​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 31 March 2014

கல்லாரில் சித்தர்கள் பூசை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்திரை மாதம் என்பது சித்தர்கள் அருள் தரும் மாதம் என குறிப்பிடுவார்கள். அந்த சித்திரை மாத பௌர்ணமி அன்று (15/04/2014), சித்தர்களுக்கு சிறப்பு பூசை செய்வதற்காக "கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில்" ஏற்பாடு செய்து வருகிறார், திரு தங்கராசன் சுவாமிகள். அவரின் அழைப்பிதழ் கீழே தருகிறேன்.

அனைவரும் சென்று கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற்று வாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

My Dear Daughter/Son, 

Chithrai month in Tamil Calendar is consider as Siddargal month. 

In this connection Siddargal Vizha (function) சித்தர்கள்  விழா will be celebrated at Sree Agathiar Gnana Peedam, Kallar on Chitra Pournami (Full Moon Day) i.e.15.04.2014. 

A special pooja will be conducted for Siddargal. 

All are invited to attend pooja and get the blessings of Siddhas. 


Sree Agathiar Gnana Peedam, 
2/464-E, Agathiar Nagar, 
Kallaru, Thooripalam, 
Mettupalayam, Coimbatore, 
Tamil Nadu, India. 
Pin-641305. 
Mobile:9842027383 , 9842550987 

Thursday 27 March 2014

சித்தன் அருள் - 168 - விளகேற்றுவது, துறவு வாழ்க்கை, சித்தன் ஆக ஆசி!

[படம் நன்றி-திரு.ஷண்முகம் ஆவுடைஅப்பா அவர்களுக்கு]

கருவிலே, தலையெழுத்து என்று ஒன்று உண்டென்றால், அது இவன் தலை எழுத்துதான். உங்கள் நாகரீக விஞ்ஞானப்படி எடுத்துப் பார்த்தால், முன்ஜென்மத்துக்கும், இவனுக்கும், அன்மீகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.  கோதாவரி நதிக்கரையிலே, ஆங்கொருநாள், ராமபிரானுக்கு, ஒரு லட்சம் விளக்கேற்றி ஆச்சரியப் பட்டான். அடுத்தமுறை விளக்குதனை ஏற்றும் பொழுது, பெரும் வெள்ளம் சூழ்ந்ததடா! யாருமே உள்ளே நுழையமுடியாது. கோதாவரி ராமனை பற்றி உங்களுக்கெல்லாம், தெரியுமோ, தெரியாதோ. அது, சிறு குன்றுமேல் அமர்ந்திருக்கிற, ராமர் கோயில். கீழே, இடுப்பளவுக்கு, தண்ணீர் வந்து, ஜனங்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, இன்னவனோ, ஆங்கொரு ஒரு லட்சத்து எட்டாயிரத்து விளக்குகளை ஏற்ற, அதற்கான, நெய்யையும், எண்ணையையும், தலையிலே சுமந்து கொண்டு வந்து, காத்து கிடக்கிறான்.  அன்றொருநாள், கிருஷ்ண பரமாத்மா, நள்ளிரவில், சிறை சாலையில் பிறந்த பொழுது, அவனை அந்த சிறை சாலையில் இருந்து வெளியே கொண்டு வரும் பொழுது, நல்லதொரு மழை பெய்தது. மழை பெய்த பொழுது, ஆதிசேஷன் அங்கே வந்து, கிருஷ்ணனை மழையிலிருந்து காப்பாற்றி, தப்பித்ததாக வரலாறு. புராண காலத்தில் நடந்த உண்மையும் கூட. 

அது போல, இன்னவனும், ஒரு லட்சத்து, எட்டாயிரத்து விளக்குகளை, நெய்யும், எண்ணையும் தலையில் தூக்கிக் கொண்டு மலையை நோக்கி நடக்கையில், வெள்ளம் புகுந்து, இதையெல்லாம் கரை ஓடி எப்படியடா ஏற்றுவேன் என்று எண்ணும் பொழுது, என்ன நடந்தது என்று தெரியாது. யாரோ வந்து, தலையில் இருக்கிற நெய்யை அப்படியே அலக்காக தூக்கி, அந்த மாடிப்படி போல் செல்லுகின்ற மலைப்பாதை படியிலே, ஓரத்திலே வைத்துவிட்டான், தண்ணீரிலிருந்து தப்பியது. இன்னவனுக்கும், ஒரு துண்டை தூக்கிப்போட்டு, கையை பிடிக்கச்சொல்லி, அந்த துண்டையும் பிடித்துக் கொண்டு, மேலேறி கரை ஏறினான். அது போல இவனுக்கு, உதவியாளர்களாக இருந்தவர் இருவர். அவர் கையிலும், விளக்குகள் இருந்தது, எண்ணைகள் இருந்தது. அவர்களையும், அழகாக கை தூக்கிவிட்டு, வெள்ளத்தில் சிக்காமல் மேலே ஏற்றி, ஒரு லட்சத்தி எட்டாயிரம் விளக்குகளை, ஏற்றினான். கொட்டுகின்ற மழையிலும், அன்றைக்கு, விளக்குகள் எரிந்ததடா! அது தாண்டா ஆச்சரியம்.  ஒரு விளக்கு ஏற்றினால், சற்று முன் காலையில் கூட, அழுகுணி சித்தன் சமாதிக்கு முன்பு கூட, இன்னவன் ஆங்கொரு ஐந்துமுக நெய் விளக்கை ஏற்றும் பொழுதெல்லாம், வாயு பகவான் வந்து கெடுத்தாலும் கெடுப்பான், விளக்கு அணையும் என்று சொன்னபோதெல்லாம், அப்பொழுதுதான் அகத்தியன் நினைத்துக் கொண்டேன், எப்படிப்பட்ட சூழ்நிலையில் விளக்கு ஏற்றி இருக்கிறான், எந்த கொட்டுகின்ற மழையில் ஒரு லட்சத்தி எட்டாயிரம் விளக்குகளை ஏற்றி ஆனந்தப்பட்டானே, அப்பொழுது வருண பகவான், இவனுக்கு கை கொடுக்கவில்லையா? அந்த காட்சி தான் காலையிலே அகத்தியனுக்கு நினைவுக்கு வந்தது, காலையிலேயே சொல்லியிருக்க வேண்டும், அது தனிப்பட்ட மனிதனை பெரிது படுத்துவதாக ஆகிவிடும், எல்லோருக்கும் முன் பெரிது படுத்துவது என்பது சங்கடத்துக்கு உள்ளாக்கலாம். ஆனால் நடந்ததை யாரும் மறைக்க முடியாது, மறுக்கவும் முடியாது என்பதால்த்தான், இவனுக்கு அப்படிப்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது. இவன் விளக்கேற்றியது ஒரு முகம் இல்லை, யாருக்காக எண்ணி விளக்கேற்றினாலும் சரி, உலகத்துக்கு நினைத்து  விளகேற்றினாலும் சரி, தனக்காக விளகேற்றினாலும் சரி, அந்த விளக்கு எரிய எரிய, அவன் குடும்பம் மட்டுமல்ல, அவன் யாரை எல்லாம் நோக்கி கேட்கிறானோ, யாருக்கெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வரவேண்டும் என்று அன்றாடம் மனதில் நினைக்கிறானோ, அவை எல்லாம் உடன் நடக்கும்.

