​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 24 February 2017

சித்தன் அருள் - 601 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எல்லோருக்கும் பொதுவாக அருளிய அறிவுரை:-

யார் என்ன கூறினாலும், மனக்குழப்பம் அடையாமல், நாங்கள் முன்பே கூறியது போல்,  தவறை செய்கின்ற மனிதன், தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற உனக்கு (மனிதனுக்கு) இல்லாமல் போகிறது? ஏன் தடுமாற்றம் வருகிறது?  ஏன் குழப்பம் வருகிறது? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள். இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை, என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில், சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.

[ வணக்கம் அகத்தியர் அடியவர்களே. தவிர்க்க முடியாத காரணத்தால், ஒரு வார இடைவேளைக்குப்பின், "அகத்தியரின் இன்றைய அருள்வாக்கை" தொடர்கிறேன். பொருத்தருளக. ஓம் அகத்தீசாய நமஹ! ]

Thursday 23 February 2017

சித்தன் அருள் - 600 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கோவிலில் தொண்டுகள் செய்வதும், வழிபாடுகள் செய்வதும், யாகங்கள் செய்வதும், அபிஷேக ஆராதனைகள் செய்வதும் பெரிதல்ல. எந்த ஆலயத்தில் செய்ய வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்களோ அந்த (கோவில்) நிர்வாகத்தோடு ஒத்துழைக்க முடிந்தால், அல்லது தொண்டு செய்கின்ற மனிதர்களோடு நிர்வாகம் சரியாக ஒத்துழைத்தால் மட்டும், செய்தால் போதும். இல்லையென்றால் எதிர்த்து வாதாடி, விதண்டாவாதம் செய்து "சித்தர்கள் இப்படிக் கூறியிருக்கிறார்கள். எனவேதான் நாங்கள் இப்படி செய்கிறோம். எனவே, இந்த பொருள்களை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த அபிஷேகத்தை செய்துதான் ஆகவேண்டும்" என்றெல்லாம், யாரிடமும் வாதாட வேண்டாம். ஒத்துவராத இடத்தைவிட்டு மௌனமாக விலகுவதே, எமது வழியில் வருகின்றவனுக்கு ஏற்புடையது.

Wednesday 22 February 2017

சித்தன் அருள் - 599 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், நல்விதமான வாழ்வு நிலை இவ்வுலகினில் மாந்தர்கள் பெறவேண்டும் என்பதற்காக, இவ்வுலகம் தோன்றிய நாள் முதல், இஃதொப்ப முயற்சியினை மாந்தர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகு முயற்சியிலே தன் சக்தி தாண்டி, நிலைதாண்டி இருப்பதாக பல மாந்தர்களில், சில மாந்தர்கள் எண்ணும்பொழுதே தெய்வீகத்தின் துணையை நாடுகிறார்கள். இயம்புங்கால், இறைவனின் கடாக்ஷம் இருந்துவிட்டால், எல்லாவகையிலும் இன்பம்தான், போராட்டங்களற்ற வாழ்வுதான் என்று மனிதன் எண்ணுகிறான். ஒருவகையில் அது உண்மைதான் என்றாலும், இயம்புகின்றோம் இஃதொப்ப ஒரு நிலையில் அஃது நன்று என்றாலும் மெய்யாக, மெய்யாக, மெய்யாக, ஆணித்தரமாக உள்ளும், புறமும் எவ்வித நடிப்பும் இல்லாமல், மெய்யான ஆன்மீக வழியிலே இறைவழியிலே எந்த மனிதன் சென்றாலும் அல்லது எந்த உயிர் சென்றாலும் பல்வேறுவிதமான சோதனைகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.

