​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 30 November 2016

சித்தன் அருள் - 523 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ராம நாமம் ஜெபித்தார்கள், சம்பாதிக்கு சிறகு முளைத்தது, என்றெல்லாம் படிக்கும் பொழுது, இது சாத்தியமா என்று கேட்கத் தோன்றும். அப்படியானால், ஒரு பறவையை பிடித்து, சிறகுகளை அரிந்துவிட்டு, ராம நாமம் ஜெபித்தால் சிறகுகள் முளைக்குமா? என்றால், ராம நாமம் சக்தியுடையது. சிறகென்ன, கரங்கள், கால்கள் கூட ஒரு மனிதனுக்கு முளைக்கும். ஆனால், நாம நாமத்தை சொல்கிறவர்கள், பக்குவமடைந்து, ஆத்ம சுத்தியோடு, பற்றற்ற தன்மையோடு, பல காலம் ராம நாமத்தை ஜெபித்து, ஜெபித்து, ஜெபித்து, ஸித்தி பெற்று இருந்தால், உடனடியாக நடக்கும். மனம் ஒன்றாத பிரார்த்தனைகள் பலனளிக்காது. மந்திரங்களும், வழிபாடுகளும் ஒன்றுதானப்பா. அதை கையாளும் மனிதனை பொறுத்துதான், உடனடி முடிவும், தாமதமான முடிவும். எனவே, விளைவு எப்படி இருந்தாலும் பாதகமில்லை என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்யச் செய்ய, பலன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும்.

Tuesday 29 November 2016

சித்தன் அருள் - 522 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால், லலிதா சஹஸ்ரநாமத்தை, 1,3,5 மண்டலம் பிரார்த்தனையாகவோ, யாகமாகவோ, ஆலயத்திலோ, இல்லத்திலோ, அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது, பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றும் அப்பா! இது பக்தி வழி. யோகா மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால், குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, மனதை ஒரு நிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, நித்தமும் உச்சரித்து வந்தால், மூலாதாரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது எழுவதை உணரலாம். எனவே, எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி, நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும், அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் அப்பா!

Monday 28 November 2016

சித்தன் அருள் - 521 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவனின், மாற்று வடிவங்கள் என்பதை உணர்வதும் தனக்குள் உள்ள அண்ட சராசர பேராற்றலை உணர முயல்வதும்தான், துன்பமின்றி வாழ்வதற்கு ஒரு வழியாகும். அதற்கு, ஆன்மாவை படிப்படியாக எடுத்துச் செல்வதற்குத்தான், யாம் காட்டுகின்ற வழிமுறைகள். நெறி முறைகள், பக்தி வழிகாட்டுதல், ஆகமங்கள், தர்ம காரியங்கள். ஆனால் துன்பமில்லாத நிலையென்றால், இங்கு அவன் மனநிலை அகுதோப்ப மாறிவிடும் தவிர, வாழ்வு நிலை மாறாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு நோக்கமானது மாறிக்கொண்டே இருக்கும். இவன் நிம்மதியை ஒத்திப்போட்டுக்கொண்டே செல்வான். சந்தோஷத்தை ஒத்தி வைப்பதுதானே விதியின் வேலை, மாயையின் வேலை. எனவே, இவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான், மனிதனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அகுதொப்ப ஒரே தினத்திலோ, ஒரு சில ஆண்டுகளிலோ இதை செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும். அந்த ஞானத்தை நோக்கி பயணத்தை துவங்க வைப்பதுதான், எமது பணியாக உள்ளது. ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவத்தை குறைத்தால்தான், இகுதொப்ப விஷயமே அவன் சிந்தனைக்கு எட்டும், என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தர்மம் செய்யாமல் ஒருவன் பாவங்களை குறைக்கவே இயலாது. படைப்பெல்லாம் இறைவனுக்கே சொந்தம். இந்த கருத்தை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் அசைபோட, துன்பங்களிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், கிட்டும்! ஆசிகள்! சுபம்!

Sunday 27 November 2016

சித்தன் அருள் - 520 - அந்த நாள் > இந்த வருடம் 2016 - கோடகநல்லூர் - 2

உண்மையிலேயே, இந்த நிகழ்ச்சியை அகத்தியப் பெருமான் தான் தன் அடியவர்கள் வழி நடத்தி எடுத்துக் கொள்கிறார் என்பது அன்று தெளிவாயிற்று.

3-4 அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து பெருமாள், தேசிகர் இவர்களின் அபிஷேக பீடத்தை தூக்கி வெளியே கொண்டுவந்து வைத்தனர். ஒரு சிலர் சேர்ந்து, பூசைக்கான பூக்களை எடுத்து அடுக்கி வைத்து கேட்கும் பொழுது எடுத்து கொடுக்க வரிசை படுத்தி வைத்தனர். ஒரு சிலர் சேர்ந்து, துளசி, ரோஜா பூ போன்றவற்றை ஆய்ந்து, அர்ச்சனை செய்வதற்கு ஏதுவாக பூ கூடையில் வைத்தனர். ஒரு சிலர் அபிஷேகத்துக்கு தேவையான பாத்திரங்களை மேடை மேல் கொண்டு வைத்து அதில், மடப்பள்ளியிலிருந்து நீர் பிடித்து வைத்தனர். ஒருவரிடம் இந்த இடத்தை கூட்டி சுத்தம் பண்ணிவிடுங்களேன் என்றிட, அதை செய்வதற்கும் பலர் போட்டியிட்டனர். இதற்குள் வந்திருந்த பக்தர்களின் எண்ணிக்கை 150ஐ தொட்டது.  எல்லோரும், மிக அமைதியாக மேடைக்கு எதிர் புறத்தில் அமர்ந்திருந்தனர்.


உள்ளே சென்று, உற்சவ மூர்த்தியை எடுத்துவர திரும்பிய அர்ச்சகரிடம், ஒரு சிறிய பொருளை கொடுத்து "பெருமாள் பாதத்தில் வைத்து, பூசைகள் முடிந்ததும், என்னிடம் தாருங்கள்" என்றேன். அவரும் அதை வாங்கிச் சென்று, பெருமாள் பாதத்தில் வைத்தார்.

உற்சவ மூர்த்தி, இரு தாயார்கள், சக்கரம், சாலிகிராமம், தேசிகர் இவர்களின் அபிஷேக மூர்த்தங்கள் மேடைக்கு வந்து சேர்ந்தது. கோலம் போடப்பட்டு, கலச தீர்த்தம் வைத்து, தயாராக இருந்தது.

அர்ச்சகர், சங்கல்பத்துடன் பூசையை தொடங்க வேண்டி, என்னை அழைத்து, "யார் பேருக்கு சங்கல்பம் செய்ய வேண்டும்" என்றார். முன்னரே தீர்மானித்திருந்தபடி, "அகத்தியப் பெருமான்", அன்றைய நட்சத்திரம், திதி இவைகளை கூறி பூசையை தொடங்கச் சொன்னேன். அவரும், கடைசியாக "அகத்தியர் பக்த ஜன சபை" என்று ஒரு நாமத்தையும் சேர்த்து, அகத்தியர் அடியவர்களை பெருமை படுத்தும் விதமாக பூசையை தொடங்கினார்.

20 நிமிடத்தில் கலச பூசை நிறைவேற, அடுத்தது அபிஷேக பூசை தொடங்கப்பட்டது. அனைத்து அடியவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எல்லோருடைய மனதிலும் ஒவ்வொரு விதமான பிரார்த்தனை என்பதை, அவரவர் முகம் காட்டிக் கொடுத்தது.

பெருமாள் பாதத்தை பார்த்து, "எல்லோருக்கும் அருள் புரியுங்களேன்" என்று வேண்டிக் கொண்டேன்.

முதலில் விதவிதமான அபிஷேகம் செய்யப்பட்டது. கடைசியில்தான் கலச தீர்த்த அபிஷேகம்.

வாசனாதி திரவியங்கள் சேர்த்த தைலக்காப்பு பெருமாளுக்கும் தாயாருக்கும், தேசிகருக்கும், சக்கரத்துக்கும், சாலிக்ராமத்துக்கும் செய்யப்பட்டு, அதில் ஒரு சிறு பங்கு, அங்கு வந்திருந்த அனைத்து அடியவர்களுக்கும், உடலில் தேய்த்துக் கொள்ள, கையில் கொடுக்கப்பட்டது. இதே போல், திருமஞ்சனத்துக்கு உபயோகிக்கப்பட்ட, பெருமாள், தாயார் மார்பில் இருந்த மஞ்சள் கலவையும் எல்லோருக்கும் பின்னர் வழங்கப்பட்டது. [இது மிகப் பெரிய அரிய மருந்து, என்பதை, நானறிவேன்].

தேன், நெய், பால், தயிர், 128 மூலிகைப் பொடி, மஞ்சள், வாசனாதி திரவியங்கள், என பலவிதமான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அபிஷேக நேரத்தில், பெருமாளின் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அதில் பல விதமான உணர்வுகள் வெளிப்படுவதை காண முடிந்தது. ஒரு முறை மூச்சு முட்டி, முகத்தை வழித்து விட்டு நிற்கிற குளிக்கும் குழந்தை போல், மறுமுறை, ஆனந்தமாக கண்ணை மூடி அபிஷேகத்தை அனுபவிக்கிற நிலை. ஒரு முறை கண்ணை திறந்து வைத்துக் கொண்டு "சரி! ஏற்றுக் கொண்டுவிட்டேன்" என்றும், உடனேயே அடுத்த அபிஷேகத்தில் பள்ளி கொண்டு, ஆனந்தமாக நீரில் சயனித்து இருக்கும் முக பாவம். என்னவென்று சொல்வது. இதை நேரில் கண்டுதான் உணரவேண்டும்.

அபிஷேகத்தின் பொழுது பலர் ஒன்று சேர்ந்து "புருஷ சூக்தம்" என்கிற மந்திரத்தை ஓதினார்கள். மிக ரம்மியமாக இருந்தது, சூழ்நிலை. அமைதியாக அமர்ந்திருந்த அகத்தியர் அடியவர்கள், இந்த சூழ்நிலையை மிகவே கவனமாக கவனித்து வந்தனர் என்பதற்கு, பின்னர் ஒருவர், பெருமாளின் அபிஷேகத்தின் போது, மாறி மாறி வந்த அவரின் முக பாவத்தை விளக்கிய பொழுதே புரிந்தது.

முதல் கட்ட அபிஷேகம் முடிந்து போன நிலையில், இரண்டாம் கட்டமாக கலச தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. அமோகமாக, நாராயணா என்கிற நாமம் ஒலிக்க, பெரிய கலச தீர்த்தம் அபிஷேகத்துக்குப் பின் தீர்த்தமாக அனைவருக்கும் தலையில் தெளிக்கப்பட்டது.

அபிஷேகம் முடிந்து போனதால், திரை போடப்பட்டு, அலங்காரம் தொடங்கப்பட்டது. அரை மணி நேரத்தில் அலங்காரம் முடியவே, முதலில் மூலவருக்கு பூசையும், தீபாராதனையும் செய்யப்பட்டது. அத்தனை பேரும் அந்த சின்ன சன்னதிக்குள் செல்ல முடியாது என்பதால், அடியேன் வெளியே நின்று, ஒரு நிமிடத்தில் பெருமாளை எட்டிப் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.

தரிசனம் முடிந்து அனைவரும் வெளியே வர, உற்சவ மூர்த்திக்கு நிவேதனம் செய்யப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுக்கப்பட்டது. அமைதியும், ஆனந்தமும் ஒரு சேர, அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி நாராயணா என்கிற மந்திரம் உள்ளொலிக்க பெருமாளின் தரிசனத்தை பெற்றனர்.

வந்திருந்த அனைவருக்கும், சடாரி சார்த்தப்பட்டு, தீர்த்தம் கொடுக்கப்பட்டு, துளசி ப்ரசாதத்துடன் குங்குமம் அளிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகி, "பிரசாதத்தை உங்கள் ஆட்களை வைத்தே எல்லோருக்கும் கொடுத்து விடுங்களேன்" என்றார். முன்னரே, பிரசாதத்தை உள்வலம் வரும் வழியில் வைத்து கொடுக்கலாம் என்று தீர்மானித்திருந்ததால், ஒரு நான்கு அகத்தியர் அடியவர்களை தேர்ந்தெடுத்து வரிசையாக மேடைமேல் நிற்கச்சொல்லி, பிரசாத பாத்திரத்தை அடுக்கி வைத்தோம். ஒருவர் தட்டு கொடுக்க, மற்றவர்கள் வரிசையாக வந்து சென்ற அகத்தியர் அடியவர்களுக்கு, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் என விநியோகம் செய்தனர். இதனுடன் ஐந்தாவதாக நின்றவர், அகத்தியர் அடியவர்கள் கொடுப்பதற்காக வாங்கி வந்த "இனிப்பு பலகாரத்தை" கொடுத்தார். எனக்கோ ஆச்சரியம். எப்படி அகத்தியர் அடியவர்கள் தாங்களும் பங்கு பெற வேண்டும் என்ற அவாவில், இனிப்பை வாங்கி வந்திருக்கிறார்கள் என்று. எனக்கு அது தோன்றவே இல்லை. சரி அந்த பாக்கியத்தை அகத்தியப் பெருமான் அவர்களுக்கு உணர்வாக இருந்து கொடுத்துள்ளார் என்று புரிந்து கொண்டேன். ஆறாவதாக நின்ற ஒரு பெரியவர், தன் சார்பாக "லோபா முத்திரையுடன் அகத்தியப் பெருமான்" சேர்ந்திருக்கும் ஒரு சிறிய படத்தை அனைவருக்கும் கொடுத்தார். இதற்கிடையில், விநியோகம் தொடங்கும் முன்னரே, அர்ச்சகரிடம் அடியேன் கொடுத்து உள்ளே மூலவர் பெருமாளிடம் வைத்திருந்த அந்த சிறிய பொருளை வாங்கி, முதல் பரிசாக ஒரு "786" பதித்த ரூபாய் நோட்டை பெருமாளுக்கு கொடுத்து அவர் பாதத்தில் வைத்த பின், இரண்டாவதாக அர்ச்சகருக்கு ஒன்றை கொடுத்த பின், ஏழாவதாக நின்று கடைசியில், வந்திருந்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் "இது பெருமாளின் பரிசு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி கொடுத்தேன். அடியேனுக்கு பெருமாள் கொடுத்தது, இந்த சின்ன வேலைதான். அதிலேயே, திருப்தி வந்துவிட்டது.

அடியவர்கள் அனைவரும், மிக அமைதியாக, அன்பாக, வரிசையில் வந்து இவை அனைத்தையும் பெற்று சென்றனர். அனைவரும் சாப்பிட்டபின் தட்டை கோவிலுக்கு வெளியே எடுத்துச்சென்று, அதற்கான இடத்தில் விட்டு சென்றது, நம் மக்களுக்குள்ளும், சுத்தம், சுகாதாரம் என்கிற எண்ணம் நன்றாக பரவியுள்ளது, என்பது புரிந்தது.

வந்திருந்த பலரும், திரு.கார்த்திகேயன் வந்திருக்கிறாரா என்றுதான் விசாரித்தனர். அவர் வராததால் தப்பித்தார். இந்த வருட இந்த புண்ணிய தினத்துக்குப் பிறகு இப்படி ஒரு "பல முனை தாக்குதல்" போல "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளை" விட்டு விலகிவிடுவார் என்று அடியேன் நினைக்கவில்லை.  அதற்கான காரணமும் நியாயமானது. அதை பற்றி பின் ஒருமுறை தெளிவாக விளக்குகிறேன். அவர் விலகிய செய்தியில் சற்றே செயலிழந்து நின்றதால்தான், இந்த இரண்டாம் பாகம் சற்று தாமதமாகிவிட்டது. உண்மையிலேயே மறந்தே போனது.

நிறைய அடியவர்கள், அடியேனிடமும் சற்று நேரம் பேசினார்கள். இதுவே பெரும் பாக்கியம் என்று நினைத்துக் கொண்டேன். அதிலிருந்து, அகத்தியப் பெருமானின் சித்தன் அருள், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் வேரோடி, உள் புகுந்து, நல்லவைகளை செய்துள்ளது என்று உணர முடிந்தது. அனைத்து பெருமையும், அகத்திய பெருமானுக்கும், திரு.கார்த்திகேயனையும் சாரும். அனைவரும் இறை அருள் பெற்று, இன்பமாக விலகி செல்ல 4 மணியாயிற்று.

எல்லாம் முடிந்த பின் ஒரு அசதி வந்தது பாருங்கள். உடல் வலிமை அனைத்தும் வற்றி போனது போல். அருகிலிருந்த ஒரு வீட்டில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு, அன்றைய தினம் "சனிப்பிரதோஷம்" ஆனதால், சிவபெருமானுக்கு வாங்கி வைத்த அபிஷேக பொருட்களை எடுத்துக் கொண்டு 5.30க்கு கோவிலுக்கு சென்றோம். அந்தக் கோவில் செவ்வாய்க்கான பரிகார தலம். மிகுந்த கூட்டம். வெளியே நின்று, ஒரு அடியவரிடம் வேண்டி, விலகி வழி தரச்சொல்லி, மெதுவாக எட்டிப்பார்த்துவிட்டு, பூசைக்கான பொருட்களை அங்கே அமர்ந்திருந்த பக்தர்கள் வழி உள்ளே கொடுத்துவிட்டேன்.

"சரி! உங்களுக்கும் மரியாதை செய்தாகிவிட்டது. ஏற்றுக் கொள்க! எல்லோரையும் ஆசீர்வதியுங்கள்" என வேண்டிக் கொண்டு, பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஒரு விஷயம் தெரியுமா? பெருமாள் கோவில் உள்ள ஊர்களில், சிவபெருமான் தான் "ஷேத்ரபாலகராக" இருக்கிறார். எந்த பெருமாள் கோவிலுக்கு சென்றாலும், ஆராய்ச்சி பண்ணி பாருங்கள். பக்கத்தில் எங்கேனும் ஒரு சிவலிங்கம் இருக்கும்.

இரவு 7.30க்கு நடை சாற்றி வீட்டுக்கு செல்ல வேண்டும் என பெருமாள் கோவில் அர்ச்சகர் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தால், அவசர அவசரமாக கோவிலுக்கு வந்தோம். அப்பொழுதும் ஒரு 50 பேர் நின்றிருந்தனர். உள்ளே பெருமாள் ஆனந்தமாக, அமைதியாக நின்றிருந்தார்.

அவரை பார்த்ததும் ஒன்றுதான் கேட்கத் தோன்றியது. "மழை இல்லை, நீர் இல்லை, ஏன் தாமிரபரணியே மெலிந்துவிட்டாள். இன்றைய பூசையை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக இருந்தால், இந்த குறைவை நிவர்த்தி செய்யக் கூடாதா?" என்றேன் மனதுள்.

இரவில் பூசை, தீபாராதனை, அதன் பிறகு சடாரி வைக்கப்பட்டு, துளசி குங்குமம் கொடுக்கப்பட்டு, சுண்டல் பிரசாதம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. சற்றே நேரத்தில், எந்த செயற்கை வெளிச்சமும் இன்றி, மறுமுறை கும்ப தீபம் காட்டி, நேத்ர தரிசனம் அனைவருக்கும் செய்து வைக்கப்பட்டது. நாங்கள் காத்திருந்தோம். பெருமாள் சார்பாக, பள்ளியறை பால் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அதை அருந்தி பார்க்க வேண்டும். இந்த காலத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்தின் ருசியுடன், இப்படி ஒரு பாலா? என்று நம்மை திகைக்க வைக்கும்.

பூசை முடிந்து கருவறை திரையிட்டு மூடிய பின், சற்று நேரம் அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"எல்லாம் திருப்தி தானே?" என்ற பொதுவான கேள்வியை கேட்டேன்.

அதற்கு அவர்,

"பெருமாள், இன்று ரொம்ப குளிர்ந்து போய், ஆனந்தமாக, அழகாக இருக்கிறேன் என்கிறார். இது போல் தினமும் எனக்கு பூசை ஏற்பாடு செய்தால், நான் தினமும் சந்தோஷமாக இருப்பேன்" என்றார்.

"அது சரி! வருடத்தில் ஒரு நாள் ஏற்பாடு செய்வதற்குள் எல்லோரும் படுகிற பாடு என்னவென்று அவருக்கு தெரியும். இதை தினமும் என்றால், அவ்வளவுதான். எதுக்கும், அவர் பெயரை "ப்ரஹன்மாதாவார்" என்கிற நாமத்திலிருந்து "நித்ய கல்யாண பெருமாள்னு" மாத்திக்கச் சொல்லுங்க!" என வேடிக்கையாக சொல்லிவிட்டு, என் வேண்டுதலை மறுபடியும் ஒரு முறை கூறிவிட்டு, கிளம்பினோம்.

மறுநாள், அதிகாலையில் தொடங்கிய மழை, யாரையுமே வீட்டை விட்டு வெளியே போகவிடாமல் செய்து, 24 மணிநேரம் திருநெல்வேலியை ஸ்தம்பிக்க வைத்தது என அதிர்ச்சி தரும் செய்தி வந்து சேர்ந்தது.

அகத்தியர் அடியவர்களே, உங்கள் பங்கினாலும், பிரார்த்தனையினாலும், அகத்தியப் பெருமானின் அருளாலும், இந்த வருட அந்த புண்ணிய தினம் மிக விமர்சையாக நடந்தேறியது. அதற்கு பரிசாக, உங்கள் அனைவருக்கும், இறை அருளையும், எனது பணிவான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டு,

மேலும் இது போல் நிறைய வழிகளை, நம் அனைவருக்கும், அகத்தியப் பெருமான் அருளட்டும், என்று வேண்டிக் கொண்டு, இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்.

நமஸ்காரம்.

சித்தன் அருள் ................ தொடரும்!

சித்தன் அருள் - 519 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதனின் எதிர்கால வாழ்வினை அறிய, அருள் வாக்கோ, ஜோதிடமோ பார்ப்பதில் தவறில்லை. ஆயினும், மனிதர்களின் முன் ஜென்ம பாவத்தின் அடிப்படையில் அமைவதுதான், அவன் வாழ்வு. எம்மை நாடுவதாலோ, எமது வகை அறிவதாலோ மட்டும் உடன் உயர்ந்த பலன் கிட்டிவிடாது. விதி, முதலில் அதன் வேலையை செய்துகொண்டே இருக்கும். அதன் போக்கிலே சென்றுதான் திசை திருப்பவேண்டும். விதி எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? ஒவ்வொரு ஆத்மாவும், ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவ, புண்ணிய அளவை வைத்து, நடப்பு பிறவியிலே அதற்கு ஏற்றவாறு தாய், தந்தை உறவினர், நட்பு, பணி, கல்வி, ஆரோக்கியம் போன்றவை முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. அதில், விரும்பக்கூடியதை, மனிதன், ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான். விரும்பக் கூடாததை மட்டும் மாற்றினால் நன்மை என்று எண்ணுகிறான். அது தவறில்லை. என்றாலும் விதி அதற்கு அனுமதி தராது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள், தர்மங்கள் செய்துதான் பிரச்சினைகளில் இருந்து மெல்ல, மெல்ல வெளியே வர வேண்டும். ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வு, வேறொரு மனிதனுக்கு நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனின் கர்மா, பாவங்கள், தனித்தனியான அளவீடுகளை கொண்டதாக இருக்கிறது. எம்மை நாடுவதும், வாக்கை அறிவதும், அறிந்த பிறகு ஆதி பிழறாமல் செய்தும், எவ்வித மாற்றமும் இல்லை என்று வருந்துகின்ற மனிதர்கள் பலருண்டு. அங்கும் விதி கடுமையாக உள்ளதை, புரிந்து கொள்ளவேண்டும். மனச்சோர்வு கொள்ளாமல், மீண்டும், மீண்டும் இறைவனிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்கவேண்டும். துன்பமே இல்லாத வாழ்க்கை என்று ஒன்றுமே கிடையாது. எப்படி இன்பம் ஒரு மாயையோ, துன்பமும் ஒரு மாயைதான். ஆக, இவ்விரண்டையும் தாங்கக்கூடிய மனோ பக்குவத்தை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்குத்தான், "ஞானநிலை" என்று பெயர். அந்த ஞானத்தைத்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டும் என்று யாங்கள் எதிர் பார்க்கிறோம்.

Saturday 26 November 2016

சித்தன் அருள் - 518 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!



அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அகுதொப்ப விதி, மதி என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்துவிடு. அதே உன்னை காலா காலம் காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள்  பார்த்து, பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத்தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள்தான், மனோபலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. மனோபலத்தை உறுதி செய்யவும், வளர்த்துக் கொள்ளவும், துன்பங்களைத் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். அகுதொப்பத்தான், பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. அவற்றை கண்டு மனம் தளராது, எதிர்த்து, இறையருளோடு போராடினால், இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். அகுதொப்ப இயன்ற பிரார்த்தனைகளை, தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிகள்.

Friday 25 November 2016

சித்தன் அருள் - 517 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கோவிலில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, பூர்வீக தோஷம் குறையும். இது அடிப்படை ஆனாலும், ஒவ்வொரு மனிதனின், அன்றாட கலிகால வாழ்க்கையில், நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை வாங்கி ஏற்றக்கூடிய வாய்ப்பும், சூழலும், இட வசதியும் இருந்தால், எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம். அதில் பயன் உண்டு. இறையருளும் கூடும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும்பொழுது, "பஞ்சாட்சரம்" ஓதித்தான் அதைக் கையில் வாங்கி கொள்ள வேண்டும்.

Thursday 24 November 2016

சித்தன் அருள் - 516 - திரு.கார்த்திகேயனின் "பின்னுரை"


ஓம்  ஸ்ரீ லோபாமுத்திரா சமேத ​அகத்தீசாய நமஹ! சில விஷயங்கள் ​பின்னுரை​யாக.

அகத்தியப் பெருமான் அருளிய "பெருமாளும் அடியேனும்" என்கிற தொடர் திடீரென்று முடிந்து போனதில், உங்களுடன், எனக்கும் சற்றே அதிர்வை தந்தாலும், நாடியில் வந்து அகத்தியப் பெருமான் அதை அருளிய காலத்தில் என்ன நடந்தது என்பதை, ஏன் நின்று போனது என்பதை திரு.கார்த்திகேயன் அவர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். கூறப்படுகிற விஷயங்களை, அதனதன் நிலையில் நின்று புரிந்து கொள்ளுங்கள்.

"ஓம்  ஸ்ரீ லோபாமுத்திரா சமேத ​அகத்தீசாய நமஹ!"

"எல்லோரும் இன்புற்று இருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற இறைவனின் எண்ணம் வளர்ந்து இந்த பூமியில் "தர்மம்" இன்றளவும் நிலைத்து நிற்க காரணமாயிற்று. இதையே சித்தர்கள் அனைவரும் அடிப்படை எண்ணமாக கொண்டனர், நடை முறைப்படுத்தினர். அவர்களுக்குத்தான் எந்த எதிர்பார்ப்பும் கிடையாதே. தங்களுக்கு என்று எதையும் வேண்டாமல், கலியின் பாதிப்பினால் வழி தவறி செல்கிற மனிதனை, எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும், மன்னித்தருள இறைவனிடம் வேண்டி, உத்தரவை பெற்றபின், "நாடி" என்கிற ஒரு முறையை உருவாக்கினர்.  ஆம்! இந்த உலகின் அத்தனை விஷயங்களையும் "ஓலைச்சுவடியில்" எழுதி வைத்தனர்.  ஒரு சில நாடிகளில் மட்டும் எழுதி வைக்காமல், வேண்டிக் கொள்கிறபோது எழுத்துக்களை தோற்றுவித்து, விஷயங்களை விளக்கினர். இந்த வகை நாடியை "ஜீவ நாடி" என்பர். எல்லா சித்தருக்கும் ஜீவ நாடி என்பது உண்டு. அதை கை வசம் வைத்திருக்கும் அந்தப் பெரியவரை நாடி சென்று கேட்கிற பொழுது, பிரச்சினைக்கான காரணத்தை விளக்கி, என்ன செய்தால் பரிகாரமாக ஆகும் என்பதையும் சொல்லி, அதை செய்ய வைத்து தனிப்பட்ட மனிதரை கரை ஏற்றி விட்ட நிகழ்ச்சிகள் இந்த பூமியில் ஏராளம்.

எத்தனையோ ஜென்மத்துக்கு முன்பு செய்த செயலால் சேர்த்து வைத்தக் கர்மவினை கூட மிக எளிதாக சித்தரால் கண்டிபிடிக்கப் பட்டுவிடும். ஆம் சித்தர்கள் முக்காலமும் உணர்ந்த ஞானிகள்.

அப்படிப்பட்ட ஜீவ நாடி ஒருவருக்கு கைவரப் பெறுவது என்பது மிக சாதாரணமான விஷயமல்ல. மகான்களை காண்பதே மிகப் பெரிய புண்ணியம்.  அதே மகானுடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பது என்பது எத்தனை ஜென்ம புண்ணியம்! அப்படிப்பட்ட ஒரு புண்ணிய ஆத்மாவை நண்பனாக அடைவது என்பது, அதற்கு பின்னர் இந்த உலகில் நமக்கு எந்த பௌதீக வஸ்துவுமே தேவை இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடும். அப்படிப்பட்டவரை, நல்ல நண்பனாக மட்டும் பார்க்காமல், குரு ஸ்தானத்தில் வைத்து கொண்டாடினால்! ஆம் அதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும். இறை அருள் வேண்டும். சித்தர் வழிநடத்தல் வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நண்பரின் தொடர்பினால் ஏற்பட்ட நட்பில், அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட நல்ல விஷயங்களை, இங்கே "சித்த மார்க" தேடலில் முனைந்து இருக்கும் சித்தர் அடியவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் தர நினைத்த போது உருவானது தான்

"சித்தன் அருள்"

​என்கிற தொகுப்பு. இந்த தலைப்பை கூட அகத்தியப் பெருமானே எடுத்துக் கொடுத்தார், என்பதே உண்மை.

​எங்கள் நட்பை ஒரு போதும், பிறர் புரிந்து கொள்கிறபடி நாங்கள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஒரு ஆழமான தெளிவு அதில் இருந்தது. என்னை முழு உரிமையுடன் "டேய்" போட்டு கூப்பிடுகிற அளவுக்கு அது இருந்தது. ஆனால் அப்படி கூப்பிடுவது கூட ஒருவரை மிக தாழ்வாக கருதுவது போல் ஆகிவிடும் என்று நினைத்து மிக மரியாதை கொடுத்துதான் பேசுவார் அவர். அதுவே அவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையை வளர்த்தது.  மேலும் அவர் உருவில் தனியாக இருந்தாலும், அரூபமாக, அவர் வாக்கில் அகஸ்திய சித்தரே அவருடன் எப்போதும் உள்ளார் என்று பல முறை உணர்ந்திருக்கிறேன். அது தான் உண்மையும் கூட. தனக்கு பெயர் வர வேண்டும் என்றோ, புகழ் வேண்டும் என்றோ ஒரு நிமிடம் கூட நினைக்காதவர்.  எல்லோரும் சித்தரை கொண்டாடுங்கள் என்று தான் கூறுவார். என்னவோ தன் வாழ்க்கை கூட, அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்து கிடப்பதே என்று நினைத்து வாழ்ந்தவர். அடுத்த நிமிடத்தை பற்றி கவலைப் படமாட்டார். எல்லாம் அகத்தியர் பார்த்துக் கொள்வார் என்று திடமாக நம்பியவர். அவரைப் பார்த்து, அவர் சொன்னதை தெளிவாக கேட்டு, உணர்ந்து, வாழ்க்கையை செம்மையாக மாற்றிக்கொண்டேன், நான். என்னுள் அவர் கொண்டு வந்த மாற்றங்கள், அவரை ஒரு குருவாக ஏற்க வைத்தது. இன்றும் அவர் என் மானசீக குருதான்.

ஒரு முறை பேசும் போது "இந்த உடலை பற்றி நான் கவலைப்படவே இல்லை! அதனால் என்ன நடந்தாலும் யாரும் வருத்தப்படவே கூடாது. எல்லாம் அகத்தியர் பார்த்துப்பார்" என்றார்.

என்னவோ நடக்கிறது, என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த நான் "என்ன! இப்பொழுது இந்த வார்த்தை?" என்றேன்.

அப்பொழுது மடைதிறந்த வெள்ளமென பிறர் அறிந்திராத பல விஷயங்களை என்னிடம் கூறினார். நிறையவே புரிந்து கொள்ள முடிந்தது.  எதுவும் நம் கையில் இல்லை என்று. அனைத்தையும் தீர்மானிப்பது இறைவன் செயல். முடிந்த அளவுக்கு வாசனைகளை களைவதே நல்லது என்று உணர முடிந்தது. கூடவே, அவரின் உறவினர் வழி ஒரு தொகுப்பை கொடுத்துவிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு "இது உன்னிடம் இருக்கட்டும். அகத்தியருக்கு சேவை செய்கிற பாக்கியம் என்றேனும் உனக்கும் கிடைக்கலாம். நானும் வேண்டிக் கொள்கிறேன். உன் கர்மாவை, அதில் இருக்கும் வாசனைகளை களைய அகத்தியப் பெருமானால் முடியும். பத்திரமாக வைத்து உபயோகப் படுத்திக்கொள்" என்றார்.

மிகுந்த யோசனையுடன் அவர் கொடுத்த விஷயங்களை வாங்கி வைத்துக் கொண்டேன். கிடைத்ததை பார்த்தால், அதில் ஒன்று தற்போது முடிந்து போன "பெருமாளும் அடியேனும்" தொடரின் நிகழ்ச்சிகள். ஆனால், அது நிறைவு பெறாமலேயே இருந்தது.

"இப்படி நிறைவு பெறாமலேயே இருக்கிற ஒரு விஷயத்தை என்னிடம் தந்தால், நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டேன்.

"ஹ்ம்ம். தவறான கேள்வி. ஏன் அது இத்துடன் நிறுத்தப் பட்டது? மீதியை எப்போது கொடுப்பார் அகத்தியர்? என்று கேட்டிருக்கவேண்டும்" என்றார் என் நண்பர்.

"உண்மைதான். நாடியில் அகத்தியர் வந்து சொன்ன இத்தனை விஷயங்கள் எதனால் திடீரென்று நின்று போனது?" 

"ஆறு மாசமாச்சு! உத்தரவு வந்து. எங்கும் உபயோகிக்கப்பட்ட என் பெயரை, இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்று குருநாதரின் உத்தரவு? அதை மெதுவாக மறக்க தொடங்க வேண்டும். எல்லோரிடமிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் விலகி நில்! என்கிறார்."

அகத்திய பெருமானின் உத்தரவை கேட்டதும், சற்றே அதிர்ந்து போனாலும், அதை மறைத்துக் கொண்டு ஒரு கேள்வியை திருப்பிக் கேட்டேன்.

"விரிவாக என்னிடம் கூறலாம், என்றால் விளக்குங்களேன்!" என்றேன்.

"ஏழு மலைக்கு பெயர் வந்த சூழ்நிலையை அகத்தியர் நாடியில் வந்து விளக்கத் தொடங்கினார். ஐந்து மலை வரை வந்தாகி விட்டது. ஆறாவது மலை பற்றிய நிகழ்ச்சிகளை எதிர் பார்த்து காத்திருந்தேன். தினமும் நாடி வைத்து வேண்டிக் கொண்டபின், அதில் அகத்தியப் பெருமான் கூறியதை நகல் எடுப்பது என் வேலை. அன்றும் அகத்தியர் நாடியில் வந்து பேசக் காத்திருந்தேன். எப்போதும் வேண்டிக் கொண்டவுடன் பேசுகிற அவரை, காணவில்லை. ஆம்! நாடியில் வரவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடக்கிறது. அதனால் தான் அவர் வரவில்லை என்று நினைத்து நாடியை பூசை அறையில் ராமர் பாதத்தில் வைத்துவிட்டு, இயல்பாக வெளியே வந்துவிட்டேன்."

"மூன்று நாட்களாகியது. இப்படி சொல்லாமல், கொள்ளாமல் அகத்தியர் தவிக்க விட்டதே இல்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று கூட யோசித்துப் பார்த்தேன். எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், அகத்தியரை நினைத்து த்யானம் செய்யத் தொடங்கினேன்."

"பொதுவாக, அகத்தியர் வந்து வாக்கு உரைக்கவில்லை என்றால், ஏன்? என்று கூட கேட்க, உண்மையாகவே எனக்கு துணிவு கிடையாது. அவரே மௌனமாக இருந்துவிட்டதால், வராததால், மிச்சம் இருந்த கொஞ்சம் தைரியமும் கரைந்து போனது."

அது ஒரு வியாழக்கிழமை. குருவாரம் என்பதால், நிச்சயமாக அகத்தியர் அருளுவார் என்று நம்பிக்கையுடன் அவரை  தியானித்து, பூசை செய்து காத்திருந்தேன். அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பேசலானார். எனக்குள் மிகுந்த சந்தோஷம்.

அகத்தியப் பெருமானே, மூன்று நாட்களாக தங்களை எதிர்பார்த்து, வேண்டிக்கொண்டு காத்திருக்கிறேன். தாங்கள் வரவில்லை. அடியேன் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து, பொருத்தருள வேண்டும். இன்னும் இரு மலைகளின் நாமதேயத்தை சுற்றி நடந்த விஷயங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்!" என்றேன்.

வந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது.

"யாம் முன்னரே சொன்னபடி எல்லாவற்றிலிருந்தும், எல்லா மனிதர்களிடமிருந்தும் விலகி நில். உன் பெயரை மறக்க வேண்டும். முகம் மறக்க வேண்டும். இறைவன் தன் மலைகளின் நாம புராணத்தை விளக்குவதை இத்துடன் தடுத்து நிறுத்திவிட்டார். ஏன் என வினவியபோது, கைலாயப் பெருமானை சென்று வணங்கி கேட்டுக்கொள் என்று கூறிவிட்டார். உடனேயே கைலாயம் சென்றேன். அதனால் தான் வாக்குரைக்க வரவில்லை."

ஒரே குழப்பமாக இருந்தாலும், அகத்தியப் பெருமானுக்கு தெரியாததா? என்று அமைதியாக இருந்தேன்.

அவர் கூறலானார்.

"கைலாயத்தில் சிவபெருமானை கண்டு வணங்கி நின்றேன். ஆனந்தமாக இருந்தது. என்ன அகத்தியர்! இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் என்றார். 

"இறைவனை கைலாயத்தில் வந்து தரிசனம் செய்தாலே பெரும் புண்ணியமாயிற்றே! அதனால் தான் அடியேன் இங்கு வந்து சேர்ந்தேன், என்றேன்."

"கேட்க வந்த விஷயத்தை, அகத்தியர் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்கலாமே!" என்றார்.

"திருமலையின் சிறப்புக்களை பெருமாள் அனுமதியுடன் உலகறிய உரைத்து வந்தேன். திடீர் என பெருமாள் கொடுத்த அனுமதியை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். ஏன் இப்படி? என தாச விண்ணப்பத்துடன் கேட்ட பொழுது முக்கண்ணனை கண்டு விஷயத்தை அறிந்து கொள் என்றார். ஆதலால் இங்கு ஏகினேன். அடியேனுக்கு அருள் கூர்ந்து வழிகாட்ட வேண்டும்" என்றேன்.

"நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தனின் விதி முடிகிற காலம் வந்துவிட்டது. அவன் திரும்பி வரவேண்டிய காலம் நெருங்குகிறது. ஆதலால், ஏழுமலையான் தன் உத்தரவை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். அதனதன் விஷயங்கள், விதிப்படி தானே நடக்கும்." என்றார்.

"அடியேனின் ஒரு விண்ணப்பம். பூமியில் மனித குலம் தர்மத்தின் வழி சென்று, இறையை அடைய, நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக, இந்த மைந்தனை தெரிவு செய்துள்ளேன். இன்னும் ஒரு தசவருடம் மைந்தனின் ஆயுளை நீட்டி தரும்படி எம்பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்றேன்.

அதற்கு எம்பெருமான் "இல்லை அகத்தியா! இவன் விதியை மாற்றுவதாக எமக்கு எண்ணமில்லை. அவன் வந்து சேர்ந்துதான் ஆகவேண்டும். நீ சென்று வா. காலம் உன் செயல்களுக்கு உதவி செய்யும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். எத்தனையோ முறை வேண்டிக்கொண்டும் அவர் மனம் மாறுவதாக தெரியவில்லை.

"நடப்பதெல்லாம் இறைவன் செயல், எனக்கு கூட புத்திரபாசம் இருக்கிறதோ?" என்ற கேள்வியுடன் கைலாசத்தை விட்டு வந்துவிட்டேன். ஒரு மனிதனாக இருக்கும் உனக்கு, இது நிச்சயமாக சலனத்தை ஏற்படுத்தலாம். தாக்கத்தை உருவாக்கலாம். எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றை விட்டுவிடு. சரியான தருணத்தில், யாம் வந்து அழைத்துச் செல்கிறோம்" என்று கூறி அமைதியாகிவிட்டார் அகத்தியர்.

சொன்னது எல்லாம் பேரிடியாகி உள்ளே இறங்கினாலும், மனதை கல்லாக்கிக்கொண்டு நண்பரிடம் வினவினேன்.

"சரி! என்று? எத்தனை நாட்களில்? எப்படி? எப்பொழுது? என்பதை அகத்தியப் பெருமான் கூறினாரா?" என்றேன், சிறு பதட்டத்துடன்.

சற்று புன்னகைத்தபடி, "என்ன? நீயும் சாதாரண மனிதனாக இருக்கிறாய்? அப்படிப்பட்ட முகூர்த்தத்தை அவர் தெரிவிப்பாரா? அது இறைவன் சித்தமாயிற்றே! போய் அமைதியாக இரு! உன்னிடம் தந்தவற்றை பத்திரமாக வைத்துக்கொள். அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்யும் பாக்கியம் உனக்கும் கிடைக்கும். அதை கெட்டியாக பிடித்து கொண்டு, மேலேறி வந்துவிடு. பிறகு பார்க்கலாம். சென்று வா" எனக்கூறி விடை பெற்றார், அகத்தியர் மைந்தன்.

அவர் மெதுவாக திரும்பி நடந்து செல்வதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவே கடைசியாக சந்தித்ததும், பார்த்ததும்.

கிடு கிடுவென நாட்களும் ஓடியது. நிறைய மாற்றங்களும் அவர் உடல் நிலையில் வந்தது. ஒரு சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிர்ச்சை அளித்தும், பலனின்றி, அவர் ஆத்மா நல்ல முகூர்த்தத்தில், உடலை விட்டு பிரிந்தது..................

நான் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு மேல் யாரிடமும் பேசவில்லை. எதுவும் செய்யவில்லை. தினப்படி செய்கிற விஷயங்கள் கூட நின்று போனது. எதிலும் சிறு துளி கூட விருப்பமில்லாத நிலை. அமைதியாக அமர்ந்து அகத்தியர் படத்தை பார்த்தபடி இருந்தேன். மிகப்பெரிய இழப்பு என்ற உணர்வு வரவே, மொத்தமாக இடிந்து பெயர்ந்து போன நிலை.

என்னை சுற்றி யார் யாரோ வந்து போகிற மாதிரி உணர்வு வந்தது. யாரென உணரவில்லை. என்னென்னவோ பேசுவது கூட கேட்டது.

" மனித பிறவியெடுத்தவர்களுக்கு இது நிச்சயம். இதை விட்டு வெளியே வா! இன்னும் இது போல் நிறையவே நடக்கும். அனைத்தையும், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டு, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை பற்றின்றி செய்!" என யாரோ காதருகில் வந்து மிக சன்னமாக கூறினார்கள்.

தலை குனிந்து, கண் மூடி த்யானத்தில் அமர்ந்திருந்த என் தலைக்குள் இந்த செய்தி தெளிவாக கேட்டது. உடன் கண் திறந்து வலது பக்கம் பார்த்தேன். ஏதோ ஒரு அதீத சக்தி, காற்றாய் வந்து சொல்லிவிட்டு மெதுவாக விலகி சென்றது போல் உணர்வு ஏற்பட்டது. என் நண்பரா? சித்தனா? அகத்தியரா, கூறி சென்றது யார் என்று புரியவில்லை.

சற்று நேர அமைதிக்குப்பின், நடந்த விஷயங்களை மறுபடியும் யோசித்து பார்த்து "சரி! யாரோ துணை இருக்கிறார்கள்! சொன்ன படியே நடந்து கொள்வோம்" என தீர்மானித்து, இயல்பு நிலைக்கு வர தீர்மானித்தேன். இருப்பினும் உள் அமர்ந்த சோகம் விலக சிறிது நாட்களாகியது.

ஒருநாள், காலை த்யானத்தில் எதோ ஒரு உணர்வு உந்த, ஒரு விண்ணப்பத்தை தெரிவித்தேன், அகத்திய பெருமானை நினைத்து.

