​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 5 May 2016

சித்தன் அருள் - 317 - "பெருமாளும் அடியேனும்" - 52 - அஞ்சனையின் தவம்!


அழகான குழந்தை தனக்கு பிறக்கவேண்டும் என்று வேண்டி தன் கணவனுடன் திருமலைக்கு வந்து கொண்டிருந்த அஞ்சனை, நடுவழியில் தன் கணவனைக் காணாதது கண்டு துடிதுடித்துப் போனாலும், அருகிலுள்ள நீரோடைக்கருகில் சென்று பார்க்கும்படி வேங்கடவனின் வாக்குப்படிச் சென்றாள்.

அங்கு - தன் கணவன் ஒரு குழந்தையை வாயுபகவானுக்குத் தத்து கொடுப்பது போல் கண்ட காட்ச்சியைக் கண்டு "இதென்ன அதிசயம்? தனக்கே குழந்தை இல்லை. அப்படியிருக்க, தன் கணவன் ஒரு குழந்தையை வாயுபகவானுக்கு, எல்லார் முன்னிலையிலும் தத்து கொடுக்கிறாரே?" என்று பதறிப் போனாள். தான் இன்னும் கருவுறவே இல்லை.அதற்குள் எப்படி தன் கணவன் ஒரு குழந்தையைத் தத்து கொடுக்கிறார்? என்ற நினைப்பில் மதிமயங்கிக் கீழே சாய்ந்தாள்.

கண் திறந்து பார்த்தபோது தான் கண்டது எல்லாம் ஒரு கனவுதான். நினைவில் நடந்த நிகழ்ச்சி அல்ல என்று அஞ்சனைக்குத் தோன்றியது. ஆனால் யாரிடமும் இதுபற்றிச் சொல்லவே இல்லை.

வெகுதூரம் நடந்து வந்த களைப்பால் அஞ்சனை மயங்கி விழுந்திருக்கிறாள் என்றுதான் அவள் கணவன் எண்ணி, அஞ்சனையை தேற்றினார். பிறகு அவர்கள் இருவரும் திருமலை வேங்கடவனை நோக்கிப் பயணம் செய்தனர். கருடப் பெருமானுக்குச் சிறப்பு செய்யும் வகையில் "கருடாத்ரி" என்று பெயரிட்ட குன்றுக்கு மேல் அடர்ந்த காட்டில் பர்ணசாலை ஒன்றை அமைத்த அஞ்சனை தம்பதி சுற்றிலும் உள்ள இயற்கைச் செழிப்பைக் கண்டு வியந்து போனார்கள்.

இப்படிப்பட்ட சொர்க்க பூமியை இதுவரை அஞ்சனை தம்பதி கண்டதில்லை, மெல்லிய தென்றல் காற்று, வாசனைகளை அள்ளித்தரும் நான்கு புறங்களிலும் உள்ள மலர்த்தோட்டங்கள். வேங்கடவனுக்கு அன்றாடம் அலங்கரிக்கவே பிறந்திருந்த கருந்துளசிச் செடிகள் நந்தவனத்தில் குவியல் குவியலாக இருக்கும் அற்புதம், பின்புறம் மலையிலிருந்து வெள்ளிக் கோடுபோல் ஆடாமல் அசையாமல் விழுந்து கொண்டிருக்கும் அருவிகள்.

பட்சிகளின் ஆனந்தமான சப்தங்களைத் தாங்கிக் கொண்டு வெயிலுக்கு குடை பிடிப்பது போன்று நெருங்கிய கிளைகளோடு பூமியை இருட்டாக்கி கொண்டு இருக்கும் தேவதாரு, அரச, ஆலமரத்து கிளைகள், வண்டுகளின் ரீங்காரம். அருகிலுள்ள வனத்தில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் புள்ளிமான்கள், வெள்ளை மயில்கள், முயல்கள்.

பூமியெங்கும் செழிப்பாக வளர்ந்திருக்கும் புல்பூண்டுகள். அவற்றின் மீது அள்ளித் தெளித்தார் போல் பனித்துளிகள். ஆகாயத்தில் மட்டுமே தெரியும் கருமேகங்கள். இப்பொழுது திருப்பதி மலைமீது இறங்கி தன்னையும் தொட்டுச் செல்லுகின்ற ஆனந்தமான உணர்ச்சிகளைத் தரும் நிகழ்வுகள்.