வேறுவகையில் கூறப்போனால் கனகம், சோதனை, புடம் என்று வைத்துக்கொள்ளலாம். இஃது ஒருபுறமிருக்க இந்த சோதனை என்ற கட்டத்தை அடைவதற்கு முன்னால் அந்த உயிர் அல்லது ஆத்மா சுத்தி செய்யப்படவேண்டும். எங்ஙனம்? இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் அடிப்படையிலிருந்து தோன்றிய நடப்பு பிறவிகளில் நடக்கின்ற நிகழ்வுகளால், அவமானங்களால், நம்பிக்கை துரோகங்களால், கைப்பொருளை இழப்பதால், உறவு சிக்கலால், கடுமையான ஏமாற்றத்தால், உலகியல் போராட்டத்தால், மட்டுமல்லாது இன்னும் பிறவழிகளிலும் பாவங்கள் குறைகிறது. இயம்புங்கால், அங்ஙனமாயின் ஒரு மனிதன் தன் புத்தியை பயன்படுத்தி தனக்கு வரக்கூடிய துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாகாதா? தன்னுடைய சிந்தனையை திடமாக்கி, வளமாக்கி, துன்பமற்ற நிலையில் வாழ முயற்சி செய்யக்கூடாதா? என்றால் தவறல்ல. செய்யலாம். ஆயினும் மனிதன் செய்கின்ற முயற்சிகளையெல்லாம் தாண்டி, சாமர்த்தியங்களையெல்லாம் தாண்டி ஒரு மனிதனுக்கு எந்தவகையில் யாராலும், எதனாலும் மனித ரீதியாக, மனித மனப்பாங்கிலே துன்பங்கள் வருகிறதென்றால், மௌனமாக அதனை ஏற்றால் அது பாவக்கழிவிற்கு வழியாக இருக்கும். சரி, அப்படி ஏற்காவிட்டால், எதிர்த்தால் என்னவாகும்? ஒன்றும் ஆகப்போவதில்லை. துன்பத்தை ஒரு மனிதன் அதன் போக்கிலே அமைதியாக ஏற்றுக்கொண்டாலும், எதிர்த்து ஆர்பாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. விதி தன் கடமையை செய்துகொண்டேதான் இருக்கும். எதிர்த்து ஆர்பாட்டம் செய்வதால் மேலும் மன உளைச்சல்தான், மனிதனுக்கு ஏற்படுகிறது. இஃதோடு மட்டுமல்லாது இன்னும் எத்தனையோ வழிகளிலெல்லாம் விதி மனிதனின் பாவங்களற்ற நிலைக்கு ஆட்படுத்ததான் இறைவனின் அருளால் படைக்கப்பட்டு, அந்த விதியானது மனித மதியிலே அமர்ந்துகொண்டும் ஆசைகள், மாயைகள் மூலமாகவும் வாழ்க்கையை ஒரு பிடிப்புள்ளதாக ஆக்கி, வாழ்க்கையில் எதனையோ சாதிக்கப்போவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, முடிவிலே ஒரு விரக்தியைத் தந்து, ஒரு ஏமாற்றத்தை தந்து, அதன் மூலம் ஒருசில பாவங்களை அந்த ஆத்மாவின் தன்மையிலிருந்து எடுக்கப் பார்க்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்வதும், மேலும் அறிந்து கொள்வதும், அறிந்து கொள்வதையெல்லாம்  நடைமுறைபடுத்துவதும் கடினம்தான். அதற்கும் விதி இடம் தரவேண்டும்.

Tuesday 21 February 2017

சித்தன் அருள் - 598 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு ஞானியின் மனோபாவத்தில் வாழ்வதால் என்ன லாபம்? மனம் மரத்துப் போகவேண்டும். நூறாண்டுகள் வாழ்வதற்கு, ஆக்கையை தயார் நிலையில் வைக்கலாம். தவறில்லை. அடுத்த கணம் மரணம் வந்தால், அதை ஏற்கும் நிலையில் மனம், பக்குவமாக இருத்தல் வேண்டும். குடியிருக்கின்ற இல்லத்தை பேணிக்காப்பது போல எண்ணி, ஆக்கையை பேணிக் காத்திடல் அவசியம். நன்றாகத் தெரியும், இது இரவல் வாசம், நமது சொந்த இல்லம் அல்ல, என்று வேண்டுமானாலும் அந்த இல்லத்திற்கு உரிமையாளன் நம்மை இந்த இல்லத்தைவிட்டு அகன்று போகுமாறு ஆணையிடுவான் என்று தெரியும். இதனைப்போலவே இந்த ஆத்மா இந்த நடப்பு காலத்தில், இந்த மனித கூட்டுக்குள் இரவல் வாசமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதை ஆழ பதிய வைத்துக்கொள்வதும், இப்படி மனதை ஞானியின் மனோநிலைக்காக மாற்றி, மாற்றி கொண்டு போவதற்கு முயற்சி செய்வதும்தான் நிரந்தரமான நிம்மதிக்கும், சந்தோசத்திற்கும் உண்டான வழியாகும்.

இறைவனின் கருணையாலே வாழ்வு நிலையிலே எடுத்த எடுப்பிலேயே எல்லா ஆத்மாக்களும் இந்த நிலைக்கு வருவது கடினம். என்றாலும் யாம் அடிக்கடி இதுபோன்ற தத்துவரீதியான விளக்கங்களைக் கூறுவதால் அதுவே பலருக்கு எரிச்சலையும், மன ஆதங்கத்தையும், சலிப்பையும் ஏற்படுத்துவதும், யாம் அறிந்ததே.  ஆயினும் ஒரு குழந்தைக்கு, பொம்மைகள் நிரந்தரமான உறவோ அல்லது நிரந்தரமான தேவையோ அல்ல என்பது ஈன்றோருக்கு தெரிவதுபோல, மனிதன் வாழ்கின்ற வாழ்க்கையிலே லௌகீக விஷயங்கள் அனைத்துமே, ஒரு குழந்தைக்கு தேவைப்படும் பொம்மைகள் போல்தான் என்பதை ஞானிகள் உணர்ந்திருப்பதால்தான், மெய்யான இறையருள் பெற்ற ஞானிகள் தமைநாடும் மாந்தர்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும், சதாசர்வகாலம் சிந்தனையோடு நெடிய, உயர்ந்த, தாராளமான பெருந்தன்மையோடு கூடிய இறை ஞான விழிப்புணர்வு வரவேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர, "நீ அனேக காலம் வாழப்பா, நீ நன்றாக வாழப்பா, இந்த லௌகீக சுகங்களைப் பெற்று வாழப்பா" என்று ஆசீர்வாதம் செய்யமாட்டார்கள். அங்ஙனம் பலர் செய்கிறார்களே என்றால் என்ன பொருள்? சரி, இன்னும் இந்த குழந்தை பொம்மைகளை விட்டுவிடத் தயாராக இல்லை என்பதே பொருளாகும்.

Monday 20 February 2017

சித்தன் அருள் - 597 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணாகடாக்ஷத்திலே, இவனொத்த ஆத்மாக்கள் எம்மிடம் வரும்போதெல்லாம், அஃதொப்ப கிரகநிலையை அனுசரித்து இறைவன் அருளாலே கூறுகிறோம் என்றாலும்கூட, அடிப்படை விஷயம் யாதென்றால், விஷத்தை உண்டுவிட்ட ஒருவனுக்கு, அவன் உடலில் இருந்து விஷத்தை எடுப்பதற்கு மருத்துவர்கள் எங்ஙனம் போராட்டம் நடத்துகிறார்களோ, அந்த போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளையெல்லாம் மருத்துவர்கள் கையாள்கிறார்களோ, அதைப்போலதான் பாவங்கள் என்ற கடுமையான விஷம் ஒரு மனிதனை பற்றியிருக்கும் பட்சத்திலே, அதை எடுப்பதற்கென்றுதான் பிறவிகளும், பிறவிகளில் பல்வேறுவிதமான சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த சம்பவங்களை வெறும் உலகியல் ரீதியாக பார்க்கும்பொழுது கடினமாக, சோதனையாக, அவமானமாக, வேதனையாக தெரியும். ஆனாலும்கூட அதை ஒரு சிகிச்சை முறையாக பார்த்தால் நோயாளிக்கு அது எப்படி அவசியமோ அதைப்போல பாவங்களைக் கழிப்பதற்காக பிறவியெடுத்த ஆத்மாக்களுக்கு இஃதொப்ப லௌகீக அனுபவங்கள் அவசியம் என்பது புரியும். எனவே விஷத்தை உண்டுவிட்ட மனிதனுக்கு விஷமுறிப்பு சிகிச்சைபோல பாவங்களிலிருந்து ஒரு ஆத்மாவை விடுவித்து, நிரந்தரமாக தன்னை அறிவதற்கென்று எந்தப் பிறவியில் அந்த ஆத்மாவை தேர்ந்தெடுத்து தருகிறாரோ, அந்தப் பிறவியில் லௌகீக வெற்றிகள் அத்தனை எளிதாக கைவரப் பெறாமலும், சுற்றமும், உறவும் ஏளனம் செய்யும் வண்ணமும், ‘"பித்து பிடித்தவன், பிழைக்கத் தெரியாதவன்" என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டும் அந்த ஆத்மா, வாழத்தான் வேண்டும். நாங்கள் கூறவருவது ஒன்றுதான். இது போன்ற நிலையிலே மனம் தளராமல் திடம்கொண்டு வாழ்வதற்கு, இஃதொப்ப ஆத்மாக்கள் முயற்சியும், பயிற்சியும் செய்வதோடு விடாப்பிடியாக இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான். இஃதொப்ப ஆத்மாக்களுக்கு ஒருவேளை, ஒருவேளை ஜீவ அருள் ஓலையிலே வாக்குகள் வாராது. இருப்பினும் யாம் இறைவன் அருளால் எஃதாவது ஒரு வழியில் வழிகாட்டிக்கொண்டே இருப்போம். இறைவன் அருளாலே தத்துவ நிலை தாண்டி, பிறவியெடுத்ததற்கு ஏதோ ஒரு இல்லறம் நடத்தி, வாரிசை பெற்று வாழவேண்டிய நிலையிலே அந்த வாழ்க்கையும் ஓரளவு அர்த்தம் உள்ளதாக வேண்டும் என்று எண்ணுகின்ற நிலையிலே, அஃதொப்ப ஒரு பங்கம் வராமல் வாழ யாம் இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.

Friday 17 February 2017

சித்தன் அருள் - 596 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் கருணையாலே விதியை ஒதுக்கி வைத்துவிட்டு மகான்களால் எதையும் கூற இயலாது. இருந்தாலும் மனிதர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக சிலசமயம் சிலவிதமான வாக்குகளை யாங்கள் கூறுகிறோம். ஆனாலும் ஒரு மனிதனின் மதி எந்தளவிற்கு பக்குவப்பட்டு இருக்கிறதோ, எந்தளவு பாவங்களற்ற நிலையில் இருக்கிறதோ அந்தளவுதான் இறைவனருளால் யாங்கள் கூறுகின்ற வாக்கினை சரியாக புரிந்துகொள்ள இயலும். பக்குவமற்ற, பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களுக்கும் எத்தனை கீழிறங்கி வாக்குகளைக் கூறினாலும் அர்த்தம் அனர்த்தமாகத்தான் புரியும். நாங்கள் கூறுவதை சரியாகப் புரிந்துகொள்ள இயலாது. இறைவனருளாலே எத்தனையோவிதமான பாவங்களின் தாக்கத்தால் பிறவிகள் எடுத்த ஆத்மாக்களுக்கு எத்தனையோவிதமான வழிமுறைகள் இருந்தாலும், பாவங்கள் நீங்கவேண்டும், அதே சமயம் அந்த பாவங்கள் மீண்டும் பற்றிவிடக்கூடாது என்பதை மட்டும் மையமாகக்கொண்டு இறைவனருளாலே இஃதொப்ப ஜீவ அருள் ஓலையிலே யாம் எத்தனையோவிதமான நுணுக்கமான வாக்குகளைக் கூறியிருக்கிறோம். சுருக்கமாக "அதை செய், இதை செய்" என்று கூறாமல் "தர்மத்தை பிடித்துக்கொள், அஃது பாவத்திலிருந்து உன்னை விடுவிக்கும்" என்று பலமுறை பலருக்கு பலமாகக் கூறியிருக்கிறோம். ஆனாலும் பலரில் சிலருக்கும், சிலரில் சிலருக்கும் அந்த சிலரில் சிலருக்குமேதான் மதியில் பட்டு அந்த வழியில் வருவதற்கு விதி அனுமதி தந்திருக்கிறது, என்பதே மெய்யிலும் மெய்யாகும். இன்னும் எத்தனையோவிதமான உண்மைகளை நாங்கள் வெளிப்படையாகக் கூறுவது என்பது அத்தனை நாகரீகமாக இராது. எனவே. யாங்கள் மௌன தவத்தை தொடர்வதே இறைவன் இட்ட கட்டளையாக இருக்கிறது.