"என் நண்பர், நிறையவே என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவை அத்தனையையும் இந்த உலக மக்கள் தெரிந்து கொள்ள வெளியிட அனுமதி வேண்டும். என் நண்பரின், அகத்தியரின் புகழ் எங்கும் பரவ வேண்டி மட்டும் தான் இதை கேட்கிறேன். அடியேனுக்கும், உங்கள் இருவருக்கும் ஏதேனும் சேவை செய்ததுபோல் இருக்கும். அதனால் வருகிற பெருமைகள் அனைத்தையும் உங்களுக்கே தாரை வாரத்துக்கு கொடுத்துவிடுகிறேன். ஏதேனும் சிறுமைகள் இருந்தால் அது அடியேனின் தவறாக நினைத்து மன்னித்தருளுக! இதற்கான அனுமதியை எதிர் பார்க்கிறேன்!" என்று கூறிவிட்டு, சொந்த விஷயத்தை பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டேன்.

எங்கெங்கோ அலைந்து, வீட்டு விஷயங்களை பார்த்து, வீடு திரும்பிய பொழுது மாலை நேரமாகிவிட்டது. நடந்து வரும் வழியில், "வீடு சென்று குளித்து த்யானத்தில் அமரவேண்டும்" என்று தோன்றியது.

அதன் படியே அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் "எமது ஆசிகள் உமக்குண்டு" என்று ஒலிக்க, யாரது அருள்வது என்று கண்மூடி பார்த்தால், அகத்தியப் பெருமான் வலது கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபடி நின்றிருந்தார்.

ஆனந்த அதிர்ச்சியில், எழுந்து நின்று, அவர் நின்ற திசை நோக்கி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்தேன்.

"நலம் உண்டாகட்டும்" என்றார்.

"தாங்களே! அதற்கும் வழிகாட்டி, ஒரு தலைப்பு பெயரையும் சூட்டி விடுங்களேன்" என்றிட,

அவர் திருவாயால் அருளிய தலைப்பே 

"சித்தன் அருள்"

சூட்ச்சுமமாக அனைவருக்கும் அதை உணர்த்தவே, அந்த தலைப்பை பின்னர் "அகத்தியப் பெருமானின் - சித்தன் அருள்" என்று தற்போதைய நடத்துனர் மாற்றினார்.

இதனால்தான், "பெருமாளும் அடியேனும்"  திடீரென ஐந்து மலைகளின் நாமகரணத்துடன் நின்று போனது. பின்னர், வேறொரு சமயத்தில், பெங்களூரில் அகத்தியப் பெருமான் நடத்திய சத்சங்கத்தில் (திரு.கணேசன், தஞ்சாவூர் அவர்கள் வாசித்த நாடியில்) ஒரு அடியவர், "ஏழு மலையில், மீதமிருக்கும் இரண்டு மலைகளின் நாமகரண சரித்திரத்தை, எங்களுக்கு கூறக்கூடாதா?" என்று வினவியபோது, "காலம் கனியும் பொழுது, இறைவன் அனுமதி அளிக்கும் பொழுது, யாமே அதை பற்றி கூறுவோம். பொறுத்திருங்கள்" என்றார், அகத்தியர்.

அகத்தியர் அதை பற்றி கூறும் பொழுது, அதை கேட்கிற பாக்கியம் செய்தவர்கள், அதை கேட்டு அவர் அனுமதியுடன் அதை பதிவு செய்கிற அந்த புண்ணிய ஆத்மா யாரோ? தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என் அவா. இந்த உலக மக்களுக்கு அந்த  மலைகளுக்கு பெயர் வந்த போது நடந்த நிகழ்ச்சிகள் கிடைக்கவேண்டும்.

இறைவன் கனியும் வரை, அகத்தியர் அருளும் வரை காத்திருப்போம்.

சித்தன் அருளை இத்தனை நாட்கள் வளர்ந்து வர அகத்தியப் பெருமான் அருளியிருந்தாலும், அதன் வளர்ச்சியில் நிறைய அகத்தியர் அடியவர்கள் பங்கு பெற்றனர். ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஒவ்வொருவிதத்தில் அளித்தனர். அத்தனை பேருக்கும், எனது பணிவான நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வலைப்பூவில் பங்கு பெற்று, தன் சித்திரங்களால் "சித்தன் அருளை" அழகுபடுத்தி இன்று வரை எனக்கு கூட உறுதுணையாக நின்றிருந்த திரு.சரவணனுக்கு, மனமார்ந்த நன்றியை, அகத்தியப் பெருமானின் ஆசிர்வாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதைய வலைப்பூ நடத்துனரும், திரு சரவணனும் செய்த ஒரு கூட்டு முயற்சியாக இன்றைய படம் மிக சிறப்பாக வந்துள்ளது. "ராமருக்கு" பட்டாபிஷேகம் இருக்க, ஏன் வேங்கடவருக்கு அது போல் ஒரு ராஜ்ய பரிபாலன தர்பார் இருக்கக் கூடாது என்று நினைத்து இன்றைய படத்தை தொகுத்து தந்துள்ளார். அருமையாக, மிகச்சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துக் கொண்டு, "சித்தன் அருளில்" நின்றும், உங்கள் அனைவரிடமிருந்தும், என்றைக்குமாக விடை பெறுகிறேன்.

அனைவரும் அகத்தியர், இறைவன் அருள் பெற்று இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன். வணக்கம்!  

கார்த்திகேயன்

Wednesday 23 November 2016

சித்தன் அருள் - 515 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விழிப்புணர்வோடு வாழப் பழகிக்கொண்டால். ஒரு மனிதன் பாவம் செய்ய வேண்டியிருக்காது. ஒரு மனிதனை பாவம் செய்யத் தூண்டுவது எது? ஆசை, பேராசை, அறியாமை, இது போன்ற குணங்கள்தான். ஒரு மனிதன், தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதன் தெரிந்தே செய்யும் பாவங்களே அதிகம். எதையாவது ஒரு சமாதானத்தை தனக்குத்தானே கூறிக் கொள்கிறான். இந்த காரியத்தை இதற்காக செய்தேன், அதற்காக செய்தேன், என்றெல்லாம் கூறிக்கொண்டு அவன் செய்யும் தவறுகள்தான், பாவங்களாக மாறுகின்றன. எனவே, பலகீனமான மனிதர்களே பாவங்களை செய்கிறார்கள். மனதை உறுதியாக வைத்து, எந்த நிலையிலும் பாவம் செய்யமாட்டேன், தவறு செய்யமாட்டேன் என்ற உறுதியோடு இருந்தால், ஒரு மனிதனுக்கு பாவம் செய்யக்கூடிய எண்ணமும், சூழலும் அமையாது. எனவே, அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டால், அவனுக்கு தோஷமும் வராது.

Tuesday 22 November 2016

சித்தன் அருள் - 514 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எண்ணத்தால், வாக்கால், செயலால், பிறருக்கு தீங்கும், கடும் துயரமும் ஏற்படுகின்ற நிகழ்வு எதுவோ அது பாவம். செய்த பிறகு அந்த பாவத்தால் செய்தவனுக்கு ஏற்படுவது தோஷம்.

Monday 21 November 2016

சித்தன் அருள் - 513 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் பக்குவப்படவேண்டும். எங்கள் கருத்துக்களை உள்வாங்கி, உள்வாங்கி, அவரவர்கள் சுய ஆய்வு செய்து, சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட, அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது, என்று ஆய்ந்து, தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மனம் செம்மையாகவேண்டும். மனம் உயரவேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம், மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேர்ப்பட்ட மனதிலே தான் இறை வந்து அமரும்.

Sunday 20 November 2016

சித்தன் அருள் - 512 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இந்த உலகில் உள்ள அனைவருமே, இறைவனின் பிள்ளைகள். அதில் ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தைக் கொடுத்ததன் காரணம், வாடுபவனுக்கு கொடுத்து உதவுகிறானா, என்று சோதிக்கத்தான்.

தர்மத்தை செய்து கொண்டே இருங்கள். இது புண்ணிய வழி என்ற எண்ணம் இல்லாமல் செய்யவேண்டும். யாருக்கெல்லாம் தேவையோ, அவர்களுக்கெல்லாம் நேரிய வழியில் பொருள் ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வரும். இதனை சோதனை மார்கமாகக் கூட செய்யலாம். ஏனென்றால், ஒவ்வொரு யுகத்திலும் செல்வந்தர்கள் குறைவு. வறுமையாளர்கள் அதிகம். கொடுத்து, கொடுத்து வறுமையடையும் விதியிருந்தாலும் பாதகமில்லை. கொடுத்ததினால் ஒரு வறுமை நிலை வந்தால், அதுதான் இந்த உலகத்திலே உச்சக்கட்ட வளமை. அவன்தான், இறைவனுக்குப்-பக்கத்திலே இருக்கிறான், என்பது பொருளாகும். எனவே, இந்த கருத்தை மனதிலே வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும், தேடித் தேடி தர்மம் செய்வதை ஒரு லட்ச்சியமாக கொண்டு விட்டால், அவர்களுக்கு, எம் ஆசி என்றும் தொடரும். ஆசிகள், சுபம்.

Saturday 19 November 2016

சித்தன் அருள் - 511 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம்மை நம்பி வந்து, இந்த ஜீவ அருள் நாடியில், உரைப்பது சித்தர்கள்தான், என்று நம்புபவர்களுக்கு மட்டும் இந்த உபதேசம் பொருந்தும். சித்தர்களுக்கு என்ன? உரைத்துவிட்டுப் போவார்கள். நேரடியான வாழ்க்கையை எதிர்கொண்டால், அவர்களுக்குத் தெரியும். பிள்ளைகள் படிப்பு, தாரத்தின் உடல்நிலை, சொந்த இல்லம், போன்ற எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தை எல்லாம் தர்மத்திற்கு செலவழித்துவிட்டால், நாளை பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் வறட்டு வாதம் செய்தால், நல்ல பலனை இழக்கப்போவது மனிதன்தான்.

Friday 18 November 2016

சித்தன் அருள் - 510 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அன்றாடம் அல்பொழுதிலே, துயில் கொள்ளும்பொழுது யோசிக்க வேண்டும், "இன்று நாம் எத்தனை பேருக்கு நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தையால் ஆறுதல் சொன்னோம்? எத்தனை பேருக்கு உடலால் நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு நம், கைப்பொருள் கொண்டு உதவி செய்தோம்? எத்தனை ஆத்மாக்களை குளிர வைத்தோம்? இன்னும் எத்தனை பேருக்கு செய்ய வேண்டி இருக்கிறது?" என்றெல்லாம் பட்டியலிட்டு பிறகு தம்மைத்தாமே செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமே. உறவுக்கும், தாரத்திற்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நட்புக்கும் செய்வது தர்மத்தில் வராதப்பா. அது கடமையில் வருமாப்பா. ரத்தத் தொடர்பு இல்லாதவர்களுக்கு செய்யும் தர்மம், இவனுக்கு செய்தால் நமக்கு பிரதிபலனாக என்ன செய்வான்?" என்ற எதிர் பார்ப்பு இல்லாமல் செய்வதே தர்மமாகும்.  எனவே, அறத்தின்தன்மையை, சூட்சுமத்தை ஒரு மனிதன் உணர்ந்து கொண்டால், அவனுக்கு துன்பம் இல்லை. துயரம் இல்லை. சிக்கல் இல்லை. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டுப் போகட்டும். ஆன்மீகவாதிகள் எப்படி வேண்டுமானாலும் வழிகாட்டட்டும்.

