கொண்டது.  பிரஹலாத வரத லக்ஷ்மி நரசிம்மர், பார்கவா நரசிம்மர், ஸ்ரீ சத்ரவட நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர் என்று ஐந்து வாகான நரசிம்மர் சன்னதி உண்டு.

கீழ் மலையிலிருந்து மேல் அஹோபிலம் என்பது சுமார் பத்து கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது.  இந்த இடம் இன்றைக்கும் பிரபலமாக விளங்குவதற்கு காரணம் ஸ்ரீ உக்ர நரசிம்ஹ சுவாமி சுயம்புவாகக் குகையில் தோன்றி அருள் பாலிப்பதாகவும், ஸ்ரீ கருடன், மகாலட்சுமி, பிரகலாதர் போன்றோர் ஆண்டாண்டுகளாக இங்கு கடும் தவம் செய்து நரசிம்ம சுவாமியை நேரில் தரிசனம் கண்டதாகவும் உள்ள புண்ணிய குகை.

இந்த மேல் அஹோபிலத்தில் உக்ர நரசிம்மர், ஸ்ரீ பாவனா நரசிம்மர், ஸ்ரீ வராஹ நரசிம்மர், ஸ்ரீ ஜ்வால நரசிம்மர், பவ நாசினி உற்பத்தி ஸ்தலம், உக்ர ஸ்தம்பம், ஸ்ரீ மாலோல நரசிம்மர், ஸ்ரீ ப்ரஹலாதர் குகை என்பது மிகவும் முக்கியமான இடம்.

அஹோபிலத்திற்கு அகஸ்தியர் என்னைப் போகச் சொன்னாரே தவிர இந்தப் புனிதமான இடத்தில் நின்று பிரார்த்தனை செய்தால் நன்மைகள் கிடைக்கும் என்று ஒரு போதும் சொல்லவில்லை.

அஹோபிலம் சென்றால் அங்குள்ள பதிமூன்று புண்ணிய இடத்தையும் கண்டுவிட்ட பிறகுதான், பின்னர் தன ஜீவநாடியில் நல்வாக்கு தருவார் என்று தோன்றியது.  மிகவும் பயபக்தியோடு முறைப்படி ஒவ்வொரு சந்நிதிக்குள் சென்று லக்ஷ்மி நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து வந்தேன்.

மலை மீது ஏற ஏற எனக்கு ஒரு திடீர் பயம் ஏற்பட்டது.

கூட்டம் அதிகம் இல்லை.  தற்காத்துக் கொள்ள எந்த ஆயுதமும் இல்லை.  துணைக்கு என்னுடன் எவரும் வரவில்லை.  இந்த மாதிரியான மலைகளுக்குச் செல்லும் பொழுது துணை இல்லாமல் செல்வது என்பது சரியல்ல என்று பின்பு தான் தோன்றியது.

மலை மீது நடக்கும் பொழுது ஜாக்கிரதையாக அழுத்தமாகக் கால்களைப் பதிக்க வேண்டும்.  பாறைகளில் வழுக்கிவிட்டால் அவ்வளவுதான், அதோகதி.  அதிர்ஷ்டம் இருந்தால் தப்பிக்கலாம்.

அந்த மலைகள், செடிகளால் நெருக்கமான மரங்களால் உண்டாக்கப் பட்டது.  எனவே துஷ்டமிருகங்கள் பல இங்கு சுதந்திரமாக உலாவிக் கொண்டு வருவதால் மிகவும் எச்சரிக்கையாகப் பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

இந்த அஹோபிலத்திற்கும் திருப்பதிக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருக்கிறது.  அதி சேஷனின் தலையாகத் திருப்பதியும், ஆதி சேஷனின் வாலாக ஸ்ரீ சைலமும், அஹோபிலம் ஆதிசேஷனின் மத்தியப் பகுதியாகவும் இருக்கிறது என்பதால் தான் அன்றே எனக்குத் திருப்பதியில் அஹோபிலம் சென்று வா! என்று உத்திரவு வந்தது என்று எண்ணிக் கொண்டேன்.

ஹிரண்ய கசிபுவின் வயிற்றைக் கிழித்த பகுதி ஆதி சேஷனின் அமைப்பில் இருக்கும்.  மலையின் வயிற்றுப் பகுதி என்பதால் அந்த ஜ்வால நரசிம்மர் சன்னதியில் மிகவும் பக்தி ஸ்ரத்தையோடு அமர்ந்து அகத்தியரின் ஜீவ நாடியைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

ஏகப்பட்ட விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திரைக் கதையிலே வருவது போல் அப்படியே வரிக்கு வரி அகஸ்தியர் எடுத்துக் காட்டிவிட்டு "இது யுத்தம் நடந்த இடம்.  இங்கு எதையும் உன் பொருட்டு உரைக்க மாட்டேன்.  இங்கிருந்து சில அடி தூரத்தில் உகிர ஸ்தம்பம் ஒன்று உண்டு.  அந்த ஸ்தம்பத்தின் அருகில் நரசிம்மரின் இரண்டு பதங்கள் இருக்கும்.  அந்த பாதத்தை தொடு.  ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்புத் தன்மை உன் கைக்குக் கிடைக்கும்.  அங்கு அமர்ந்து அகத்தியனை நோக்கி வணங்கு.  நீ கேட்க்கும் அத்தனை கேள்விகளுக்கும் நரசிம்மர் சுவாமியின் பாதத்திலேயே யாம் பதில் உரைப்போம்" என்றார்.

அகத்தியர் சொன்னபடியே உக்ர ஸ்தம்பத்திலிருந்து கீழே பார்த்தேன்.  ஒரு இரும்பினால் ஆன கம்பம் இருந்தது.  அதனடியில் ஸ்ரீ நரசிம்மரின் இரண்டு பாதங்களும் இருந்தன.

அந்த இடத்திற்கு வந்து பவ்யமாக அந்தப் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு நாடியைப் பிரித்து பார்க்கும் முன் திடீரென்று ஒரு இனம் புரியாத மிருகத்தின் சப்தம் என் காதில் கேட்ட்து.

வியர்த்து வெலவெலத்துப் போனேன்.  ஆட்கள் நடமாட்டம் வேறு பக்கம்.  நான் அமர்ந்திருக்கும் இடத்தின் பக்கம் ஒருவர் கூட இல்லை.  துஷ்ட மிருகங்கள் அந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் வரும் போகும் என்று ஏற்கனவே பலர் சொல்லி இருந்ததால் பயம் அளவுக்கு மீறி அதிகரித்தது.

அப்படி ஏதேனும் வந்துவிட்டால் எப்படித் தப்பி ஓடுவது என்று அச்சம் ஏற்பட்டது.  சுற்று முற்றும் பார்த்தேன். எந்த வழியும் எனக்குத் தோன்றவில்லை.  அப்படியொரு துர்பாக்கியம் ஏற்பட்டால் இதற்கு வேறு எதுவும் செய்யமுடியாது.  அப்படித்தான் என் விதி முடிய வேண்டும் என்று இருந்தால், அகத்தியர் தான் இதற்கு முழுப் பொறுப்பு என்று பயத்தின் காரணமாக அகத்தியரைச் சபிக்கவும் செய்தேன்.

சுமார் அரை மணி நேரம் அந்தக் கொடிய மிருகத்தின் சப்தம் விட்டு விட்டு எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.  சுற்றும் முற்றும் பார்த்தேன்.  ஒருவர் கூட என் கண்ணில் தென்படவே இல்லை.  ஒரு வேளை அவர்களுக்கு விஷயம் தெரிந்து பாதுக்காப்பான இடத்திற்குச் சென்று விட்டார்களோ என எண்ணிக் கொண்டேன்.

அந்த இடத்தில் நான் வந்த நேரம் சற்று இருள் கவ்வும் நேரம்.  காடுகளில் மலைகளில் இந்த இருள் கவ்வும் நேரத்தில் தான் இரைத் தேடி மிருகங்கள் புறப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  இங்கும் அப்படி இரையைத் தேடி துஷ்ட மிருகம் ஏதாவது வந்துவிட்டதா? என்ற கிலி என்னைப் பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டது.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று ஒரு வழியாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு நாடி படிக்க ஆரம்பித்தேன்.

முதல் பத்து நிமிடம் நாடியிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.  சரிதான் அகத்தியரும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்று "லக்ஷ்மி நரசிம்மா என்னைக்  காப்பாற்று" என்று அந்த இரும்பினால் மூடப்பட்டிருந்த கம்பத்தை மிகப் பலமாகப் பிடித்துக் கொண்டேன்.