இன்றைக்கும் தன் அருகில் சரி பாகமாக பிரித்துக் கொண்டு தன் அறையில் இருக்கின்ற சாதாரண ஏழைகளைப் பற்றி நினைத்தான் அவன். அதெல்லாம், அவனுக்கும் அந்த புண்ணிய பலம் போய் சேரும். இவன் ஏற்றுகின்ற புண்ணியம், ஏற்கனவே சொன்னேனே, மூன்று ஜென்மமாய், இவர்கள் குடும்பத்துக்கு எந்த வித தொல்லையும் தராமல், அற்புதமாக, சிறப்பாக, ஆனந்தமாக ஒப்பிடும்படி வாழ்க்கை அமையும் என்று. இருந்தாலும், அன்னவன், எது சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை. ஏன் என்றால், அவன் உடம்பிலே ஆங்கொரு சிறு சிறு கட்டிகள் அங்கே இருப்பதால் தான், ஒன்றரை ஆண்டுகளாக, அவனும் சொல்லிப் பார்க்கிறான், அகத்தியனும் மனம் இறங்குவதாக இல்லை.

உண்மையிலேயே, எத்தனையோ காரியங்களை சாதிக்கின்ற அகத்தியன் அந்த கட்டியை கரைத்திருக்கவேண்டும், கரைக்கவில்லை என்பதால், மனதுக்குள் ஒரு ஏக்கம் இருக்கலாம். தவறு இல்லை. எதற்காக அவனை சுற்றி சுற்றி வருகிறேன் என்றால், அவனுக்கும் இந்த "மூலத்துக்கும்" சம்பந்தம் உண்டு. இல்லையென்றால், அகத்தியன் இந்த காரியத்தை சொல்லமாட்டேன், வேறு வழியில் சென்றிருப்பேன்.  ஏனடா! அகத்தியனை பார்க்கின்ற நேரம், அகத்தியனை கேட்கின்ற நேரம், அகத்தியன் பதில் சொல்லுகின்ற நேரம், எல்லாம், மூலம் நட்சத்திரத்தையே சுற்றி சுற்றி வருவதால்தான், முன் ஜென்மத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவன் இவன். அதைத்தான் இப்பொழுது ஞாபகப் படுத்தி, இவன் செய்கின்ற, இந்த விளக்குளை எல்லாம், விளக்கேற்றி வருகிறானே, எவ்வளவு புண்ணியங்களை சம்பாதிக்கிறான் என்பதை நினைக்கும் பொழுது, அவனுக்கும், முதுகிலே தட்டிக் கொடுத்து வாழ்த்தவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வார்த்தைகளை சொன்னேன். என் எதிரே இருக்கின்ற இருவரும் சித்தத் தன்மையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, அகத்தியன் பால் கொண்ட அன்பால் ஓடோடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு துணையாக, குரங்கின் வாலைப் பிடித்துக் கொண்டு குட்டிக் குரங்கு வருவது போல, அவர்களுக்குப் பினால், ஆங்கொரு வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கின்ற சிறு பையனும், ஓட்டோடி ஒட்டிக் கொண்டிருக்கிறான். இதை எல்லாம் பார்க்கும் பொழுதுதான், அகத்தியன் அக மகிழ்ந்து போனேன் என்று காலையிலேயே சொன்னேன். அந்த நன்றிக்கு ஏதாவது நன்றி கடன் செய்யவேண்டும் என்று அகத்தியன் ஆசைப்பட்டு உங்களை எல்லாம் வரச்சொன்னேன். 

விதியை மாற்றுவது என்பது இயலாத காரியம். எல்லோரும் சொல்வார்கள், விதியை மாற்றுகிறேன் என்று. இயலாத காரியம். அகத்தியனால் முடியும். செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், யாருக்கும் எந்தவிதத்திலும், மனது புண்படாமல், பிரம்மாவுக்கும் சரி, விஷ்ணுவுக்கும் சரி, சிவனுக்கும் சரி, அவன் தொழிலில் குறுக்கிடாமல், அதே சமயம் அவனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அந்தப் பொறுப்பை அகத்தியன் எடுத்து, விதியை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ சின்னச் சின்ன பிரச்சினைகளை அன்றாடம் தாங்கிக் கொண்டு, வாழ்க்கையில் எங்கெங்கோ திசை மாறிப்போனவனை எல்லாம், இங்கே இழுத்து வந்து உட்கார வைத்திருக்கிறேன். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ சோகங்கள், நன்மைகள், வாழ்க்கையில், ஏமாற்றங்கள், தோல்விகள். அத்தனையும் உள்ளது. இல்லற வாழ்க்கையிலும் சரி, துறவர வாழ்க்கக்கயிலும் சரி. இல்லறத்தில் இருந்து கொண்டு துறவற வாழ்க்கை வாழ்பவர்கள் சிலர் கூட,  சரியாக தன கடமையை செய்யவில்லை என்பதில் அகத்தியனுக்கு வருத்தமே. ஆக, இந்த மண்ணில் சித்தன் நிலை என்பது வேறு. சித்த நிலைமை என்பது அற்புதமானது, அதை ஏற்கனவே உங்களுக்கு வழங்கிவிட்டேன்.  இன்னும் ஒரு சிலர் நெருங்கி வருவார்கள், அவர்களுக்கும் வழங்க தயாராக இருக்கிறேன். யாருக்கு  பாக்கியமோ, அகத்தியன் நான் இப்பொழுது சொல்லமாட்டேன்.  பொடிவைத்து பேசுவதில் என்ன லாபம் என்று கேட்க்காதே. சில சமயம் அகத்தியன் வாய் விட்டு சொன்னால் கூட, சில சமயம் நடப்பதில்லை என்பதால்,  இங்கே வரட்டுமே, பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறேன். ஆகவே, இல்லற வாழ்க்கையிலும், துறவர வாழ்க்கையை மேற்கொண்டாலும், இல்லற தர்மங்களை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது, என்பதுதான் அகத்தியன் கணக்கு. ஆகவே அவர்கள் யார் மனமும் புண் படக்கூடாது. எடுத்துவந்த கர்மங்களை நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது அகத்தியனுக்கு ஆசை. வாழ்க்கை என்பது முன் ஜென்ம கர்மவினை என்பது போல, கர்மாவை கழிக்க வேண்டும். பாவ கர்மா, புண்ணிய கர்மா என்று ரெண்டுவகை உண்டடா! பாவகர்மா இவர்களுக்கு இருந்தாலும், எப்போழுதுக்கு எப்பொழுது சித்தனையும், முனிவர்களையும் நாடி வந்த போதெல்லாம், அந்த பாப கர்மாக்கள் குறைந்து விட்டது.  இன்னும் சொல்லப்போனால், தைரியமாகக் கூட சொல்லலாம், இருந்தாலும் ஒரு சிறு செய்தி. இன்றைய தினம்தான், உங்கள் அனைவருக்கும், முன் ஜென்மத்திற்கும், மூன்று ஜென்மத்தின் பெரும் சுமை, இன்றைய தினம் காலையிலே அந்த தீர்த்தத்திலே குளிக்கும் பொழுது அத்தனையும் கழிந்துவிட்டது.

[இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் இது போல பாப சுமை கழிந்து போகட்டும் என்று அகத்தியரை வேண்டிக்கொள்கிறேன்.]
​​
சித்தன் அருள் ................. தொடரும்!

Sunday 23 March 2014

அந்தநாள்! >> இந்த வருடம்!


[கல்லாரில் அருள்புரியும் அகத்தியப் பெருமான்]

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அவரின் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், என் நண்பரை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம்.  அதில் மறைமுகமாக "அந்த நாள், இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம்.

நம் அனைவருக்குமே, அந்த நாள் இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று அங்கு சென்று இருந்து அவர்களின் ஆசிர்வாதம், நல் வாழ்க்கைக்காக வாங்க வேண்டும், என்ற எண்ணம் இருக்கும். ஒரு சில அடியவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த வருடம் அந்த நாட்களை தெரிவு செய்து தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

நம்பிமலை:- (எல்லோரும் கூடியிருந்து அளவளாவி மகிழ்ந்திருந்த நாள்)

  • 05/08/2014 - செவ்வாய் கிழமை, அனுஷம் நட்சத்திரம், சுக்ல பக்ஷ தசமி திதி.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

  • 06/08/2014 -  புதன் கிழமை, கேட்டை நட்சத்திரம், ஏகாதசி திதி.