இதையெல்லாம் எண்ணி எண்ணி வியந்தும், மகிழ்ந்தும் போன அஞ்சனை தம்பதி "தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆயுள் முழுவதும் இங்கேயே தங்கிவிட்டால் ஏன்ன? மலைமீது வேங்கடவன் தரிசனம். அவன் திருப்பாத பூமியில் தங்களுடைய பர்ணசாலை. இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?" என்று இருவரும் ஒருமித்த கருத்தோடு நினைத்தனர்.

தன்னை நோக்கி தவமிருக்க, தான் இட்ட ஆணைகேற்ப தன் மலைக்கு,   தவமிருக்க வந்த அஞ்சனை தம்பதிக்கு வேங்கடவன் மனப்பூர்வமாக ஆசிர்வாதம் கொடுத்தார்.

ஒன்றரை ஆண்டு காலம் கடுமையாகத் தவம் புரிய வேண்டும். அன்றாடம் தான் தரும் ஒரு கனியை மட்டுமே இருவரும் புசிக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுக்கு பின்தான் அஞ்சனை கர்ப்பம் பெறுவாள் என்று பல்வேறு கட்டுப்பாடுகளைச் சொல்ல அத்தனையும் அஞ்சனை தம்பதி ஏற்றுக் கொண்டனர்.

"தடையில்லாமல் தவம் நடக்க வேண்டும்" என்று தங்களைச் சுற்றி அஞ்சனை தம்பதி காப்பு கட்டிக் கொண்டனர். ஒரு வளர் பிறை சதுர்த்தி அன்று, அஸ்வினி நட்சத்திரத்தில் சுப ஹோரையில், குரு பகவான் வாழ்த்துக்களோடு அவர்கள் இருவரம், குழந்தை பேற்றிற்காக வேங்கடவனை நோக்கித் தவமிருக்கலானார்கள். அவர்கள் இருவருக்கும் தவம் செய்யும் முன்பு வேங்கடவன் தன் கையாலேயே ஓர் அழகிய மாதுளம் கனியைக் கொடுத்தார். திருமாலே, தன் திருக்கையால் மாதுளம்கனியைக் கொடுத்ததைவிட வேறு சிறந்த பாக்கியம் ஏதுமில்லை என்றெண்ணி ஆனந்தப்பட்டனர், அஞ்சனை தம்பதியர்.

அஞ்சனையின் தவத்தில் மிகுந்த உறுதி இருந்தது. ஆனால் அஞ்சனையின் கணவனான கேசரிக்கு தவமிருக்கும் பொழுது மன உறுதி இல்லாமல் போயிற்று. எத்தனை முறை வாய்ப்பு கொடுத்தாலும்  அதை கேசரி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றரை ஆண்டுகாலம் எப்படியோ கழிந்துவிட்டது. அஞ்சனை தன் விரதத்தை நல்ல படியாக முடித்துக் கொண்டு, தன் கணவன் கேசரியின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். 

தவத்தை அடியோடு விட்டுவிட்டு, காட்டிலுள்ள முயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த கேசரியைக் கண்டு மனம் நொறுங்கிப் போனாள், அஞ்சனை.

"வேங்கடவன் ஆணையை மீறிவிட்டீர்களே, இது என்ன நியாயம்?" என்று கடிந்து கொண்டாள் அஞ்சனை.

"விரதமும், தவமும் பெண்களுக்கு உரியவை. ஆண்களுக்கு அதுவும் யானையைத் தன்னந் தனியாக நின்று கொன்ற என் போன்ற வீரர்களுக்கு இது தேவையில்லை" என சப்தம் போட்டுச் சொன்னான், கேசரி.

"என்ன ஆயிற்று உங்களுக்கு? நேற்றுவரை அமைதியாகவும், ஆறுதலாகவும், பேசியும் செயல்பட்டு வந்தீர்கள். இன்றைக்கு திருமாலின் கோபத்திற்கு ஆளாகிவிடீர்களே? நமக்கு குழந்தை பிறக்க வேண்டாமா? அதற்காகத்தானே நாம் இங்கு வந்தோம்" என்று அஞ்சியபடியே கெஞ்சினாள் அஞ்சனை.

"போடி பைத்தியம்! குழந்தை பெறப்போகிறவள் நீ,  தவமிருப்பதில் நியாயமிருக்கிறது. நான் ஏன் அதற்கு கஷ்டப்படவேண்டும்?" என்று அலட்சியமாக சொன்னான், அஞ்சனையின் கணவன், கேசரி.

இதைக் கேட்டதும் அஞ்சனைக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் மனதிற்குள் ஒரு ஜீவ மரணப் போராட்டம் நடந்தது.

[இருவார இடைவேளைக்குப் பின் "பெருமாளும் அடியேனும்" தொடரும்!]

சித்தன் அருள்............................. தொடரும்!

2 comments: