​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 30 June 2015

ஒரு தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தவிர்க்க முடியாத காரணத்தால், சித்தன் அருள் - பெருமாளும் அடியேனும் என்கிற தொகுப்பை இந்த வாரம் வழங்க முடியவில்லை. இரு வார இடைவெளிக்குப் பின் சித்தன் அருளை தொடருகிறேன்!

அக்னிலிங்கம்!

Thursday 25 June 2015

சித்தன் அருள் - 227 - "பெருமாளும் அடியேனும் - 11 - ஹயக்ரீவரின் விபரீத புத்தி!


ஹயக்ரீவரின் கோபத்தால் சற்றும் தளராத அகத்தியப் பெருமான் "ஹயக்ரீவரே! விநாசகாலே விபரீத புத்தி; என்ற பழமொழி தங்களுக்குத் தெரியாததா? தாங்கள் என்மேல் வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. ம்ம்... முடிந்தால் நீங்கள் அடுத்த அடி  வைக்கலாம். ஏன் நான்கு கால் பாய்ச்சலில் கூட பாய்ந்து செல்லலாம். நான் ஒன்றும் நிற்க மாட்டேன் அய்யனே" என்றார்.

"என்ன முனிவரே, வேடம் போடுகிறீர்? செய்வதையும் செய்துவிட்டு என்ன வேடிக்கையும் பார்க்கிறீர்களே! முதலில் என்னை இங்கிருந்து போகவிட வழிகாட்டும்" என்றார் ஹயக்ரீவர்.

"எங்கே  போகிறீர்கள்?" என்றார் அகத்தியர்.

"என் அனுமதியின்றி குடிபுகுந்த அந்த கலஅவதாரமான வேங்கடவனை இங்கிருந்து விரட்டப் போகிறேன்." என்றார் ஹயக்ரீவர்.

"அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. திருமால், யாருக்கும் எந்த விதத் தீங்கும் இழைக்க மாட்டார். அதுமட்டுமன்றி - யார் என்ன பிரார்த்தனை, எங்கு செய்தாலும் அதை சட்டென்று நிறைவேற்றியும் காட்டுவார்." என்றார் அகத்தியர்.

"ஓ! அப்படியா செய்தி! அப்படியென்றால் அவரோடு நான் மோதவேண்டாம். நான் சொன்னால் அவர் அப்படியே கேட்டுவிட்டு இங்கிருந்து சென்று விடுவாராக்கும்?"

"ஆமாம்! ஆனால் ஒரு சிறு திருத்தம். தாங்கள் "சொன்னால்" என்பதை விட அவரிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டு கேட்டால் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்தான், கேட்டவர்களுக்கு கேட்டதெல்லாம் தரும் கருணை வள்ளலாயிற்றே!"

"இப்போது என்னதான்  சொல்கிறீர்கள்?"

"திருமலையில் குடிகொண்டிருக்கும் திருமாலிடம் தாங்கள்  விவேகத்தோடு மனதாரப் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் தங்கள் வேண்டுகோளை நிச்சயம் ஏற்பார்."

"அப்படியும் அவர் அங்கிருந்து நகர மறுத்தால்?"

"தங்கள் ப்ரார்த்தனையில்தான் குற்றம் இருக்கும் என்பேன்."

"எப்படி பிரார்த்தனை செய்வது, எங்கிருந்து செய்வது?"

"அப்படி கேளுங்கள். எனக்கு   முழுமையாக எதுவும் தெரியாது. பிரார்த்தனையை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை கலைவாணி சரஸ்வதி தேவிதான் மிக நன்றாக அறிவாள். அந்த சரஸ்வதி தேவியை  நோக்கி கைகூப்பி நமஸ்கரித்துக் கேளுங்கள்" என்றார்.

"கலைவாணி வருவாளா?"

"கண்டிப்பாக வருவாள். பிரார்த்தனை சொல்லித்தருவாள். திருமலை வேங்கடவனும் உங்கள் பிரார்த்தனையை கேட்டு செவி மடுப்பார். பிறகென்ன? சண்டை போடாமல், காயம்படாமல் நீங்கள் நினைத்ததை அடைந்து விடுவீர்கள்" என்று பவ்யமாக சொன்னார் அகத்தியர்.