திருச்செந்தூர் - (மூவரும் ஒரு சேர இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு வாழ்த்து தெரிவித்த நாள்)

  • 07/08/2014 - வியாழக்கிழமை, மூலம் நட்சத்திரம், த்வாதசி திதி.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும் கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்)

  • 04/11/2014 - செவ்வாய் கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம், சுக்லபக்ஷ த்ரயோதசி திதி.


Thursday 20 March 2014

சித்தன் அருள் - 167 - திருசெந்தூர் - முருகர், அனுமன் தரிசனம்!


உண்மையிலேயே முருகன் நீண்ட நாளைக்குப் பிறகு, இன்றைக்குத்தான் எட்டிப்பார்த்திருக்கிறான். அதுவும், அனுமன் தரிசனத்துக்காக இருக்குமோ என்று அகத்தியன் நான் ஐய்யுருகிறேன். ஏன் என்றால் கும்பாபிஷேகத்தின் போது முருகன் இங்கில்லை. அது தாண்டா எனக்கு மிக மிக வருத்தம். முருகனுக்கும் சற்று கோபம் அதிகம். ஒரு சிறு பழத்துக்காக தந்தையும் தாயையும் தூக்கி எறிந்துவிட்டு போன புராண கதைகள் எல்லாம் உங்களுக்கும் தெரியும். ஆனால், அப்படிப்பட்ட முருகனுடன் விளையாடி இருக்கிறார்கள். இதுவரை வராத சுனாமி கூட, முருகன் இல்லாத பொழுது உள்ளே நுழைந்தாலும் ஆச்சரியம் இல்லை. அடுத்து வரும் சம்பவங்கள், அப்படிப்பட்ட சம்பவங்களாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஆகவே, இன்றைக்கு எனக்கு என்ன பயம் என்றால், சற்று முன் முருகனை கண்டு பேசிய பொழுதெல்லாம், முகம், "செக்கச்செவேல்" என்று கோபத்திலே செம்பவழமாய் காட்சி அளித்தது. உங்களுக்கெல்லாம் அனுக்ரகம் பண்ணிவிட்டு அனுமனையும் கட்டி தழுவிவிட்டு, அமைதியாக நின்றாலும், மனதிலே இங்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு போதும் அவனுக்கு திருப்தியை தருவதாக தெரியவில்லை.

என்னப்பன் முருகனை, நீண்டநாள் கழித்துத்தான் இன்றைக்கு, அகத்தியன் யான் சந்திக்கிறேன். இதற்கு முன்னால், முக்கண்ணனும், மற்றவர்கள் பின்னாடியும் சென்று கொண்டிருந்தேன்.  ஒரு வேளை முருகப் பெருமானுக்கு என்னிடம் சிறிது கோபம் இருக்குமோ, இருக்காதோ? யான் அறியேன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், முருகன் கோபப்பட்டாலும் காரணத்தோடுதான் கோபப்படுவான், அவன் கோபப்பட்டாலும் அடுத்த நிமிடம் மாறிவிடுவான். திரும்பத் திரும்ப அன்றைக்கும் சொன்னேன், இன்றைக்கும் சொல்கிறேன், கோபம் என்பது வேறு, வருத்தம் என்பது வேறு. ஆக, முருகன் கோபப்பட்டால் நன்மையில் முடியும், வருத்தப் பட்டால் ஆபத்தில் முடியும். ஆனால், முருகன் கோபப்பட்டிருக்கிறானா, வருத்தப் பட்டிருக்கிறானா என்ற நிலையை அறிந்த பின் தான் உங்களுக்கு அருள் வாக்கை கொடுக்க வேண்டி இருக்கிறது. காரணம், நீங்கள் வந்த நாள் அருமையான நாள் என்று எப்போதுமே நான் சொல்லுவேன். இன்றைக்கும் அது பழுதில்லை, வினாயகனில் ஆரம்பித்து அனுமனில் முடிந்திருக்கிறது. 

புறப்படும் பொழுது விநாயகனுக்கு தேங்காய் வடல் போடச் சொல்லியிருந்தேன், உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ.  ஆனால், அங்கு பிரார்த்தனை செய்துவிட்டு, வந்தவுடன், விநாயக சித்தனை தானே முதலில் கண்டாய் நீ. விநாயக சித்தனையே, உன் ஆரம்பமாக வைத்துக் கொள். வினாயகனில் ஆரம்பித்து, அதாவது, பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது. இது தான் உண்மை. ஆக பிள்ளையாரை பிடித்தாய், அவனை கை பிடித்தாய், குரங்கு என்கிற அனுமன் இங்கு வந்திருக்கிறான், அவன் நட்சத்திரம் வந்து விட்டது. மூலம் நட்சத்திரம் அனுமனுடைய நட்சத்திரம், அனுமன் பிறந்தது புரட்டாசியில் தான் என்றாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் அவன் நட்சத்திரத்தின் போது, இங்கு வந்து முருகனை சந்தித்து, அவனுடன் மனம் விட்டு பேசி அளவளாவி, முருகனோடு, கை கோர்த்தது, ஆலிங்கனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இது வரலாறில் இல்லாத செய்தியடா! அந்த சமயத்தில் தான் நீங்களும் வந்திருக்கிறீர்கள், நானும் வந்திருந்தேன், அந்தக் கண்கொள்ளா காட்சியை நானும் பார்த்தேன். அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் பொழுதுதான், நீங்கள் ஐவரும் உள்ளே நுழைந்து வெளியே வந்தீர்கள். அங்கிருந்து வருகின்ற ஒளி வெள்ளம் உங்கள் ஐவர் மேனியிலும் பட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. அது முக்கியமான சம்பவம்.