இறைவன் அருளாலே விதி வலிமையாக இருக்கும்பொழுது இறைவனே தோன்றி வழிகாட்டினாலும் அது மாந்தர்களின் செவியில் ஏறாதப்பா. எனவே இத்தருணம் எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை யாங்கள் கூறி உன் மூலமாக சிலருக்கு விளங்க வைக்கலாம் என்றாலும்கூட அதுவும் விதிவழி ஏற்புடையதாக இராது. எனவே, நேர்மையான பிரார்த்தனைகளை, உண்மையான தர்மத்தினை, கூடுமானவரை சத்தியத்தினை கடைபிடிப்பதை, தவிர இத்தருணம் வேறுவழி ஏதுமில்லையப்பா.

Thursday 16 February 2017

சித்தன் அருள் - 595 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, மிகப்பெரிய நெருக்கடி எது தெரியுமா? மகான்கள், மகான்கள் நிலையிலேயே, மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி, சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் "எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்? என்பதை புரிந்துகொள்ளாமல், அதற்கு குதர்க்கமான பொருளைத்தான் பல மனிதர்களும் கொள்வார்கள். யாரையெல்லாம் மனதில் வைத்து நீ கேட்கிறாயோ அவர்கள் விதி அனுமதித்தால், யாருக்கெல்லாம் இந்த ஜீவ அருள் நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து, சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் இந்த ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும், என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை, ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல்வழிப்படுத்த வேண்டியது, எமது கடமை என்றாலும், இறைவன் அனுமதித்தால், நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி இறை அனுமதிக்க மனிதர்கள் பலவற்றை செய்யாமல் இருந்தாலே போதுமப்பா. ஒருவனுக்கு ஒருவன் விதி மாறுபடுவது, ஒருவனுக்கு ஒருவன் அவன் மதி அதனால் மாறுபடுகிறது. ஒருவனுக்கு ஒருவனின் மதி மாறுபடுவதால் சிந்தனையும், செயலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில் பொதுவாக நாங்கள் ஒன்றை ஒருவனுக்கு கூறினால், அது இன்னொருவனுக்கு பொருந்தாது. நாங்கள் ஆதியிலிருந்து கூறுகின்ற விஷயம் இன்னமும் இங்கு சர்ச்சைக்குறிய விஷயமாகத்தான் இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். சிலரைப் பார்த்து "ருணம் பெற்றாவது தர்மம் செய்"‘ என்று கூறுகிறோம். இந்த ஒரு கருத்தையே இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்த நிலைக்கு எவ்வாறு அழைத்து செல்வது?

Wednesday 15 February 2017

சித்தன் அருள் - 594 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, யாம் உணர்த்துவதைவிட, விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரந்து கேட்கும்பொழுது தராத மனிதனுக்கு இறைவன், கள்வனை படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும், துயரப்படும் மனிதனைப் பார்த்து, அங்கே நல்ல குணத்தை பயன்படுத்தவேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. "இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன? தேகம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும்?" என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான். "இவனுக்கென்ன? இவன் குடும்பத்தில், இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும், உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? அவர்கள் செய்யட்டுமே? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு? நாம் ஏன் இதிலே ஈடுபடவேண்டும்?" அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். "இவனுக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால், அதற்கு நானா பொறுப்பு? நான் எதற்கு அதிலே தலையிடவேண்டும்?" என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால், மிக தந்திரமாக சிந்தனை செய்வதில், சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும், தன் சாமர்த்தியத்தைதான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி, அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும்பொழுது, மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்லை.

Tuesday 14 February 2017

சித்தன் அருள் - 593 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கல்வி குறித்து :-