அகத்தியப் பெருமானுக்கு உற்ச்சாகம் தாங்கமுடியவில்லை. எப்படியோ ஹயக்ரீவரின் வேகத்தை தடுத்து நிறுத்தி அவருக்கு நல்வழி காட்டிவிட்டோம் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து நகன்றார்.

அதெப்படி சண்டைபோடாமல் ஜெயிக்க முடியும்னு குறுமுனி சொல்கிறாரே, அதையும்தான் பார்ப்போமே என்று ஹயக்ரீவர் யோசித்து கலைவாணியை நோக்கி "சரஸ்வதி தேவியே இங்கு வா" என்று பலமுறை அழைத்தார். பலமுறை அழைத்தும் கலைவாணி வராததால், ஹயக்ரீவருக்கு கோபம் வந்தது.

அதே சமயம் இதுவரை மறைந்து இருந்த  கலிபுருஷன் ஹயக்ரீவரிடம் வந்தான். என்ன இது அநியாயமாக இருக்கிறது. வேகமாக அசுரவேகத்தில் நான்குகால் பாய்ச்சலில் திருமாலையும் அவன் அடியாட்களையும் தாக்க வந்த ஹயக்ரீவர் இப்போது அமைதியாக அமர்ந்து "கலைவாணியை" அழைக்கிறாரே. இது நியாயமில்லையே. அப்படியென்றால் ஹயக்ரீவர் மாறிவிட்டாரா? அப்படியென்றால் இந்த பூலோகத்தில் நமக்கு வேலையே இருக்காது போலிருக்கிறது என்று பயந்து ஹயக்ரீவரை சரஸ்வதிதேவியை சந்திக்காமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தான், கலிபுருஷன்.

"என்ன ஹயக்ரீவரே என்ன ஆச்சு உங்களுக்கு? திருமாலிடம் தோற்றுவிட்டீரா?" என ஏளனமாகக் கேட்டான், கலிபுருஷன்.

"என்னது? நானாவது திருமாலிடம் தோற்பதாவது. சண்டை போடாமல் திருமாலை திருமலையிலிருந்து விரட்ட முயற்சி செய்கிறேன்."

"அப்படியொன்றும் செய்வதாக தோன்றவில்லை. மாறாக பிரார்த்தனை செய்யப் போவதாகத் தெரிகிறது!"

"ஆம்! அதற்காகத்தான் கலைவாணியை அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை."

இதெல்லாம் உங்கள் அறியாமையால்தான். அகத்தியன் பொல்லாதவன். உனக்கும் திருமாலுக்கும் சந்திப்பு ஏற்படக்கூடாது. திருமாலிடம் நீ சரண் அடைய வைக்கவேண்டும் என்று கூறியது ராஜ தந்திரம்." என்றான்.

"என்ன சொல்கிறாய் கலிபுருஷா?" என்றார் ஹயக்ரீவர்.

"உண்மையைத்தான் கூறுகிறேன். அகத்தியன் பேச்சைக் கேட்டால் நீ ஏமாந்து போவாய். நான் சொன்னபடி செய். நேரிடையாக அந்த கல் அவதாரியாகிய வேங்கடவனிடம் மோது, அவனை இந்த இடத்திலிருந்து விரட்டி அடி. திருமால் கதி கலங்க ஓடுவார். அவர்பின்னே இந்த ஆதி சேஷனும் பயந்தபடி கலக்கத்துடன் ஓடுவான். இதன் பிறகு பாரேன், நீ தான் இந்த கோனேரிக்குத் தலைவனாக வரப்போகிறாய்" என்று தூண்டிவிட்டான்.

"என்னால் எதையும் நம்பமுடியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது" என்றார் ஹயக்ரீவர்.

"இது, அகத்தியர் செய்த சூழ்ச்சி. இல்லையென்றால் நீ கூப்பிட்ட குரலுக்கு சரஸ்வதி தேவி இங்கு வந்து காத்திருக்கவேண்டும். வரவில்லையே. எனவே இனிமேலாவது என்னை நம்பு. ஜெய் விஜயீபவ!" என்றான் கலிபுருஷன்.

"இப்போது என்ன செய்ய வேண்டும் கலிபுருஷா?" என்றார் ஹயக்ரீவர்.