இதற்கு முன்னர் நவக்ரகங்களை பற்றி சொல்லவேண்டும் என்று சொல்லியிருந்தேன். எனக்கு முன்னாலேயே, பிரளயம் எற்பட்டதர்க்கு பின்னாலும் கூட, 4000 வருஷங்களுக்கு முன்னால் கூட  நவ கிரகங்கள் அனைவரும் அங்கு தான் உட்கார்ந்திருந்து, தம் தம் மனைவியருடன் அமர்ந்து ஆனந்தப் பட்ட இடம், அந்த ஒரே இடம், அந்த இடம் தான். இதுவரை, புராணங்களிலோ, வரலாற்றிலோ, ஏதேனும் செய்தி கேள்விப்பட்டதுண்டா? நவக்ரகங்கள் எங்கு இருக்கின்றன? விஷ்ணுவை சொல்லுகிறான், சிவனை சொல்லுகிறான், பிரம்மாவை சொல்லுகிறான், மற்ற தெய்வங்களை சொல்லுகிறான். நவக்ரகங்கள் என்றைக்காவது, தம் தம் தம்பதிகளுடன் அமர்ந்து, ஆனந்தப் பட்ட காட்சி, எங்காவது வரலாறில் உண்டா? இல்லை. ஆனால், இங்கு தான், நீங்கள் சென்றீர்களே, அந்த கரும்குளத்தில் தான், நவக்ரகங்கள் இன்றைக்கும், தம்பதிகளோடு அமர்ந்து, பொது மக்களையும், முனிவர்களையும், முனி புங்கவர்களையும், சித்த புருஷர்களையும், இன்னும் பலர்களையும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது. அதுவும் ஒரு அற்புதமான பகலவன் தினம், ஞாயிற்றுக்கிழமை. மாலை பொழுதுதான் அவர்களுக்கு பலம் அதிகம். பகல் பொழுதில் நவக்ரகங்களுக்கு பலம் கிடையாது, சூரியன் ஒருவனை தவிர. மற்ற எல்லா கிரகங்களும், ராகு, கேதுவால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகுதான் அவர்களுக்கு பலம் ஏறும். நீங்கள் கரும்குளம் என்கிற புண்ணியத்தலத்துக்கு வந்த போதெல்லாம் அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்ததால், நவ கிரகங்கள் சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நவக்ரகங்கள், கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, சாபம் இடப்பட்டு, அதன் மூலமாகத்தான், புண்ணிய பூமியில் பிறந்த அத்தனை பேர்களும் தொல்லை பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சனியும், ராகுவும், கேதுவும் ஒன்று சேர்ந்து சந்தோஷ முகத்தோடு பார்ப்பது என்பது மிகவும் அபூர்வம். அந்த காட்சியை நான் அகத்தியன் இன்று கண்டேன். அது உங்களுக்கு தெரியாது. எப்போழுதுக்கு எப்பொழுது, ஆங்கொரு மைந்தன் ஐந்து திரி போட்டு விளக்கு ஏற்றினானோ, இருண்ட நிலை வெளிச்சத்துக்கு வந்தது. எனப்பன் முருகனுக்கு, தந்தைக்கு தந்தையான முக்கண்ணனும் அங்கு அமைதியாக காத்திருந்தான். யாருமே வராத இடத்தில் தாண்டா பாம்பு இருக்கும். பட்ட பகலில் நாலு பேருக்கு நடுவில், பாம்பும், தேளும், பூரானும், இன்னும் கொடிய விஷம் கொண்ட எதுவும் நடமாடாது. எனவே, நீங்கள் வந்த நேரம், அமைதியான நேரம். யாரும் கால் எடுத்து வைக்காத நேரம். ஒரு இருண்ட சூழ்நிலையில் தான், அங்கு ராகு கேது பலம் அதிகம். நீங்கள் உள்ளே நுழையும் போது இருட்டாக இருந்தது, விளக்கேற்றியது நவ கிரகங்கள் அத்தனைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொண்டன. அந்த மகிழ்ச்சியோடு "தசாஸ்து" என்று ஒரு வார்த்தை சொன்னாலே போதும், உங்களுக்கு ஜாதகம் வேண்டாம், பரிகாரம் வேண்டாம், கோவில் வேண்டாம், குளம் வேண்டாம். என் முன் அமர்ந்திருக்கிற மேஷத்திரு மைந்தனுக்கோ, ஆத்மா என்பது உள்ளே தான் இருக்கிறது, கோவிலில் இல்லை என்ற விடாப்பிடியான குணம் உண்டு. அதற்கு ஏற்றார் போல் தான் இன்றைக்கும் செந்தூர் கோவிலில் நடந்தது. அவனுக்கு மட்டுமா நடந்தது? பக்தியோடு, ஆசையோடு ஓடி வந்தவர்க்கெல்லாம், இந்த மானிட மைந்தர்கள் செய்கின்ற பணத்தாசையின் காரணமாக, இறைவனை கூறு போட்டு விற்கத் தொடங்கிய போது, முருகனே அங்கில்லை என்று சொன்னேன். இன்றைக்குத்தான் முருகன் இருக்கிறான். இன்னும் சில நாழிகையில் அவனும் கிளம்பி விடுவான். இங்கு செந்தூரில் வைத்து முருகப் பெருமான் இல்லை என்று சொன்னால், அது பெரும் புரளியாகிவிடும். இவன் யார் சொல்வதற்கு என்றெல்லாம் என்னை திட்டுவான், என்னை வாழ்த்தி வணங்கி, அன்றாடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிற அகத்தியன் மைந்தனுக்கும் அவப்பெயர் ஏற்படும். அங்கு கோவிலிலே, இன்றைக்கு ஏகப்பட்ட பாபங்கள் நடந்திருக்கிறது. என்னென்ன நடக்கக் கூடாதோ அத்தனையும் நடந்திருக்கிறது. அத்தனையோடு தான் முருகப் பெருமானை சுற்றி வந்து வேஷம் போடுகின்றார்கள். 

அங்குள்ள அந்தணர்கள் அத்தனை பேருமே "அயோக்கியர்கள்" என்று சொன்னால் வருத்தப் படக்கூடாது. அகத்தியனுக்கும், அந்தணர்களுக்கும் ஒருகால் தற்சமயம் பிடிப்பதில்லை. அதன் காரணமாக, இங்கு நடந்த சில செய்கைகளை பார்த்து ஒன்று சொல்வேன். இந்த அந்தணர்கள் இருக்கும் வரை, முருகப் பெருமான் நிச்சயம் அங்கு இல்லை, என்று அகத்தியன் எண்ணுகிறேன். முருகப் பெருமானும் இதை ஆமோதிப்பான் என்று நினைக்கிறேன். ஆக, முருகப் பெருமான் வந்து, ஆங்கொரு கும்பாபிஷேகத்துக்காக வந்து பார்த்து, களங்கம் எற்பட்டதை கண்டு, பிறகு கோபித்துப் போனவன். முருகன் இல்லாமலேயே அந்த கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. அது தான் உண்மையான செய்தி. எல்லோருமே, கோபுரத்தை நோக்கி "அரோகரா" என்று சொல்லிவிட்டு போனார்களே தவிர, அந்த ஆத்மாவுக்கு சொந்தக்காரனான, முருகப் பெருமான் அன்றைக்கு அங்கு இல்லையே. இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் என்று சொன்னால், அகத்தியன் கணக்கிடமுடியாது. இப்பொழுது தான் முருகப் பெருமான் முகத்தைப் பார்த்து நான் தெரிந்து கொண்டேன்.  முருகப் பெருமானுக்கு இந்த கும்பாபிஷேகத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஏன் என்றால், பாபங்கள் செய்தவன், காமுகர்கள், கொள்ளை அடித்தவர்கள், அழுக்காறு உள்ளவர்கள், அத்தனை அந்தணர்களும் ஒன்று சேர்ந்துதான் அக்னியை மூட்டி இருக்கிறார்கள். அக்னிக்கு ஒரு குணம் உண்டு, அது பாபத்தை போக்குகின்ற குணம். அக்னியை மூட்டினார், சற்று சாந்தமாயிற்று. இல்லை என்றால், யாரெல்லாம் அந்த யாகத்தை செய்தார்களோ, அவர்கள் எல்லாம் வேறு விதமான தொல்லைக்கு ஆளாகப்பட்டிருப்பார். யாரெல்லாம் தவறு செய்தார்களோ, அவர்கள் எல்லாம் அக்னியின் கோபத்துக் ஆளாகப்பட்டு, சின்னா பின்னமாகி இருப்பார்கள். ஏனடா, என்னப்பன் முருகன் சன்னதியில் வந்து, அகத்தியன் இப்படி எல்லாம் பேசுகிறானே என்று எண்ணக் கூடாது. கண் கூடாக பார்க்கிறேன், ஏதேது நடக்ககூடாதோ அதெல்லாம் நடக்கிறது. என் அப்பன் முருகனே கோபித்துக் கொண்டு போன பிறகு, எனக்கு மட்டும் இங்கு என்ன வேலை? நல்லவேளை! அனுமன் வந்தானோ, நீங்கள் தப்பித்தீர்கள். இல்லை என்றால் உங்களை வரச் சொன்னது பயனற்றதாய் போயிருக்கும்.