நான் படிக்க இருந்த ஜீவநாடி அந்த நரசிம்மரின் பாதத்தின் மீது கன்னா - பின்னாவாக விழுந்து கிடந்தது.  எவ்வளவு நேரம் நான் அப்படி அந்தக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருந்தேனோ எனக்குத் தெரியாது.  யாரோ ஒருவர் என்னைத் தட்டி எழுப்பிய பின்பு தான் சுய நினைவுக்கு வந்தேன்.

தெலுங்கில் கேட்டார், நான் யார் என்று!

நான் எல்லா விஷயத்தையும் தமிழில் சொன்னேன்.  நான் தமிழில் பேசிய பின்பு அவரும் தமிழில் பேச ஆரம்பித்தார்.  எனக்கு பெரும்பலம் கிடைத்தது போன்று இருந்தது.  "அந்த மிருகம் என்ன மிருகம்? அதன் சப்தம் கொடூரமாக இருந்ததே" என்றேன்.  நடந்த கதையைச் சொல்லி "அது காட்டு ஓநாய் சப்தம்.  சில நாட்களாக இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறது.  நீங்கள் தப்பித்தீர்களா?" என்றார் அவர்.

"ஓநாயா?" என்றேன்.

"ஆமாம். பெரும்பாலும் ஓநாய் பயங்கரமான துஷ்ட மிருகம்.  சிங்கம், புலிக்கு முன்னால் தைரியமாகச் செல்லும்.  பயம் கிடையாது.  பொதுவாக அவை கூட்டம் கூட்டமாகத் தான் செல்லும்.  அவற்றில் ஏதோ ஒன்று கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியாக வந்து விட்டது போலும்.  நான்கு நாட்களாக அதற்கு தீனி கிடைக்கவில்லை.  கோபத்தில் இங்கு வருகிற போவோரைக் கண்டால் கடித்துக் குதறிவிடுகிறது.  "பசி" வந்தால் ஓநாயகளுக்குக் கொஞ்சமும் தாங்காது.  அதனைப் பிடித்து உள் காட்டு மலைக்குள் கொண்டு விட முயற்சி செய்தும் பயனில்லாமல் போய் விட்டது" என்று ஒரு கதையை சொல்லி முடித்தார்.

"நல்ல வேளை தப்பித்தோம்" என்று இறைவனுக்கு நன்றி சொல்லி எனக்குத் துணையாக வந்தவரிடம் "பக்கத் துணையாக கீழ் அஹோபில மடம் வரை வரமுடியுமா?" என்று கேட்டேன்.

"எந்த துஷ்ட மிருகமும் இனி இங்கு வராது.  கோயிலைச் சேர்ந்தவர்கள் இந்நேரம் அதனை தீபந்தத் துணை கொண்டு விரட்டியிருப்பார்கள்.  இனி நீங்கள் மிகத் தைரியமாகக் கீழ் மலைக்குச் செல்லலாம்" என்று தைரியம் கொடுத்து செல்ல முயற்சித்தார்.

அவரைத் தடுத்து நிறுத்தி "இங்கிருந்து தனியே செல்ல பயமாக இருக்கிறது.  மனிதக் கூட்டம் யாதேனும் வந்தால் அவர்களோடு சென்று விடுகிறேன்.  அதுவரை எனக்குத் துணையாக இருக்கும்படி" காலில் விழாக் குறையாக வேண்டிக் கொண்டேன்.

அரை குறை மனதோடு ஒப்புக் கொண்ட அவர், அந்த உக்கிர ஸ்தம்பத்தின் கற் பாதத்தில் விழுந்து கிடந்த அகத்தியர் நாடியைக் காட்டி "இதை இங்கேயே விட்டு விட்டுப் போகிறீர்களே.  இதைப் படித்துவிட்டு தானே இங்கிருந்து செல்ல வேண்டும்.  அதை முதலில் அழகாக எடுத்துப் படியுங்கள், பின்பு நான் வருகிறேன்" என்று சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

பயத்தின் காரணமாக நான் ஜீவநாடியை அடியோடு மறந்து போனேன்.  சுட்டிக் காட்டி நாடியைப் படிக்கச் சொன்ன இவர் யார்? என்று பிரமித்து நின்றேன்.

சித்தன் அருள் .............. தொடரும்!