"ஒரே பாய்ச்சலில், அசுர வேகத்தில் அதோ அந்த கல் அவதாரமாக எடுத்திருக்கும் வேங்கடவன் மீது பாய்ந்து கீழே தள்ளு" என்றான்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையாதோ என்ற பழமொழிக்கு ஏற்ப கலிபுருஷன் வார்த்தைகளைக் கேட்டு, ஒரே பாய்ச்சலில் வேங்கடவன் மீது பாய்ந்தான், ஹயக்ரீவன்.

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday 18 June 2015

சித்தன் அருள் - 226 - "பெருமாளும் அடியேனும் - 10 - அகத்தியரின் தவவலிமை!


வேங்கடவன் திருஉருவத்தின் முன்பு நின்று "யாரைக் கேட்டு இங்கு குடி புகுந்தாய்? உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறு" என்று கோபத்தோடு கனைத்தார், ஹயக்ரீவர்.

திருமலைநாதன் அசையவே இல்லை.

"இன்னும் ஐந்து நாழிகை அவகாசம் தருகிறேன். அதற்குள் நீயும் இந்த இடத்தை விட்டு நகர வேண்டும். உனக்காக தோன்றிய இந்த ஏழுமலையும் இருக்கிற இடம் தெரியாமல் மறைய வேண்டும்" என்று மறுபடியும் ஆக்ரோஷமாக நிலை கொள்ளாமல் பூமியைத் தன் கால்களால் தோண்டியபடியே இங்கும் அங்கும் பரபரப்பாக நிலைகொள்ளாமல் அலைந்தார்.

ஆதிசேஷன், உஷ்ண மூச்சை சொறிய முன்வந்தான்.

ஹயக்ரீவரின் கோபத்தைக் கண்டு நதியோரத்து முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தவத்தைக் கலைத்துவிட்டு செய்வதறியாமல் நின்றார்கள்.

இதற்குள், எங்கோ சென்றிருந்த கலிபுருஷன் அங்கு வந்தான்.

"ஹயக்ரீவா! இப்படியெல்லாம் சொன்னால் யாரும் கேட்க்க மாட்டார்கள். அதோ அங்கு நதிக்கரையோரத்தில் மீளாத் தவத்தில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணுவின் பக்தர்களான ரிஷிகளை காலால் எட்டி உதை, எதிரில் பட்டவர்களைப் பல்லால் கடித்து நாசம் செய், மீறி உன்னை  வருபவர்களை சகட்டுமேனிக்கு மிதித்து தள்ளு. இப்படிச் செய்தால்  பெரும் சப்தத்துடன் "ஓ" வென்று தங்களையும் மறந்து கத்தி "நாராயணா" என்று கதறுவார்கள்.

பக்தர்களின் இந்தக் குரலைக் கேட்டு உன் இடத்தில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கும் வேங்கடவன், பக்தர்களுக்காக இங்கிருந்து போய்விடுவான். ஆதிசேஷனும் வாலைச் சுருட்டிக் கொண்டு பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவான். பிறகு உன் இஷ்டப்படி ராஜாங்கத்தை தொடர்ந்து நடத்தலாம்" என்று துர்போதனை செய்தான்.

இதை அப்படியே ஏற்றுக் கொண்ட ஹயக்ரீவர், நான்கு கால் பாய்ச்சலில் புறப்பட முயன்றபோது..................

"ஹயக்ரீவா............ நில் அங்கே!" என்று அதிகாரமாக ஒரு குரல் கேட்டது.

இந்தக் குரலைக் கேட்டதும் "கலிபுருஷன்" அடுத்த வினாடியே அங்கிருந்து மறைந்து போனான்.

வேகமாகப் பாயத் துடித்து ஹயக்ரீவர் எவ்வளவோ முயன்றும் அவரால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாமல், ப்ரமாஸ்திரத்தில் கட்டுப்பட்டது போல் நின்றுவிட்டார்.

அவருடைய வேகம், பலம், ஆத்திரம், கோபம், வீரம் எல்லாம் பலமற்று, பொடிப் பொடியாகியது.