குமரகுருபரர் அருளிய ‘ சகலகலாவல்லி ‘ மாலையை ஓதலாம். ஹயக்ரீவர், அன்னை கலைவாணி வழிபாடுகளை வாய்ப்புள்ள பொழுது தொடர்ந்து செய்யலாம். இது பக்தி வழி. இன்னொன்று. கல்வி என்ற ஒரு நிலையை மனிதன் காலம்தோறும் தன்னுடைய பார்வையிலேயே பார்த்து பழகிவருகிறான். எம்மைப் பொருத்தவரை கல்வி, வித்தை என்பது பொருள் ஈட்டுவதற்கு மட்டுமல்ல, அருள் ஈட்டுவதற்கு எந்த கல்வி உதவுகிறதோ அதுதான் கல்வி. அருள் ஈட்டுவதற்கு உதவாமல் வெறும் பொருள் ஈட்டுவதற்கு உதவுகின்ற கல்வி, கல்வியல்ல. எனவே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளோடு கற்றுத்தரப்படும் எந்தவொரு விஷயமும் மனிதனை ஈர்க்காது. மனிதன் அவனாகவே, எதனை நோக்கி செல்கிறானோ அதுதான் பல்வேறு தருணங்களில் அவனை உயர்த்திவைக்கும். சில விஷயங்களைத் தவிர மனிதன் இதுபோன்ற விஷயங்களில் சர்வ சுதந்திரத்தை  பெறுவது அவசியம். ஆனால் இங்கேயோ, காலகாலம் கர்மவினைகளின் காரணத்தாலோ, வேறு சாபங்களின் காரணத்தாலோ இந்த மண்ணுக்குரிய உயர்ந்த கல்வி முறை புறக்கணிக்கப்பட்டு, ஆழிதாண்டிய கல்வி முறை திணிக்கப்படுகிறது.  இது எந்த வகையிலும் ஆரோக்யத்தை தராது.

Monday 13 February 2017

சித்தன் அருள் - 592 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கிரகமே, கிரகத்தை ஏற்பாடு செய்து, கிரகமே, கிரகத்தை வளர்த்தி, கிரகமே, கிரகப்பிரவேசம் செய்யவைத்து, கிரகமே, அஃதொப்ப கிரகத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் தருகிறது. அஃதொப்ப நவக்ரகமே இஃதொப்ப நவக்ரகம் வருவதற்கு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

Friday 10 February 2017

சித்தன் அருள் - 591 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனம் ஒரு நிலைப்பட்டு செய்யக்கூடிய விஷயமே பூஜைதான். புற சடங்குகள் எதற்காக என்றால், உடலும், உள்ளமும் ஒரு புத்துணர்வு பெற்று அதை நோக்கி, எண்ணங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக. ஆனால் புற சடங்குகள் நன்றாக செய்யப்பட்டு, மனம் மட்டும் அங்கே கவனம் குவிக்கப்படாமல், மனசிதைவோடு இருந்தால், அது உண்மையான பூஜை ஆகாது. அதற்காக மனம் சிதைகிறதே என்று, பூஜை செய்யாமலும் இருக்கக்கூடாது. செய்ய, செய்ய நாளடைவில் மனம் பக்குவம் பெற்று, பண்பட்டு ஒரு நேர் கோட்டில் செல்லத் துவங்கும். 

Thursday 9 February 2017

சித்தன் அருள் - 590 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தீய வழியில் செல்லும் குழந்தைகளை நல்வழிப்படுத்த என்ன செய்ய வேண்டும் ?

பாவ வினையின் காரணமாகத்தான் இதுபோன்ற பிள்ளைகள் பிறக்கின்றன. இளைய வயதிலே ஒரு பிள்ளை தவறான செயலை செய்தால் முதலில் அந்தத் தந்தை, தன் பால்ய வயதை நினைவூட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டும். "இல்லையில்லை, நான் சரியாகத்தான் வாழ்ந்தேன். நான் நேர்மையாகத்தான் வாழ்ந்தேன். என் பால்ய வயதில் நான் ஒரு தவறு கூட செய்யவில்லை. ஆனால் எனக்கு இப்படியொரு பிள்ளை பிறந்து விட்டது" என்று சிலர் கூறலாம்.  அப்படி பார்க்கும் பட்சத்தில், முன்னோர்களின் சாபங்கள், பாவங்கள் கடுமையாக இருக்கும். இது போன்ற வாரிசுகளைப் பெற்றவர்கள் குறிப்பாக பசுக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், பசு தானங்களை செய்வதும், தில யாகங்களை முறையாக செய்வதும் அஃதோடு மட்டுமல்லாமல் பைரவ வழிபாட்டை தொடர்ந்து செய்வதுமாக இருந்தால் மெல்ல, மெல்ல அந்தப் பிள்ளையின் செயல்களில் மாற்றங்கள் ஏற்படும். கடுமையான சாபத்தின் விளைவுதான் மோசமான பிள்ளைகள் என்பதை தாய், தந்தையர் புரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday 8 February 2017

சித்தன் அருள் - 589 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அரைஞாண் கயிறு கட்ட வேண்டுமா?

