​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 April 2016

சித்தன் அருள் - 304 - "பெருமாளும் அடியேனும்" - 50 - "கலிபுருஷனின் விளையாட்டு "


அஞ்சனையும்  வேங்கடவனின் அருள் பெறத்  திருமலைக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது இரவு  நேரமாகிவிட்டது.

அதே சமயம் அவர்கள் பயணம் செய்துவந்த குதிரைகளும் மிகவும் களைத்துப் போயின. அமாவாசை  என்பதால்,    அஞ்சனை தம்பதி அருகிலுள்ள சிற்றூரில் குதிரைகளுக்குத் தண்ணீர் குடிக்க காட்டினார்கள்.

பிறகு,  குதிரையைத்தட்டிக் கொடுத்து பக்கத்திலுள்ள புல்வெளியில்  விட்டார்கள். அதுவும் சுதந்திரமாகப்  புல்லை மேய ஆரம்பித்தது. ஒரு குதிரை மட்டும் எங்கும் செல்லவில்லை.  எனவே அதற்குப் புல்லை அறுத்துப் போட்டுவிட்டு, அருகிலுள்ள மரத்தில் கட்டிவிட்டார்கள்.

அவர்களுக்கு துணையாக வந்த சிப்பாய்கள் சுற்றுமுற்றும் பாதுகாவலாக இருக்க, அரை நாழிகையில் அஞ்சனை தம்பதிக்கு இரவில் தங்க கூடாரமும் போடப்பட்டது.

நள்ளிரவு நேரம்.................

அந்த காட்டிற்கு வந்த கலிபுருஷன் கூடாரத்தில் தங்கியிருப்பது யார் என்பதை கண்டறிந்தான். அவனுக்கு அஞ்சனை யார் என்பது தெரியும். அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை அகில உலகையும் ஆட்கொள்ளப் போகிறது என்பதும் தெரியும்.

அஞ்சனைக்கு வேங்கடவன் தரிசனம் தருவார். அவளுக்கும் குழந்தை பிறக்கும். அது அனுமான் என்ற பெயரில் வலம் வரும் என்பதையும் அறிந்தான்.

அந்த அனுமான் பிறந்தால் வேங்கடவன் மகிமை ஏழு உலகிற்கும் தெரிய வரும். அனுமன் பிறந்தால் அது தனக்கும், தான் மேற்கொள்ளவிருக்கும் சகலவிதமான காரியங்களுக்கும் கெடுதலாக மாறும். எனவே, அஞ்சனை தம்பதி வேங்கடவனைச் சந்திக்க விடக்கூடாது  முடிவெடுத்தான். சில நாழிகைகள் யோசித்தபின், தானே வேங்கடவனாக  அஞ்சனைக்கு அருள் வாக்கு கொடுப்பதுபோல் கொடுத்து, அவர்களை இங்கிருந்தே திருப்பி அனுப்பிவிடவும் செய்யலாம் என்று முடிவெடுத்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில்,

அஞ்சனை தம்பதி முன் நின்றான், வேங்கடவனாக!

பகவானைத் தேடி  போய்க் கொண்டிருக்கும் பொழுது பகவானே நம் கண்முன் பிரத்யட்சமாக வந்து நிற்பதைக் கண்டதும் அஞ்சனைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

வேங்கடநாதன் என்று நினைத்து கலிபுருஷன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள் அஞ்சனை தம்பதி.

"நாங்கள் செய்த பாக்கியம்! தாங்களே இன்று எங்களைத் தேடி வந்து எங்களை ஆசிர்வாதம் செய்தது" என்றாள் அஞ்சனை.

"உங்களுக்கு என்ன குறை? என்னிடம் சொல்லுங்கள். அதை யாம் தீர்த்து வைப்போம்" என்றான் (வேங்கட) கலிபுருஷன்.

"தங்களுக்குத் தெரியாததா! எங்களுக்குப் புத்திர பாக்கியம் இன்னும் கிட்டவில்லை!"