தன்னை இப்படிக் கட்டுப்படுத்தியது யார்? என்று ஹயக்ரீவர் யோசித்து உணரும் முன்னர் அருகிலிருந்த செடி, கொடி மலைக் குன்றை தாண்டி கமண்டலத்தோடு அவர் முன் வந்து நின்றார் அகஸ்தியர்.

தெய்வத்தின் அவதாரம், ஹயக்ரீவர். இருந்தாலும் கோனேரிக் கரையில் ஒரு முரட்டுத்தனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, இஷ்டப்படி வலம் வந்தார். எனவே, தெய்வத்திற்குரிய கருணை என்பது அவருக்கு இயல்பாகவே இல்லாமல் போயிற்று. எங்கு தெய்வ சக்தி குறைகிறதோ, அங்கு துர்தேவதைகள் புகுந்து தங்களது ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ளும், என்பது நீண்டகால மரபு! அதன்படியே கலிபுருஷன் ஹயக்ரீவருக்கு துர்போதனை சொல்ல, அதன்படி திருமாலுடன் போராட முன்வந்தார்.

ஹயக்ரீவருக்கு எவ்வளவுக்கெவ்வளவு வேகம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்ள்ளவு  விவேகம் இல்லை. இதனை மிக நன்றாக உணர்ந்தவர் பிரம்மா! ஹயக்ரீவர் மட்டும் சற்று விவேகமாகச் செயல்பட்டிருந்தால், கலிபுருஷன் அவர் பக்கம் நெருங்கியே இருக்கமாட்டான்.

எனவே, கலைவாணி மூலமாக ஹயக்ரீவருக்கு ஞானோபதேசம் செய்ய பிரம்மா, ஏற்பாடு செய்தார். அதன்படியே கலைவாணியும் ஹயக்ரீவரிடம் அறிவுரை கூற விரும்பினாள். ஆனால் ஹயக்ரீவர் ஏற்கவில்லை. முன்பு இருந்ததைவிட பன்மடங்கு வேகத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் கனைத்துக் கொண்டு கல் அவதாரம் எடுத்த திருமாலுடன் போர்புரிய, ஹயக்ரீவர் முன் வந்த பொழுது, அகஸ்தியர் தாங்க முடியாமல் ஹயக்ரீவரைத் தடுத்து நிறுத்தினார்.

யாருக்கும் கட்டுப்படாத வேகத்தோடு ஹயக்ரீவர் வந்தாலும், அகத்தியப் பெருமானின் சொல்லால் அங்குமிங்கும் அசைய முடியாதவாறு நின்று விட்டார். ஹயக்ரீவருக்கு தலையாயச் சித்தரான அகஸ்தியரைப் பற்றித் தெரியும். ஆனால்  பார்த்ததில்லை. இப்பொழுதுதான் அகத்தியரைப் பார்த்தார்.

அகத்தியரின் சொல்லுக்கே தான் அசையாமல் நின்றுவிட்ட நிலையை எண்ணிப் பார்த்த ஹயக்ரீவருக்கு தன் நிலை புரிந்தது.

அகத்தியரின் பலமும் புரிந்தது.

"ஹயக்ரீவரே! சற்று அமைதி கொள்க. தாங்கள் யார் என்பதை அடியேன் அறிவேன்.சாட்சாத் திருமாலின் சகலவிதமான நற்குணங்களுடன் அவதாரம் எடுத்த தாங்கள் முனிவர்களைப் பகைத்துக் கொண்டதால் குதிரையாக இங்கு பவனி வந்து கொண்டிருக்கிறீர்கள்.

முனிவர்கள், ரிஷிகள் சாபம் விரைவில் தங்களை விட்டு விலகப் போகிறது. கோடானு கோடி ஜனங்களும் தங்களுடைய கருணையினால் புத்திக் கூர்மை பெற்றுத் திளைக்கப் போகிறார்கள் என்று எனக்கு ஞானக் கண் மூலம் தெரிகிறது. இப்படியிருக்க, தாங்கள் கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு திசைமாறிப் போகலாமா?" என்று பவ்யமாகக் கேட்டார், அகஸ்தியப் பெருமான்.