அரை என்றால் இடுப்பு என்ற ஒரு பொருள் இருக்கிறது. இன்னொன்று, ஒட்டுமொத்த மனிதனின் அரைப்பகுதி, பாதிப்பகுதியை ஒட்டிதான் குண்டலினி சக்தி இருக்கிறது. கனகம் எனப்படும் தங்கத்திலும், வெள்ளியிலும், பஞ்சு நூலிலும் கயிறு கட்டிக் கொள்வதும், குறிப்பாக காளையினத்தவர் கட்டிக் கொள்வதும் சிலவகையான சூட்சுமமான சக்திகளை பெற உதவும். ஆனால் ஏதோ அங்காடியில் விற்கிறது. வாங்கிக் கட்டிக் கொள்வது போல் அல்ல. எப்படி முப்புரி நூல் எனப்படும் பூணூலை முறையாக ஜெபித்து அணிகிறார்களோ, இதையும் அப்படித்தான் அணிய வேண்டும். இதை மட்டுமல்ல. உடலிலே பிற்சேர்க்கையாக ஒரு அணிகலனை ஒருவன் அணிந்து கொள்ள வேண்டுமென்றால், ஏதோ அங்காடியில் வாங்கி அணிவதில் நன்மை ஏதுமில்லை. அதை முறையாக எடுத்து வந்து இல்லத்திலாவது அமர்ந்து, குறைந்தபட்சம் ஒரு சப்த தினங்களாவது பூஜை செய்து, மந்திர உருவேற்றி அணிய வேண்டும். அது உடலுக்கு கவசம் போல் ஒரு பாதுகாப்பைத் தரும். இதை ஆண்கள்தான் அணிய வேண்டும். பெண்கள் அணியக்கூடாது என்பதெல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் அணியலாம். பஞ்சலோகத்திலும் செய்து அணியலாம். பஞ்சு நூலாலும் அணியலாம். தவறொன்றுமில்லை. அஃதொப்ப, இது போன்ற பல்வேறுவிதமான சடங்குகளெல்லாம் இறை நம்பிக்கையையும், பிரார்த்தனையையும்  அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.

Tuesday 7 February 2017

சித்தன் அருள் - 588 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனம் ஒரு நிலைப்பட்டு செய்யக்கூடிய விஷயமே பூஜைதான். புற சடங்குகள் எதற்காக என்றால் உடலும், உள்ளமும் ஒரு புத்துணர்வு பெற்று அதை நோக்கி எண்ணங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக. ஆனால் புற சடங்குகள் நன்றாக செய்யப்பட்டு மனம் மட்டும், அங்கே கவனம் குவிக்கப்படாமல் மனசிதைவோடு இருந்தால் அது உண்மையான பூஜை ஆகாது. அதற்காக மனம் சிதைகிறதே என்று பூஜை செய்யாமலும் இருக்கக்கூடாது. செய்ய, செய்ய நாளடைவில் மனம் பக்குவம் பெற்று, பண்பட்டு ஒரு நேர் கோட்டில் செல்லத் துவங்கும். 

Monday 6 February 2017

சித்தன் அருள் - 587 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

சாஸ்திரங்களிலும், பூஜா முறைகளிலும், யாகங்களிலும், இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால், அப்படி நீக்கினாலும், அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வரவேண்டும் என்றால், அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக்கொள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத, சுகத்தைத் தராத, நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும், எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது. உதாரணமாகக் கூறுவோம். சிலவற்றை மனிதன் அறிவு கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது போன்ற தருணங்களிலே, ஒரு சிரார்த்தம் என்றால், திதி என்றால், அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும், காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் கொண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத்தான் தரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால், அவனுக்கு என்ன வேண்டுமோ அவன் அதை வாங்கிக் கொள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு "நான் காய்கறிதான் வாங்கித் தருவேன்" என்று இவன் கூற, அவன் என்ன செய்கிறான்? காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் கொண்டே, அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மன நிலை காரணம்? எனவே சாஸ்திரங்களும், மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொண்டு, கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பொது நலம் கருதி மாற்றிக் கொள்வது தவறல்ல. ஆனால் சாஸ்திரங்களை மனிதன் சுய நலத்திற்காக மட்டுமே எப்பொழுதும் மாற்றுகிறான். பொது நலத்திற்காக மாற்றுவதில்லை. "தர்மம் செய்" என்றால் மட்டும், "இன்று வெள்ளிக் கிழமை. இப்பொழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பொழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பொழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பொழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய்க்கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன்" என்று, தருவதற்கு, ஆயிரம் சட்ட, திட்டங்களைக் கூறுகின்ற மனிதன், பெறுவதற்கு எந்த சட்ட, திட்டமாவது போடுகிறானா? "வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம்" என்று யாராவது கூறுகிறார்களா? வெள்ளிக்கிழமைதானே மகாலக்ஷ்மிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம், பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் போய்விட்டது. இஃதொப்ப நிலையிலே, ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படிக் கேட்கிறான்? என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா? என்றுதான் கேட்கிறான். "நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம, காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா? என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சொல்கின்ற மனிதன் எப்படி சொல்கிறான்? "நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால், தேவையற்ற அபவாதம்தான் வரும், எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத்தரும்" என்றெல்லாம் போதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகிவிட்டார்கள். எனவே நல்லதை, தர்மத்தை, சத்தியத்தை விட்டுக்கொடுக்காமல், பொது நலத்தை, பொது சேவையை விட்டுக்கொடுக்காமல், ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும், சாதகமோ அல்லது பாதகமோ இல்லாமல் பொது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