இப்பொழுது மீண்டும் வருகிறேன், நவக்ரக கோயிலில், நெய் விளக்கு ஏற்றி ஆனந்தப் பட்டீர்கள்! உண்மையிலேயே பாராட்டத்தக்க செய்தி. என் வலது பக்கம் அமர்ந்திருக்கின்ற வேற்று மொழி பேசுகின்ற மாந்தன், அவன் இன்றல்ல, நேற்றல்ல, முன்  ஜென்மத்திலே ஏறத்தாழ 77 ஆண்டுகள் விளகேற்றியே வந்தவன் அவன். ஆகவே, விட்டகுறை, தொட்டகுறை என்பதினால் தான், அவன் அறியாமலே, இந்த விளகேற்றுகின்ற குணம் வந்து கொண்டிருக்கிறது. எத்தனை குடும்பங்களுக்கு விளக்கேற்றினான் என்பதல்ல, எத்தனை தெய்வங்களுக்கு விளக்கேற்றினான் என்பதுதான் முக்கியம். எதை பற்றியும், கவலைப்படாமல், யாரை பற்றியும் கவலைப் படாமல், அவன் விளகேற்றுவதர்க்கெல்லாம் காரணம், இவன் பிறக்கும் பொழுதே, கருவிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

சித்தன் அருள் ............ தொடரும்!

Thursday 13 March 2014

சித்தன் அருள் - 166 - திருச்செந்தூர் - முருகர், அனுமன் தரிசனம்!


அகத்தியப் பெருமான் உத்தரவுப்படி, அனைவரும் திருச்செந்தூரை சென்றடைந்தோம்.  ஏதோ தோன்றவே, ஒரு விடுதியில் அறை எடுத்து, பயணக் களைப்பு விலக, சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, பின் குளித்து கோவிலுக்கு சென்றோம். கூட்டம் அதிகம் இருந்ததால், எங்கும் ஒரே சப்தம். என்ன செய்யப் போகிறோம் என்கிற திகில் உணர்வுடன் நேராக முதலில் சென்று முருகரை தரிசனம் செய்யலாம் என்று உள்ளே சென்றோம். அங்கேயும் ஒரே கூட்டம், ஒரே சப்தம். ஒரு நொடி கூட அமைதி இல்லை. கோவில் அர்ச்சகர்கள், சப்தம் போட்டுக்கொண்டே உள்ளே செல்வதும், வெளியே வருவதையும் பார்த்த பொழுது எரிச்சல் தான் வந்தது. இதற்குள் ஒரு அந்தணர் வந்து "அர்ச்சனை செய்யணுமா? சீக்கிரம் தரிசனம் செய்ய வேண்டுமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டார். யாருடைய வேண்டுதல்களுக்கும் செவி சாய்க்க வேண்டாம் என்று தோன்றியதால், "இல்லை சுவாமி! நாங்கள் தர்ம தரிசனத்திலே சென்று முருகரை தரிசனம் செய்து கொள்கிறோம்" என்று கூறி விலகி நடந்தோம்.

தர்ம தரிசன கூட்டம் சற்று வேகமாக நகர்ந்தது. ஓரளவுக்கு தூரத்துக்கு மட்டும் தான் நெருங்க முடியும். இருந்தும் முருகருக்கு நேராக சென்றடைந்ததும், நாங்கள் அனைவரும், அவரை கண்டு மகிழ்ந்திருக்க, அதுவரை அங்கிருந்து ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டிருந்த ஒரு கோவில் நிர்வாகி, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார். கிடைத்த தருணத்தை முருகரின் தரிசனத்துக்கு உபயோகிக்க நினைத்த அந்த ஒரு நிமிடத்தில், என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அத்தனை சப்தமும் நின்று போனது. உள்ளே முருகருக்கு "தீபாராதனை" நடந்தது. நன்றாக முருகர் முகம் தெரிய, அந்த ராஜ அலங்கார உருவத்தை உள் வாங்கி மனதில் பதித்துக் கொண்டேன். என்னவோ, ஏதோ ஒன்று உள்ளே புகுந்து, மிகுந்த சுகத்தை கொடுத்தது. உள்ளே இருந்த பூசாரி வெளியே வந்து, எங்களுக்கு அருகில் வந்து, விபூதி பிரசாதத்தை இலையில் வைத்து தந்தது, ஆச்சரியமாக இருந்தாலும், "அடேங்கப்பா!முருகா! இது போதும்" என்று என் மனம் வேண்டிக் கொண்டது.

வெளியே வந்து, பிரகாரத்தில் எங்கேனும் அமர ஒரு இடம் கிடைக்குமா என்று தேடும் வரை அந்த மென்மை எங்களுக்குள் பரவி நின்றது. யாருக்குமே பேச வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அத்தனை சுகமாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பின்னர் அகத்தியர் நாடியில் விளக்கிய போது தான் புரிந்தது. அத்தனையும் முருகப் பெருமானின் அருள்.

கண்களால் எத்தனை முறை துழாவினாலும், ஒரு இடமும் அமைதியாக கிடைக்காததை கண்டு "சரி! நேராக அறைக்கே செல்வோம். நாடியை திறந்து அகத்தியரிடமே, "கோவிலில் ஒரு அமைதியான இடம் கூட காண முடியவில்லை என்று சொல்வோம். பிறகு அகத்தியர் என்ன சொல்கிறாரோ அதன் படி நடந்து கொள்வோம்" என்று தீர்மானித்து, அறைக்கு வந்து சேர்ந்தோம்.

அறையில் ஒரு சுத்தமான இடம் தேர்ந்தெடுத்து வடக்கு நோக்கி அமர்ந்து பிரார்த்தனை செய்து பின் நாடியை பிரித்தேன். வந்த செய்திகள் ஒரு அணு குண்டு வெடித்தாற்போல் இருந்தது. கூடவே சில செய்திகள் சந்தோஷத்தின் உச்சிக்கே எடுத்து சென்றது.

"மூலம் உதித்திட்ட வேளை இது! ஓங்கு புகழ் என் அப்பன் முருகன் சன்னதிக்கு எதிரே அமர்ந்து அகத்தியன் சில வாக்குகளை, அருள் வாக்காக இங்கு உரைக்கிறோம். ஆங்கே சில நாழிகைக்கு முன்பு, சிறப்பாக சில செய்திகளை சொல்லிடவேண்டும் என்று, ஆங்கு ஓர் தம்பதிகளாய் வீற்று இருக்கும் நவக்ரக சன்னதிக்கு இன்னவனை போகச்சொன்னேன்; அன்னவனும் அப்படியே செய்தனன். நவக்ரக சன்னதி என்பதை பற்றி, ஏற்கனவே, நேற்றைய தினம் ஆங்கொரு மலைப் பகுதியில் யாம் உரைத்தோம். இன்றைக்கோ அலைப்பகுதியில் யாம் உரைக்கப் போகிறோம். நிலையான வாழ்வுதனை இவர்கள் நீண்ட காலம் பெற்றிட வேண்டும் என்பதற்காக அகத்தியனே அருள் கூர்ந்து பேசுகின்ற நல்லதொரு செய்தியடா! 