Thursday 17 November 2016

சித்தன் அருள் - 509 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசிப்பதின் காரணம் என்ன? இந்த கலிகாலத்திலே கடுமையான தவம், கோட்ப்பாடுகள், வனாந்தரத்திலே செய்யும் பூசைகள் இவைகளையெல்லாம் பின்பற்ற இயலாது. எத்தனையோ இடர்பாடுகளில் ஒரு மனிதன் கலிகாலத்தில் வாழ வேண்டியிருக்கிறது. இந்த இடர்களின் வழியே அவன் இறை வழி செல்ல வேண்டும், கர்மாக்களை குறைக்க வேண்டும் என்றால், நியாயமான, நேர்மையான, நீதியான வழியிலே தர்மத்தை துவக்கி விட வேண்டும். கால நேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சரி, தர்மம் செய்கிறேன், அதை வாங்கிக்கொண்டு ஒருவன் அதை நியாயமற்ற முறையிலே செலவு செய்தால் என்னவாகும்? என்றெல்லாம் ஆய்ந்து கொண்டிருக்கக்கூடாது. ஒருவனுக்கு கஷ்டம் என்று அறிந்த உடனேயே தர்மம் செய்து விட வேண்டும். அவன் வாய் விட்டு வினவும் வரை காத்திருக்கக் கூடாது. தர்மத்தை நேரடியாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் நேர்மையாக தர்மம் செய்யும் அமைப்புகளிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சித்தன் அருள் - 508 - "பெருமாளும் அடியேனும்" - 73 - சுக்ராச்சாரியார் !

சுக்கிராச்சாரி இவ்வளவு தூரம் தன்னிடம் அன்பு காட்டி அரவணைத்துப் பேசுவார் என்பதை கலிபுருஷன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் சுக்கிராச்சாரியார் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கேட்டு அகமகிழ்ந்து போனான் கலிபுருஷன்.

எதையெல்லாம் இந்தப் பூலோகத்தில் செய்ய தான் அனுப்பப்பட்டானோ அந்த அத்தனை காரியங்களையும் சுக்கிராச்சாரியாரே விளக்கமாகச் சொல்லி இவை அத்தனையும் நடக்கும் என்று சொன்னபோது தன்னுடைய வேலையில் பெரும்பங்கு சுக்கிராச்சாரியாருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது, இனி தனக்குக் கவலையே இல்லை என்று ஆனந்தத்தின் உச்சியிலே மிதந்தான் கலிபுருஷன்.

சட்டென்று அவனுக்கு ஒரு சந்தேகம்.

“அசுரர்களின் தலைவரே! எல்லாம் சரி. ஆனால் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடவன் நம் செயலைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாரே. அதற்கு ஏதாவது மாற்று வழியிருக்கிறதா?” என்றார்.

இதைக்கேட்டு சுக்கிராச்சாரியார் கடகடவென்று சிரித்தார். அவருடைய சிரிப்புக்குக் காரணம் தெரியாமல் விழித்தான் கலிபுருஷன்.

“பைத்தியக்காரா! வேங்கடவன் சக்தியெல்லாம் திருமலை எல்லைக்குள்தான். அதைத் தாண்டி அவரும் வரமுடியாது. வந்தாலும் வேங்கடவனுக்கு வெற்றியும் கிடைக்காது.”

“எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?”

“கலிபுருஷா! இப்போது நீ அந்த கிராமத்திற்குச் சென்று யாகம் செய்யாமல் தடுத்தாய் அல்லவா?” என்றார்.

“ஆமாம்” என்றான் கலிபுருஷன்.

“மாமிசப் பிண்டங்களை யாக குண்டத்தில் தூக்கிப் போட்டாய் அல்லவா?”

“ஆமாம்”

“அந்தணர்களையும் ரிஷிகளையும் விரட்டித் துன்புறுத்தினாய் அல்லவா?”

“ஆமாம்”

“அவர்கள் அனைவரும் வேங்கடவனிடம் கண்ணீர்விட்டுக் கதறி அழுதிருப்பார்கள் அல்லவா?”

“ஆமாம்”

“இப்படிக் கதறி அழுதும் வேண்டியும் வேங்கடவன் ஏன் வந்து அவர்களுக்கு உதவி செய்யவில்லை?”

“ஆமாம். நியாயமான கேள்வி”

“கலிபுருஷா! எனக்குக் கிடைத்த தகவலின் படி இனி வேங்கடவன் ஆங்காங்கே ஓடி வந்து அருள் புரிய மாட்டான். யார் யார் திருமலைக்கு பட்டினி கிடந்து நடையாக நடந்து காத்துக் கிடந்து வேண்டினால் ஒருவேளை அவர்களுக்கு மாத்திரம் வேங்கடவன் அருள் புரிவதாக அறிந்தேன்.”

“அப்படியா விஷயம்?”

“அதுமட்டுமில்லை கலிபுருஷா! இனி இது நம்முடைய ஆட்சிக் காலம். நாம் தான் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறக்கப் போகிறோம். எனவே நீ எதற்கும் அஞ்சாதே! நான் உனக்குத் துணையாக இருப்பேன். இந்த உறுதிமொழி போதுமா?”

என கர்வத்தோடு தாடியைத் தடவிக்கொண்டு சுக்கிராச்சாரி தீர்க்கமாகச் சொன்னதைக் கேட்டு வாய் பிளந்து நின்றான் கலிபுருஷன்.

சில விநாடிகள் கழிந்திருக்கும். சுக்கிராச்சாரியாரே வாய் திறந்தார்.

“என்ன யோசிக்கிறாய் கலிபுருஷா?”

“ஒன்றுமில்லை. நான் எதை எதைச் செய்ய நினைத்தேனோ அதை நீங்களும் உங்கள் அசுரக் கூட்டமும் செய்து முடிக்கப் போகிறது. இருந்தாலும் இன்னமும் பெண்களுக்குத்தான் அதி தீவிர தெய்விகப் பக்தி இருக்கிறது. நானும் அத்தனை பேரிடமும் பார்த்திருக்கிறேன். ஆண்களை விட பெண்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாக இருக்கிறதே, இதை எப்படித் தடுப்பது? என்றுதான் யோசிக்கிறேன்” என்றான் கலிபுருஷன்.

“நியாயமான கவலைதான். ஆனால் அவர்களிடமிருந்து அவ்வளவு எளிதில் பக்தியைப் பிரிக்க முடியாது.”

“அப்படியென்றால் இந்தப் பூலோகத்தில் நம் ஆட்சி எப்படி கொடி கட்டிப் பறக்கும்? பெண்களை மாற்றாமல் எந்தச் செயலையும் செய்யமுடியாதே.” என்று உறுதிபடச் சொன்னார் சுக்கிராச்சாரியார்.

“இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா தலைவா?”

“ஒன்றா இரண்டா? எத்தனையோ காரணங்கள் உண்டு. அதைத் தடுக்க என்னால் கூட முடியாது கலிபுருஷா!”

“ஏன்?”

“அவர்கள் பார்வதி தேவியின் வரம் பெற்றவர்கள். மகாலக்ஷ்மியின் முழுக் கருணை பெற்றவர்கள். சரஸ்வதி தேவியின் அரவணைப்பைப் பெற்றவர்கள். இவர்கள் மூவருமே ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வடிவம்தான் பெண்கள். அவர்கள் உடலில் ஓடுவது ரத்தமல்ல. ‘பக்தி’தான். இது எக்காலத்திலுமே மாறாது. அந்தத் தெய்விக பக்திதான் உலகை ரட்சித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்த உலகம் பிரளயம் வந்து அழியும் வரை இந்த உலகைப் பெண்களுடைய பக்திதான் காக்கும்.”

“அப்படியானால் நம் எதிர்காலத் திட்டம் தவிடு பொடியாகிவிடுமா?”

“இல்லை. அதற்கும் நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அது மட்டும் சரியாக நடந்து விட்டால் பெண்களையும் பக்தியையும் பிரித்து விடலாம். ஆனால்...”

“என்ன ஆனால்?”

“அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.”

“ஆச்சாரியாரே! அது எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். எப்பாடு பட்டாலும் நிறைவேற்றிக் காட்டுகிறேன்.”

“அந்தத் திட்டத்தை நிறைவேற்ற உடனடியாகச் செயல்படமுடியாது. அதற்கு முன்னால் இந்தப் பூலோகத்தில் எங்கெங்கு ஆன்மிகம் வளர்ந்து கொண்டிருக்கிறதோ அங்கங்கு சென்று அதைப் பூண்டோடு களைய அசுரர்கள் சென்று விட்டார்கள். நீயும் அவர்களோடு கலந்து கொள். ஓர் அமாவாசை கழியட்டும். பிறகு என்னிடம் வா. மேற்கொண்டு பேசுவோம்.” என்று சுக்கிராச்சாரியார் பேச கலிபுருஷன் மௌனமாக வெளியேறினான்.

பூஞ்சோலை என்னும் கிராமம்.

சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு ஆனந்தமாக அருள்பாலித்துக் கொண்டிருக்க சிவபெருமான் கோவிலுக்குப் பக்கத்தில் நரசிம்மர் கோவிலும் இருந்தது.

இயற்கைச் செழிப்பும் தெய்வ நெறியும் சேர்ந்திருக்கும் அந்த அருமையான ஊருக்குள் மாறு வேடத்தில் புகுந்த அசுரர்கள் சிவபெருமானைப் பற்றியும் அன்னை பார்வதி தேவியைப் பற்றியும் தெருக்கூட்டத்தில் பழி சுமத்திப் பேசினர்.

ஆனால்-

அவர்கள் போட்டிருந்ததோ ஆன்மிக சாமியார் வேடம். அவர்கள் மாறு வேடத்தில் வந்த அசுரர்கள் என்பதைத் தெரியாமல் உள்ளூர் கிராம வாசிகள் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அசுரர்களின் மயக்கத்தனமான பேச்சு அந்தக் கிராமத்து ஆண்களைத் தலையாட்ட வைத்தது. குழந்தைகளும் ஏதோ விடுகதை கேட்பதைப் போல் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தக் கிராமத்துப் பெண்கள் அன்றைக்கு கோவிலில் திருவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது-

அசுரர்கள் சட்டென்று அந்தக் கோவிலுக்குள் புகுந்தனர். அங்குள்ள திருவிளக்குகள் அத்தனையும் அணைத்தனர். கோயிலே இருண்டு போனதால் பயந்து போன பெண்கள் அலறி அடித்துக் கொண்டு இங்குமங்கும் வழி தெரியாமல் ஓடி கீழே விழுந்து அடிபட்டு மயக்கம் அடைந்தனர்.

இதுதான் சமயம் என்று அந்த அசுரர்கள் அந்தக் கிராமத்துப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போல் செய்துவிட்டுத் தப்பி ஓடினர். தெருமுனையில் மாறு வேடத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக பிரசாரம் செய்து கொண்டிருந்த அசுரர்கள் செய்தியைக் கேள்விப்பட்டு, உதவி செய்வது போலெண்ணி அங்குள்ள ஆண்மக்கள் துணையோடு கோவிலுக்குச் சென்றனர்.

அந்தப் பெண்களின் உயிரை - உடைமையைக் காப்பாற்றுவது போல் ஊர் மக்களோடு சேர்ந்து தாங்களும் நாடகமாடினர்.