தன்னை அசைய விடாமல் கட்டிப் போட்ட அகத்தியப் பெருமான் மேல் கடும் கோபம் கொண்டு 

"அகஸ்தியரே!" என்று படு பயங்கரமாக கனைத்தபடி "உங்களுடைய உபதேசம் எனக்கு தேவை இல்லை. முதலில் என்னுடைய வேகத்தைத் தடுத்து நிறுத்தியது, என்னுடைய இடத்திற்கே வந்து எனக்கே உபதேசம் கூறி, திருமாலுக்கு    சாதகமாகச் செயல்பட்டது. இந்த இரண்டிற்கும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது" என்றார் ஹயக்ரீவர், அகத்தியப் பெருமானிடம்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Sunday 14 June 2015

பழனியில் போகர் சித்தர் திருநட்சத்திர விழா!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பழனியில் போகர் சன்னதியில் 13/06/2015, சனிக்கிழமை அன்று அவரது திரு நட்சத்திரம் (வைகாசி மாதம், பரணி நட்ச்சத்திரம்), அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடப்பட்டது. சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து, புவனேஸ்வரி அம்மன் விக்ரகத்திற்கும், போகர் பெருமான் பூசித்த ஸ்படிக லிங்கத்திற்கும் பலவிதமான அபிஷேகங்களை செய்து, குறிப்பாக, கங்கை நதி நீரை கொண்டு வந்து ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தது கண் கொள்ளாக் காட்ச்சியாக இருந்தது. சிறப்பான பூசைகளுடன், வந்திருந்த பக்தர்கள்/அடியவர்கள் அனைவரும், சித்தர் பெருமானின் அருளை பெற்று சென்றனர்.

குறிப்பாக அபிஷேகத்தை, விக்ரகங்களை புகை படம் எடுக்க கூடாது என்று வேண்டிக் கொண்டதால், அபிஷேகத்தை புகை படம் எடுக்கவில்லை. அதற்கு முன்னரே அலங்காரத்தை புகைப்படம் எடுத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



அக்னிலிங்கம்

Wednesday 10 June 2015

ஒரு தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தவிர்க்க முடியாத சில காரணங்களால், இந்த வார "சித்தன் அருள் - பெருமாளும் அடியேனும்" தொகுப்பை தட்டச்சு செய்ய முடியவில்லை. ஆதலால், இந்த ஒரு வாரம், ஒரு சிறிய இடை வேளை எடுத்துக் கொண்டு, அடுத்த வாரம் முதல் தொடர்கிறேன்.

தொகுப்பை தர முடியாததற்கு, மன்னிக்கவும்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அக்னிலிங்கம்!

Thursday 4 June 2015

சித்தன் அருள் - 225 - "பெருமாளும் அடியேனும் - 9 - சரஸ்வதியும் ஹயக்ரீவரும்!


கலைவாணியைக் கண்டதும் ஹயக்ரீவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மரியாதைக்கு நமஸ்காரம் சொன்னார்.

"யாருமில்லாத இந்தக் கோனேரிக் கானகத்தில் தாங்கள் மட்டும் எப்படி தனியாக வந்தீர்கள்?" என்று கேட்டார்.

"ஏன்! ஹயக்ரீவரே! நீங்கள் இல்லையா? பின் எனக்கென்ன பயம்?"

"நான்தான் இந்தக் காட்டில் காலம் காலமாக இருக்கிறேனே! ஆனால் இன்றுதான் தங்களை முதன் முதலாகச் சந்திக்கிறேன்." என்றார் ஹயக்ரீவர்.

"ஏன்? பெருமாள் இங்கு அவதாரம் எடுத்து கல்யாண குணத்தோடு காட்சி தந்து கொண்டிருக்கிறாரே, அவரைக் காணவில்லையா?" என்றாள் சரஸ்வதி தேவி.

"இல்லை தேவி! அங்கு ஏதோ கல்லில் படம் வரைந்தாற்போல் பகவான் சொரூபம் இருந்தது. அதன் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. முகமெல்லாம் மறைத்துக் கொண்டு திருநாமம் இருந்தது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்தான் திருமால் என்று இப்போது நினைக்கிறேன். சரிதானா?" என்றார் ஹயக்ரீவர்.