சற்று முன் சொன்னேன், மூல திருநட்சத்திரம் வந்தது என்று. ஒளிமறை மூலம் என்று குறிப்பிட்டேன். சோதிடத்தைப் பற்றி அதிகம் தெரியாத உங்களுக்கெல்லாம், சில சோதிட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மூலத்திரு மைந்தனாக வீற்றிருக்கும் அனுமன், இங்கு தான் இருக்கிறான். ஆச்சரியமான சம்பவம் ஒன்று உண்டு. முடிந்தால், வசதி இருந்தால், இதை நீங்கள் ஒரு முறை சென்று பார்க்கலாம். ஆங்குள்ள மிகப் பெரிய ராஜ கோபுர கல்வெட்டில், ஹனுமனின் சிலை, கீழே கல்வெட்டில் செதுக்கப்பட்டிருக்கும்.  அந்த அனுமன், மூலத்திரு மைந்தன், இன்றைய தினம் என் அப்பன் முருகனை தரிசித்து வந்த நேரத்தில் தான் நீங்கள் உள்ளே நுழைந்தீர்கள். அகத்தியனும், ஏற்கனவே காத்திருந்தேன், ஒரு நாழிகை. உங்களது கணித நேரப்படி 9.22 வரை நான் அங்கிருப்பேன்.  உங்கள் கணிதப்படி 7.22க்கு வந்தவன், ஏறத்தாழ 2 மணி நேரமாய் உங்களுக்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான், அந்த அதிசயம் நடந்தது. நான் பெரிதும் போற்றி வணங்குகின்ற அனுமனே, இங்கு வந்து முருகனை தரிசித்த காலம் இது. அந்த அனுமனுக்கு பக்கத்தில் தரிசிக்கிற நேரத்தில் தான் நீங்கள் அனைவரும், இங்கு வந்து ஆனந்தமாக கை எடுத்து கும்பிட்டாலும், உங்கள் அத்தனை பேர் மனதிலும் ஆங்கொரு சிறு, ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. கோவில் என்றால், அமைதிவேண்டும், ஆனந்தம் வேண்டும், த்யானம் செய்வதற்கு இடம் வேண்டும், நிம்மதி வேண்டும்.  அது எதுவுமே இந்த கோவிலில் இல்லை என்று குறை பட்டுக் கொண்டீர்கள். ஆனால் ஒரு சம்பவம் உங்களுக்கு மட்டும் சொல்லுகிறேன்.  நீங்கள் தரிசித்த நேரமும், அனுமன் தரிசித்த நேரமும், அகத்தியன் தரிசித்த நேரமும் அனுகூலமாய் இருந்ததால், யாவுமே மிக அற்புதமாக நடந்தது என்பது தான் உண்மை. ஆக, அந்த குறையை விட்டுவிடுங்கள். உலகத்தை திருத்த இயலாது. 

அது மட்டுமல்ல, இப்பொழுதே இந்த முருகன் சன்னதி முன்பு, முருகன் எனக்கு தெய்வம், எனக்கு குரு, எனக்கு ஆசான், அந்த சன்னதிக்கு வரச்சொனதற்கும் காரணம் உண்டு, பலப்பல. அதை சொன்னால் பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். ஏன் உங்களை வரச் சொன்னேன் என்றால், ஏதேனும் புதிர் போடுவதற்கல்ல. என் தலைவனை நீங்கள் கண்டு, அவனது முழு ஆசியும் நீங்கள் வாங்க வேண்டும். மலையிலே ஆங்கொரு நம்பியின் தரிசனத்தை மறைமுகமாக காண வைத்தேன். ஆங்கொரு அருவிக்கரை ஓரத்திலே, நதிகளை காண வைத்து அவர்களால் ஆசிர்வதிக்கச் சொன்னேன். நதிக்குப் பிறகு, நிலையான வாழ்க்கையை நீங்கள் பெறவேண்டும் என்று அலைகடல் ஓரம் வரச்சொன்னேன். ஆகவே, இந்த மூன்றுக்கும், நிலையான வாழ்வு, மலை, நதி,அலைகடல் ஓரம், இந்த மூன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள், ஆரம்பத்திலிருந்து, முடிவு வரை, வினாயகனிலிருந்து, இன்றைக்கு அனுமன் வரை, ஆக ஒரு மிகச்சிறந்த காரியம் நடந்திருக்கிறது. அனுமன் இங்கு வருவானேன் என்று ஆச்சரியப் படக் கூடாது. கல்வெட்டில், 9 கல்வெட்டில் அனுமன் ஆனந்தமாக உட்கார்ந்திருக்கிறான். முடிந்தால் எட்டிப் பாருங்கள், முடிந்தால் என்று சொன்னேன்.

இங்கு வரச் சொன்னேனே, அடுத்தது என்ன என்ற கேள்வி எழும். எல்லோருமே அயர்ந்து கொண்டிருக்கிற நேரம். அகத்தியன் இந்த அருள் வாக்கு உரைக்கின்ற இந்த அறையின் எண்ணோ 203 ஆகும். இரண்டையும் கூட்டினால் ஐந்தாகும். ஐந்து என்பது பஞ்ச பூதங்களை குறிக்கும், இந்த அறையில் பஞ்ச பூதங்கள் இருப்பதினால் தான், அகத்தியனே வாய் திறந்து சொன்னேன், கோவிலிலே அசிங்கம் நிறைய இருப்பதாலும், அகத்தியனுக்கு மனம் இல்லாததாலும், அகத்தியன் அங்கு வாய் திறக்கவில்லை. நிச்சயம் வாய் திறந்தால், பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும். கூட்டம் கூடியிருக்கும், அல்லது உங்கள் மனம் கெட்டிருக்கும். வெறுப்பு, விருப்பு இல்லாமல் நிறைய விஷயங்களை சொல்லவேண்டும் என்பதினால்தான், அங்கேயே நவக்ரகங்கள் தம்பதிகளாய் இருக்கின்ற கோவில் முன்பாக அகத்தியன் வாய் திறந்து சொன்னேன். ஆனால் ஆங்கொரு சண்டாளன் ஒருவன், அகத்தியன் சொல்வதையே குறுக்கிட்டு பேசினானே, எவ்வளவு பெரிய பாபத்தை செய்திருக்கிறான் தெரியுமா? ஆகவே, அகத்தியன் வாக்குரைக்கிறோம் என்று தெரிந்தும் கூட அவன் அரைகுறை மந்திரத்தில் வாக்குரைத்து எட்டிப் பார்த்தானே! அவன் ஒரு ராகு அல்லவா? யாருக்கு யார் பிடிக்ககூடாதோ அவனுக்கெல்லாம் பிடித்திருக்கிறது. அவனுக்கு மோசமான காலம், அதனால் தான், அவன் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டான்.  அகத்தியன் கோபப்படவில்லை, ஆத்திரப்படவில்லை, சாபம் இடவில்லை. அருமையான சன்னதியில், ஆனந்தமான நிலையில், சுமார் 2400 வருடங்களுக்கு முன் நடந்த அற்புதமான ஒரு விஷயத்தை எல்லாம் சொல்லி, எங்கெங்கே இந்திரன் இருந்தான், எங்கெங்கே நவக்ரகங்கள் தன் தம்பதிகளுடன் உட்கார்ந்திருந்தார்கள், என்பதை எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  உண்மையிலேயே நவக்ரகங்கள் இப்படி அமைவது அல்ல. ஒன்றாக நேரடியாக, நேர்கோணலில் தான் அமர்ந்திருக்கிறார்கள். நேர் கோணலில் அமர்ந்திருந்துதான் இந்திரனுக்கும் இன்னும் பலருக்கும், இன்றுவரை ஆசிர்வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அகத்தியன் சொல்வதெல்லாம், எதற்காக சொல்ல வந்தேன் என்றால், அங்கு நேராக தனித்தனியாக நின்று, நடுவிலே சூரிய பகவானும், அவன் மனைவி உஷாவும், பிரத்யுஷாவும் வரிசையாக நின்று வாழ்த்துரைத்த காலம். அகத்தியன் வாய் திறந்து சொல்லும் போதெல்லாம், எல்லா நவக்ரகங்களும் ஒன்றாக என் பக்கம் திரும்பியதடா. அது அவனுக்கு பொறுக்க முடியவில்லை, விஷயம் தெரியாத பையன், மாட்டிக் கொண்டுவிட்டான். அகத்தியன் மன வருத்தத்துக்கு ஆளானான் என்பது மட்டும் உண்மை. ஆனால், அத்தனை கிரகங்களையும் ஒன்று சேர பார்ப்பது என்பது இயலாத காரியம். 