எப்படியோ அந்தக் கோவிலில் மிதிபட்ட அடிபட்ட அத்தனை பேரும் பிழைத்தனர்.

மறுநாள் காலையில்-

“உண்மையில் தெய்வம் இங்கிருந்தால் விளக்குகள் அணைந்திருக்காது. பெண்கள் மானபங்கம் ஆக்கப்பட்டிருக்கமாட்டார்கள். அடியும் பட்டிருக்காது. எனவே இந்தக் கோவிலை நம்பாதீர்கள். பூஜை செய்யாதீர்கள். சிவனும் இல்லை. பார்வதியும் இல்லை. நரசிம்மரும் இல்லை. எனவே எல்லாம் வெளிவேஷம். எங்களை நம்புங்கள். நாங்கள் பகுத்தறிவுடன் கூடிய வழியைக் காட்டுகிறோம்.

“நேற்றைக்கு நாங்கள் மட்டும் வராமல் போயிருந்தால் இந்தப் பூஞ்சோலை கிராமத்துப் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? ஆகவே தெய்வம் கோயிலில் இல்லை. எங்களிடம் தான் இருக்கிறது.” என்று அசுரர்கள் பிரசாரம் செய்து பூஞ்சோலை மக்கள் மனத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது-

நரசிம்மர் கோவிலிருந்து புறப்பட்ட ஒரு மண் அகல்விளக்கு அந்தரத்தில் வந்தது.

ஆச்சரியத்துடன் பூஞ்சோலை மக்கள் அதனைப் பார்க்கும் பொழுது அந்த அகல் ஆன்மிகத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்து கொண்டிருந்த மாறு வேஷத்தில் இருந்த அசுரர்களை நோக்கிப் பாய்ந்தது.

அதனை சற்றும் எதிர்பாராத அந்த போலி ஆன்மிகவாதிகள் பதறியடித்துக் கொண்டு தலைதெறிக்க நாலா பக்கமும் சிதறி ஓடினர். அந்த விளக்கு அவர்களை ஓட ஓட விரட்டியடித்ததைக் கண்டு வியந்து போன பூஞ்சோலை கிராமத்து மக்கள் என்ன நடக்கிறது? என்று புரிந்து கொள்ளும் முன்னர் “இவர்கள் அசுரர்கள் இறைப் பணியைத் தடுக்க வந்தவர்கள். இவர்கள் பேச்சைக் கேட்டு நம்பி ஏமாறாதீர்கள்.” என்று மூன்று முறை சொல்லிவிட்டு மறைந்தது.

இதென்ன விசித்திரமாக இருக்கிறதே என்று யோசிக்கும் பொழுது விளக்கு எங்கு மறைந்ததோ அந்த இடத்தில் வேங்கடவன் ‘சிலை’ தோன்றிற்று. இதைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள் அங்குள்ள அனைவரும்.
-----------------------------

"பெருமாளும் அடியேனும்" தொடர் தற்காலிகமாக நிறைவு பெற்றது.

["அகத்தியர் அடியவர்களே! அகத்தியப் பெருமான் ஜீவ நாடியில் வந்து உரைத்த "பெருமாளும் அடியேனும்" என்கிற இந்த தொடர் இத்துடன் நின்று போனது. விரும்பி, எதிர்பார்த்து படித்தவர்களுக்கு இது சற்றே அதிர்ச்சியான தகவலாக இருந்தாலும், ஏன் நின்று போனது? நின்று போனதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை, "சித்தன் அருளின்" மூத்த தொகுப்பாளர். திரு.கார்த்திகேயனிடம் விரிவாக, தெளிவாக, தொகுத்து உரைக்கும்படி வேண்டிக் கொண்டுள்ளேன். அவரும். தருவதாக சம்மதித்துள்ளார். அதை அவரே தொகுத்து, அடுத்த வாரம் வழங்குவார். அதுவரை காத்திருப்போம்."]

சித்தன் அருள்................. தொடரும்!

Wednesday 16 November 2016

சித்தன் அருள் - 507 - அந்த நாள் > இந்த வருடம் 2016 - கோடகநல்லூர் - 1

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


இறை அருளால், அகத்தியப் பெருமானின் அருள்வாக்கில் வந்து நம்மை ஆட்கொண்ட "புண்ணிய தினம்" கோடகநல்லூரில் இந்த வருடம் 12-11-2016 அன்று அகத்தியர் அடியவர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடந்த நிகழ்ச்சிகளை அடியேனின் பார்வையில் நின்று உங்களுக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைத்த பொழுது உருவானதே, இந்த தொகுப்பு.

பல அகத்தியர் அடியவர்களின் துணையோடு, ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடல் தொடங்கியது. அன்றைய தின பூஜைக்காக, அங்கு வரும் அகத்தியர் அடியவர்கள், குறைந்தது இறை தரிசனத்தை கண்குளிர கண்டு, அமைதியுடன் செல்வதற்காக, நிறையவே முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டி வந்தது. அதற்காக பலமுறை இறைவனை வேண்டிக்கொண்டு, கோடகநல்லூர் சென்று ஒவ்வொரு மனிதரின் உதவியை, அன்றைய தினம் கிடைக்க செய்ய பேசி முடிவு செய்தேன். கோவில் அர்ச்சகர், கோவில் நிர்வாகிகள், கோவில் மடப்பள்ளியில் பிரசாதம் தயாரிக்க ஒரு சமையல்காரர் போன்றவற்றை கோடகநல்லூரிலும், அனைத்து தெய்வங்களுக்கும் புது வஸ்திரம் சார்த்த நினைத்து அந்த வேலையை இன்னொருவரிடம், இப்படி பல விஷயங்களில் முன்னேற்பாடு செய்ய வேண்டி வந்தது. நாள் நெருங்க, நெருங்க தினமும் இறைவனிடமும், குறிப்பாக அகத்தியப் பெருமானிடமும், அன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக நடக்க, வந்திருந்து நடத்திக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற எண்ணம் எனக்குள் வலுத்தது. நாளும் நெருங்கி வந்தது. [இப்படி தொடர்ந்து விண்ணப்பத்தை அகத்தியரிடம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, அகத்தியரின் ஜீவநாடி படித்த ஒரு நண்பர், அகத்தியரின் ஒரு செய்தியை கூறினார். நாடியில் வந்த அகத்தியர் "எங்களிடம் பிரார்த்தனையை ஒருமுறை சமர்ப்பித்துவிட்டு, அமைதியாக இருந்தால் போதும். மறுபடியும், மறுபடியும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. நினைவு படுத்த தேவையில்லை. சரியான நேரத்தில் எல்லாவற்றையும் இறையருளால் நாங்கள் நடத்திக் கொடுப்போம்" என்று கூறினார்.]


11/11/2016 இரவு 12.30 மணிக்கு பெருமாளுக்கான பூமாலை, பூசைக்கான பொருட்கள், பூ, தாமிரபரணி தாய்க்கு கொடுக்க வேண்டிய தாம்பூலத்துடன், எங்கள் ஊரிலிருந்து  புறப்பட்டோம்.  கோடகநல்லூர் சென்று சேர குறைந்தது ஐந்து மணிநேரம் ஆகும். சமீபத்திய பொருளாதார சீர்திருத்தத்தால் (500, 1000 ரூபாய்கள் அரசாங்கத்தால் திருப்பி பெறப்பட்டது), வாகன நெரிசல் எங்கும் இல்லை. அத்தனை ஏற்பாடும் செய்தவர்களுக்கு, கொடுக்க வேண்டிய பணத்துக்கு, கடைசி நிமிடத்தில் அகத்தியப் பெருமான் வழிகாட்டினார்.

இந்த சூழ்நிலையில், குறைந்தது 50 அகத்தியர் அடியவர்கள் அன்றைய தினம் கோடகநல்லூரில் வந்து, பெருமாளை தரிசனம் செய்தாலே பெரிய விஷயம் என்று மனதில் தோன்றியது. ஆனால், அன்றைய தினம் யார் யாரெல்லாம் உண்மையாக, ஆழ்மனதில் "இறைவா உன்னை காணவேண்டும்" என்று ஆசைப்பட்டார்களோ,  அவர்கள் எல்லோருக்கும் அகத்தியப் பெருமான், அங்கு வருவதற்கு அருளினார், என்றுதான் சொல்லவேண்டும். சுமார் 200 முதல் 250 அகத்தியர் அடியவர்கள் அன்று வந்திருந்தது, எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாயிற்று.

நாங்கள் செல்லும் வழியில் இரு அகத்தியர் ஆலயங்கள் உள்ளது. அவற்றின் முன் நின்று, "தாங்கள் வந்திருந்து, இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, இந்த புண்ணிய தினத்தை, நடத்தி தரவேண்டும்" என வேண்டிக் கொண்டேன்.

காலை 4.15 மணிக்கு கோடகநல்லூரில் பெருமாள் கோவில் தெருவில் நாங்கள் சென்ற வாகனம் திரும்பிய பொழுது, எங்கோ தூரத்தில் ஒரு மயில் கூவியது. "அட! பரவாயில்லை! ஓதியப்பரும் ஆசிர்வதித்துவிட்டார்!" என அனைவரும்  ஒரே நேரத்தில் நினைத்தோம், கூறினோம்.

எங்கும் நிசப்தம். அவ்வப்போது, இந்த நிலையை ஊடுருவி மயில், பறவைகள், இவைகளின் குரலோசை  வருடியது.

விடிவதற்காக காத்திருந்து, விடிந்தபின் தாமிரபரணி நதிக்கரையோரம் சென்று எட்டிப்பார்த்தால், தண்ணீர் மிக மிக குறைந்த அளவே ஓடிக்கொண்டிருந்தது. ஒருவர் நின்றால் அவரின் கீழ் முட்டுவரைதான் நீர் இருந்தது. 

ஆற்றின் நடு வரை நடந்து சென்ற போது இடுப்புவரை நீர்மட்டம் உயர்ந்தது. இதற்குள் சென்னையிலிருத்து ஒரு நண்பர் கூட வந்து சேர, அனைவரும் நதியின் நடுவில் நின்று, "அகத்தியர்" அருளிய "ஸ்நான மந்திரம்" சொல்லி நீராடினோம். கோவில் நடை திறக்கப்பட்டது.

குளித்து,  கரை ஏறி, கோவிலுக்குள் சென்று அனைத்தையும் வைத்துவிட்டு இறைவனை  தரிசித்தோம்.

"இதுவரை ஆட்கொண்டு வந்துவிட்டீர்கள். இனி உள்ளதையும் நிறைவாக நடத்திக் கொடுங்கள்" என்று வேண்டிக் கொண்டேன். வஸ்த்திரம் ஒருநாள் முன்னரே வந்துவிட்டதால், அபிஷேகம் இல்லாத அனைத்து விக்கிரகங்களுக்கும். அர்ச்சகர் முதல் நாள் இரவே புது வஸ்திரத்தை சார்த்தியிருந்தார். ஆதலால், நாங்கள் தரிசனம் செய்யும் பொழுதே பெருமாளும், தாயாரும் புதுவஸ்திரத்தில்தான் தரிசனம் கொடுத்தனர். மிக மகிழ்ந்து, பெருமாளுக்கான 5 1/2 அடி உயர தொங்குமாலை, ஒரு பெரியமாலை என அனைத்தையும் அர்ச்சகரிடம் கொடுத்து அணிவிக்க சொன்னோம். பெருமாள், தாயாருக்கு உடனேயே மாலையால் அலங்காரம் செய்யப்பட்டது. போதும், இனி, எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்ற நம்பிக்கை உறுதியாயிற்று, என்னுள்.