"ஹயக்ரீவர் சொன்னதால் அது சரியாகத்தானிருக்கும். அதுசரி, தங்களைப் பார்த்தால் முகத்தில் இயல்பான சாந்தகுணம் இல்லை, பரபரப்புடனும் உக்கிரமாகவும் காணப்படுகிறீர்கள். யாரையாவது தேடிக் கொண்டு வெகுவேகமாகப் போகிறீர்களா?" என்று ஒன்றும் தெரியாதமாதிரி கலைவாணி கேட்டாள்.

"ஆமாம் தேவி! தங்களுக்குத் தெரியும். பிரம்மாவுக்கும் தெரியும். இந்தக் கோனேரிக் காட்டில் ஆண்டாண்டு காலமாக அரசாட்சி செய்து வருகிறேன். இப்பொழுது என் அனுமதியின்றி யாரோ இங்கு வந்து இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து விட்டாராம். யார் அது என்பதைக் கண்டுபிடிக்கவே இங்கு வந்தேன்" என்றார்.

"யார் சொன்னார்கள், இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ததாக?"

"கலிபுருஷன்!"

"ஓ! அப்படியா? அவர் சொன்னதை அப்படியே நம்பி விட்டீர்களோ. அது சரி, அவர் சொன்னது உண்மையாக இருந்தாலும் யார் இங்கு ஆக்கிரமிப்பு செய்தார் என்பதையும் கலி புருஷனே சொல்லியிருக்கலாமே!" என்றாள் கலைவாணி.

"சொன்னாலும், சொல்லாவிட்டாலும் என் ராஜாங்கத்தில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் தவறுதானே?" என்றார் ஹயக்ரீவர்.

"அது திருமாலாக இருந்தால்?"

"தவறுதான்"

"அப்படி என்றால் அவரை என்ன செய்வதாக உத்தேசம்?"

"இந்த இடத்தை விட்டு வெளியேறச் சொல்வேன்"

""மறுத்தால்?"

"அவரோடு போர் புரிவேன்".

"திருமாலோடு, திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் தாங்கள் போர் புரிவதா?"

"ஒரே ரத்தத்தில் பிறந்த அண்ணன்-தம்பிகள் போர் புரிவதில்லையா? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது தேவி?"

"போரிடலாம். தவறில்லை. அதில் வெற்றி தோல்வியை பற்றி முதலில் சிந்திக்கவேண்டும். தோற்றால் எப்படி? ஜெயித்தால் எப்படி? என்று முன் கூட்டியே திட்டமிடவேண்டும்.

"நான் அதைப்பற்றி என்றைக்குமே சிந்தித்ததே இல்லை. இனியும் சிந்திக்க போவதும் இல்லை." என்றார்.

"அப்படி என்றால் உங்களுக்கு தோல்விதான் நிச்சயம்" என்றாள் கலைவாணி.

"அதெப்படி முன் கூட்டியே தாங்கள் கணிக்க முடியும்?"

"பிரம்மாதான் சொன்னார்!"

"என்னவென்று?"

"இப்படி வாரும் ஹயக்ரீவரே! தாங்கள் பொறுமையாகக் கேட்பதாக இருந்தால் சொல்கிறேன். தங்களுக்கு கலிபுருஷன் சொன்ன தகவலால் தாங்கள் கோபப்படுவீர்கள். கலி அவதாரம் எடுத்த திருமாலோடு போர்புரிய ஆக்ரோஷமாகப் போவீர்கள். அப்படி சென்றால் நீங்கள் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடநாதனால் தோற்கடிக்கப் படுவீர்கள். ஆகவே, பிரம்மா இதனை என்னிடம் சொல்லி ஹயக்ரீவருக்கு அறிவுரையும் நல்லவழியும் காட்டிவிட்டுவா" என்று சொல்லி அனுப்பினார். அதனால்தான் நான் இங்கு தங்களைத் தேடிவந்தேன்" என்றார் கலைவாணி.

"தேவி! தாங்கள் சொல்வது எதையும் நான் நம்பவில்லை. என்னை ஏமாற்றவே இப்படி ஒரு நாடகம் நடக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்று அட்டகாசமாகச் சிரித்தார் ஹயக்ரீவர்.