Sunday 5 February 2017

சித்தன் அருள் - 586 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

"இறைவன் அருளாலே எம்மைப் பார்த்து ‘ஒரு தர்ம காரியம் செய்ய வேண்டும். செய்யலாமா?" என்று கேட்டால் "வேண்டாம்" என்று சொன்னால் எல்லோரும் என்ன கூறுவீர்கள்?  "சித்தர்கள் திருவாக்காலேயே வேண்டாம்" என்று வந்துவிட்டது. சித்தர்களே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று கூறும்பொழுது, நாமும் அதை அனுசரித்தே நடக்க வேண்டும்" என்று அனைவருமே எண்ணுவார்கள். "சரி, செய்து கொள்ளலாம்" என்று கூறிவிட்டால், நடைமுறையில் சிக்கல் வரும்பொழுது, "இப்படியெல்லாம் சிக்கல்கள் வருகிறதே, எதற்காக சித்தர்கள் அருளாசி தந்தார்கள்?" என்று எம்மை நோக்கி, வினா எழுப்புவார்கள். எனவே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று நாங்கள் ஒருபொழுதும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் "இப்படியொரு தர்ம காரியம் நடந்துகொண்டிருக்கிறது அல்லது நடக்க இருக்கிறது. எனவே பொருள் தாருங்கள், பொருள் தாருங்கள்" என்று பலரிடம் சென்று யாரும் வினவ வேண்டாம். இயல்பாக, இங்கு நடப்பதையெல்லாம் புரிந்துகொண்டு, தன்னை இணைத்துக்கொள்ளக்கூடிய மனிதன் வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம். ஏனென்றால் மனிதர்களைப் பொருத்தவரை அவனாக விதிவழியாக சென்று எத்தனை லகரம் தனத்தையும் ஏமாற சித்தமாக இருப்பான். ஆனால் தானாக முன்வந்து ஒரு அறச்செயலுக்கு தனம் தருவது என்பது மிக, மிகக் கடினம். அதற்கும் விதியில் இடம் வேண்டும். தருபவன் உயர்ந்த ஆத்மா, தராதவன் தாழ்ந்த ஆத்மா என்ற ரீதியில் நாங்கள் கூறவில்லை.  தராத நிலையில் அவன் பாவக்கணக்கு இன்னும் இருக்கிறது. அவனுடைய பாவங்களும் தீரவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியேதுமில்லை.

Saturday 4 February 2017

சித்தன் அருள் - 585 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால் பிற்காலத்தில் இதுபோன்ற (உயர்ந்த ஞானிகள்) ஆத்மாக்களைப் பற்றி நாங்கள் விளக்கம் கூறுவோம். பொதுவாகவே வாழும் மகான்கள் என்று பலரை மனிதர்கள் நாடுகிறார்கள். அதை நாங்கள் குறையோ, குற்றமோ கூறவில்லை. ஆனாலும், ஒருவன் இந்த ஜீவ அருள் ஒலையை நம்பி, நாடி, இதன் கருத்துக்களை ஏற்கத் துவங்கும்பொழுது நாங்கள் இறைவனருளால் கூறுகின்ற கருத்தையெல்லாம் 100 – க்கு 100 பின்பற்றி, அதன் வழியாக நடக்க, நடக்க மெய்யான ஞானிகளை இவன் தேட வேண்டாம். மெய்யான ஞானிகள் இவனைத் தேடி வருவார்கள். அதுதான் ஏற்புடையது. அங்கு ஞானி இருக்கிறார், இங்கு ஞானி இருக்கிறார் என்று தேடி சென்றால், அதனால் தேவையில்லாத குழப்பங்கள்தான் ஏற்படும். எத்தனைதான் மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும் கூட, இந்த பூமியிலே பிறவி எடுத்துவிட்டால் சில விரும்பத்தகாத குணங்களும் அவரிடம் இருக்கலாம். அப்பொழுது என்னவாகும்? அந்த ஒரு பகுதியைப் பார்க்கின்ற மனிதன் தவறாகப் பார்ப்பான். நாங்கள் நல்லவற்றை எடுத்துக் கூறினால் "சித்தர்களே இப்படியெல்லாம் உயர்வாகக் கூறுகிறார்களே? எங்கள் பார்வைக்கு அப்படித் தோன்றவில்லையே?" என்று ஒருவன் கூறுவான். எனவேதான் சமகாலத்தில் வாழ்கின்ற ஞானிகள் குறித்து நாங்கள் எந்த விளக்கமும் தர விரும்புவதில்லை.

Friday 3 February 2017

சித்தன் அருள் - 584 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பல உன்னதமான ஆன்மாக்கள் விண்மீன்களாக மாறும். அவர்கள், சதா சர்வ காலம், இறை தியானத்தில் இருப்பார்கள். தன் ஆக்க பூர்வமான கதிர்களை பூமிக்கும், மற்ற லோகங்களுக்கும் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவையெல்லாம் (ஆத்மாக்கள்) இறைவனை நோக்கி வரவேண்டும், என்று துடிக்கிறதோ, அவற்றை மேலும் நல்ல பாதையில் தூண்டி விடுவதற்குமான முயற்சியில், அது போன்ற ஆத்மாக்கள் இறங்கி செயலாற்றிக் கொண்டேயிருக்கும்.