முன்பொருநாள், ஆங்கொருவன், யாகம் செய்தான், பஞ்சேஷ்ட்டி எனும் தலத்தில். அந்த பஞ்சேஷ்டியின் கோபுர உச்சியில்தான் நவக்ரகங்களை வரிசையாக பார்க்க முடியும். அந்த காட்ச்சியைத்தான் இன்றைக்கு அகத்தியன் இங்கு காட்டினேன். நவக்ராகங்கள் துணை செய்தது, வாழ்த்தியது, வாழ்த்துக்களை பெற்றீர்கள். அது போதும் எனக்கு. மற்றவைகளை செந்தூரிலே வைத்துக் கொள்வோம் என்று சொன்னேன். நன்றாக கவனிக்கவும், செந்தூரிலே வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேனே தவிர, செந்தூர் கோவிலிலே வைத்துக் கொள்ளலாம் என்று அகத்தியன் வாய் திறக்கவில்லை. எனக்குத் தெரியும், இங்கு ஏகப்பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது.

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday 6 March 2014

சித்தன் அருள் - 165 - கரும்குளம் "என் அப்பன் முருகன்" கோயில்!

[ புகைப்படம் நன்றி:திரு பாலச்சந்திரன்]
அகத்தியப் பெருமான் நாடியில் வந்த உடனேயே உத்தரவு பறக்கத் தொடங்கியது.

"ஒளிமீன் கேட்டை உதித்திட்ட வேளை இது, அற்புதமான ஒரு வரலாற்றை சொல்லும் முன், அகத்தியன் மைந்தன் இப்படி ஒரு தப்பை செய்யலாமா? போட்டு இருக்கின்ற மேல் உடையை, உடனே கழற்றுக!" என்றார்.

கூட இருந்தவர்கள் "சாமி! உங்களைத்தான் சொல்லறாரு" என்று குஷியாக கூறினார்.

"ஹ்ம்ம்! நான் திட்டு வாங்கப் போறேன்னா, என்ன சந்தோஷம், உங்களுக்கெல்லாம்" என்று கூறிக் கொண்டு, போட்டிருந்த சட்டையை கழட்டி ஓரமாக வைத்துவிட்டு நாடியை புரட்டினேன்.

 "உண்மையாக விளம்பிடின், கோயிலுக்கு வரும் போது, மேல் சட்டை அணியாமல் இருக்கவேண்டும் என்பது இக்கால நியதியடா! இங்கிருந்து, ஆங்கொரு செந்தூர் முருகர் கோவில் வரையில் இப்படிப்பட்ட பழக்கம் உண்டு என்பதை இவன் அறியானா? ஆகவே, மேல் சட்டை இல்லாமலே அகத்தியன் நாடியை படிக்கவேண்டும் என்பதுதான் அகத்தியனின் விதி. என்னடா மேல் சட்டை நீ போட்டுக் கொண்டிருப்பது? மேலே ஒரு அங்க வஸ்திரம் போட்டுக்கொண்டு, நெற்றியிலே ஏதேனும் ஒரு அடையாளம் இட்டுக்கொண்டு படிக்கவேண்டிய நீ,  மிலேச்சன் நாட்டிலிருந்து வந்தவன் போல, அங்கொரு மேல் சட்டை அணிந்து கொண்டு, நவக்ரஹ தலத்தில் அமர்ந்து கொண்டு படிக்கலாமா?  ஆக இதை ஏற்க மாட்டேன். ஆகவேதான் இதை சொன்னேன். முறைகள் இன்னும் சரியாக கவனிக்கப் படாவிட்டால், இன்னும் பல தவறுகள் நடக்க வலுவாகும். அகத்தியன் இதனால் மகிழ்ந்து போகவில்லை. சட்டை அணியாமல் அனுபவிப்பதே நல்லது என்றாலும் கூட, மேல் சட்டை அணிவிப்பது, இந்த கால சட்டப்படி, குறுக்கும் நெருக்குமாக, கருப்பு வண்ணத்திலோ, ஏதோ ஒரு சட்டை அணிந்துகொண்டு, சுபகாரியத்தை படிக்ககூடாது."

"என்னை பிச்சுட்டார்!" என்றேன்.

"படிக்கக் கூடாது என்பதால் தான், அகத்தியன் உனக்கு உத்தரவு இட்டேன். ஆக, இவன், அகத்தியன் திட்டுகிறானே என்றோ. கடும் கோபம் கொள்கிறானே என்றோ கவலைப்படக் கூடாது. கருப்பு அணிந்து கொண்டு நீ படிக்ககூடாது என்பதற்காகத்தான் சொன்னேன். 

இப்பொழுது அகத்தியன் மேலும் உரைக்கிறேன். அகத்தியன் சொன்னதொரு கட்டளைப்படி,  அனைத்தையும் அற்புதமாக செய்து வந்த இவர்களுக்கெல்லாம், இன்று காலையில் அகத்தியன் சொல்படியே, ஆங்கொரு புண்ணிய நதியாம், தாமிரபரணியில் நீராடும் போதெல்லாம், முங்கிக் குளிக்கும்போதேல்லாம், அகத்தியனும் மற்றவர்களும், முங்கிக்குளிக்கும் போதெல்லாம் ஆங்கே வந்து, நல்லதொரு மனமாக, இதமாக வாழ்த்தினதெல்லாம் உண்மை தான். ஆகவே, வாழ்த்தியதற்கு அடையாளம் என்னவென்று கேட்ப்பீர்கள். வலம்புரியாக முங்கிக் குளிக்கும் போதுதான் யாம் இதை எல்லாம் செய்தோம். அவரவர்கள் முங்கிக் குளிக்கும் போதுதான், தாமிரபரணி உட்பட மற்ற அத்தனை பேர்களும், அங்கு வந்து இவர்களுக்கு, நல்லதொரு வாழ்த்துக்களை சொல்லி, வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும் வேண்டி, இன்னவர்களுக்கும், அகத்தியன் ஏற்கனவே சொன்னேனே, 33.1/3 விழுக்காடு புண்ணியம், இன்னவர்களுக்கு கை பிடித்த நாயகிகளுக்கும், குழந்தைகளுக்கும், மற்றும் உறவினர்களுக்கும், போய் சேரவேண்டும் என்று சொன்னேனே, அது இன்று முதல் சேர்ந்தாயிற்று. ஆக, உங்கள் கடிகாரம் முள்ளில் மணி ரெண்டு நற்பதற்கெல்லாம், இவர்கள் செய்த புண்ணியம் எல்லாம் , அவர்களுக்கு பட்டியல் எழுதப்பட்டு, அவர்கள் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, இவர்கள் புண்ணியத்தை வாங்க முடியாது, கோபத்துடன் திருப்பி பெற முடியாது.  ஆகவே, இயல்பாகவே, அகத்தியன் எப்பொழுது சொன்னானோ, அப்பொழுதே, அவர் அவர்களுக்கு செய்த புண்ணியம் எல்லாம், இன்று முதல் 33.1/3 விழுக்காடுகள், இயல்பாகவே அவர்கள் கணக்கில் எழுதப்பட்டுவிட்டது. சற்று முன் தான் சித்திர குப்தன் என்னிடம் சொன்னான். சித்திர குப்தன் சொன்னதை வைத்து தான் அகத்தியன் மனம் மகிழ்ந்து போனேன். ஆகா! அகத்தியன் இட்ட ஒரு கட்டளை இப்பொழுது மேல் இடத்திலும் ஏற்கப்படுகிறது. ஏன் என்றால், முக்கண்ணனும் சரி, விஷ்ணுவும் சரி,  பிரம்ம தேவனும் சரி, மூன்று பேரும், சில வேளை அகத்தியன் சொல்லை கேட்பதில்லை. அகத்தியன் பக்கத்தில் வந்து  நின்றால்தான், ஆமாம், இதோ இதோ என்று தடவுவதுபோல் தடவி விட்டு, ஏற்க முயல்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்று அகத்தியன் விரும்பினது உண்டு. இன்றைக்கோ, இன்று காலையில், லோபாமுத்திர சமேத அகத்தியன், தாமிரபரணி கரையில் உட்கார்ந்து, இவர்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் செய்துவிட்ட உடனே, இவர்கள் செய்த புண்ணியம் எல்லாம், இவர்கள் மனைவியின் கணக்கிலோ, அல்லது உறவினர் கணக்கிலோ, அல்லது நண்பர்கள் கணக்கிலோ எழுதப் படவேண்டும் என்பது நியதி என்று சொன்னேன். நான் சொன்ன ஒரு நாழிகையில், அதாவது 2.40ர்குள், அத்தனை புண்ணியமும் அவர்கள் கணக்கில் ஏற்றப் பட்டதால், அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை, அவர்கள் மன மகிழ்ச்சியுடனும், புது பொலிவுடனும் காணப்படுவார்கள். இயல்பாக வருகிற சந்தோஷம் போல , எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த வெகுமதியைப் போல, இறைவனே இறங்கி வந்து "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டால், ஆச்சரியப் படுவதுபோல, இன்றைக்கு அகத்தியன் சொல்லை சித்திர குப்தன் ஏற்றுக் கொண்டான் என்பது உத்தமமான செய்தியடா!   அவனை பாராட்டுகிறேன். தொடர்ந்து இந்த அகத்தியன் விஷயத்தில் மட்டும், இந்த குறிக் கோளையும், நியதியையும், கடைசிவரை அவர் கடை பிடிக்கவேண்டும், கடை பிடிப்பார் என்று சொல்லுகிறேன். 