வெளியே வந்து, கருடாழ்வாரை தரிசித்து, பின் வந்தவர்களை பார்க்க, ஒரு பத்து பேர் இருந்தனர்.

"என்ன பெருமாளே! உங்கள் முகூர்த்தத்துக்கு இத்தனை பேர்தானா?" என்று பெருமாளை பார்த்து கேள்வி கேட்டு விட்டு, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் கொடுக்க தயார் செய்தோம்.

வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, ஒரு சிறு பச்சை நிற பட்டு, பச்சை நிற வளையல் 12, பூ, ஒரு விளக்கு, இவைகளுடன், கோவில் பின்புறமாக உள்ள நதிக்கரையில் வந்திருந்த அகத்தியர் அடியவர்களுடன் சென்று, பிரார்த்தனை செய்து, விளக்கேற்றி, ஆதவன் சாட்சியாக "சர்வலோகமும் சுபிட்சமாக இருக்கட்டும் - ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டி மெதுவாக நதியில் விட, அந்த தாம்பூலம் மெதுவாக நகர்ந்து சென்றதை பார்த்தபொழுது, அன்னை தாமிரபரணி, இந்த சிறு காணிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டாள் என மனதுள் தோன்றியது.


செய்தது சிறு விஷயமாகினும், அகத்தியர் சொல்வது போல், எந்த மனநிலையுடன் செய்கிறோம் என்பது முக்கியம் என்பதற்கு ஏற்ப அது அமைந்ததில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

கோவிலுக்கு திரும்பி வந்த பொழுது ஒரு குழுவினர் அர்ச்சகரிடம் "நாங்கள் காக புசுண்டர் நாடில வந்த உத்தரவின் பேரில் வந்திருக்கிறோம். தாமிரபரணி நதிக்கரையில் ஒரு யாகம் செய்யச் சொல்லியிருக்கிறார். அதை இங்கே, கோவிலுக்குள் வைத்து செய்ய அனுமதி வேண்டும்" என்றனர்.

"கோவிலுக்குள், தனிப்பட்ட முறையில் யாகம் செய்வது கிடையாது. ஆதலால், உங்கள் உத்தரவின் பேரில்,  நீங்கள் நதிக்கரை படித்துறையில் தாராளமாக யாகம் செய்யலாம்" என்றிட, அவர்களும் மிக சந்தோஷமாக சென்று யாகம் நடத்தினர்.

எங்களுக்குள்ளும் ஒரு ஆனந்தம். அகத்திய பெருமான் அருளிய இந்த முகூர்த்தத்தில், காக புசுண்டரும், தன் அடியவர்களை அனுப்பி, தாமிரபரணி தாய்க்கு யாக பூசையை செய்ய உத்தரவிட்டிருக்கிறாரே என்பதில்.

இனி, பெருமாளின் அபிஷேக பூசைக்கான ஏற்பாடுகளை கவனிப்போம் என்று, உள்ளே சென்றோம்.

உள்ளே வந்த அர்ச்சகரிடம் "எல்லோருக்கும் அபிஷேக பூசையை பார்க்கிற பாக்கியம் கிடைக்க வேண்டும். ஆதலால்,  உற்சவ மூர்த்தியை, வெளியே உள்ள மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி, அபிஷேகத்தை செய்ய வேண்டும்" என்றேன்.

"அதற்கென்ன! அதுதான் சரியும் கூட. ஆனால் ஒரு சில உதவிகள் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிவரும். அதற்கும் ஆட்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். எத்தனை மணிக்கு அபிஷேகம் தொடங்கலாம்?" என்றார்.

"உதவிக்கான அடியவர்களை, நான் அவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சுமார் 10.30க்கு மேல் அபிஷேகம் தொடங்கலாம். வருபவர்கள், வந்து சேர்ந்துவிடட்டும். எல்லோருக்கும் பார்த்து பரவசமடைகிற நிலையை கிடைக்க செய்வோம்" என்றேன்.

அதன்படி முடிவாயிற்று. உண்மையிலேயே, வந்திருந்த அகத்தியர் அடியவர்களை பாராட்டத்தான் வேண்டும். ஒவ்வொருவரும், தன்னால் இயன்ற சிறு சிறு வேலைகளை, உதவியை பெருமாள் திருமஞ்சனத்துக்கு செய்தனர். அவை என்ன, என்பதை  அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.

அந்தநாள் > இந்தவருடம் 2016 ................. தொடரும்!

சித்தன் அருள் - 506 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒருவனுக்கு அதிக செல்வம், ஒருவனுக்கு குறைந்த செல்வம், ஒருவனுக்கு செல்வமற்ற நிலை, இவ்வாறு இருப்பதன் காரணம் - இறைவனுக்கு எந்த பேதமுமில்லை. அவனவன் செய்த பாவ, புண்ணியத்தின் பலன்தான் காரணம். புண்ணியத்தின் பலனாக கிடைத்த செல்வத்தை வைத்து மேலும் புண்ணியத்தை சேர்க்காமல், பாவத்தை சேர்த்துக் கொண்டால், பிறகு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் செல்வம் என்பது அவனுக்கு கிட்டாப் பொருளாகவே போய்விடும். அதை உணர்ந்து, "பலருக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. எத்தனையோ மாந்தன், நல்ல கல்வி கற்றும், பணியில்லாமல் அலையும் பொழுது, நமக்கு நல்ல பணியை இறைவன் தந்திருக்கிறான். அந்த பணியை, செவ்வென, நேர்மையாக செய்து, அதன் மூலம் கிடைக்கும் தனத்தை, நமக்கும் பயன்படுத்திக் கொள்வோம், நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன்படுத்துவோம்" என்று எண்ண வேண்டும். அதனை விட்டு விட்டு, "இந்த தனம் எனக்காக இறைவன் தந்தது. நான் உழைத்து ஈட்டியது. இதை எதற்காக பிறருக்கு தரவேண்டும்? அவனவன் தலையெழுத்து, விதி, அவன் கஷ்டப்படவேண்டும் என்று இருக்கிறது" என்றெல்லாம் எண்ணி ஒருவன் சும்மாயிருந்தால், வாளாயிருந்தால் அவனுக்கு காலப்போக்கில், சேமிப்பு இருக்கும் வரை நல்ல வாய்ப்பு இருக்கும், அதன் பிறகு குறைந்து விடும். எனவே,  ஒரு மனிதன் இறை வழிபாடு செய்கிறானோ இல்லையோ, தன்னுடைய உடலில் உள்ள அணுவில் எல்லாம், தர்ம சிந்தனை பரவும்படி செய்ய வேண்டும். "தர்மத்தை செய்" என்று சொல்லி செய்தால் கூட தர்மத்திற்கு ஒரு களங்கம்தான். ஒரு மனிதன் சுவாசிப்பது போல, அன்னம் ஏற்பது போல, செயல்களை செய்வது போல, தர்மம் என்பது இயல்பாக இருக்க வேண்டும்.

Tuesday 15 November 2016

சித்தன் அருள் - 505 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எல்லோருமே "தர்மம்" என்பதை தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நிறைய தனம் இருந்தால்தான், தர்மம் செய்ய முடியும். எங்களுக்கு நிறைய தனத்தைக் கொடுத்தால், தர்மம் செய்யமாட்டோமா? என்று வினா எழுப்புகிறார்கள், மாந்தர்கள். தனம் இருப்பவன் தனத்தைக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். தானம் இல்லாதவன் பிறருக்கு உடல் உழைப்பைக் கொடுத்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளட்டும். உடலால் உழைக்க முடியவில்லை, தனமுமில்லை என்பவர்கள், எண்ணங்களால் "அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். மனதில் கொள்ள வேண்டும். எக்காலத்திலும் அதிகமதிகம் தனத்தை வைத்துக்கொண்டு "இது பிற்காலத்தில் நமக்கு உதவும். நமது வாரிசுகளுக்கு உதவும். நம் உடல் தளர்ந்து போய்விட்டால், இந்த தனத்தை வைத்துக் கொண்டுதானே வாழவேண்டும். உழைக்கின்ற காலத்திலேயே நன்றாக உழைத்து சேர்த்துக் கொண்டால்தானே, உழைக்க இயலாத காலத்திலே இந்த தனம் நமக்கு உதவும்" என்றெல்லாம் மனிதன் குருட்டு வேதாந்தம் பேசி தனத்தை இறுக்கப் பிடித்துக் கொள்கிறான். உடலே தளர்ந்த பிறகு கையிலே தனம் இருந்தால் அந்த தனத்தை வைத்து, ஒரு மனிதனை ஏகினால் அவன் உதவி செய்வான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆக, எந்தெந்த வழியிலெல்லாம் முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் தனத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவேண்டும். அதே போல் வாக்காலும், செயலாலும் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். சில தனவான்கள் ஆலயம் கட்டுவதற்கு ழகரம், லகரமாக ஈவான். தன்னிடம் வேலை பார்க்கும் ஓர் அடிமைக்கு, ஏக தனம் கூட அதிகம் தரமாட்டான். இவன் இறைவனை எண்ணிப்பார்க்க கூட இயலாது. இறைவன் இவன் பக்கம் ஒருபோதும் திரும்பப்போவதில்லை. உணரவேண்டும். ஒரு மனிதன் தன்னை சுற்றி இருப்பவர்களின் கஷ்டங்களை தீர்க்க சக்தி இருந்தும், வசதி இருந்தும், அவ்வாறு செய்யவில்லை என்றால், அவனால் இறையருளைப் பெற இயலாது.

Monday 14 November 2016

சித்தன் அருள் - 504 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒவ்வொரு மனிதனும் எம்மை நாடுகிறானோ, இல்லையோ, எம்மை நம்புகிறானோ, இல்லையோ, எத்தனையோ பிரச்சினைகளை, சிக்கல்களை எதிர் கொள்கிறான். உறவு சிக்கல், பண சிக்கல், ருண சிக்கல், பிணி சிக்கல், தசவழி சிக்கல்கள். பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் சிக்கல்கள், என்று இவ்வாறு மாந்தன் வாழ்வில் சிக்கல்களே நிறைந்துள்ளன. காரணம், மிகுந்த புண்ணியத்தை, சத்தியத்தை, பொறுமையை, தர்மத்தை, பெருந்தன்மையை எவன் ஒருவன் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு வாழ்க்கை வசப்படும். அனைத்தும் எளிதாகும். நினைத்தது உடனே பலிதமாகும். அவன் தனவானோ, ஏழையோ, நிம்மதியான வாழ்க்கை வாழ்வான். இல்லையென்றால், எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மனிதன் குற்றங்களை செய்தானோ, அந்தந்த வழிகளில் எல்லாம் நிம்மதி குறைவதற்கான வழிகள் உண்டாகும்.  ஆகுமே, எத்தனை தான் ஞானிகள் நேரிலே தோன்றி எத்தனை தான் உபதேசம் செய்தாலும் கூட, மாந்தன் செவியில் இவையெல்லாம் ஏறாது என்பது, எமக்கு நன்றாகத் தெரியும். அகுதொப்ப சுருக்கமாக சொல்லப்போனால் ஆலயங்கள் சென்றாலும், சொல்லாவிட்டாலும், யாகங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும், எவன் ஒருவன் சத்தியத்தையும், தர்மத்தையும் விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ, அவனைத் தேடி இறை வரும் என்பது மெய்யாகும் அப்பா!