​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 April 2016

சித்தன் அருள் - 293 - "பெருமாளும் அடியேனும்" - 48 - பெருமாளின் திருவிளையாடல்!


விரோதம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கும் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக கலிபுருஷன் விளங்கினான். இல்லையெனில் அந்த மங்களமான நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவரும் மரணமடையக் கூடிய வகையில் உணவில் ஆலகால விஷத்தைக் கலந்துவிட்டு ஓரம் போய் நின்று வேடிக்கைப்பார்ப்பானா?

உள்ளுக்குள் கலிபுருஷன் யாருக்கும் தெரியாமல் உணவில் விஷம் கலப்பதை வாயுதேவன் கண்டுவிட்டு, ஓடி திருமாலிடம் வந்தான். தேவர்களின் ஆனந்தமான வேத கோஷத்தில் தன்னை மறந்து வேங்கடவன் ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது, வாயுதேவன் திருமாலிடம் வந்து மிக ரகசியமாகச்  சொன்னான்.

"அடியேன் தன்யனானேன்! அவசரமான ஒரு செய்தி" என்று பவ்யமாக கைகட்டி வாய் பொத்திச் சொன்னான்.

"என்ன வாயுதேவா?"

"கலிபுருஷன் சமையல் அறைக்குள் புகுந்து தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் அருந்தும் உணவில் விஷம் கலந்து விட்டான்?"

"அவ்வளவுதானே! வைத்துவிட்டுப் போகட்டும்!"

"பிரபு! தாங்களா இப்படிச் சொல்கிறீர்கள்?"

"பிறகு வேறு என்ன செய்யச் சொல்கிறாய்?"

"அதைச் சாப்பிட்டால் யாரும் உயிருடன்  இருக்க முடியாது. வைத்தது சாதாரணமான விஷமல்ல, ஆலகால விஷம்" பதறினான் வாயு தேவன்.

"அந்த ஆலகால விஷத்தை முக்கண்ணன் அருந்தவில்லையா? இதை,  அங்கிருக்கும் முக்கண்ணனிடம் போய்ச் சொல்" என்று சொன்ன வேங்கடவன் மறுபடியும், தேவர்கள் ஓதும் வேத கோஷத்தில் தன்னை நுழைத்துக் கொண்டார்.

இதைக் கண்டதும் வாயு பகவானுக்கு வேங்கடவன் மீது கோபம் வந்தது.

"என்ன இருந்தாலும் திருமால் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்ளக் கூடாது" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

எனினும் உயிர்ச் சேதம் இல்லாமல் காப்பாற்ற வேண்டுமே என்று அவசர அவசரமாக சிவபெருமான் அருகில் சென்றான்.

"என்ன வாயுதேவா! வா. இப்படி உட்கார். இந்த மாதிரியான ஆனந்த நடனத்தை  கண்டிருக்கிறாயா?  பார். இப்படி  அருமையான வாய்ப்புகள் கிடைப்பது மிக அரிது" என்று கண்ணை மூடிக் கொண்டு அரம்பயரின் நடனத்தைக் கண்டு ஆனந்தமாக தாளம் தட்ட ஆரம்பித்தார்.

இது வாயுதேவனுக்கு வெறுப்பை உண்டு பண்ணியது.

வெகு நேரம் நின்று பார்த்தும் சிவபெருமான், திரும்பி பார்க்கவில்லை என்பதால், வாயுபகவான் அகஸ்தியரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்.

அகஸ்தியர் சட்டென்று எழுந்தார்.

சமையல் அறைப்பக்கம்  சென்றார். உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம்? எல்லா உணவுகளும் சுவையாக  இருந்தன.ஒன்றில் கூட விஷம் கலந்ததற்கான அடையாளம் தெரியவில்லை.

"என்ன! வாயுபகவானே!  நல்ல சுவையாக இருக்கிறதே! தாங்கள் கூறியபடி ஆலகால விஷமெதுவும் இல்லையே!" என்றார் அகத்தியர்.

"இல்லை சித்தப் பெருமானே! நானே என் கண்ணால் பார்த்தேன், கலிபுருஷன் இதோ இந்த இடத்தில் நின்று கொண்டுதான் விஷத்தைக் கொட்டிக் கொண்டிருந்தான். அவன் கொட்டிய போது ஏற்பட்ட விஷ நெடி என் மூக்கைக் கூட நோக வைத்துவிட்டதே" என்றார் வாயுபகவான், பதறியபடி.

"தாங்கள் சொல்வதைத் தவறு என்று எண்ணவில்லை. காற்றின் மூலமாகத்தானே எல்லா மணங்களும் உலகத்திற்கே வெளி வருகின்றன? ஆனால், எப்படி அத்தனை விஷங்களும் வெளியேறியிருக்கும்? இதில் யாரோ, ஏதோ ஓர் அதிசயத்தை செய்திருக்க வேண்டும்?" என்று யோசித்தார் அகஸ்தியர்.

அகஸ்தியரின் ஞானக் கண்ணில் வேங்கடவன் தெரிந்தார்.

எப்பொழுது கலிபுருஷன் விருட்டென்று விலகிப் போனானோ, அப்பொழுது முதலே அவனையும் அறியாமல் அவனைப் பின் தொடர்ந்து அவன் செய்யும் செய்கைகளை மறைமுகமாக கவனித்த வேங்கடவன், ஆலகால விஷத்தை அவன் உணவுப் பண்டங்களில் கலப்பதையும் கண்டார். அவன் விஷத்தைக் கலக்க கலக்க, பெருமாள் அந்த உணவுப் பண்டங்களின் மீது துளசி இலையைக் கிள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். வேங்கடவன் கிள்ளிப் போட்ட துளசிச் செடியின் இலைகள் கலிபுருஷனின் ஆலகால விஷத்தை அப்படியே முறித்து விட்டது.

அதுமட்டுமல்ல! 

அவனால் மேலும் எந்தவிதக் கெடுதலும் வராதபடி, சுற்றுமுற்றும் தன்னுடைய சக்கரத்தை சுழலவும் விட்டிருக்கிறார். பெருமாளின் சக்கரம் பெருத்த ஜ்வாலையுடன் அங்கு சுற்றி வருவதைக் கண்ட கலிபுருஷன் அந்த எரிச்சல் தாங்காமல் திருமலையை விட்டே ஓடிவிட்டான் என்பதை அகஸ்தியர் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.

வேங்கடவன் இத்தனையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது மாதிரி விழக்கோலங்களை ரசித்துக் கொண்டிருகின்றாரே. இவரல்லவோ மிகப் பெரிய "கள்வன்" என்று எண்ணி, தனக்குத்தானே மனதிற்குள் சிரித்துக் கொண்டார், அகத்தியப் பெருமான்.

சித்தன் அருள்....................... தொடரும்!

4 comments:

  1. iraivan nammaillen kappattra ippadi edhavadhoru thittam vaithiruparendru namakke thonrum bodu , vayu bhagavanukku mattum en thonthravillai...

    ReplyDelete
  2. சுவாமி உங்களையன்றி எமை காப்பது யார்???
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Brighu Maharishi Arulnilaya Poojai and Ramadevar poojai here http://aarumugaththambiran.blogspot.in/2016/03/20-3-16.html

    ReplyDelete