Thursday 2 February 2017

சித்தன் அருள் - 583 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளைக் கொண்டு ஒரு மனிதனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மருத்துவன் கத்தியால் ஒரு நோயாளியின் வயிற்றை காயப்படுத்தி மருத்துவம் செய்கிறான். ஒரு கள்வனின் கையில் இருக்கும் கத்தியும் அதையே செய்கிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவனின் கத்தி பிணியை நீக்குவதற்காக அந்த செயலை செய்கிறது. அதனால் துன்பம் ஏற்பட்டாலும் பிணியாளி பொறுத்துக் கொள்கிறான். ஏன் என்றால் நோய் என்னும் கடுமையான துன்பத்திலிருந்து நிவாரணம் அடைவதற்கு இந்த சிறிய துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கள்வனின் கையில் உள்ள கத்தி பொருளைப் பறித்து பிற மனிதர்களுக்கு இடையூறு செய்வதற்காகவே இருக்கிறது. எனவே பூக்களைப் பறித்தாலும், தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு என்ற நோக்கத்திலே மெய்யாக, மெய்யாக, மெய்யாக அந்த நோக்கம் சற்றும் மாறாமல் பொது நலத்திற்கு என்று செய்யப்படும்பொழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல. அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும், இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மோட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது. ஆனால் இறந்த மனிதனின் மீது மலர்களைப் போடுவது கடுமையான தோஷத்தையும், பூக்களின் சாபத்தையும், விருக்ஷங்களின் சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபொழுதும் செய்யக்கூடாது. ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள். சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும், தோஷமும் ஆகும். ஆனால் எத்தனையோ பாவங்களை நியாயப்படுத்திக் கொண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஒரு (வாழ்ந்த) மகான் உண்மையாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான், நல்ல சேவைகளை செய்திருக்கிறான், பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பொழுதும் துளசி போன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்போட வேண்டுமே தவிர, மகானாக இருந்தாலும் மலர்களைப் போடுவது எமக்கு உடன்பாடு இல்லை.

Wednesday 1 February 2017

சித்தன் அருள் - 582 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மனிதனை இறைவனை நோக்கி திசை திருப்ப விடாமல் தடுப்பது எது? இறைவன் எப்பொழுதும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது, கருத்து அளவில் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் முழுமையாக அந்தப் பரம்பொருளை ஒரு சராசரி நிலையில் யாராலும் உணர முடிவதில்லை. இறைவன் என்கிற அந்த மாபெரும் ஆற்றலை வரைகலையில் உள்ளது போலவோ, சிற்பத்தில் உள்ளது போலவோ ஆலயத்தில் காண்பது போலவோ, தனியாக ஒரு நண்பனை பார்ப்பது போல, ஒரு உறவை பார்ப்பது போல பார்த்தால்தான் இறை என்று மனித மனதிற்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்படி பார்ப்பது, உணர்வது மட்டும் இறையல்ல. அதனையும் தாண்டி அந்த இறைவன் எந்தெந்த வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்? சம்பவங்கள் மூலம், நல்ல நிகழ்வுகள் மூலம், தன்னை சுற்றி வாழ்கின்ற நல்ல மனிதர்கள் மூலம், அந்த இறைத்தன்மை என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அஃதாவது ஆறு, நதி என்றால் என்ன? என்று கேட்டால் ஒரு மனிதன் எதைக் கூறுவான்? நீர் நிரம்பிய ஒரு இடமா? அல்லது நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடமா? நீர் ஓடிக்கொண்டேயிருப்பது ஆறு என்றால் நீர் வற்றிய பிறகு அதனை என்னவென்று அழைப்பது? ஒரு நீண்ட பள்ளமான பகுதியிலே மணல் இருக்கிறது. அங்கங்கே திட்டு, திட்டாக நீர் தேங்கியிருக்கிறது. இதனையும் நதி என்று கூறலாமா? அல்லது கரைபுரண்டோடும் வெள்ளத்திலே சிக்கிக்கொண்ட மனிதன் அதனையும் நதியென்று கூறுவானா? எல்லாம் ஒரு வகையில் நதியென்றாலும், நதி வெளிப்படுகின்ற விதம் மாறுபடுகிறது. ஒரு இடத்தில் அகலமாக, ஆழமாக, நீண்டும் இன்னொரு இடத்தில் குறுகியும் செல்கிறது.

அதைப்போல அந்த இறைவன் என்கிற மாபெரும் ஆற்றல், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கிறது. ஒவ்வொரு பூக்களிலும், விதைகளிலும், விருக்ஷங்களிலும், காற்றிலும், சுற்றியுள்ள அனைத்து இயற்கைத் தன்மையிலும் இருக்கிறது. ஆனால் இதனை சரியாகப் புரிந்து கொள்வது என்பதுதான் மனிதனுக்கு கைவராத கலையாக இருக்கிறது. ஏனென்றால் மனிதனுக்கு அறியாமையும், பாசமும், ஆசையும், தன்னலமும் மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ஒட்டுமொத்த உலகம் ஒரு குடும்பம். இறைவன் குடும்பத்தலைவன். எல்லோரும் பிள்ளைகள், என்று பார்த்துவிட்டு அமைதியாக தன் கடமையை செய்துவிட்டு, ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையோடு தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், பார்க்கப் பழகினால் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைத்தன்மையை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளத் தடையாக இருப்பது பாவங்கள். பாவங்களைப் போக்க தர்மங்கள், பிராயச்சித்தங்கள், ஸ்தல வழிபாடுகள் – இவைகளெல்லாம் இருக்கின்றன. இந்த பக்தி மார்க்கத்திலும், தர்ம மார்க்கத்திலும் சென்றாலே, யாரும் போதிக்காமலேயே ஆன்மீகம் குறித்த பல சந்தேகங்கள் இறைவனருளால் உள்ளே உள்ளுணர்வாக தோன்றி நீங்கிவிடும். இறை ஞானம் மெல்ல,மெல்ல துளிர்க்கும்.