"அவ்வளவுதானே! இதற்காகவா இத்தனை சிரமப்பட்டு  திருமலைக்குப் பயணமாகிக் கொண்டிருக்கிறீர்கள்? இனிமேல் நீங்கள் செல்லவும் வேண்டாம், திருமலையில் என்னைத் தரிசிக்க வர வேண்டாம். இங்கேயே இப்பொழுதே உங்களுக்குப் புத்திர பாக்கியம் தந்தோம். ஆனால்.............." என்று இழுத்தான் கலிபுருஷன்.

"என்ன ஆனால்?"  பதறியபடியே கேட்டாள் அஞ்சனை.

"திருமலைக்கு வந்து ஈராண்டு காலம் தினமும் புத்திர காமேஷ்டி யாகம் செய்யவேண்டும். நாரதர், பிரம்மா இருவரும் இந்த யாகத்தை செய்ய வேண்டும். அவர்கள் இதற்கு எளிதில் ஒத்துழைப்பு தரமாட்டார்கள், அதுதான் பெரும் சங்கடம்." என்றான் கலிபுருஷன்.

"வேங்கடவனே இப்படி சொல்வதா? எப்பொழுது தாங்கள் வாக்கு கொடுத்து விட்டீர்களோ அப்பொழுதே எங்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைத்து விட்டதாகவே மகிழ்ச்சி அடைகிறோம். பிறகு எதற்கு புத்திர காமேஷ்டி யாகம்? அதுவும் நாரதர், பிரம்மா துணை கொண்டு என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை" என்றார் அஞ்சனையின் கணவன்.

"சரி! நாரதர் வேண்டாம்! பிரம்மாவும் வேண்டாம்!பத்திரகாளியை வைத்து ஓர் அஷ்டமியில் அந்த யாகத்தை செய்யலாமே!" என்றான் வேங்கடவன் வேடத்தில் இருக்கும் கலிபுருஷன்.

"என்னது?" என்று ஒரே சமயத்தில் அலறினார்கள், அஞ்சனையும் அவள் கணவரும்!

"நாங்கள் பேசுவது திருமலை வேங்கடவனிடம்தானா? ஒரு போதும் புத்திர காமேஷ்டி யாகத்தை பத்திரகாளியை வைத்துச் செய்ததாக சரித்திரம் இல்லையே? எப்படி திருமால் திருவாய் மூலம் இப்படிப்பட்ட தகாத சொல் வந்தது?" என்று பயந்தபடியே அஞ்சனை கேட்டாள்.

சித்தன் அருள்.......................... தொடரும்!

5 comments:

  1. அனுமன் பிறந்தது திரேதா யுகம். நீங்கள் கூறும் சம்பவம் நடந்ததோ கலியுகத்தின் துவக்கம். காலம் பொருந்தவில்லையே.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. In previous episode no. 286, Kali Purusan says: "இனி ஏழாயிரம் ஆண்டுகள் பூலோகம் என் கைவசம்தான்". As per this, the length of kaliyuga is 7000 years. Most people agree that Sri Krishna/Mahabharat is 5100-5200 years old; and that this took place at the end of Dwapara yuga, just before the start of Kali yuga.
    This mean that there are another 1800-1900 of kaliyuga still pending.
    If Sri Anjaneya was born after the advent of வேங்கடவன் in Tirumula, then it would mean a very short gap between the two Yugas (Rama's Treta yuga and Krishna's Dwapara yuga). Further, it would also mean that Dwapara yuga was even shorter than kali yuga, which does not match with what the shastras have said.
    However, all this is of interest only to the historians and academicians. For a Bhakt, it is immaterial when his/her God took avatar.

    ReplyDelete
  4. Thanks for the Clarification.. much appreciated!!

    ReplyDelete
  5. இதற்கெல்லாம் இன்னும் ஒரு மிக நுட்பமான விளக்கம் இருக்குமென்றே தோன்றுகிறது. ஆனால் அது இன்னும் நமக்கு விளக்கப்பட வில்லை. இந்தப் புராண நிகழ்வுகளைக் கருணையுடன் வெளியிட்ட அகத்தியரே இதை விளக்குவார் என நம்புகிறேன்.

    ReplyDelete