"பிறகு தங்கள் இஷ்டம். பிரம்மா என்னிடம் சொன்னதை தங்களிடம் சொல்லிவிட்டேன். வருகிறேன் வராஹமித்ரரே" என்றாள் கலைவாணி.

"என்னது? வராஹமித்ரரா? புதுப் பெயராக இருகிறதே" என்றார் ஹயக்ரீவர்.

"ஆமாம், தாங்கள் தான் வராஹமித்ரராக இந்தத் திருமலையில் கொடியேற்றி காலா காலமாக வாழப் போகிறீர்கள். இதையும் பிரம்மா என்னிடம் சொன்னார்": என்றார் கலைவாணி.

"இன்னும் என்னவெல்லாம் பிரம்மா சொன்னார்? அதை மொத்தமாக் இப்போதே என்னிடம் சொல்லிவிடுங்கள் தேவி!" என்றார் ஹயக்ரீவர்.

"தாங்கள் தான் எதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. தங்களுக்கு புஜபல பராக்கிரமம் இருக்கிறது. எல்லோரையும் அடக்கி ஆளும் திறமையும் இருக்கிறது. கொடிய விலங்குகளையும் விரட்டியடிக்கும் மகாசக்தி இருக்கிறது. தாங்கள் நான்குகால் பாய்ச்சலில் பாய்ந்தால் எழுகின்ற புழிதிப்படலம் விண்ணை முட்டும் வரையும் எழும்புகிறது.......... ஆனால்........"

"புத்தி மட்டும் இலை, என்கிறார்களா?" என்று கோபத்தோடு பூமியைக் கிளறியபடியே ஹயக்ரீவர் கேட்டார்.

"பார்த்தீர்களா? இதைக் கேட்கவே தங்களுக்குப் பொறுமை இல்லை. இதற்குத்தான், அறிவு, ஞானம் வேண்டும் என்பது" என்று நாசூக்காக சொல்லி, ஹயக்ரீவரின் மன நிலையைச் சோதித்தாள் கலைவாணி.

"ஏதோ எல்லா அறிவும் தங்களிடம் இருப்பதாகவும், எங்களுக்கெல்லாம் சிறிதும் ஞானம் எதுவும் இல்லை என்பது போலவும் பேசுகிறீர்கள் தேவி! இதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்" என்றார் ஹயக்ரீவர்.

"சரி! அது உங்கள் இஷ்டம். பிரம்மா என்னிடம் சொன்னதை தங்களிடம் சொல்லி விட்டேன். திருமால் அவதாரமான வேங்கடவனுடன் சண்டை போட்டு ஜெயிப்பது எளிதல்ல. அதற்கு சாமர்த்தியம் வேண்டும். அந்த சாமர்த்தியத்தை சொல்லிக் கொடுக்கும்படி பிரம்மா என்னிடம் சொன்னார். அதை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுத்தான் இங்கு வந்தேன். தங்களிடம் தோற்றுப்போனேன்" என்று சொல்லி திரும்பிய கலைவாணி 

"ஹயக்ரீவரே! எப்போதாவது என் உதவி தங்களுக்குத் தேவைப்பட்டால் வராஹன் அழைக்கிறேன் என்று மூன்று முறை இங்கு வந்து என்னை கூப்பிடுங்கள். ஓடி வந்து உதவுகிறேன்" என்று சொல்லிவிட்டு மெதுவாக திரும்பினாள்.

ஒரு வினாடி யோசித்த ஹயக்ரீவர், "ச்சே! ச்சே.. இந்த பெண்மணியின் பேச்சை எல்லாம் நம்ப முடியாது. திருமாலே இப்படிப்பட்ட லீலைகளை எல்லாம் செய்தாலும் செய்திருப்பார். எது எப்படியிருந்தாலும் அந்தக் கலி அவதாரத் திருமாலை முட்டி மோதி, இங்கிருந்து நகர்த்தி தூர எறிந்துவிட வேண்டியதுதான். கலிபுருஷன் நமக்கு நல்வழியைக் காட்டியிருக்கிறான். அவன் சொன்னதுதான் உண்மை" என்று எண்ணி, நேராக கல் அவதாரமான வேங்கடவனை நோக்கி மறுபடியும் நான்குகால் பாய்ச்சலில் சென்றார்.

சித்தன் அருள்....................... தொடரும்!