இந்த வேண்டுகோளை அகத்தியன் விடுக்க காரணம், இன்னவர்கள் ஆங்கொரு நவக்ரஹ தம்பதிகளாய் இருக்கின்ற சன்னதியின் முன் அமர்ந்து கொண்டு பேசும் பொழுது, அகத்தியனே நான் இங்கு வந்திருக்கிறேன். இன்னும் ஒரு நாழிகையில், சென்று முருகனுக்குப் பின்னால் அமர்ந்திருப்பேன். ஆக இந்த ஒரு நாழிகை இருக்கும் பொழுது, யாம் தான் இவர்களை கரும்குளத்துக்கு வரச்சொன்னோம். அந்த கதை எல்லாம்  உரைத்தோம். மூன்று ஜென்மமாய் இருந்த தோஷமது இந்திரனுக்கு போனது போல, அவனுக்கு அழுகி சொட்டுகின்ற மோசமான நிலையிலிருந்து, அகத்தியன் வேண்டுகோள் விடுத்தபடி, அவனும் தாமிரபரணியை வேண்டுகோள் விடுத்தபடி, இந்திரன் இங்கு சாபத்தை நீக்கி, ஆரோக்கியம் பல பெற்றான். அத்தகைய புண்ணியததலமடா இது. அந்த புண்ணியமான நிகழ்ச்சி நடந்த நேரம் கூட. இன்றைக்குச் சொல்வேன், குறித்துக் கொள்ளட்டும், இதே நாளில், சுமார், கி.பி (உங்கள் கணக்குப்படி) 3241 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஞாயிற்றுக்கிழமை, மத்தியானம், 4.30 மணிக்கு மேல்தான், ராகு காலத்தில், அந்த சம்பவம் நடந்தது. இந்திரன் தன் மனைவியோடு, வரவில்லை, தனியாக வந்து காலில் விழுந்த காலம் இது.  அப்பொழுதுதான் நவ க்ரஹ தம்பதிகள் அத்தனை பேரும் ஒன்று கூடி, இங்கே வந்து அமர்ந்து, இந்திரனுக்கு சாப விமோசனம் செய்த நாள், இந்நாளே!

இதை வெளியிலே சொன்னால், இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டியிருக்கும்.  இந்த கோயிலில் பராமரிப்பு சரியில்லை, ஆகவே, யாருமே நுழைய மறுக்கிறார்கள். ஏதோ ஒரு சாபக்கேடு ஒன்று இந்த கோயிலில் இருப்பதுபோல் அகத்தியனுக்கு தோன்றுகிறது.

நவக்ரகங்கள், தம்பதிகளுடன் இருக்கின்ற அந்த அறிய பெரும் காட்சி, உலகத்திலே முதன் முதலாக, இங்குதான் நடை பெற்றது.  உலகத்திலேயே, முதன் முதலாக நடை பெற்ற அந்த காட்ச்சியைத்தான் , இங்குள்ள அத்தனை பேருக்கும் அகத்தியன் எடுத்துக் காட்டி, சாபங்கள் எல்லாம் போக்கவேண்டும் என்பதற்காகவே இங்கு வரச்சொன்னேன். நவக்ராகங்கள் தம்பதிகளாய் அமர்ந்து அகமகிழ்ந்து இருக்கின்ற நேரம். எதிரும் புதிருமாய் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேருகின்ற காலம். யார் யார் எவருக்கு விரோதிகளோ, பொறாமை பிடித்தவர்களோ, வஞ்சனை செய்பவர்களோ, கெடுதல் செய்பவர்களோ, யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெட்டி பாம்பாய், அடங்கிவிட்டு, அமைதியாகவும், ஆனந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கப் போகிறார்கள். நாளைக்கு ஏதேனும் திருமணம் நடக்கவேண்டும் என்றாலோ, அல்லது திருமணத் தடை இருந்தாலோ, எதுக்கு எதாக இருந்தாலும் இங்கு வரவேண்டாம், இங்குள்ள தம்பதிகள் சகிதம் உள்ள நவக்ராஹங்களுக்கு, ஏதேனும் சிறு காணிக்கை அனுப்பி நினைவு படுத்திக் கொள்ளலாம். அல்லது, மன சுத்தத்துடன் மனதார நினைத்துக்கொண்டு, நவக்ரக தம்பதிகளை வந்து வணங்கினால், காலா காலத்துக்கும் அவர்கள் திருமண வாழ்க்கை ஒரு போதும் பாதிக்கப் படமாட்டாது. திருமண வாழ்க்கை பாதிப்பு மட்டுமல்ல, அத்தனை எதிர் பார்ப்புகளும், என்னென்ன தடங்கல்களை யார் யார் செய்வார்கள் என்பதை எல்லாம் இந்த நவ கிரக உலகத்துக்குள் அடக்கம். அந்த நவக்ரக சன்னதியிலே உட்கார்ந்து அகத்தியன் யாம் உரைக்கும் பொழுது இங்கே அற்புதமான காட்சி நடந்துகொண்டிருக்கிறதடா. அகத்தியனே இங்கு வந்து, நவக்ராகங்கள் ஒன்பதிற்கும் தன் கையாலேயே ஆங்கொரு சந்தன அபிஷேகத்தையும், பனீர் அபிஷேகத்தையும் செய்துகொண்டே இருக்கிறேன். ஏன் என்றால் நவ கிரகங்கள் தானே உலகத்தையே ஆளப்போகிறது. அந்த அற்புதமான சம்பவம் நடந்த இடம் இங்குதான். உலக வரலாறிலேயே, பாரத தேச வரலாற்றிலேயே, நவ கிரகங்கள் தம்பதிகளாக இருந்த இடம், ஒரே இடம், இது தான்."

இதற்குள் கோவிலில் அர்ச்சகர் அர்த்தஜாம பூசையை சத்தம்போட்டு மந்திரம் சொல்லி தொடங்க, அகத்தியர் அருள் வாக்குக்கு இடைஞ்சலாக இருந்தது போலும். அகத்தியரும் உடனே முடித்துக் கொண்டார்.

"மேலும் சில விஷயங்களை உரைக்க, செந்தூர் வருக, அங்கு பேசிக்கொள்ளலாம்" என்று முடித்துக் கொண்டார்.

நானும் நாடியை பத்திரமாக பைக்குள் வைத்துவிட்டு, நண்பர்களுடன் அர்த்த ஜாம பூசையில் கலந்து கொள்ள கோவிலுக்குள் சென்றேன்.

சித்தன் அருள்............... தொடரும்!